தேவதச்சன் நேர்காணல்

கவிதைக்கு ஏழெட்டு வேலைகள்
படிகம் இதழில் வெளிவந்துள்ள கவிஞர் தேவதச்சன் நேர்காணல்

கேள்விகள் – ரோஸ் ஆன்றா ,ஆகாசமுத்து,கோணங்கி,லக்ஷ்மி மணிவண்ணன்

••••

கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது?

ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய தூண்டுதலும் ஏற்படும் முன்னரே உள்ளார்ந்து காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்கியாச்சு.

அப்ப தற்செயலாக ஒரு மஞ்சள் புத்தகம் கிடைக்கிறது.முன்னாடி பின்னாடி பல பக்கங்கள் இல்லாத ஒரு புத்தகம்.படிக்கிறேன்.உடம்பு வசீகரமான எதிர்வினை அடையுது.அந்த உடல் அதிர்வுகளில் நான் மட்டும்தான் இருக்கிறேன்.அதில் குடும்பம்,அம்மா,அப்பா யாரும் இல்லை.செக்சுவாலிட்டியில் நான் மட்டுமே இருக்கிறேன்.அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.என்னுடைய உடல் ஒளிருகிறது.அதை வெளியே சொல்ல முடியவில்லை.குற்ற உணர்ச்சி அடைகிறேன்.என்னுடைய செக்சுவாலிட்டிக்கும் ,குற்ற உணரச்சிக்கும் நடுவில் உள்ள என்னுடைய உரையாடலை பகிர்ந்துக்கவே முடியவில்லை.

இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் தத்துவங்களுக்குள் போகிறேன்.இந்த குற்ற உணர்ச்சியை எப்படி சரிக்கட்டுவது என்று தெரியவில்லை.செக்சுவாலிட்டியும் குற்ற உணர்ச்சியும் இங்கே ஒரே குவளையில் வைக்கப்பட்டிருக்கு. இந்த கொப்புளங்கள்தான் இன்று வரையில் பின் தொடர்ந்து வருகின்றன .இந்த கொப்புளங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றாக மாற்றுவதைப் பார்க்கிறேன்.மதுவாக மாறுவதும் இதுதான்.ஒருவருக்கு பெரியாளாகணும்னு ,விளையாட்டு ஈடுபாடு எல்லாம் இந்த கொப்புளங்களின் மாற்றம்தான்.இது எனக்கு ஆர்வ மூட்டக் கூடியதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.

கே- இது எப்படி உங்கள் கவிதையில் தாக்கத்தை ஏற்படுத்திற்று?

ப- காமம் ஏற்படுத்திய கிளர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் இணைந்து என்னிடம் ஒரு ரகசியத் தன்மையை உருவாக்கி விடுகிறது.சமூகத்தொடு வாழ்ந்து கொண்டே ரகசியமாகவும் இருக்கத் தொடங்குகிறேன்.இவை எனது கவிதையின் பிரச்சனைகளாக மாறுகின்றன.மற்றொரு கவிஞனுக்கு இது மாறுபடலாம் .அப்பாவோடு முரண்பாடு,அல்லது நம்பிக்கைகளின் தகர்வு எப்படிவேணா இருக்கலாம்.

அந்த வயதில் ஒரே சமயத்தில் மூன்று விதமான புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.சரோஜாதேவியின் மஞ்சள் புத்தகம் ஒருபுறம்,மற்றொரு புறம் வோட்ஸ் வொர்த்தின் கவிதைகள்.இன்னொருபுறம் சுவாமி விவேகானந்தர்.ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு வரியென! மூன்றுமே எனக்குள் சமமாக அதிர்ந்தன.இந்த அதிர்வு புற உலகத்தையே மாற்றி வச்சுடும்.கனவுத் தன்மைக்குள் உங்களைக் கொண்டு போய் வச்சுடும்.வெளியில் நடப்பது எதுவும் உங்களைப் பாதிக்காது.இதெல்லாம் பதினாலு வயதிலிருந்து பதினாறு வரையில்.

கே- இப்போது அந்த உணர் நிலை என்னவாக இருப்பதாக உணர்கிறீர்கள்?

ப- அது அப்படியே தான் இருக்கு.அந்த கிளர்ச்சிதான் மூலகம்.வடிவம் மாறுபட்டிருக்கலாம்.நான் அடைந்த கிளர்ச்சியின் கொப்புளங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.வேறு எதுவும் தேற வில்லை.வயது ஏறும் போதுள்ள முதிர்ச்சி ,வெற்றி,தோல்வி எதுவுமே இதற்கு நிகராக என்னிடம் ஒட்டவே இல்லை.பதியவே இல்லை.என்னுடைய தன்னிலையை உருவாக்கியதில் இந்த சிறு வயதின் செல்வாக்கு இருக்கிறது.

கே- இலக்கிய அறிமுகம் எப்படிஎற்படுகிறது?

ப- இந்த வயதில்தான் பாரதியாரைக் கடக்கிறேன்.சத்ரபதி சிவாஜிக்கு எழுதியதுன்னு எழுதியிருப்பார்.”பாரத நாடு பழம் பெரும் நாடு,நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”இந்த கவிதைகளையெல்லாம் கத்திக் கத்திப் படிக்கலாம்.திரும்பத் திரும்ப பாரதியாரைப் படிக்க எனக்குள்ளிருந்த குடும்பப் பையன் உதிர்ந்து தேசிய மனம் உருவாகிறது.குடும்ப மனம் விடுதலை அடைகிறது.

கே- பாரதி,பாரதிதாசனில் உங்களுடைய பயணம் என்னவாக இருந்தது?

ப- பாரதிதாசன் எனக்குப் போதவில்லை.அவரது திராவிட இயக்கக் கருத்துக்கள் எனக்குள் பதியவே இல்லை.

கே- உங்களுடைய கவிதைகளில் சாதாரணமான மனிதர்கள்,நிகழ்வுகள் அதிகமாக இடம் பெறுகிறதே?

ப-பொதுவாகவே அன்றாடம்தான் கவிதையின் பாடுபொருள்.அதேசமயம் கவிதை அன்றாடத்தை கேள்விக்குள்ளாக்குகிறது . ஒரு கவிதையை வாசிக்கும்போது ஏற்கனவே உள்ள அனுபவ சேகரங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறீர்கள்.பின்னர் அது உங்களை உலகத்துடன் மறு இணைப்பு செய்கிறது.கவிஞன் ஏற்கனவே உள்ள உங்கள் சிந்தனைத் தொகுப்பை மறு உருவாக்கம் செய்கிறான்.சிந்தனைகளில் படிந்துள்ள போதாமைகளை அகற்றுகிறான்.இந்த மறு உருவாக்கத்தில்தான் கவிதையின் உண்மையான சவால் இருக்கிறது.ஒரு கவிதையை வாசித்த பிறகு துண்டிக்கப்படுகிற இடத்தில் இருந்து மீண்டும் எவ்வாறு உலகத்தோடு இணைகிறோம் என்பதில் ஒரு ரகசியத் தன்மையும் இருக்கிறது.

கே – உலக நெருக்கடிகளில் கவிஞனின் பங்கு என்னவாக இருக்கும்?

ப- ஒரே சமயத்தில் நாம் நினைவுக்குள் உள்ளேயும்,வெளியேயும் இருக்கிறோம்.நினைவுக்குள் உள்ள மனிதன் ஒரு வரலாற்று மனிதனாகவும் ,மிகப்பெரிய மனிதனாகவும் இருக்கிறான்.நினைவுக்கு வெளியில் உள்ள மனிதன்தான் சிருஷ்டி.கவிதையின் வேர்கள் அறியாதவற்றின் சிருஷ்டியில்தான் இருக்கிறது.

ஒரு கவிதையைப் படித்த பின்பு நாம் மொழிவழியாக உலகத்துடன் இணைவதில்லை.சிருஷ்டி வழியாகத்தான் இணைகிறோம்.சிருஷ்டி வழியாக இணையும் போது புத்துணர்ச்சி அடைகிறோம்.பழக்கம்,போலச்செய்தலில் இருந்து வெளியே வந்து விடுகிறோம்.குழந்தை எப்படி கருவில் நுழைந்ததோ அந்த கணம் மீண்டும் கவிதையில் மறு அழைப்பு செய்யப்படுகிறது.

கே- கவிதை மூலம் அன்றாடத்தில் ஒரு மர்மத்தை உருவாக்குபவர் என்று உங்களைச் சொல்லலாமா?

ப- அன்றாடம் இடையறாத மாற்றங்களால் ஆனது இல்லையா? தினசரியின் மனிதன் அன்றாடத்திற்கு பயப்படுவான்.இல்லைனா குறிப்பிட்ட வகையான மாற்றங்களை மட்டும் அன்றாடத்தில் எதிர்பார்ப்பான்.திட்டமிட்டபடி நடக்காது.கவிதை எதிர்பார்க்கும் மாற்றம் அன்றாடத்தைப் பற்றிய பழக்கமான கணிதத்திற்கு அப்பாற்பட்டது.கவிதை மாற்றங்களைச் சார்ந்து இருக்கிறது.அது போலவே மாற்றமும் எல்லா கணிதத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.இந்த மாற்றத்தின் ஊடாக கவிஞன் அதிகாரமின்மையை உரையாடுகிறான்.

தினசரி வாழ்வின் சகல அடுக்குகளிலுமுள்ள துயரங்களையாகட்டும்,சஞ்சலங்களையாகட்டும்,வலிகளையாகட்டும் , அதிலிருக்கும் அதிகாரமின்மையிலிருந்து கவிஞன் உரையாடுகிறான்.இந்த பண்பு அவனுக்கு குழந்தைத்தன்மையைத் தருகிறது.ஒரு புள்ளிக்கு மேலே உலகின் மாற்றங்களைக் கட்டுப் படுத்தும் சக்தியும் ,ஆற்றலும் குழந்தைமையிடம் மட்டுமே இருக்கிறது.வார்த்தையை விட்டுவிட்டு அதிகாரமின்மையின் குழந்தைமையிலிருந்து தொடங்கி தாய்மையாக விரிவுபடுத்துகிறான் .இதுதான் கவிதையின் தத்துவம்.கவிதையின் தத்துவம் தந்தை அல்ல.தாய்.அது தாய்மையின் உணர்வு.

கே- இங்கே உருவாகி இருக்கும் சமூக உள்ளடக்கத்திற்கு வெளியே நீங்கள் நகர்ந்து விடுகிறீர்கள் போல் தோன்றுகிறது?

ப- பலர் இங்கே சமூக உள்ளடக்கத்திற்குப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்கள் .அதில் பிரச்சனை இல்லை.கவிதைக்குள் கருப்பொருளைத் திறக்க வேண்டும்.அதுதான் பிரச்சனை.அதை நீங்கள் செய்கிறீர்களா?இல்லையா? கருப்பொருளைத் திறக்காமல் சமூக உள்ளடக்கத்திற்கு மட்டும் பொறுப்பேற்று கவிதையில் ஒன்றும் செய்வதற்கில்லை .கவிதையில் கருப்பொருளாய் இருக்கும் கனவும் திறக்கணும்.

நமது அனுபவத்தின் மூலப்பொருட்கள் பண்பாட்டாலும் மொழியாலும் கட்டமைக்கப்பட்டிருக்கு.நமது எல்லா அனுபவங்களுமே கட்டமைக்கப்பட்டவைதான்.

சூரியன்,காக்கை,மாமா ,அத்தை என்று ” சொல்” பட்ட உடனேயே அந்த நபரும் உறவும் தன்மையும் எல்லாம் கட்டமைந்து விடுகிறது.நாம் கலாச்சார ரீதியாக நிகழ்ச்சிப்படுத்தப்பட்டவர்கள்.மொழியியல் ரீதியாகவும் நிகழ்ச்சிப்படுத்தப் படுகிறோம்.இந்த ஒழுங்கமைவுதான் நமது அனுபவமாகுது.

ஆனால் நிகழ் இயக்கமும்,கவிதையும் இந்த ஒழுங்கமைவுக்குள் இயைந்து நடப்பதே இல்லை.அதன் நீரோட்டம் இந்த ஒழுங்குக்கு வெளியில் உருவாகுது.கவிதை இந்த ஒழுங்குக்கு எதிராக வெளியில் இருக்கு .கவிதை வெளியிலிருந்து இதன் சஞ்சலங்களை சுவைக்கத் தொடங்குவதாகத் தோன்றுகிறது.இந்த ஒழுங்கே வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியாது.இல்லைனா தினசரி வாழ்வை எப்படி நம்மால் வாழ முடியும்? ஆனால் கவிதைக்கு இந்த ஒழுங்கமைவு ஒரு பொருட்டே இல்லை.

கே- இதனை கூடுதலாக விளக்க முடியுமா?

ப-நமக்கு இரண்டு தன்னிலைகள் இருக்கு.அன்றாடத்திற்கான தன்னிலை மற்றும் நினைவின் தன்னிலை இப்படி இரண்டு தன்னிலைகள்.தினசரிக்கான தன்னிலை மின்சாரக் கட்டணம் எப்போது செலுத்துவது?,எங்கே இனிப்பு வாங்குவது ! என்பது உட்பட யோசிக்கும்.செயல்படும்.நினைவின் தன்னிலைதான் நான் உபயோகமான மனிதன்தானா ,நான் போதாமையிலேயே வாழ்ந்திட்டிருக்கேனா என்பதையெல்லாம் பரிசீலித்து கேள்விகளைத் தூண்டும்.கவிதை நினைவின் தன்னிலையை இயங்கச் செய்யுது.

“பேசமுடியாத இடத்தில் எல்லாம் கூடிக் கொண்டே இருக்கிறது ” என்று அப்பா இல்லாத சுடுகாட்டைப் பற்றி எழுதியிருக்கிறேன்.அது நினைவின் தன்னிலை.நான் கவிதையில் ஒரு பார்வைக் குறிப்பை கொடுக்க அது எனக்கு உதவி செய்கிறது.

பண்பாட்டு ரீதியாகவும்,மொழி ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட அனுபவத்தின் உருவம் ஆறுவதற்குள் அதற்கு முன்பே கவிதை உங்களுக்குள் பிரவேசித்து விடுகிறது.அதோடு உங்களுக்கு ஸ்பரிசம் ஏற்படச் செய்கிறது.அது கட்டமைக்கப்பட்ட அனுபவத்திற்குள் நுழையவில்லை.கிலேசங்கலாகவும் ,வண்ண மயமான கிளர்ச்சிகளாகவும் ,குழந்தைமைத் தன்மையாகவும் கவிதையின் மூலம் உங்களை ஊடுருவுகிறது.இதுதான் கவிதையின் தளம் என்று நினைக்கிறன்.

கவிதைக்கு பலவிதமான மதிப்பும் வேலையும் இருக்கு.மெய்மையைத் தேடுதல் உட்பட கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் இருக்கிறது.குறிப்பிட்ட கவிதை எந்த வேலையையெல்லாம் சேர்த்துக் கூட்டி செய்கிறது என்கிற முகந்திரங்களை முன்வைத்துத் தான் கவிதையை மதிப்பிட முடியும்.ஒரு ஜென் கவிதையில் அதன் சமூகவியல் கருத்துகள் என்ன என்பதை நம்மால் எதிர்பார்க்கவே முடியாது .அது போல பாரதிதாசன் கவிதையில் ஒரு ஜென் கவிதையின் மதிப்பை எதிர்பார்க்க முடியாது.

கே- ஜென் கவிதைகளில் அனுபவங்கள் இல்லாமல் மறையும்போதும் கூட ,அனுபவங்களின் சாயைகள் இருக்கத்தானே செய்யுது?

ப- அனுபவம்னு நாம் சொல்ற எல்லாமே ஒரு ஒழுங்கமைவுதான்.அதற்குக் கவிதையில் முக்கியத்துவம் கிடையாது.ஏன்னு
கேட்டா உங்கள் உடலின் தன்மையே வேறு.உடம்பில் ஒரு கதையும் கிடையாது.உங்கள் மரபணுவில் உங்கள் பெயர் இருக்கிறதா என்ன?

கே- உங்கள் கவிதையில் பின்பற்றப்படும் காலம் வேறொன்றாக தொனிக்கிறது!

ப- கவிதையில் வருகிற காலம் வினாடிகள்,மணித்துளிகள் என்றிருக்கிற வகையான அலகு அல்ல.ஒவ்வொரு கவிதையும் தனது கால அலகையும் சேர்த்து உருவாக்குது.இது கவிதையில் காலக்குழப்பம் போல தோன்றுது.எழுபதுகளின் கவிதைக் காலம் அகாலம்.எண்பதுகளில் அகாலம் என்கிற கருத்து அகற்றப்பட்டு ,காலத்தைக் கவிதையில் நிறுத்தி வைக்கும் போக்கு உருவாகிறது.

கவிதை அதில் வரும் பொருளோடு தொடர்பு பெறாமல் காட்சிகளின் வெவ்வேறு சாயயைகளுக்கு நகர வேண்டும்.அதற்கு முயற்சி பண்றேன்.நவீன இலக்கிய பாடுபொருளைக் கடக்க முயற்சி பண்ணுது.கவிதை உள்ளடக்கத்தைக் கடந்து விட்டது.அது காலக் குழப்பத்தைத் தோற்றுவிக்குது.

கே- சமூக,அரசியல் உள்ளடக்கத்தை கவிதை பின்நவீன நிலையில் கைவிட நினைக்கிறதாகப் பார்க்க முடியுமா?உள்ளடக்கம் வெளியிலிருந்து கொட்டப்படுவதாக புரிந்து கொள்ள முடியுமா?

ப-சமூக மாற்றத்திற்கான காரணியாக கவிதை இருக்கணும்னு இங்கே ஒரு தரப்பு இருக்கு.நான் என்ன சொல்றேன்னா …கவிதை ஏற்றுக் கொண்டிருக்கிற ஏழெட்டு வேலைகளில் அது ஒன்று மட்டும்தான்.அந்த ஒரு வேலையை மட்டும் முன்வைத்துக் கவிதையை ,இலக்கியத்தை முடிவு செய்ய முடியாது.அது ஆற்ற வேண்டிய பிற வேலைகள் முக்கியம்.கவிதையில் மாயம் எங்கே நடக்குதுங்கிறது பெரிய மர்மம்.பிற வேலைகள் அனைத்தையும் கவிதையில் ஆற்ற கூடியது கவிதையில் இந்த மர்மம்தான்.

கவிதையில் நடைபெறும் மாயத்தன்மை நாம நினைப்பது போல முதல் வரியில் ஆரம்பிப்பதில்லை.எட்டாவது வரியிலோ,ஏழிலோ இரண்டிலோ எங்கேயாவது ஆரம்பிக்கும்.என்னுடைய கவிதையின் மர்மங்களை பழமொழிகளில் இருந்து எடுக்கப் பார்க்கிறேன்.

கே- காலகட்டங்களில் சமூக அரசியல் உள்ளடக்கம் எப்படி மாறிவருவதாகக் கருதுகிறீர்கள்?

ப- 1920இல் ஒரு பையன் இருந்தான்.அவன் பெயர் சுப்ரமணிய பாரதி.திருநெல்வேலி பையன் .அவனுக்கு ஒரு அரசியல் கேள்வி இருந்தது.காந்தி வழியில் செல்வதா? திலகர் வழியில் செல்வதா என்று.முப்பதுகளின் இளைஞன் பெரியார் வழியா ?காந்தி வழியா என்று கேள்வியை எதிர்கொள்கிறான்.

1950இல் ஒரு பையன் வருகிறான்.அவன் பெயர் சுந்தர ராமசாமி.அவனுக்கு ஒரு கேள்வி ஜீவா வழியில் போகவா? அல்லது திராவிட இயக்கவழி சரியா? என்பது.1960இல் இளைஞர்கள் நா.காமராசன்,சிற்பி திராவிட இயக்கமா ?இடதுசாரிகளா?என்று யோசிக்கிறார்கள் .

எனக்கு சி,பி.எம் வழியா எம்.எல்.வழியா என்பது கேள்வி?ஒவ்வொரு இருபது வயதிலும் ஒரு இளைஞன் அந்த காலகட்டத்தின் சமூக ,அரசியல் கேள்வியை எதிர்கொள்கிறான்.அது அவனது அணுகுமுறையை நிர்ணயிக்கிறது.கவிதையின் பொருள் அவனது காலகட்டத்தை எதிர் கொண்ட கேள்வியிலும் இருக்கிறது.ஆனால் காலகட்டத்தில் முன்பு எழுதியதால் செவ்வியல் என்றோ,பின்னர் எழுதியதால் பின்நவீனம் என்றோ மதிப்பிட முடியாது.

ஆண்டாளின் எழுத்து செவ்வியல் இல்லை.பின்நவீனம்.ஆண்டாள் மிகப் புதுசு.12டாம் நூற்றாண்டிலேயே கவிதையை அவங்க அனுமதிச்சிருக்காங்க.அது முக்கியமான குணம் கவிதைக்கு.புலன்களைத் திறந்து வைக்கிறார்கள்.அனுபவத்தின் அடுக்கு புலன்களின் வழியே வரும் தகவல்களை வாங்கி கவிதையில் எதிர்கொள்வது!இது புதிய பின்நவீன குணம்.12டம் நூற்றாண்டில் ஆண்டாள் செய்கிறார்.அவரை மிகவும் நெருக்கமாக உணருகிறேன்.

தொண்ணுறுகளின் சமூக அரசியல் கேள்விகள் வேறு .இப்ப இருக்கிற இளைஞனின் சவால்களும் வேறு.மணிவண்ணன் வேறொரு வகைமை.யவனிகா ஸ்ரீராம் மற்றொரு வகை.ஷங்கர்ராமசுப்ரமணியன் வேறு.யவனிகா ஸ்ரீராமிடம் அரசியல்,அரசு பற்றி வெளிப்படையாக இருப்பவை மணிவண்ணனிடம் உள்ளார்ந்தவையாக இருக்கிறது.மணிவண்ணன் அகவியல் எழுத்து.ஆனால் சமூகக் காரணிகள் இருவருக்குமே பொதுவான சமூகப் பொருளாதாரக் காரணிகள்தான்.ஷங்கர் தனிமனித உளவியலில் கொண்டு போய் இவற்றை வைக்கிறார்.

நவீன கவிதைகளிலேயே வேறுவேறு காலம் சம்பந்தப்பட்டு பலவகைமைகள் இருப்பது போலவே; ஒரே காலகட்டத்திலேயே பல வகைமைகளும் இருக்கு.

கே- ஒரு கால கட்டத்தின் சமூக அரசியல் கேள்விகளுக்கு கவிதையில் உள்ள பங்கு என்னவாய் இருக்கும்?

ப- இதை பலவாறு யோசிச்சுப் பார்த்திருக்கோம் .ஆனா முடிவுக்கு வர முடியல.ஒரு ராணுவ ஆட்சி இருக்குதுன்னா அரசியல் எழுத்தின் நேரடிதன்மையின் பொருள் விளங்குது.அங்கே அரசியல் அதிகாரத்தைத் தூக்கி எறிவதற்குண்டான எல்லாவற்றையும் அரசியல் எழுத்து கொண்டிருக்கும்.

இந்தியா போன்ற நாட்டில் எது அரசியல் எழுத்து என்பதை வரையறை செய்வதில் சிக்கல் இருக்கிறது .உலக மயமாக்கல்,கார்ப்பரேட்ஸ் எல்லாம் வந்த பிறகு மறு வரையறை செய்யவேண்டி இருக்கு.அப்போ அரசியல் எழுத்து எது என்பது பற்றியும் மறுவரையறை செய்ய வேண்டிவரும்.நமது வரையறைகள் எல்லாமே மாறவேண்டிய இடத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

**

நன்றி  : லக்ஷ்மி மணிவண்ணன்

0Shares
0