தேவதைகளின் தோழன்

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Andersen. Zhizn bez lyubvi என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது

சிறார்களுக்கான படமாக இதை உருவாக்கவில்லை. விசித்திரமான நிகழ்வுகளும் நிஜமான அனுபவங்களும் ஒன்று சேர்ந்த உளவியல் படைப்பாகவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சனின் நினைவுகளே படத்தை முன்னெடுக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும்  இசை படத்தின் தனித்துவமாகும்.

சிறுவர்களுக்கான தேவதை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்றவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் .The Steadfast Tin Soldie, The Snow Queen, The Little Mermaid, Thumbelina), The Little Match Girl ,The Ugly Duckling போன்றவை இவரது புகழ்பெற்ற படைப்புகள். ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இக் கதைகளைத் தழுவி திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.

இந்தப்படத்தின் ஒரு காட்சியில் ஆண்டர்சன் நிகழ்த்தும் நாடகம் ஒன்றைக் காணுவதற்காக டேனிஷ் மன்னர் வருகை தருகிறார். நாடகம் முடிந்தவுடன் தனி அறையில் மன்னருக்கு உணவளிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகளை மன்னர் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆண்டர்சன் அழைத்துவரப்படுகிறார். அவரையும் மன்னர் தன்னோடு சாப்பிடும்படி அழைக்கிறார். தனக்குப் பசியில்லை என்று ஆண்டர்சன் மறுக்கவே மன்னர் ஆச்சரியத்துடன் கேட்கிறார்

“பசித்த போது மட்டும் சாப்பிடுவதற்கு நீ என்ன விலங்கா?“

“என்னை விலங்கோடு ஒப்பிட்டதற்கு நன்றி , பசித்த வேளையில் மட்டும் தான் சாப்பிடுவேன்“ என்று பணிவாகப் பதில் சொல்கிறார் ஆண்டர்சன்

மன்னரின் கேள்வி அரசவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒரு வரியில் விளக்கிவிடுகிறது. விரும்பும் நேரமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தான் மன்னரின் வாழ்க்கை. டேனிஷ் மன்னரோ குளியல் அறையில் குளித்தபடியே சாப்பிடுகிறார். உடை அணிந்தபடியே சாப்பிடுகிறார். பேசிக் கொண்டிருக்கும் போதும் எதையோ மென்றபடியே இருக்கிறார். சாப்பிடுவதற்காகவே வாழுவது தான் அவரது உலகம். ஆனால் ஆண்டர்சன் போன்ற ஏழைகளுக்குப் பசித்த வேளையில் கூட உணவு கிடைக்காது.

கிறிஸ்துமஸ் நாளில் சாப்பிட உணவின்றிக் கொட்டும் பனியில் தவிக்கும் போது தவறி விழுந்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்துச் சாப்பிடுகிறார் ஆண்டர்சன். குளிருக்கு ஒதுங்க இடமின்றி நாடக அரங்கினுள் அடைக்கலமாகிறார். யாரும் இல்லாத மேடையில் மண்டியிட்டுத் தான் ஒரு புகழ்பெற்ற நடிகனாக வேண்டும் என்று மன்றாடுகிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது

இது போலவே அவரது குரலின் இனிமையைக் கேட்டு ரசித்த மக்கள் அவர் ஆணா பெண்ணா என்று சந்தேகம் கொள்கிறார்கள். ஆடை உருவி அவரது அடையாளத்தைக் காண முயல்கிறார்கள். அவர் தடுத்தபோது உடைகளை உருவி அசிங்கப்படுத்துகிறார்கள். அந்தக் கும்பலிடம் தப்பியோடுகிறார். கண்ணீருடன் புழுதியில் விழுந்து கிடக்கும் ஆண்டர்சனின் தோற்றம் கலங்க வைக்கிறது.

ஒரு நாள் அவரது சகோதரி அவருக்காக நோட்டு ஒன்றை திருடப்போய் அடிபடுகிறாள். அவளை அடித்த கடையின் மீது ஆண்டர்சன் கல் வீசுகிறார். அவள் வீட்டைவிட்டு ஒடிவிடுகிறாள். படத்தில் அவளுடன் ஆண்டர்சனுக்குள்ள அன்பு அலாதியானது.

ஆண்டர்சன் தன் வாழ்நாளில் அனுபவிக்காத கஷ்டமேயில்லை. எவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மனிதர்கள் கைவிட்ட காரணத்தால் அவர் தேவதைகளைத் தனது உதவிக்கு அழைக்கத் துவங்கினார். தனது கண்ணீரைத் தான் அவர் மகிழ்ச்சியின் வாசனை திரவியமாக உருமாற்றினார். கதைகளை அவர் ஒரு போதும் வெறும் கற்பனையாகக் கருதவில்லை. அவற்றை மாற்று உலகமாகக் கருதினார்.

கால் உடைந்து போன போர்வீரன் பொம்மை ஒன்றை எப்போதும் ஆண்டர்சன் கூடவே வைத்திருந்தார். அந்தப் பொம்மை வீரனுக்குப் போரில் கால் உடைந்துவிட்டதாகக் கதை சொன்னார். உலகம் ஒருவனைக் கைவிடும் போது கதைகள் அவனைக் காப்பாற்ற முனைகின்றன. ஆற்றுப்படுத்துகின்றன. கனவுகளை உருவாக்கி நம்பிக்கை கொள்ள வைக்கின்றன.

ஆண்டர்சன் கதைகளின் பின்னால் இருப்பது அவரது சொந்த வாழ்வின் துயரங்களே. Ugly Duckling கதையில் வரும் வாத்து அவர் தான்.

சிறுவயதில் அவரது தோற்றம் மற்றும் கீச்சிடும் குரலுக்காக மற்றவர்களால் கேலி செய்யப்பட்டார். அந்தக் கிண்டல் அவரைத் தனிமைப்படுத்தியது, தன்னை ஒரு அசிங்கமான வாத்து என நினைத்துக் கொண்டார். புகழ்பெற்ற எழுத்தாளரான பிறகே அவர் அழகான அன்னமாக உருவெடுத்தார். இந்தக் கதையில் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பினைக் காணமுடிகிறது

ஆண்டர்சன் டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1805ல் பிறந்தார். தந்தை செருப்புத் தைப்பவர். தாய் சலவை தொழிலாளி. சிறுவயதிலே தந்தையை இழந்தவர். தானே செய்த பொம்மைகளை வைத்து விளையாடத் துவங்கிய ஆண்டர்சன் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். கவிதைகள் எழுதவும் பாடவும் கூடிய திறமைசாலியாக இருந்த போதும் உலகம் அவரை அங்கீகரிக்கவில்லை. நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு கோபன்ஹேகனுக்கு ஓடிப்போனவர். ஆனால் அவரது கனவு எளிதாக நிறைவேறவில்லை. அவரது அசாத்தியமான குரலில் மயங்கிப் பாடுவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தந்தார்கள். தனது கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் ஆண்டர்சன் புகழ்பெறத் துவங்கினார்

அரண்மனையில் நடைபெறும் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆண்டர்சனிடம் உடனடியாக ஒரு கதை சொல்ல முடியுமா எனக்கேட்கிறாள் மகாராணி. புகழைப் பற்றிய கதையாக இருக்க வேண்டும் என்கிறார் மன்னர். உடனே புதிதாகக் கதை ஒன்றைச் சொல்லத் துவங்கினார். புகழுக்கு ஒரு உருவம் கொடுக்க ஆரம்பிக்கிறார். மிக உயரமான தோற்றம் கொண்ட புகழ் ஒருவரை தன் விரல்களால் தூக்கி மேலே கொண்டு போய்ப் பார்த்துவிட்டு கீழே எறிந்துவிடும் என்றொரு கதையைப் புனைந்து சொல்கிறார். கதையைக் கேட்டு அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். எல்லாப் புகழும் தற்காலிகமானதே. புகழின் உச்சிக்குப் போனவர்கள் எவரும் அங்கே தங்கிவிட முடியாது என்பதை அழகான கதையின் மூலம் புரிய வைத்துவிடுவார் ஆண்டர்சன்.

கலையுலகில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசைக்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஒரு காட்சியில் தான் பாடுவதைக் கேளுங்கள் என்று கால்களைப் பிடித்துக் கெஞ்சுகிறார். ஒரேயொரு வாய்ப்பு அவருக்குத் தரப்படுகிறது. ஆழ்மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாகப் பாடுகிறார். அந்தப்பாடல் கேட்பவர்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறது. இதன் காரணமாக மன்னரது டேனிஷ் நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக்கொள்கிறார்கள் .

ஆண்டர்சன் கதைகள் தோற்ற அளவில் தேவதை கதைகளைப் போலத் தெரிந்தாலும் தன்னை நிரூபிக்கும் வரை ஒருவர் அடையும் அவமானங்களையும் புறக்கணிப்பையும் பற்றியதாகவே உள்ளது. மீட்சி தான் தேவதைகளால் ஏற்படுகிறது

அப்படியான மீட்சி ஆண்டர்சனுக்கும் காதலின் வழியே கிடைத்தது. அவர் நிகழ்த்திய நாடகம் ஒன்றைக் காணவரும் அழகான பெண்ணிடம் காதல் வசப்படுகிறார். அந்தப் பெண்ணை நாடக அரங்கில் அவர் நடத்தும் விதம் காதலின் அழகான தருணங்கள். காதலின் பொருட்டுத் தன்னைக் கடற்கன்னியாக மாற்றிக் கொண்ட தி லிட்டில் மெர்மிட் கதையிற்குப் பின்னாலும் அவரது சொந்தவாழ்க்கையின் நிழலே காணப்படுகிறது.

அரண்மனையில் நடத்தப்பட்ட நாடகத்தைப் பார்க்க வந்த தணிக்கை அதிகாரி இது போன்ற முட்டாள்தனமான, அரசு எதிர்ப்பு நாடகங்களை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை செய்யும் போது உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று ஆண்டர்சன் கோபம் கொள்கிறார். அரச சபையினரால் ஆண்டர்சன் அவமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவாக மன்னரே தனது அலங்கார ஆடையைக் கழட்டி வீசியதும் அனைவரும் ஆண்டர்சனுக்கு ஆதரவாகத் திரளுகிறார்கள். படத்தின் மிக முக்கியமான காட்சியது. இந்த மன்னரை மனதில் வைத்து தான் ஆண்டர்சன் மன்னரின் புதிய ஆடை என்ற கதையை எழுதியிருக்கிறார்

ஆண்டர்சன் பள்ளியில் படித்த நாட்களில் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது ஆசிரியர் வீட்டிலே தங்கிச் சாப்பிட்டுக் கல்வி பயின்றிருக்கிறார். அந்த ஆசிரியர் அவரை ஒரு வேலைக்காரனைப் போலவே நடத்தியிருக்கிறார். அத்தோடு அவரது திறமைகளைக் கேலி செய்து முட்டாள் எனப் பட்டம் சூட்டியிருக்கிறார். இதனால் ஆண்டர்சன் மனவேதனை அடைந்திருக்கிறார்.

படத்தின் அந்தப்பகுதியில் ஆண்டர்சன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அப்போது வேண்டுமென்றே மெழுகுவர்த்திகளை அணைக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆனால் மெழுகுவர்த்தியின் சுடர்கள் அணைய மறுக்கின்றன. தனியே காற்றில் மிதந்து நடனமாடுகின்றன. ஆண்டர்சன் அந்தச் சுடர்களைத் தன்னை நோக்கி அழைக்கிறார். அவை ஆண்டர்சனைச் சுற்றிலும் நடனமாடுகின்றன. மிக அழகான காட்சியது

இன்னொரு காட்சியில் வீடு தீப்பற்றி எரியும் போது அவர் ஒடியோடி தனது பொம்மைகளைக் காப்பாற்றுகிறார். அவரது செல்ல பிராணியான காகம் புகைக்கூண்டில் மாட்டிக் கொள்ளவே கூண்டிற்குள் நுழைந்து அதைக் காப்பாற்றுகிறார். அவர் நேசிக்காத விலங்குகளே இல்லை. ஆனால் நாயைக் கண்டு மட்டும் அவருக்குப் பயம். அதுவும் தெருநாய்கள் என்றால் ஒடத்துவங்கிவிடுவார்.

படத்தின் துவக்காட்சியில் கடவுள் அவர் முன்னே தோன்றி அவரை ஆசிர்வதிக்கிறார். அந்தக் காட்சியில் கடவுளின் தோற்றமும் அவரது உரையாடலும் ஒரு நடிகரைப் போலவே இருக்கிறது. அவர் கடவுளைச் சந்தித்த விஷயத்தை அம்மாவிடம் சொல்கிறார். அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் தன் மகன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

ஆண்டர்சன் தனது இலக்கிய ஆதர்சமாக எழுத்தாளட்ர சார்லஸ் டிக்கன்ஸை கருதினார். டிக்கன்ஸ் கதைகளைப் பித்துப்பிடித்தவர் போலப் படித்தார். 1847 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் டிக்கன்ஸை சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு உருவானது. டிக்கன்ஸ் வீட்டில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் ஆண்டர்சன். அந்த நாட்களை மறக்கமுடியாது என்று டிக்கன்ஸ் எழுதியிருக்கிறார்.

ஆண்டர்சனின் கதைகள் எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன , எந்த வயதில் படித்தாலும் அந்தக் கதைகள் தரும் வியப்பு மாறுவதேயில்லை. அவரது பிறந்த நாளினை தான் சர்வதேச சிறுவர் புத்தகத் தினமாக இப்போது கொண்டாடுகிறார்கள்.

••

0Shares
0