தேவராஜின் உலகம்

நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்:

மரு. நோயல் நடேசன்

கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை.

இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என ஆராய்வது தொல்பொருள் ஆய்வாளர்களின் வேலை. அல்லது தேவை. தற்காலத்தில் அரசியல்வாதிகள் அரசியலுக்காக ராமன் பிறந்த இடம், ராவணன் வாழ்ந்த இடம் எனத் தோண்ட முனைவார்கள். இது காவியங்களை எழுதியவர்களின் கற்பனைத் திறத்தை அவமானப்படுத்தும் விடயங்கள் என்பதால் அவை நமக்குத் தேவையற்றவை.

நான் சொல்வது இந்திய இதிகாசங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. கிரேக்க இதிகாசங்களுக்கும் பொதுவானது. ராமன், அர்ச்சுனன் போன்ற இதிகாச பாத்திரங்களை, தற்காலத்தில் தங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பவர்களாலும் மறக்க முடியாது.

அதேபோல் ஹோமரின் ஆக்கிலிஸ், ஒடிசியஸ் போன்றவர்கள் மேல் நாடுகளில் பல எழுத்தாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். பல வாசகர்களை கவர்ந்ததால், பெண் பாத்திரங்கள் சீதை, பாஞ்சாலி, ஹெலன் பெனிலப்பி போன்றோர் இன்னமும் எத்தனயோ பெண்களின் பெயர்களாக உலகம் முழுவதும் வலம்வருகின்றன.

இதிகாசப் பாத்திரங்களின் நடத்தைகளையும், அவர்களின் மனஉணர்வுகளையும் வார்த்தைகளையும் நாம் வாசித்து அறியும்போது, அவர்களை எங்களுக்கு அறிந்தவர்களாக உணர்கிறோம். எங்கள் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைவிட இந்த பாத்திரங்களை நாம் அறிந்துகொள்கிறோம். பாத்திரங்களை நாம் மனதார நெருங்குவதால் அவர்கள் எம்மில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். எமது மனச்சாட்சியில் பதிவாகி நிழலாக நம்மைத் தொடர்கிறார்கள். ஏன் நம்மை வழி நடத்துகிறார்கள் எனவும் சொல்லலாம்.

இதிகாசப் பாத்திரங்கள் மட்டுமல்ல, தற்போதைய நாவல் இலக்கியத்திலும் பாத்திரங்களே முக்கியமானவை. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தாக்கத்தால் குந்தவை, நந்தினி வானதி எனத் தங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்த பெற்றோரை எனக்குத் தெரியும். என்னோடு மூன்று நந்தினிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தார்கள்.

தற்காலத்தில் நான் படித்த தென்னிந்திய நாவல்களில் என் மனதில் பதிந்திருக்கும் சில பாத்திரங்கள் உண்டு. அவைகளில் தி. ஜானகிராராமனின் யமுனாவும் அலங்காரத்தம்மாளும் மறக்கமுடியாத பாத்திரங்கள். அதேபோல் இமையத்தின் கோவேறு கழுதையில் ஆரோக்கியம் எஸ். பொன்னுத்துரையின் சடங்கில் செல்லபாக்கியம் என்பன என் நினைவில் வாழ்பவர்கள்.

நாவல் இலக்கியத்தின் அடிப்படை உண்மையைப் புரியாத பலர் எழுதும் நாவல்கள் இக்காலத்தில் சம்பவங்களின் தொகுப்பாகவே வருகின்றன. இது இக்காலத்துக்கு மட்டும் பொதுவானது அல்ல. நாவலைப் பற்றி அறிந்தவர்கள் கூட பிரசார நோக்கத்திற்காக எழுதும்போது இந்தப் பிரச்சினை வருகிறது. இதில் முக்கிய குற்றவாளிகள் சோசலிச யதார்த்தவாதமெனப் பேசிய மார்க்சிய விமர்சகர்களே. இலங்கை, இந்தியாவில் மக்கள்மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையை வெளிப்படுத்துவதற்காக, நடந்த சம்பவங்களைச் சித்திரித்து, அதன் மூலம் அவர்களது கொள்கை விளக்க நாவல்களை நம் முன்பாக வைப்பார்கள்.

ஆனால், அங்கு ஒரு சிறந்த பாத்திரத்தைப் படைக்க தவறியிருப்பார்கள். அதை அறிவு கெட்டதனமாக நாம் இன்றும் கொண்டாடுகின்றோம். பல ஒடுக்குமுறை, போர் சம்பவங்களை நாங்கள் பத்திரிகைகளில் படித்திருப்போம், கேட்டிருப்போம். ஒரு சம்பவத்தை மறு சம்பவம் மறக்கப் பண்ணிவிடும். புதிய போர் பழையபோரை விழுங்கிவிடும்.

நாம் கேட்டு வளர்ந்த, முப்பது வருடங்கள் நடந்த வியட்நாம் போரை வியட்நாமே தற்போது நினைப்பதில்லை. தற்போது அமெரிக்காவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வியட்நாம் இணைந்துள்ளது.

தினமும் இந்தியாவில் தலித் மக்களுக்கு நடக்கும் பல விடயங்களை தற்போது முகநூல் வழியாக அறிந்து கொள்கிறோம். இப்படியான விடயங்களை வைத்து உருவாக்கிய நாவல்களின் பெயர்கள், நாம் பார்த்த தமிழ்ப் படங்களாக அடுத்த நாள் மறந்துவிடும். அதேபோல் நமது இலங்கை நாட்டில் போர் சம்பவங்களை, இன வன்முறையை, இயக்க பிளவுகள் மற்றும் சிறைச் செய்திகளை வைத்துப் பல நாவல்கள் வந்துள்ளன. அவற்றைப் படிக்கும்போது, அவை பற்றித் தெரியாதவர்களுக்குப் புதிதாகவும், ரசனையாகவும் இருக்கும்.

தமிழக இலக்கியத் தளத்தில் புலம் பெயர்ந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பேசப்படுவதற்கு அதுவே காரணம். அதற்காக நடக்காத விடயங்களை எழுதியவர்களும் உண்டு. ஆனால், ஈழத்தவர்களான நமக்கு அவை பார்த்த, கேள்விப்பட்ட, பத்திரிகையில் படித்த அன்றாட சம்பவங்கள்தான். பத்திரிகையாளரான டி.பி.ஸ். ஜெயராஜ் எத்தனையோ போர் சம்பவங்களை விவரித்துக் கடந்த முப்பது வருடத்தில் தெளிவாக எழுதியுள்ளார். ஆனால், அவை இலக்கியமல்ல.

ஏன்?

அங்கு பாத்திரங்கள் இல்லை என்பதால்.

சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார்.

சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார். இதுபற்றி இவ்வளவு தூரம் விளக்கவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், நான் கானல் தேசத்தில் ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி தற்கொலை போராளியாகப் படைத்தபோது, அது உண்மையில்லை என்று ஐபிசியில் சில பெண்கள் குத்தி முறிந்தார்கள். அது காலச்சுவடு பதிப்பித்த நாவல் என்றும், பாத்திரங்கள் கற்பனையின் உருவாக்கம் எனவும் நம்ப மறுக்கும் சமூகத்தில் நாம் மீண்டும் மீண்டும் எழுதவேண்டும்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நிமித்தம் நாவலில் ஒரு அரைச் செவிடனான தேவராஜ் பாத்திரம், தமிழ் நாவல் உலகில் தொடரும் பாத்திரமாக வரும் என நினைக்கிறேன். அல்லது அடிக்கடி பேசப்படவேண்டும் என விரும்புகிறேன். செவிடாக இருப்பது இவ்வளவு கடினமானதா என்று நினைக்கும் அளவுக்குப் பாத்திரத்தின் துன்பம் தொடர்கதையாக நகருகிறது.

எஸ் . ராமகிருஷ்ணன், காது கேளாதவன் சமூகத்தில் மட்டுமல்ல பாடசாலையில் நண்பர்கள், ஆசிரியர்கள் மத்தியில், இவற்றிற்கு மேலாகத் தந்தையால் மற்றும் குடும்பத்தில் சகோதரர்களால் எவ்வளவு புறக்கணிக்கப்படுகிறான் என்பதை விவரமாகச் சொல்வதன் மூலம், வாசகர்களின் மனதில் அவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

பெண்களை இயல்பிலேயே தயாள குணம் கொண்டவர்கள் என்று நினைப்போம். ஆனால், நிமித்தம் நாவலில் வரும் பெண்கள் பல இடங்களில் அவனது காது கேட்காத தன்மையையும் அவனது காம ஆசையையும் முதலாக வைத்துச் சுரண்ட முயல்கிறார்கள். சகோதரர்கள் சொத்து, திருமணம் என்று வரும்போது செவிடனை யார் திருமணம் செய்ய முன் வருவார்கள் எனக் கேட்பதுடன், அவனுக்குப் பணம் எதற்கு என்ற கேள்வியுடன் ஏமாற்றுகிறார்கள். வெளிப்பார்வையில் சமூகத்தின் கட்டமைப்புகள், பரஸ்பர நட்பை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் சமூகம் ஒருவனுக்கு உதவி செய்வதைவிட, எப்பொழுதும் பலமானவர் பலமற்றவரை சுரண்டும் (cannibalistic) இயல்பைக் கொண்டது என்ற உண்மை இந்த நாவலின் அடிநாதமாக வருகிறது.

தேவராஜ் என்ற செவிட்டுப் பாத்திரம், அக்கால கற்பனாவாத நாவல்களில் அல்லது சினிமாவில் வரும் இலட்சிய கதாநாயகன் அல்ல. எந்த விதத்திலும் நேர்மையான பாத்திரமுமல்ல. அவன் சராசரியான மனிதன். தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தன்னை நம்புபவார்களை அவன் ஏமாற்றவும் தயங்கவில்லை. எலிப்பந்தயத்தில் (Rat race) பங்குகொள்ளும் தற்போதைய சமூகத்தில் வாழும் தேவராஜ் என்ற யதார்த்தமான பாத்திரப் படைப்பு இந்த நாவலில் முக்கியமானது.

சிறு வயதிலிருந்தே ராமசுப்பு என்ற நண்பனை மற்றும் இடையில் சந்திக்கும் சுதர்சனம் ஆசிரியர், அவரது மனைவியான ரீச்சர் மற்றும் குறுகிய காலத்தில் அச்சுத்தொழிலில் ஒன்றாகப் படித்த ஜோசப் என்பவர்களைத் தவிர மற்றவர்கள் எவரிடமுமிருந்து ஆதரவோ அன்போ கிடைக்காதவன் தேவராஜ்.

நாவலில் தேவராஜின் முக்கிய வில்லனாகத் தெரிவது அவனது தந்தையே. அவர் சிறு வயதிலிருந்து அவனது உளநிலையை நாசமாக்குகிறார். பல குடும்பங்களில் குழந்தைகளை மனரீதியில் நாசமாக்குவது பெற்றோர்களே. அவர்கள் தங்களது நினைவுகள், ஆசைகள், கனவுகளுக்கேற்ப குழந்தைகளை, எப்படி நாய் பழக்குபவன் வேட்டைக்கு காவலுக்கு துப்பறிவதற்கு எனப் பழக்கி எடுப்பதுபோல் வளர்த்தெடுக்க நினைக்கிறார்கள். அது முடியாதபோது இவன் நாசமாய் போவான் எனத் தினம் தினம் திட்டி அவனை முன்னேறவிடாமல் செய்வதற்குத் தேவையான சகல முயற்சிகளையும் எடுக்கிறார்கள்.

அன்னையால், தந்தையைத் தடுக்க முடிவதில்லை அல்லது அவர்களும் ஒரே தடத்தில் குடும்ப ஒற்றுமையைக் காக்க ஓடுகிறார்கள்.

தேவராஜின் தந்தைக்கு அடுத்து முக்கியமான பாத்திரம் பாடசாலை நண்பனான ராமசுப்பு. ஒவ்வொரு தருணத்திலும் தேவராஜுக்கு உதவுகிறான். அவனைப்போல் ஒரு நல்ல நண்பன் எல்லோர் வாழ்விலும் கிடைக்கவேண்டும் என இந்த நாவலை வாசிப்பவர்கள் நினைப்பார்கள். மேற்கூறிய மூன்று பாத்திரங்களும் முழுமையான பாத்திரங்கள். நாவலின் ஓட்டத்தை தீர்மானிப்பவர்களும் இவர்களே

தேவராஜ், பிற்காலத்தில் திருமணத்திற்கு நண்பர்களை அழைப்பதும், அவர்களில் பலர் அவனது திருமணத்தைப் புறக்கணிப்பதாகவும் எண்ணி மனங்குமைவதுடன் தொடங்கிய நாவல், பின்னோக்கி நினைவோடையாக மலர்கிறது. இதனால் ஆரம்ப வாழ்கையில் வந்த பல பாத்திரங்கள் நீண்ட ரயில் பயணத்தில் வந்த பயணிகளாக வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி விடுகிறார்கள்.

செவிட்டுத்தன்மையால் தேவராஜ் புறக்கணிக்கப்படுவதாலும் மற்றவர்கள் போல் அவனது ஆசைகளை நிறைவேற்றி வாழமுடியாது ஒதுக்கப்படுவதால் அவனது மனம் பல தடவை தரையில் தவறிவிழும் கண்ணாடிப் பாத்திரமாக சிதறுவதை நாவலில் பார்க்க முடிகிறது. காமத்தின் உந்துதலால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கான அவனது நியாயமான ஆசை தொடர்ந்தும் பல வழிகளில் பலரால் சிதைக்கப்படுகிறது. அவன் விரும்பியது அமையாது நாற்பத்தேழு வயதில் ஒரு திருமணம் அமைகிறது. அந்த திருமணத்தை ஒரு அபத்த நாடகமாக தேவராஜ் எண்ணுவதாக கதை முடிவது எனக்குப் பிடித்தமான முடிவாகும்.

நாவலில் ஒரு குறையாகப் பார்ப்பது இறுக்கமற்ற தன்மை. பெரிய பெட்டியில் பொருட்களை வைத்துத் தூக்கும்போது அவைகள் நெருக்கமற்று ஒன்றோடு ஒன்று உள்ளே மோதும் உணர்வு ஏற்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை இந்த நாவலை கையில் எடுத்து சில பக்கங்களோடு வைத்துவிட்டேன். அடுத்த வருடம் எடுத்தபோது கொஞ்சம்: முன்னேறினேன். இம்முறை இலங்கை சென்றபோது மீண்டும் ஒரு புத்தகத்தை வாங்கி பயணத்தில் வாசிக்கத் தொடங்கியபோது, புத்தகம் என்னைக் கவ்விக் கொண்டது.

படித்து முடித்தவுடன் எவ்வளவு முக்கியமான நாவலைத் தவறவிடவிருந்தேன் என நினைத்தேன். அதே வேளையில் எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளருக்கும் செம்மைப்படுத்துவதன் அவசியம் புரிந்திருக்கும். இலங்கை தமிழகம் எங்கும் எழுதும் எழுத்தாளர்களுக்கு செம்மைப்படுத்தும் Book Editor அவசியம் என்பது எனது கருத்து.

எனது புத்தக சேகரிப்பில் இரண்டு பிரதிகள் உள்ள புத்தகங்கள் மூன்றே: வொதரிங்கைட் என்ற ஆங்கில நாவல், ஒரு புளியமரத்தின் கதை. மூன்றாவது நிமித்தம் நாவலாகும்.

*****

நன்றி

அந்திமழை இணைய இதழ்.

https://noelnadesan.com/

0Shares
0