தேவியின் திருப்பணியாளர்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணியாளர்கள் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் கிரிஸ் புல்லர்.

இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

மீனாட்சியம்மன் கோவிலைப் பல்வேறு காலகட்டங்களில் கள ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார்.

இந்த ஆய்வேடு தமிழில் வெளியாகியுள்ளது.

தேவியின் திருப்பணியாளர்கள் என்ற நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

இந்நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் சி. நாகராஜபிள்ளை.

மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு நூல் இதன்முன்பு எழுதப்பட்டதில்லை. கோவிலின் உருவாக்கம் துவங்கி கோவிலின் பூசகர்கள் யார். எப்படிப் பூசைகள் நடைபெறுகின்றன. கோவிலின் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது. இசைக்கலைஞர்களின் பணி எத்தகையது, விழாக்கள் எவ்வாறு நடைபெறுகின்றன. கோவில் நுழைவு போராட்டத்தின் போது என்ன நடந்தது, நிலம் தொடர்பான வழக்குகள் என்று விரிவாக  எடுத்துப் பேசுகிறது.

1999ல் வெளியான இந்நூல் தற்போது அச்சில் உள்ளதா எனத் தெரியவில்லை.

முனைவர் தொ. பரமசிவன் அவர்களின் அழகர் கோவில் ஆய்வு விரிவான ஒரு கள ஆய்வாகும். இந்த இரண்டினையும் ஒருசேர வாசித்தால் மட்டுமே மதுரைக் கோவில்களின் தொன்மையும் பண்பாட்டுச் சிறப்பும் புரியக்கூடும்.

0Shares
0