தொலைத்த ஆடைகள்

அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும்.

அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கோபத்துடன் பிரிந்து போயிருந்தார்கள். அறை காலி செய்யப்பட்டு வேறு ஆட்கள் குடியிருந்தார்கள். எனது உடைகள், புத்தகங்கள் குப்பை தொட்டியில் தூக்கி எறியப்பட்டுவிட்டன என்று அறைவாசி ஒருவன் போனில் சொன்னான்.

எனக்கு மிக துக்கமாக இருந்தது. அந்த அறையிருந்த வீதியின் நின்று கொண்டேயிருந்தேன். அங்கிருந்து விலகி போக மனதேயில்லை. பொருட்கள் தொலைந்ததை விடவும் இது தான் என் இருப்பு. இப்படி தான் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் ஆழமாக என்னை வருத்தியது. யாரிடம் இதைப்பற்றி சொல்வது. இது என்னுடைய தவறு தானே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. சாலையை வெறித்தபடியே நெடுநேரம் நின்று கொண்டிருந்தேன். நகரம் மனித இருப்பை கேலி செய்து விளையாடுவதையும் அவமதிப்பதையும் இயல்பாக கொண்டிருக்கிறதோ என்று ஆத்திரமாக வந்தது.

அறையில் மாற்றுஉடைகள் இருக்ககூடும் என்பதால் சிறிய ஜோல்னா பை மற்றும் ஒரேயொரு சட்டையுடன் சென்னைக்கு வந்திருந்தேன். இப்போது அது தான் மற்ற நாட்களுக்கானதா? இல்லை அடுத்த பஸ்ஸில் ஊர் திரும்பி போய்விடலாமா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் அப்படி திரும்பி போவதில் உடன்பாடில்லை. இது இந்த நகரோடு நான் போடும் யுத்தம். அவ்வளவு சீக்கரத்தில் தோற்று போய்விடக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன்.

நீண்ட நேரத்தின்  பிறகு எழுந்து நடந்தே உதயம் தியேட்டர் வரை சென்றேன். இனி எங்கே போவது. அறையைப் பற்றிய பிரச்சனையில்லை. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எந்த ஆதாரத்தில் வாழ்வது என்ற குழப்பம். சைதாப்பேட்டையில் இருந்த ஒரு நண்பனின் அறைக்கு சென்றேன். அவன் நடந்ததை அறிந்துவிட்டு உடைகள் ஒரு பிரச்சனையே இல்லை. இருப்பதை போட்டுக் கொள்ளலாம். மாத முதல்வாரத்தில் வாங்கி கொள்ளலாம் என்றான்.

மறுநாள் பகல் முழுவதும் குளிக்கவில்லை, வெளியே போக மனமில்லை. அது வடிந்து இயல்பு வாழ்க்கை துவங்க ஒரு வாரமானது. என்னை போலவே பலரும் இது போன்ற துரத்தல்கள், அவமானங்கள், வலிகளை கடந்து தானே வந்திருப்பார்கள் என்று மனது சமாதானம் கொண்டுவிட்டது.

பின்பு வழக்கம் போல கையில் உள்ள காசிற்கு பழைய புத்தகங்களை தேடி வாங்க ஆரம்பித்தேன். கதர் கடையில் ஜிப்பாக்கள் வாங்கினேன். கடந்த காலத்தை சென்னை எளிதில் மறக்கடிக்க செய்துவிடுகிறது.

ஒரு நாள் விஜயா தியேட்டரின் அருகாமையில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் புத்தகம் புரட்டிக் கொண்டிருந்த போது ஒரு ஆள் என்னை கடந்து எதிரே உள்ள மெக்கானிக் ஷாப் ஒன்றிற்குள் போவதை கண்டேன். அது என்னுடைய ஆடை. ஆரஞ்சு நிறத்தில் கோடுபோட்ட சட்டை. அது அவன் உடலுக்கு மிக பெரியதாக இருந்தது. எனக்கு  அவனை அருகாமையில் போய் பார்க்க வேண்டும் போலிருந்தது.

மெக்கானிக் ஷாப் அருகில் போய் நின்று கொண்டபடியே பொய்யாக ஒரு முகவரியை கேட்டேன். எனது சட்டையை அணிந்திருந்தவன் வெளியே வந்து என்ன தெரு என்று விசாரித்து கொண்டிருந்தான். நான் அவனேயே பார்த்து கொண்டிருந்தேன். எனது சட்டையின் பையில் ஒரு நாள் பேனா மூடி கழண்டு மைக்கறை படிந்து போயிருந்தது. எவ்வளவு துவைத்தாலும் அது மறையவேயில்லை  இன்றும்  அது அப்படியே இருந்தது. நான் அவனை கவனிக்கிறேன் என்பதை அறிந்தவன் போல கூச்சத்துடன் தனது வேலையை கவனிக்க துவங்கினான்.

அவனோடு என்ன பேசுவது. எதற்காக அவனோடு பேச வேண்டும். ஏனோ அவனை பிடித்திருந்தது.

எனது ஒரு சட்டையை இவன் அணிந்திருக்கிறான். மற்ற ஆடைகளை யார் யாரோ அணிந்திருப்பார்கள். அவர்கள் எங்கேயிருக்கிறார்கள். அவர்களுக்கு இவை எனது உடைகள் என்று தெரியுமா? எனது ஆடையை அணிந்திருப்பவனை எனது நண்பனாக கொள்ளலாம் தானா?

எனது ஆடைகளை இன்னொருவன் அணிந்து பார்க்கும் போது ஏன் மனது இவ்வளவு ஏக்கம் கொள்கிறது. சில வேளைகளில் தற்செயலாக பேருந்தில் நான் அணிந்துள்ள  அதே சட்டையை அணிந்து கொண்டு  பயணிக்கும் சிலரை கண்டிருக்கிறேன். அவரும் என்னை போலவே ரசனை கொண்டிருக்கிறார் என்று தானாகவே ஒரு நெருக்கம் உருவாகும். சிலர் அதை வெளிப்படையாக அறிந்து சிரிக்கவும் செய்திருக்கிறார்கள். ஒரே போல உடையணிந்த இருவருக்குள் ஏன் நெருக்கம் உருவாகிறது. அவர்கள் ஏன் எப்போதுமே மற்றவரை மெல்லிய புன்னகையோடு எதிர் கொள்கிறார்கள்.

நான் தேர்வு செய்த துணியை எத்தனையோ பேர் வாங்கி போய் சட்டை தைத்திருப்பார்கள் என்ற எளிய உண்மை கூட ஏதோ பெரிய விந்தை போல ஏன் மயக்குகிறது.

அன்று எனது சட்டையை அணிந்த மனிதன் என்னை ஏதோ ஒரு விதத்தில் ஆறுதல்படுத்தினான். அவனை போன்று எனது ஆடைகளை அணிந்த நான் காணாத பலர் மீதும் அன்பும் நெருக்கமும் உருவானது. உடைகள் உடலை மறைக்ககூடியவை மட்டுமில்லை. அவை நமது நினைவுகள், சாட்சிகள், மற்றும் ஆசையின் வடிவம். அதை அந்த நிமிசத்தில் முழுமையாக உணர்ந்தேன்.

வீட்டில் எனது சிறுவயது டவுசர் சட்டைகளை போட்டு அலுமினிய பாத்திரங்களை வாங்குவதை பார்த்திருக்கிறேன். அப்போது இத்தகைய ஆதங்கங்கள் வரவில்லை. ஆனால் நானே தொலைத்த ஆடைகளை யாரோ அணிந்து கொண்டிருக்கும் போது தான் அது பொங்கி எழுகிறது. உலகின் உண்மை இது தான் போலும். உடைகள் வீடுகள், வாகனங்கள் விரும்பமான பொருட்கள் என யாவும் நம் கைமாறி போய் கொண்டேயிருக்கின்றன. அதை மற்றவர் பயன்படுத்தும் போது தான் மனது விம்முகிறது.

பள்ளிவயதில் நான் ஒட்டிய சைக்கிளை விற்றுவிட்டேன். அதை யாரோ ஒரு சிறுவன் ஒட்டிக் கொண்டிருந்திருப்பான். பள்ளியில் படித்த புத்தகங்களை பேப்பர் கடையில் போட்டுவிட்டேன். அதை யாரோ ஒரு மாணவன் வாங்கி படிக்க துவங்கியிருப்பான். நானே நிறைய பழைய புத்தகங்கள், பொருட்கள் வாங்கியிருக்கிறேன். அவை யாரோ ஒருவரின் ரசனை என்று நினைத்து அவரை நன்றியோடு நினைத்து பார்த்திருக்கிறேன்.

உலகமே ஒரு பழம்பொருள் தானே. நான் பார்க்கின்ற சூரியன் பழமையானது. நான் பார்க்கின்ற நிலா யாரோ எனக்கு முன்னால் நூற்றாண்டுகாலமாக பார்த்து பழகியது. என் முன் உள்ள கடல் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பார்த்து சலித்தது. நான் தேடிச் செல்லும் மலை புராதனமானது. இந்த உலகில் கடந்த காலத்தின் சுவடுகள் கண்ணுக்கு தெரியாமல் படிந்திருக்கின்றன.

பழக்கடைகளில் பார்த்திருக்கிறேன். என்றோ மரத்தில் இருந்து பறிக்கபட்ட ஆப்பிளை குழந்தைகளை குளிப்பாட்டி துடைத்து எடுப்பதை போல கவனமாக துடைத்து மெருகேற்றி அப்போது தான் பறித்து கொண்டுவரப்பட்டது போன்று காட்சிக்கு வைத்திருப்பார்கள்.. அப்படி தான் நம் உலகமும் போலும். இது தன்னை தானே துடைத்து கொள்கிறது. மெருகேற்றிக் கொள்கிறது.

உலகோடு பகடையாடி ஜெயிப்பது எளிதானதில்லை. அதற்காக இயலாததுமில்லை. நகரம் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. உருமாற்றியிருக்கிறது. அது எனக்கு மட்டுமானதில்லை என்பது தான் உண்மை.

0Shares
0