தோக்கியோ சுவடுகள் 4

ஷின்கான்ஷேன் எனப்படும் அதிவேக ரயிலில் ஹிரோஷிமா போவது என முடிவு செய்திருந்தோம், 1964இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புல்லட் ரயில் ஒரு மணிக்கு சுமார் 240 – 320 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது, 900 கிலோமீட்டர் தூரமுள்ள ஹிரோஷிமாவை அந்த ரயில் மூன்றரை மணி நேரத்தில் சென்றடைகிறது

ஷினகவா ரயில் நிலையத்திலிருந்து காலை ஏழு மணிக்கு இந்த ரயிலைப்பிடிக்க வேண்டும், ஷின்கான்ஷேன் ரயிலில் பயணிப்பது அலாதியான அனுபவம், இதற்காக அதிகாலை குளிரில் வீட்டிலிருந்து கிளம்பி வாடகை கார் ஒன்றில் ரயில் நிலையத்தை நோக்கி பயணிக்கத் துவங்கினோம், எங்களுக்கான உணவை குறிஞ்சில் பாலாஜி தயாரித்துக் கொடுத்திருந்தார், கையில் உணவுடன் பயணம் போய் பலகாலம் ஆகியிருந்தது, ஆகவே இந்தப் பயணம் உற்சாகமூட்டியது

இரவு நண்பர் செந்தில் வீட்டில் தங்கியிருந்தேன், ஜப்பானில் வீடுகள் மிகச்சிறியவை, பக்கவாட்டில் நகரும் கதவுகள் கொண்டவை, செந்தில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களைக் கண்ட சிறிய நூலகம் ஒன்றை வைத்திருக்கிறார், ஜப்பானில் நூலகம் இல்லாத வீடுகளைக் காண்பது அபூர்வம்.

வீட்டில் செந்திலின் உறவினர் சந்தோஷ் இருந்தார், அவரும் பணிநிமித்தம் ஜப்பான் வந்திருக்கிறார், உற்சாகமான இளைஞர், அன்றிரவு இலக்கியம் சினிமா இணையதளம் என நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம், செந்தில் நிறையப் படிக்கக் கூடியவர், , பழகுவதற்கு இனிமையான நண்பர்,

ரயில் நிலையம் நோக்கி கிளம்பும் போது நல்ல குளிராக இருந்தது. அரைமணி நேரப்பயணத்திற்குள் ரயில் நிலையம் போய்விட முடியும் என்றார், ஆனால் போக்குவரத்துக் காரணமாக ஐந்து நிமிச இடைவெளியில் தான் ரயில் நிலையத்திற்குப் போக முடிந்தது, சாலைகளில் கார்களில் எவரும் ஒலிப்பானை பயன்படுத்துவது கிடையாது, வழிகாட்டும் கருவியைக் கொண்டே கார் ஒட்டுகிறார்கள், தோக்கியோவில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகம், கார்களை நிறுத்திப் போவது பெரும்பாடு

ஜப்பானில் ரயில் நிலையம் என்பது ஒரு தனி உலகம், உணவகங்களும், பல்வேறு விற்பனையகங்களும் கொண்ட விசித்திரஉலகம், வித விதமான வண்ணங்களில் தானியங்கி இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். சூப்புகள், தேநீர், குளிர்பானம், சிகரெட், என எல்லாமும் கிடைக்கிறது. வேகவைத்த சீனிக்கிழங்கும் அரிசியில் செய்த தின்பண்டங்களும் ஜப்பானியர்களுக்கு விருப்பமானவை, பெரும்பான்மை அங்காடிகளில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன

ஜப்பானியர்களுக்குப் பிடித்தமான அமெரிக்கப் பேஸ்பால் வீரர்களின் முகங்கள் திரையில் ஒளிர்கின்றன, வீடியோ கேம்ஸ் விளம்பரங்களை நிறையக் காணமுடிகிறது, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஏராளமான வழித்தடங்கள், பெருமளவு ஜப்பானியர்கள் ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள்,

நாங்கள் செல்ல வேண்டிய Nozomi ரயில் எந்தப் பிளாட்பாரத்திற்கு வந்து சேருகிறது என்பதை அறிந்து கொண்டு தானியங்கி நுழைவாயில்களைக்கடந்து வேகமாக ஒடி நின்றோம், ரயில்கள் அங்கே நேரம் தவறியதே கிடையாது, அத்துடன் எந்தப் பெட்டி எங்கே நிற்கும் என அடையாளமிட்ட இடத்தில் துல்லியமாக வந்து நிற்கிறது,

ஷின்கான்ஷேன் ரயிலின் தோற்றம் வசீகரமானது, விமானத்தின் உட்புறத்தை போன்றே ரயிலின் உட்புறமும் வடிவமைக்கபட்டிருக்கின்றன, பச்சை மற்றும் நீலநிறத்தில் இருக்கையில், ஒருவகையில் இந்த ரயில் தரையில் செல்லும் விமானம் தான், காந்தசக்தியின் உதவியால் இயங்குகிறது என்றார்கள், ரயில் தண்டவாளங்கள் நமது தண்டவாளங்களைப் போலத் தானிருந்தன, ரயில் நிலைய அறிவிப்புப் பலகையில் ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் வெளியாகின்றன,

ரயில் எங்கள் முன்பு வந்து நின்றபோது பனிக்கட்டி ஒன்று வழுக்கிக் கொண்டு வந்து நிற்பது போலதானிருந்தது. எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு எப்போது ரயில் புறப்படும் எனத் திரும்பி பார்த்த போது ரயில் போய்க் கொண்டிருந்த்து, கிளம்பிய சுவடே தெரியவில்லை, இந்த ரயில் ஒசாகா, கியாதோ வழியாகச் செல்லக்கூடியது என்பதால் ஜப்பானின் வேறுநகரங்களை, அதன் மாறுபட்ட நிலவியலை காணமுடியும் எனச் சந்தோஷம் கொண்டேன்

ரயில் அதிவேகமாகச் செல்கிறது என்றாலும் சிறுசலனம் கூடயில்லை, அதை உணர வேண்டும் என்றால் கதவு அருகே போய் நின்று பாருங்கள் என்றார் செந்தில், இதற்காகக் கண்ணாடிக்கதவு அருகே போய் நின்று வெளியே பார்த்தேன்,

அதிவேகமாக வாள்வீசுவது போல மரங்கள், செடிகள் விருட்விருட்டெனத் துண்டிக்கபட்டுக் காட்சிகள் சிதறிக் கொண்டிருந்தன, கண்மூடித்திறப்பதற்குள் காட்சி மாறிவிடுகிறது, ரயிலின் உள்ளே வேகத்திற்கான சுவடேயில்லை, வீட்டில் சேரில் அமர்ந்து டிவி பார்ப்பது போல இயல்பாக இருந்தது.

பயணத்தின் போது செந்திலோடு பேசிக் கொண்டு வந்தேன், ஜப்பானியர்களின் இந்த பணிவு, அடக்கம் எப்படி உருவானது எனப்பேசிக் கொண்டுவந்தோம், வரலாற்றின் போக்கில் ஜப்பானியர்கள் இப்படி இருந்திருக்கவில்லை, வன்முறையும், வெறித்தனமும் அவர்களிடம் மேலோங்கியிருந்திருக்கிறது, ஆனால் காலமாற்றத்தில் தங்களின் பண்புகளை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள், ஜப்பானியர்களுக்கு காமெடி நிகழ்ச்சியை காண அதிகம் பிடித்திருக்கிறது, இது ஒடுக்கபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானோ எனத்தோன்றுகிறது என்றேன்

பேச்சு கெய்ஷா பெண்கள் துவங்கி ஜி. நாகராஜன் வரை நீண்டது, நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் ஜப்பான் வந்திருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சைவ உணவிற்காக அவர் பட்ட கஷ்டங்களையும் பற்றிச் சொன்னேன்

தி.ஜானகிராமன் ‘உதயச் சூரியன் என்ற நூலாக தனது ஜப்பானியப் பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார், அதில் அவர் ஜப்பானியர்களின் உயர்பண்புகளை அழகாக எடுத்துக்காட்டுகிறார், அதில் குறிப்பிடப்படும் இந்தச் செய்தி இன்று வரை அப்படியே தானிருக்கிறது

ஜப்பான்காரர்கள் அந்நிய மொழிகளைக் கற்காமல் இல்லை. நிறையக் கற்கிறார்கள். ஆனால் தேவை உள்ளவர்கள்தான் கற்கிறார்கள். மற்றவர்கள் கற்பதில்லை. ஜப்பானிய மொழியிலேயே மிக உயர்ந்த விஞ்ஞானம், சரித்திரம், தத்துவம் எல்லாவற்றையும் படித்துவிடுகிறார்கள். கல்லூரிப் படிப்பு, பொறியியல், மருத்துவம் எல்லாமே ஜப்பானிய மொழியில்தான் நடைபெறுகின்றன.

திஜா சொல்வது உண்மை, தாய்மொழி பற்றின் சிறந்த எடுத்துகாட்டு ஜப்பானியர்கள், திஜா பச்சை தேநீரை குடித்துவிட்டு டீயா இது, ஏதோ புதுச்சீட்டுகட்டு வாசனை போலிருக்கிறது எனச் சொன்னதை நினைவுபடுத்தினேன், செந்தில் பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றிக் கேட்டுக் கொண்டுவந்தார், பேச்சு தானே எழுதுவம் அடங்குவதுமாக இருந்தது

வெளியே கடந்து செல்லும் காட்சிகளின் ஊடாகத் தென்படும் வீடுகளை, தூரத்து மலைகளை, சாலைகளைப் பார்த்தபடியே வந்தேன், சூரியவெளிச்சம் முழுமையாக வரவில்லை, பனிமூட்டம், அன்று மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்,  அது போலவே வழியில் மழை பெய்த்து, ஜப்பானில் நான் காணும் முதல்மழையது, காற்றோடு வலுவாக பெய்து கொண்டிருந்தது, ரயிலின் கண்ணாடி ஜன்னலைத் தட்டின மழையின் விரல்கள், தொலைவில் இருந்த ஒரு சரிவில் மழையின் ஊடே ஒரு மாணவி சைக்கிளில் போய்க் கொண்டிருந்தாள்,  அரைமணி நேர பயணத்தின் பிறகு அங்கே மழையை காணமுடியவில்லை, இளவெயில் அடித்துக் கொண்டிருந்தது,

சகுரா எனப்படும் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குகின்ற காலத்தில் இந்தப் பாதை முழுவதும் வேறு தோற்றம் கொண்டுவிடும் என்றார் செந்தில்,

ஜப்பானிய மக்கள் பூக்களை ரசிப்பதை கலையாகக் கொண்டிருக்கிறார்கள், இதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பூச்சொரிவதை ரசிக்கிறார்கள்,

ஹனமி என்பது ஒரு ஜப்பானிய பண்பாட்டில் இயற்கையைப் போற்றும் ஒரு நிகழ்ச்சி. ஹனமி என்பதற்குப் பூக்கோலம் காணுதல் என்று பொருள் ஹனமியின் போது ஜப்பானியர்கள் சகுரா மலர்கள் பூக்கள் துவங்குவதைக் கொண்டாடுவார்கள், இது மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது, அழகின் முழுவடிவம் பூ, அது மலரும் போதும் உதிரும் போதும் இவ்வளவு தான் வாழ்க்கை என்பதை நமக்குக் கற்றுத்ருகிறது என்கிறார்கள் ஜப்பானியர்கள்

இப்போது பனிக்காலம் என்பதால் மரங்கள் பொலிவற்றுக் காணப்பட்டன. பொதுவாக ரயிலில் செல்லும் போது தொலைவில் எங்காவது ஒற்றை வீடு தென்படுகிறதா எனத் தேடியபடியே வருவேன், எல்லா ரயில்பயணத்திலும் இப்படியான ஒற்றை வீட்டை கண்டிருக்கிறேன், அது போலவே இந்தப் பயணத்திலும் ஒரு குன்றின் சரிவில் ஒற்றை வீடாகத் தனித்திருக்கும் வீட்டின் கூரை கண்ணிற்குப் பட்டது, அந்த வீட்டினை உன்னிப்பாகப் பார்ப்பதற்குள் ரயில் கடந்து போய்விட்டது,

கடந்து செல்லும் பாதையில் இருந்த மரமொன்றில் காகம் ஒன்றை கண்டேன், ஜப்பானியக் காகங்கள் இந்தியக்காகங்களை விட அளவில் பெரியது, அதன் குரலும் மாறுபட்டிருக்கிறது,

ஜப்பானின் புறநகரங்கள் இந்தியப் புறநகர்களைப் போலப் பெரிய மாற்றங்களைச் சந்திக்கவில்லை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தானிருக்கிறது, ஜப்பானிய கூரையிடப்பட்ட வீடுகள், நெருக்கமான குடியிருப்புகள், அதிக உயரமான கட்டிடங்களை காணமுடியவில்லை, பூகம்பம் காரணமாக இருக்ககூடும், மலையைக் குடைந்து பாதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதால் நீண்ட குகைகளுக்குள் ரயில் போகிறது,

ரயிலில் பயணிப்பவர்களின் பெரும்பான்மையினர் படித்துக் கொண்டு வருகிறார்கள், சிலர் இசை கேட்டுக் கொண்டு வருகிறார்கள், யாரும் யாருடனும் வெட்டி அரட்டை அடிப்பதில்லை, ரயிலில் பேச்சரவமேயில்லை, அடுத்து எந்த ரயில் நிலையம் வரப்போகிறது, எவ்வளவு நேரத்தில் அது வந்து சேரும் என்ற விபரங்கள் ஒளிரும் எழுத்துக்களாகத் திரையில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன, தங்களின் இடம் வந்தவுடன் பயணிகள் எழுந்து தாங்கள் உட்கார்ந்திருந்த சேரை உரியபடி மாற்றி வைத்து துடைத்து சுத்தமாக்கிவிட்டு தான் எழுந்து போகிறார்கள், அதில் ஒரு மனிதன் இதுவரை அமர்ந்திருந்தான் என்ற சுவடேயில்லை

அலுவலகம் போகிற பலர் ரயிலில் தான் உணவு அருந்துகிறார்கள், விதவிதமான உணவுபெட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, இதில் மீன், சாதம், பழங்கள், இறைச்சி எனக் கலவையான உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன, இந்த உணவோடு பச்சைமுட்டையை அடித்து ஊற்றி அதைக் கலந்து சாப்பிடுகிறார்கள், ஜப்பானிய உணவில் அதிகம் காரம், மசாலா பொருட்கள் கிடையாது, வேகவைத்த உணவு வகைகள் தான் அதிகம், மீன் அன்றாட உணவு, அதன்பிறகு மாட்டு இறைச்சி, ஒவ்வொரு பருக்கையாகச் சாப்ஸ்டிக் வைத்து அவர்கள் சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கிறது, நம்மால் ஒரு பருக்கையைக் கூடக் குச்சியைப் பிடித்து எடுக்கமுடியவில்லை, சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கிற பழக்கமே கிடையாது, ஏதாவது குளிர்பானம் அல்லது தேநீர் குடிக்கிறார்கள். பச்சைதேநீரின் சுவை அற்புதமாக இருக்கிறது

ரயில் ஒசாகா வந்த போது பாதிப் பயணிகள் இறங்கிவிட்டார்கள், பணி நிமித்தம் தினம் 500 கிலோமீட்டர் போய்வருவது இங்கே வாடிக்கை என்றார் செந்தில், ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் ‘பெரிய குன்று’ என அர்த்தம். ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரயில் பயணத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காணமுடிந்தது.

ஒசாகா ரயில் நிலையத்தின் வெளியே பிரம்மாண்டமான விளம்பர பலகையில் நண்டு, மற்றும் மீன்களின் பெரிய பெரிய விளம்பர வடிவங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன, ஒசாகா உணவிற்குப் பெயர் போன ஊர், இங்கே தான் எக்ஸ்போ 70 நடந்திருக்கிறது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஒசாகா கண்காட்சியை எம்ஜிஆர் படம் பிடித்திருக்கிறார்,

நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. டோக்கியோ டவர், மாபெரும் “கின்சா”, கடை வீதி பியுஜி எரிமலை முதலான இடங்களிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது, நான் அறிந்தவரை ஐந்தாறு தமிழ்படங்கள் ஜப்பானில் படமாக்கபட்டிருக்கின்றன.

பெருநகரங்களைப் போலவே தோக்கியோவிலும் ஐமாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரையரங்க வளாகங்கள் இருக்கின்றன, பெருமளவு அமெரிக்கத் திரைப்படங்களே காட்டப்படுகின்றன, ஜப்பானிய சினிமா உலகசினிமாவில் தனியிடம் பிடித்திருக்கிறது, உலகத்திரைப்படவிழாவில் கொண்டாடப்படும் பல ஜப்பானிய படங்கள் அங்கே வணிகரீதியாக வெற்றிபெறவில்லை, அங்கும் வணிகசினிமாவே முதன்மையாக உள்ளது,

ஜப்பானின் தலைசிறந்த இயக்குனர்களான மிஷோகுஷிக்கும் ஒசுவிற்கும் இமாமுராவிற்கும் பெரும்ரசிகர் கூட்டம் இருப்பார்கள் என நம்பியிருந்தேன், அப்படி எல்லாம் இல்லை, நம் ஊரில் உள்ளது போல அங்கேயும் கலைசினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்களால் மட்டுமே அவர்கள் ரசிக்கபடுகிறார்கள், அகிரா குரசேவா ஒரு பிம்பமாக ஆராதிக்கபடுகிறார், ஆனால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமில்லை, வெகுஜன ரசனையின் தளம் வேறு, கலைரசனை கொண்டவர்களின் விருப்பம் வேறு என்பது உலகம் முழுவதும் ஒன்றுபோலதானிருக்கிறது,

ரயில் பயணிகளில் பெரும்பான்மையினர் கறுப்பு மற்றும் அடர்நீலம், சிவப்பு வண்ண உடைகளைத் தான் அணிந்திருக்கிறார்கள், டீசர்ட் அணிந்த ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கூடக் காணமுடியவில்லை, ஒருவேளை அணியமாட்டார்களோ என்னவோ, ஜப்பான் என்றேலே பிக்குகள் நிறைய இருப்பார்கள் என்ற கற்பனை எனக்கிருந்தது, ஆனால் மடாலயங்கள், பௌத்த ஆலயங்களைத் தவிர வேறு எங்கும் ஒரு பௌத்த துறவியைக் கூடக் காணமுடியவில்லை

கியோத்தோ ஜப்பானின் பழைய தலைநகர், மூன்று பக்கமும் மலைகள் கொண்ட நிலப்பரப்பு, மூன்று ஆறுகளைக் கொண்டது,   இரண்டாயிரத்திற்கும் மேலான கோவில்கள் கொண்டதால் அதை  ஆலயநகரம் என அழைக்கிறார்கள், அங்குள்ள கின்காகுஜி கோவில் ஜென் பௌத்தர்களுக்கு உரியது.

ஜப்பானில் நான் உரையாற்றும் போது கியோத்தோ நகரத்தவளை பற்றிய ஒரு கதையைச் சொன்னேன்,

முன் ஒரு காலத்தில் கியோத்தோவில் ஒரு தவளை வசித்து வந்த்து, இது போலவே தோக்கியோவில் ஒரு தவளை வசித்து வந்தது, இரண்டும் வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்கும், கியோத்தோ தவளை தோக்கியோவை காண ஆசைப்பட்டது, அது போலவே டோக்கியோ தவளைக்கும் கியோத்தோவை காண ஆசை, இரண்டும் இடையில் இருந்த மலையில் சந்தித்துக் கொள்து என முடிவு செய்து ஒரு நாள் பயணம் மேற்கொண்டன, ஒரு மலையின் உச்சியில் வந்து சந்தித்துக் கொண்டன,

கியோத்தோ தவளை தோக்கியோவை காண ஆசைபட்டுத் தாவி குதித்தது, எதிர்பக்கம் பார்க்க வேண்டும் என்பதற்குப் பதிலாகத் தனது ஊரான கியோத்தோவை திரும்பி பார்த்துவிட்டு இது என்ன தோக்கியோ அச்சுஅசல் கியோத்தோ போலவே இருக்கிறது, இதைப் பார்க்கவா இவ்வளவு பிராயசை பட்டேன் என்றது, இது போலவே தோக்கியோ தவளையும் தனது ஊரை தானே திரும்பி பார்த்துவிட்டு இவ்வளவு தானா கியோத்தோ எனக்கேட்டது, இரண்டும் ஏமாற்றத்துடன் என் ஊரே எனக்குப் போதுமானது அவரவர் ஊர் திரும்பி போய்விட்டன,

இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நம் ஊரை நாமே உயரத்தில் இருந்து திரும்பி பார்க்கிற நிமிஷம், மனிதர்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் தனது ஊரை திரும்பி பார்க்கிறார்கள், சலித்துக் கொள்கிறார்கள், அல்லது நமக்கு வாய்த்து இது தான் திரும்பி விடுகிறார்கள், கியோத்தோவிற்குள் ரயில் நுழையும் போது மனதில் ரோஷோமான் படத்தில் வரும் நுழைவாயில் தான் நினைவிற்கு வந்தது, விடாது பெய்யும் மழையும் அதற்குள்ளாகச் சந்தித்துக் கொள்ளும் துறவியும்,விறகுவெட்டியும் திருடனும் மனதில் வந்து போனார்கள்

ஜப்பானின் முதல் நாவலாசிரியரான லேடிமுரசாகியின் கல்லறை கியோத்தோவில் தானிருக்கிறது, பாஷோ அங்கே பல ஆண்டுகள் தங்கிவாழ்ந்திருக்கிறார், யுகியோ மிஷிமாவின் The Temple of the Golden Pavilion நாவலில் வரும் Golden Pavilion இங்கே தான் உள்ளது, ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான Tanizaki Junichiro. கியோத்தோவில் வசித்தவர், புகழ்பெற்ற ஜென் பௌத்த ஆலயங்கள், ஷின்டோ கோவில்கள், அரண்மனை கொண்ட ஊர் கியோத்தோ, The Lady and the Monk: Four Seasons in Kyoto என்ற Pico Iyer புத்தகத்தைப் படித்திருக்கிறேன் என்பதால் கியோத்தோவில் இறங்கி ஊர் சுற்ற ஆசையாகவே இருந்தது, நேரம் அனுமதிக்கவில்லை,

ஹிரோஷிமாவை நோக்கிய ரயில் பயணம் நீண்டு கொண்டிருந்தது

•••

0Shares
0