தோக்கியோ சுவடுகள் 5

புல்லட் ரயில் ஹிரோஷிமா நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனம் காலத்தின் பின்னே போய் ஜப்பானின் வரலாற்று நிகழ்வுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது,

ஆகாயத்தில் ஒரு குடைக்காளான் மிதப்பது போன்ற அணுகுண்டு வீச்சின் புகைப்படத்தை எனது பள்ளி நாட்களில் முதன்முறையாகப் பார்த்தேன், அறிவியல் பரிசோதனைக்கூடத்தில் ஒரு போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது.

இரண்டாவது உலக யுத்தத்தில் போது அமெரிக்கா, ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசி ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொன்று குவித்தது என்று ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார்,

ஆனால் ஏன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது, யார் அணுகுண்டினைத் தயார் செய்தது. அணுகுண்டு வீச்சின் பாதிப்பு எப்படிப் பட்டது என்பதைப் பற்றி எல்லாம் பாடத்தில் எதுவுமில்லை, வகுப்பறை பாடம் என்பதே மதிப்பெண் பெறுவதற்கானது தானே,

கல்லூரி நாட்களில் இரண்டாவது உலகயுத்தம் பற்றித் தேடிவாசித்த போது தான் ஜப்பான் அணுகுண்டு வீச்சிற்கு உள்ளானதன் பின்புல அரசியலை, வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது

இன்று நாம் காணும் ஜப்பான் அமைதியின் வடிவமாக உள்ளது, ஆனால் வரலாற்றில் காணும் ஜப்பான் வன்முறையின் உட்சபட்ச அடையாளம், போர்க்குழுக்களின் வெறியாட்டம், குரூரமான தண்டனைகள், அவலமான கொடுமைகள், வன்புணர்ச்சி, ராணுவத்தின் கொடூர செயல்கள் என ஜப்பானின் கடந்தகாலம் குருதி கொட்டும் வன்முறைகளால் நிரம்பியது, இன்று அவற்றை ஜப்பானியர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில்லை, ஆனால் ஜப்பானின் எரிமலைகளைப் போல அதன் கடந்தகாலமும் அடஙகிப்போயிருக்கிறது

ஜப்பானிய வரலாற்றில் ரத்தம் சொட்டாத பக்கங்களேயில்லை, படையெடுத்து ஜப்பான் பிடித்துக் கொண்ட தேசங்களில் அவர்கள் செய்த கொடுமைகளைச் சொல்லி முடியாது, சீனாவின் நான்கிங்கை கைப்பற்றி ஜப்பான் செய்த குரூரச் செயல்கள் வரலாற்றில் ஒரு போதும் மறக்கமுடியாதவை,

டிசம்பர் 1937 இல் சீனத் தலைநகர் நான்சிங்கை ஜப்பான் கைப்பற்றி வெறியாட்டமாடியது

வெ. சாமிநாத சர்மா இதைப்பற்றி தனது சீன வரலாற்று நூலில் தெளிவான குறிப்புகள் தருகிறார்

நான்சிங்கை ஆக்ரமித்துக் கொண்ட ஜப்பான் அங்கே மனிதவேட்டையாடியது, அப்பாவி பொதுமக்களைப் பிடித்து இருவர் இருவராக மணிக்கட்டுகளை இரும்பு கம்பிகளினால் இறுக்கிக் கட்டிச் சுட்டுக் கொன்றார்கள்; துப்பாக்கி முனையினால் குறிபார்த்துக் குத்தும் பயிற்சி பெறுவதற்காக, சிறைப்பட்ட சீனப் போர் வீரர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவர்களை உபயோகப் படுத்தினார்கள்; பச்சைக் குழந்தைகளை ஆகாயத்திலே தூக்கிப்போட்டுக் கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள், இது போலப் பாலியல் வன்புணர்ச்சி உள்ளாக்கபட்ட பெண்களின் எண்ணிக்கை பல ஆயிரம், ராணுவம் கொள்ளை, கொலைகளில் தொடர்ந்து ஈடுபட்டது

சாமிநாத சர்மா குறிப்பிட்டது கடுகளவு, ஜப்பான் செய்த வன்செயல்கள் மலையளவு,

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்களின் யோனியை கத்தியால் கிழிந்து கொன்றிருக்கிறார்கள், ஸ்தனங்களை அறுத்து எறிந்திருக்கிறார்கள், தலைமயிர்களைத் தீவைத்து எரிப்பது, தலைகீழாகத் தொங்கவிட்டு வாயில் வெடிமருந்தைச் செலுத்தி கொல்வது என நினைத்து பார்க்க முடியாத கொலைகளை அரங்கேற்றினார்கள், இன்று அதை ஜப்பான் எதிர்பாராது நிகழ்ந்த சம்பவம் என்று கூறுகிறது, இது போலவே போர்னியோ தீவைக் கைப்பற்றிய ஜப்பான், அங்குள்ள நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களைக் கொன்று குவித்தது.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னுடைய எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தன. அந்த நாட்களில் இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு ஐப்பானிடம் ஆதரவு கேட்டார் நேதாஜி, ஆகவே ஜப்பான் நேதாஜியுடன் உறவை அமைத்துக் கொண்டது

அந்த சமயத்தில் சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை போடுவதற்கு ஜப்பான் முடிவு செய்தது. அந்தப் பணியை ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, பதினாறு மாத காலக்கெடுவிற்குள் இரயில் பாதை முடிக்கபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது

இதற்குப் போர்கைதிகளாக இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள், சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல். மரம் வெட்டுதல் போன்ற கடினவேலைகளுக்குத் தொழிலாளிகள் நிறையத் தேவைப்பட்டனர். இதற்காகச் சயாம் மலாய் இனத்தவர்கள் தவிர, பல்லாயிரம் தமிழர்களும் இப்பணியில் ஈடுபடுத்தபட்டனர், இவர்கள். ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த கூலிகள், இவர்களை ஜப்பானின் கங்காணிகள். ஏமாற்றி, மிரட்டி ரயில்வே பணிக்கு அழைத்துப் போனார்கள்,

இந்த ரயில் பாதை போடும் நிகழ்வை மையமாகக் கொண்டு தான் டேவிட் லீன் “The Bridge on the River Kwai” என்ற திரைப்படத்தை உருவாக்கினார்

இந்த ரயில்பாதை போடும் போது தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விவரிக்கிறது சயாம் மரணரயில் நாவல், இதை எழுதியவர் சண்முகம். தமிழில் வெளியாகியுள்ள மிக முக்கியமான வரலாற்றுநாவல்.

ரயில் பாதைபோடும் பணியில் ஜப்பானிய ராணுவத்திடம் சிக்கிய தமிழர்களின் அவலத்தை நெஞ்சுருக விவரிக்கிறது இந்நாவல், இது போலவே பா,சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் ஜப்பானிய கெம்பித்தாய் எனும் போலீஸ் நடத்திய அராஜகத்தை விவரிக்கிறது,

இப்படி ஜப்பானிய ராணுவம் நடத்திய வன்முறைகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சாமானிய ஜப்பானிய மனிதன் இயற்கையோடு போராடி, வயலில் நெல்விளைவித்து, மீன்பிடித்து. வேட்டையாடி இயற்கையோடு இணைந்த அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்,

ஜப்பானில் ஒரு காலத்தில் எளிய விவசாயிகள் கூட ஹைக்கூ எனப்படும் குறுங்கவிதைகள் இயற்றுவதில் திறமைசாலிகளாக இருந்திருக்கிறார்கள், ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் பரவியதும் அது மக்களின் சமயமாக மாறியிருக்கிறது, ஜப்பானுக்குப் புத்தம் பரவுவதற்குப் போதி தர்மா ஒரு காரணம் என்கிறார்கள், கொரியா வழியாகவே புத்தம் ஜப்பானுக்கு அறிமுகமாகியிருக்கிறது.

ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. இதன் பரப்பு 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 சதுர கி.மீ. பெரும்பாலும் மலைகளும் வனமும் எரிமலைகளும் நிரம்பிய நாடு. இதன் மக்கள் தொகை 12 கோடியே 75 லட்சம் ஆகும். சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், தென் கொரியா, வட கொரியா, ரஷ்ய நாடுகளிடமிருந்து ஜப்பான் கடலும் ஜப்பானைப் பிரிக்கின்றன . ஜப்பானில் 107 எரிமலைகள் இருக்கின்றன

ஹொக்கைடோ, ஹொன்ஷூ, ஷிகொக்கு, கியூஷூ ஆகியவை ஜப்பானின் உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும். யயோய் மக்கள் இதன் பாரம்பரிய குடிகள் ,

இனக்குழுக்களின் சண்டையே ஜப்பானிய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், விளைநிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இனக்குழு சண்டைகள் உருவாகின, இதற்காகப் போர்க்குழுக்கள் உருவாகின்ன, அதன் தலைவன் புனித போர்வீரன் அறியப்பட்டான், ஜிம்மு தெனோ எனும் சாமுராய் இதில் புகழ்பெற்றவன், இவன் க்யூஷு தீவிலிருந்து கின்கி பகுதி வரை படை நடத்திச் சென்று யமாதோ எனும் பகுதியில் குடியேறினான், இன்றுவரை யமாதோ புனித இனமாகக் குறிப்பிடப்படுகிறது,

இந்த யமாதோ இனமே சீனா,கொரியா மற்றும் ஆசியா மீது படையெடுப்பு நடத்தியது. இதன் காரணமாகச் சீன,கொரியாவின் பண்பாட்டுக் கலப்பு ஜப்பானில் உருவானது,

கி.மு.600 தொடங்கி கி.பி.1876 வரை சாமுராய்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது, சாமுராய்களுக்கு எனத் தனியான பயிற்சிகள், கட்டுபாடுகள், அறநெறிகள் இருந்தன, புஷிதோ என்றால் ஜப்பானிய மொழியில் போர்வீரனின் பாதை என்று பொருள். இது சாமுராய்களின் வாழ்க்கை அறமாக இருந்தது.

மெய்ஜி பேரரசர் ஆட்சியில் சாமுராய்களின் ஆதிக்கம் முழுவதும் அழிக்கப்பட்டு அவர்களுக்குப் போர் வாள் பயன்படுத்தும் தகுதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு சாமுராய்கள் உருவாகவில்லை,

யுகியோ மிஷிமா என்ற எழுத்தாளர் சாமுராய்களின் மரபை தொடர்பவன் என அறிவித்துக் கொண்டு மன்னருக்கான தனிப்படை ஒன்றை தானே உருவாக்கி நடத்திவந்தார், மன்னர் மீதான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தற்கொலையும் செய்து கொண்டார், அவரை எழுத்துலகின் சாமுராய் என்கிறார்கள்,

சாமுராய்களின் முதல் அம்சம் சுயகட்டுபாடு, அவர்கள் தலைவருக்குக் கீழ்படிந்து வாழ்வபவர்கள், பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும், மெய்காவல்பணியிலும், விவசாயப் பணிகளுக்கான காவலர்களாகவும் இருந்திருக்கிறார்கள்,

சாமுராய் தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானே வெட்டிக் கொண்டு இறந்துவிட வேண்டும், இது அவர்களின் அறம், இதன் பெயர் ஹராகிரி (harakiri.) செப்புக்கு எனக் குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி இறந்து போவார்கள், இதற்காகவே ஒரு சிறு கத்தியை வைத்திருப்பார்கள் அக் கத்திக்கு தான்தோ [Tanto] என்று பெயர், அதைப் புனிதமான பொருளாகச் சாமுராய்கள் கருதுவார்கள்,

ஜப்பானில் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை இருபெரும் சாமுராய் இனங்கள் இருந்து வந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அவர்களுக்கு இடையில் பலத்த ஆதிக்கப் போட்டி நடந்து வந்தது.

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக யோரிட்தோமோ ஒரு இராணுவ ஆட்சியை உருவாக்கினார்,. ஷோகுன் எனப்படும் ராணுவ தளபதி ஜப்பானின் மன்னராகத் தன்னை அறிவித்துக்கொண்டார்.

சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற வாளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடானா என்றழைக்கப்படும் நீண்ட வாளை எவ்வளவு நீளம், அகலம், வலிமை கொண்டதாக உருவாக்க வேண்டும் என்பதற்கு முறையான விதிமுறைகள் இருந்தன. கடானாவின் வடிவம் சாமுராய்களின் அந்தஸ்திற்கு ஏற்ப மாறுபட்டது, வாளை இழந்துவிட்டால் சாமுராயின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம், சாமுராய்கள் பெண்களுடன் பாலுறவு கொள்ளமாட்டார்கள், ஆனால் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுண்டு,

சாமுராய்களுக்கு ஜப்பானிய வரலாற்றில் அழியாத இடம் இருக்கிறது. அகிரா குரசேவா சாமுராய்களின் வாழ்க்கை பற்றிப் பலமுக்கிய படங்களை இயக்கியிருக்கிறார், அதில் Seven Samurai, Rashomon, Throne of Blood, Yojimbo. Kagemusha. Ran, போன்றவை முக்கியமான படங்கள், டகாசி கிதானோ இயக்கிய Zatoichi ஹாலிவுட்டில் வெளியான The Last Samurai. சமீபத்தில் வெளியான 13 Assassins போன்றவை சாமுராய்களின் வாழ்க்கையை விவரிக்கும் சிறந்த படங்களாகும்

காலனி ஆட்சி உலகெங்கும் உருவாக ஆரம்பித்த காலம் ஜப்பானிலும் மாற்றங்கள் ஏற்படத்துவங்கின . 1542 இல் போர்த்துகல் நாட்டு வணிகக் கப்பல் ஜப்பானுக்கு வருகை தந்தது, இதனால் ஜப்பானுக்கு ஐரோப்பிய நாடுகளின் உறவு உருவாகத் துவங்கியது, இதைத் தொடர்ந்து டச்சு மற்றும் ஆங்கிலேயர் வருகை தரத் துவங்கினார்கள், 1603 முதல் 1867 வரை ஆண்ட டோகுகோவா என்ற ஆட்சியாளர், டச்சு நாட்டவர் தவிர வேறு எவரும் யாரும் ஜப்பானில் வணிகம் செய்யக்கூடாது என்று ஒரு தடையை உருவாக்கினார். இது போல ஜப்பானியர்களும் தனது நாட்டை விட்டு வெளியே போய் வணிகம் செய்யக்கூடாது என்ற கட்டுபாடு உருவானது, இதனால் மூடிய கோட்டை என ஜப்பான் அழைக்கபட்டது

1868 இல் மெய்ஜி பேரரசர் பதவிக்கு வந்ததும் ஜப்பான் பல புதிய மாற்றங்களைக் கண்டது, . அவரது ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது; வலிமையான ராணுவம் அமைக்கப்பட்டது. இளைஞர்களுக்குக் கட்டாயப் போர்பயிற்சி அளிக்கபட்டது, ஜப்பான் தனது எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளும் மேற்கொண்டது

இதனால் போர்கள் மூண்டன. 1894 இல் சீனாவுடன் போர் நடந்தது. பிறகு 1904 இல் ரஷ்யாவுடன் போர். இதன் விளைவாக 1910 இல் கொரியாவைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சீனாவில் இருக்கும் மஞ்சூரியாவை 1931 இல் ஜப்பான் இணைத்துக் கொண்டது. இப்படி ஜப்பானின் வரலாற்றில் குருதி கறை படிந்த பக்கங்கள் ஏராளம்

••

ஜப்பானின் அரச குடும்பத்தினர் சூரிய கடவுளின் வம்சாவழியாகக் கருதப்படுகிறார்கள், ஜப்பானில் சூரியன் பெண்ணாகக் கருதப்படுகிறார், அரச குடும்பத்தினரைக் கடவுள் என்றே ஜப்பானியர் போற்றுகின்றனர். அதனால் அரண்மனையைக் கடந்து செல்லும் போது இன்றும் வணங்குகிறார்கள்,

இரண்டாவது உலக யுத்தகாலத்தில் ஹிரோஹிட்டோ (Hirohito )அரசராக இருந்தார் – இவர் ஜப்பானின் 124 ஆவது பேரரசர் ஆவார். இவர் 1926 முதல் 1989 ஆம் ஆண்டு இறக்கும்வரை பதவியில் இருந்தார்.

ஹிரோஹிட்டோ போரை விரும்பவில்லை. ஜெனரல் டோஜோ அவரை ஜப்பான் ஜெயித்துவிடும் என நம்ப வைத்தார், அத்தோடு தானே முடிவு செய்து அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தார் என்கிறார்கள்,.

போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, டோஜோவை மக்கள் புகழ்ந்தனர். ஆனால் தோல்வி அவரை மக்களின் எதிரியாக்கியது. ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ 1945 ஆகஸ்டு 9-ந்தேதி ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார். தனது வாழ்நாளில் ஜப்பானிய மன்னர் ரேடியோவில் பேசியது அதுவே முதல்முறை.

போருக்கு ஜெனரல் டோஜாதான் காரணம் என்பதால். அவரைக் கைது செய்ய முயன்றது நேசப்படை, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். முயற்சி தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார்.

“தி இன்டர்நேஷனல் மிலிட்டரி ட்ரிப்யூனல்’ என்ற அமைப்பு. ஜெனரல் டோஜோவையும் அவருடைய கூட்டாளிகளையும் விசாரணை செய்து மரணதண்டனை அளித்தது ,1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் அவரது ராணுவ அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டனர்

•••

புராகுமின் (Burakumin) ஜப்பானில் உள்ள தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்ட சமூகமாகும். புராகுமின் சமூக மக்களின் பாரம்பரியத் தொழில், தோல் பதனிடுதல், ஆடு மாடுகளை வெட்டுதல், கசாப்புக் கடை நடத்துதல், தோல் காலணி வணிகம் செய்தல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தல் ஆகும்.

புராகுமின் சமூக மக்கள் மற்ற ஜப்பானிய சமூக மக்களுடன் கலந்து வாழாமல் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மெய்ஜி பேரரசர் காலத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமையை அகற்றி உத்தரவிட்டார். இன்று புராகுமின் சமூக மக்களும் மற்ற ஜப்பானிய சமூக மக்களுக்கு இணையாகச் சமூக உரிமை பெற்ற போதும் இன்னமும் மற்ற இனத்தவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டவே செய்கிறார்கள்.

THE BROKEN COMMANDMENT என்ற ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி (Tōson Shimazaki) என்பவரால் எழுதப்பட்டது இந்த நாவல் புராகுமின் போன்ற எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் அடையும் அவமானங்களையும் வேதனைகளையும் விவரிக்கிறது,

•••

1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான். ஒன்று சேர்ந்து போரிட்டன. போரை பெரும் உலக யுத்தமாக மாற்றியதில் ஜப்பானுக்குப் பெரும் பங்கு உண்டு.

இரண்டாவது உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது படைகளுக்கு உத்தரவிட்டார் ஜெனரல் டோஜோ.

யுத்த விதிகளின்படி முறையான போர் அறிவிப்புச் செய்யாமல் எந்த நாடும் இன்னொரு நாட்டைத் தாக்கக் கூடாது. ஆனால் எச்சரிக்கை செய்தால் அமெரிக்கா உஷார் ஆகிவிடும் என்பதால் எதிர்பாராத தாக்குதலை துவக்கினார் டோஜோ., இரண்டாயிரம் பேர் இதில் பாதிக்கபட்டார்கள், தனது கடற்படைதளத்தைத் தாக்கியதால் கோபம் கொண்ட அமெரிக்கா போருக்கு தயாரானது. ஜப்பானை அடித்து ஒடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கத் தீவிரமாகச் செயல்படத்துவங்கியது,

இதற்கு முன்பாகவே அமெரிக்கா மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) என முதல் அணுக் குண்டை உருவாக்கும் பணியை ரகசியமாக மேற்கொண்டு வந்தது. 1939-ஆம் ஆண்டு இத்திட்டம் துவக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 25.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமான தொகை இத்திட்டத்திற்காகச் செலவழிக்கப்பட்டது.

ஹிட்லரின் படை அணு ஆயுதம் தயாரிப்பதாக நம்பிய அமெரிக்கா தானும் அணுகுண்டினை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ளத்துவங்கியது, இந்தத் திட்டதை அமெரிக்க ராணுவம் நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஒபென்ஹைமர் டெல்லர், ருடால் போன்றோர் இதனை வழிநடத்தினார்.

ஆறு ஆண்டு கால நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் Trinity என்று பெயரிடப்பட்ட அணுச்சோதனை, நியூ மெக்ஸிகோ மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனத்தின் மத்தியில் நடத்தப்பட்டது பெருவெடிப்பாக நிகழ்ந்த அதன் கதிர்வீச்சினால் 20 மைல் தூரம் தள்ளியிருந்த குடும்பங்கள் கூடப் பாதிப்புக்கு உள்ளாகின.

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய். இது மன்ஹாட்டன் ப்ராஜக்ட் மூலமே தயாரிக்கப்பட்டது.கிட்டத்தட்ட 300 செ.மீ நீளம், 71 செ.மீ அகலம், 4400 கிலோ கிராம் எடை கொண்டது லிட்டில் பாய், நாகஸாகியை தாக்கியது ஃபாட்மான்(குண்டு மனிதன்) என்ற அணுகுண்டு ஆகும்.

மேலும் பல அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீச அமெரிக்கா தயாராக இருந்ததாகவும், ஆனால் ஜப்பான் சரணாகதி அடைந்த காரணத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

••

அணுகுண்டுத் தாக்குதலுக்கு முன்பாக ஜப்பானை எச்சரிப்பதற்காக, ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. தோக்கியோ நகரத்தில் மட்டும் ஒவ்வொரு இரண்டு மீட்டர் அளவிலும் ஒரு குண்டு வீதம் போடப்பட்டு, ஒட்டுமொத்த நகரமும் தரைமட்டமாக்கப்பட்டது.

ஹிட்லர் இறந்தபின் இனி சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை என்று ஜெர்மனி தளபதிகள் முடிவு செய்தனர். அதன்படி 1945 மே 8-ந்தேதி ஜெர்மனி சரணாகதி அடைந்தது. அத்துடன் உலகப்போர் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால் போரை நிறுத்த ஜப்பான் மறுத்தது. பசிபிக் கடலில் போய்க்கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசின. இதில் 343 பேர் பலியானார்கள்.

யுத்தம் மேலும் தொடர்ந்தால் நிலை விபரீதமாகிவிடும். ஜப்பானை ஒடுக்க அணுகுண்டு வீசுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு ட்ரூமன் வந்தார். .ஜப்பான் மீது அணுகுண்டு வீசுமாறு, விமானப்படைக்கு ஆணையிட்டார்

மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானி பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் அம்மா பெயர் தான் எனோலாகே

‘லிட்டில் பாய்’ என்ற குறியீட்டுபெயர் கொண்ட அணுக்குண்டு. அதுவரை உலகில் எங்கும் பயன்படுத்தபடவேயில்லை, ஏழு மணிநேர பயணத்தின் முடிவில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வெளிக்கு வந்து சேர்ந்தது

அன்றைய காலையை மக்கள் சந்தோஷத்துடன் துவங்குகிறார்கள், குழந்தைகள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பெற்றோர் அவர்களை அனுப்புவதிலும் தாங்கள் வேலைக்குச் செல்வதிலும் முனைகின்றனர்.

அப்போது இரண்டு விமானங்கள் ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வருகின்றன. முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டு செல்கிறது

இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. போர்முனையில் இருக்கும் வீரர்கள் ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்க்கின்றனர்

சரியாகக் காலை 8.15க்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாகப் பறந்து சென்றுவிட்டது. ஹிரோஷிமாவின் 800 அடி உயரத்தில் லிட்டில் பாய் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறியது. நிமிசங்களில் கரும்புகை திரண்டு வானத்துக்கும், பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே ஒட்டுமொத்த ஹிரோஷிமா நகரும் தரைமட்டமானது, அணுவீச்சில் உடல் பாதிப்புக் கொண்டு உருக துவங்கியது, அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு மூன்று லட்சம் டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு ஐந்தாயிரம் டிகிரி செல்சியஸ் என்கிறார்கள்

மனிதர்கள் தீப்பற்றி எரியும் உடலுடன் கதறி அலறிபடியே ஒடினார்கள், என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை, தாகமும் வலியுமாக ஒடியவர்கள் “தண்ணீர்! தண்ணீர்!” எனக் கதறினார்கள். தீக்காயம் ஏற்படுத்திய வேதனையைத் தாங்கமுடியாமல் பலர் நதியில் குதித்தனர். ஆனால், அந்த நதியோ அணுகுண்டு வெப்பத்தால் வெந்நீராகக் கொதித்துக் கொண்டிருந்தது. நதியில் குதித்தவர்கள் அப்படியே இறந்து போனார்கள்,. ஒன்றரை லட்சம் பேர் வரை ஹிரோஷிமாவில் இறந்து போயிருப்பார்கள் என்கிறார்கள்,

தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானின் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கூட என்ன நடந்தது என அறிந்து கொள்ள முடியவில்லை, இராணு தலைமையகம் உடனடியாக ஒரு விமானத்தை அனுப்பி ஹிரோஷிமாவை பார்வையிட்டு தகவல் சேகரித்து வர செய்தது, ஆனால் அந்த விமானத்தால் புகைமண்டலத்தில் நுழைய முடியவில்லை, வானிலிருந்து அமிலமழை போலக் கறுப்பு மழை பொழியத் துவங்கியது , வானமண்டலமே கொதித்துக் கொண்டிருந்த்து, விமானி விரைந்து வந்து சொன்னபிறகு தான் உலகமே இக்கொடுமை பற்றித் தெரிந்து கொண்டது

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்ட பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க அதை அறிவித்தது. இந்த அணுவிபத்தில் ஹிரோஷிமாவில் ஒரேயொரு கட்டிடம் மட்டும் முழுமையாக இடிந்து போகாமல் மிச்சமாக நிற்கிறது, அதன் கூரைகள் சிதைந்து போய்விட்டன, அடிப்பகுதி அப்படியே இருக்கிறது, அதை அப்படியே இன்றும் பாதுகாத்து வருகிறார்கள்

ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும், ஜப்பான் சரண் அடைய மறுத்தது. எனவே, ஆகஸ்டு 9-ந்தேதி அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் “குண்டு மனிதன்”. இதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்

ஜப்பான் அமெரிக்காவிடம் சரண் அடைந்ததற்கு அணுகுண்டு வீச்சு மட்டும் காரணமில்லை, மறுபக்கம் ரஷ்யா, ஜப்பானை நோக்கி எல்லைவழியாகப் படையோடு முன்னேறிக் கொண்டிருந்தது, ஆகவே எங்கே கம்யூனிஸ்டுகள் ஜப்பானை கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயம் உடனடியாக அமெரிக்காவிடம் ஜப்பான் சரண் அடைந்தது. இன்று வரை அமெரிக்க ராணுவம் ஜப்பானில் இருக்கிறது, ஜப்பானிய ராணுவம் ஒரு தற்காப்பு படை போல மட்டுமே செயல்பட்டுவருகிறது, இந்தச் செய்திகளை ஹிரோஷிமா அணுஆயுத காப்பகத்தின் வழிகாட்டிகள் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள்

அணுகுண்டு வீச்சில் பயன்படுத்தபட்ட யுரேனியம், புளுடோனியம் பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்கா உலகிற்குத் தெரியப்படுத்தாமல் மறைத்த காரணத்தால் அணுவீச்சில் பாதிக்கபட்டவர்களுக்கு முறையான மருத்துவ உதவிகள் செய்யமுடியாமல் போய்விட்டன.

ஜப்பானில் அணுகுண்டு வீசுவதற்கு கொக்கூரா, , ஹிரோஷிமா, யொகஹாமா, நிகிதா, கியோதோ ஆகிய ஐந்து இடங்களை அமெரிக்கா தேர்வு செய்திருந்த்து, இதில் ஹிரோஷிமா, ராணுவ தளவாடங்கள், முகாம்கள், தொழிற்சாலைகள் கொண்ட இடம் என்பதால் இதனை முதலில் அழிப்பது என முடிவு செய்தார்கள், அதன்படியே அணுகுண்டு வீசப்பட்டது

ஜப்பானிய மொழியில் ஹிபாக்குஷா என்றால் அழிந்தும் உயிர் வாழ்பவர்கள் எனப் பொருள். இன்றும் அப்படியான மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்,

அணுக்கதிர்கள் பாதிப்பில் நான்கு தலைமுறைகளாகப் பிறக்கும் குழந்தைகள் கை, கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது தான் அதைக் கட்டுபடுத்தியிருக்கிறார்கள், அணுவீச்சில் பாதிக்கபட்டுச் சிகிட்சை எடுத்தவர்கள் ஆயுள் முழுவதும் வலியால் துடித்து இறந்து போயிருக்கிறார்கள்

தரைமட்டான ஹிரோஷிமாவை மீட்கும் பணி, அழிவு நடந்த மூன்றாம் நாளில் துவங்கியிருக்கிறது, இன்று நாம் காணும் ஹிரோஷிமா முழுமையாக மனித உழைப்பின் சாதனை, மாபெரும் நகரை கட்டி எழுப்பியிருக்கிறார்கள், அதன் மையத்தில் சமாதானப்பூங்கா அமைக்கபட்டிருக்கிறது, அங்கே அணுகுண்டு வீச்சில் இறந்து போனவர்களுக்கான நினைவிடம், அணையாத தீபம், சமாதானத்தை உலகிற்குச் சொல்லும் மணி, அணுவிபத்து குறித்த மாபெரும் காட்சிக்கூடம் ஆகியவை உருவாக்கபட்டுள்ளன

•••

0Shares
0