தோற்றம் சொல்லாத உண்மை

The Return of Martin Guerre 1982 ல் வெளியான பிரெஞ்சு திரைப்படம். இது டேனியல் விக்னே இயக்கியது, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்குப் பிரான்சில் கதை நடக்கிறது.

சின்னஞ்சிறிய பிரெஞ்சு கிராமமும் அதன் எளிய மக்களும் கண்முன்னே விரிகிறார்கள். ஃப்ளெமிஷ் ஓவியர் பீட்டர் ப்ரூகலின் ஒவியங்களைப் போன்று ஒளிரும் காட்சிகள். அபாரமான ஒளிப்பதிவு. அந்தக் கால வீடுகள். மக்களின் உடை, அவர்களின் தோற்றம், வீடுகளில் உள்ள இருளும் ஒளியும் என நாம் காலத்தின் பின்னே நடமாடத் துவங்குகிறோம்

மார்ட்டின், தந்தையின் கண்டிப்பாலும், ஊராரின் கேலி பேச்சாலும் பாதிக்கப்பட்ட இளைஞன். பெர்ட்ராண்ட் டி ரோல்ஸ் என்ற இளம்பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  மனைவியிடம் அவன் அன்பு காட்டுவதில்லை. எப்போதும் குழப்பமும் கவலையுமாக இருக்கிறான்.

 மார்ட்டினை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனைச் சந்தோஷப்படுத்த பெர்ட்ராண்ட் புதிய உடை தைத்து தருகிறாள். உடை அளவு சரியாக இல்லை என்று மார்டின் கோவித்துக் கொள்கிறான். ஊரில் நடக்கும் தொல்சடங்கு ஒன்றில் அவன் மோசமாக அவமதிக்கபடுகிறான். அன்றிரவே மார்ட்டின் ஊரைவிட்டு ஒடிப்போய்விடுகிறான்.

ஸ்பானிய ராணுவத்தில் பணியாற்றித் திரும்பியதாக எட்டு வருஷங்களுக்குப் பின்பு மார்ட்டின் வீடு திரும்புகிறான். கிராமமே அவனை வரவேற்கிறது. மார்ட்டினின் மாமா, அத்தை, சகோதரிகள், நண்பர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு கொள்கிறான். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறான். மனைவி பெர்ட்ராண்ட் மட்டும் அவனைத் தேடி வரவில்லை. மார்ட்டின் அவளைத் தேடி துணி துவைக்கும் இடத்திற்கே போகிறான். வீட்டை விட்டு ஒடிப்போனதற்காக மன்னிப்புக் கேட்கிறான். மகனை அணைத்துக் கொள்கிறான்.

மார்ட்டின் வீடு திரும்பியதை ஊரே கொண்டாடுகிறது. முன்னை விட மார்ட்டின் நிறைய மாறியிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். இப்போது மார்ட்டின் எழுதப்படிக்கக் கற்றிருக்கிறான். தைரியமாகப் பேசுகிறான். மனைவியோடு அன்பாகப் பழகுகிறான். உறவினர்களுடன் இனிமையாக நடந்து கொள்கிறான். கடவுள் தான் அவனை ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளதாகச் சொல்கிறார் பாதிரியார்.

மனைவி மகனுடன் சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்குகிறான் மார்ட்டின். ஒரு நாள், தான் இல்லாத காலத்தில் நிலத்தில் விளைந்த விளைச்சலுக்கான பணத்தைத் தரும்படி மாமாவிடம் கேட்கிறான். அவர் தர மறுக்கிறார். இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது. மாமா அவனைத் தாக்குகிறார்.

இந்நிலையில் அந்த ஊருக்கு வரும் இரண்டு வழிப்போக்கர்கள் அவன் மார்ட்டின் இல்லை. அவனது பெயர் அர்னாட் டு டில், அருகிலுள்ள கிராமமான டில்ஹ்வைச் சேர்ந்தவன், உங்களை நடித்து ஏமாற்றுகிறான் என்கிறார்கள்.

இதைக் கேட்ட மாமா அவன் ஒரு போலி ஆசாமி என்று நிரூபிக்க ஊரைக் கூட்டுகிறார். ஆனால் மார்ட்டின் கடந்த காலத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் துல்லியமாகச் சொல்கிறான். பெர்ட்ராண்ட் அது தனது கணவன் தான் என்று உறுதியாகச் சொல்கிறாள். கண்தெரியாத பாட்டி அவனது முகத்தைத் தடவிப் பார்த்து அது மார்ட்டினே தான் என்று சத்தியம் செய்கிறாள்.

சந்தேகம் விலகாத மாமா அவனை அடிப்பதற்கு ஆட்களை ஏற்பாடு செய்கிறார்.. பெர்ட்ராண்ட் அவனைக் காப்பாற்றுகிறாள். மாமா தனது ஆட்களைக் கொண்டு அவனைக் கைது செய்து நீதிமன்றம் அழைத்துப் போகிறார். அங்கே நீதி விசாரணை நடைபெறுகிறது. அதில் அவன் மார்ட்டின் என விடுதலை செய்யப்படுகிறான்

ஊர் திரும்பும் மார்ட்டின் தன் மீது மாமா பொறாமை கொண்டு  கொல்ல முயலுவதாகக் குற்றம் சாட்டுகிறான். பெர்ட்ராண்ட் அவனைச் சமாதானம் செய்கிறாள். மறுநாள் மார்ட்டின் மீண்டும் கைது செய்யப்படுகிறான். இந்த முறை அவன் போலி எனப் புகார் கொடுத்தவர்களில் அவனது மனைவியும் ஒருத்தி என அறிந்து கொள்கிறான்

நீதிமன்றத்தில் நீண்ட விசாரணை நடைபெறுகிறது. குறுக்கு விசாரணைகள் அத்தனையிலும் மார்ட்டின் வெல்கிறான். தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக அமைய இருக்கும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு உண்மை வெளிப்படுகிறது.

பிரெஞ்சு விவசாயிகளின் வாழ்க்கை மதநம்பிக்கைகள். திருமண முறை மற்றும் அவர்களின் உறவுநிலை மிகவும் துல்லியமாகப் படத்தில் சித்தரிக்கபட்டுள்ளது. அது போலவே 16ம் நூற்றாண்டின் குற்றவியல் நீதிமன்றங்களின் செயல்பாடுகள். நீதிகேட்டு வருகிறவர்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வாரக்கணக்கில் காத்திருப்பது, நீதிபதிகளின் வாதம், மார்ட்டின் முன்வைக்கும் வாதம் என சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

பெர்ட்ராண்ட் ஏன் யாரோ ஒருவனைக் கணவன் என ஏற்றுக் கொண்டாள். அந்தக் கேள்விக்கு அவள் தரும் பதில் சரியானது. அதை வார்த்தைகளை விடவும் மௌனத்தால் அவள் புரிய வைக்கும் விதம் அழகானது

நடிக்க வந்த மார்ட்டினை அவனது பையன் ஏற்றுக் கொள்கிறான். கடைசிவரை அவர் தான் தனது தந்தை என்று சொல்கிறான். காரணம் உண்மையான தந்தையை விடவும் மார்ட்டின் காட்டிய அன்பும், சொல்லிய கதைகளுமே. வீடு திரும்பும் மார்ட்டினாக ஜெரார்ட் டெபார்டியூ சிறப்பாக நடித்திருக்கிறார்.

மார்ட்டின் வீடு திரும்பிய பிறகு மனைவியிடம் ஏற்படும் மாற்றம் மிக நுட்பமான காட்சிகளாக விரிகின்றன. குறிப்பாக அவன் காட்டும் அன்பில் பெர்ட்ராண்ட் திளைப்பது, அவனுக்காக உறவினர்களிடம் சண்டை போடுவது. அவனுடன் கூடிக் கழிப்பது என நிஜவாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

Gérard Depardieu, Nathalie Baye, non identifié

படத்தின் ஒரு காட்சியில் மார்ட்டின் தனது மனைவிக்குக் கையெழுத்துப் போடக் கற்றுத் தருகிறான். அவள் தனது பெயரை எழுதிவிட்டு அதிசயத்துடன் பார்க்கிறாள். தன்னால் கையெழுத்துப் போட முடியும் என்று மகிழ்ச்சியோடு அவனை ஏறிட்டு பார்க்கிறாள். அழகான காட்சியது.

குற்றவுணர்விற்கும் அன்பு செலுத்துவதற்குமான இடைவெளியை படம் பேசுகிறது. மார்ட்டினை மையமாகக் கொண்டு படம் இயங்கினாலும் பெர்ட்ராண்ட் தான் கதையின் மையம். அவள் அன்பிற்காக ஏங்குகிறாள். அதைத் தருகிறவனே உண்மையான கணவன் என்று நம்புகிறாள். அதை வீடு திரும்பும் மார்ட்டின் தருகிறான். கடைசிக் காட்சியில் அவளது முகம் அவன் மீதான அன்பையே வெளிப்படுத்துகிறது

இதன் மறுபக்கம் போலவே மார்ட்டினும் அழகான மனைவி குடும்பத்திற்காக ஏங்குகிறான். அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறான். அதற்காகவே நீதிமன்றத்தில் பொய் சொல்கிறான்

பொய் நிறைய முகங்களைக் கொண்டது. உண்மைக்கு ஒரேயொரு முகம் தான் என்றொரு வசனம் படத்தில் இருக்கிறது. அந்த உண்மையின் முகம் எது என்பதையே படம் விவரிக்கிறது.

0Shares
0