நகரங்களே சாட்சி

Ancient Egypt by Train with Alice Roberts என்ற பயணத்தொடரைப் பார்த்தேன். ஆலிஸ் ராபர்ட்ஸ் பண்டைய எகிப்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காக நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்கிறார்.

மருத்துவரான ஆலிஸ் ராபர்ட்ஸ் சவுத் வேல்ஸிலுள்ள தேசிய சுகாதாரச் சேவையில் இளம் மருத்துவராக பதினெட்டு மாதங்கள் பணியாற்றினார். பின்பு 1998 இல் மருத்துவத்துறையை வெளியேறி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். தற்போது தொலைக்காட்சிக்கான அறிவியல் மற்றும் வரலாற்று ஆவணப்படங்களின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

எகிப்தில் முதல் இரயில் பாதை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது, இது கெய்ரோவை அலெக்ஸாண்ட்ரியாவுடன் இணைக்கிறது. 1902 ஆம் ஆண்டு வரை முதல் இந்த ரயிலில் உறங்கும் படுக்கைகள் கிடையாது, அதன்பிறகே படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் லக்சர், அஸ்வான் மற்றும் போர்ட்சைட் போன்ற எகிப்தின் பிற இடங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டன. 1950களில் உல்லாச பயணங்களின் வருகை அதிகமானதால் ரயிலில் ஆடம்பர வசதிகள் அறிமுகமாகின. மதுக்கூடம் மற்றும் உணவகங்களுடன் கூடிய சொகுசு ரயில் சேவை உருவானது.

1970 களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சொகுசுரயில் சேவை நிறுத்தப்பட்டது. 1980 களில் எகிப்திய அரசாங்கம் நவீன வசதிகள் கொண்ட ரயில்களை மீண்டும் அறிமுகம் செய்து வைத்தது. இன்று கெய்ரோவிலிருந்து அஸ்வான், லக்சர், அலெக்ஸாண்ட்ரியா மற்றும் பிற இடங்களுக்கு ரயில் மூலம் பயணம் செய்வது எளிதானது.

இந்த ஆவணப்படம் விதவிதமான சிறிய பெரிய ரயில் நிலையங்கள். ரயில் பயணங்களையும் பேரழகுமிக்கப் பயணக்காட்சிகளையும் ஒரு தளத்தில் விவரிக்கிறது. இன்னொரு தளத்தில் வரலாற்றுச் சாட்சியங்களாக உள்ள பழைய நகரங்கள் இன்று எப்படியுள்ளன. உலகெங்குமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான காரணங்கள் எவை என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

மூவாயிரம் மைல்களுக்கு மேலான இந்த ரயில் பயணத்தின் வழியாக நாம் எகிப்தின் முக்கியத் தொல்பொருள் தளங்களைக் காணுகிறோம். இடிந்த நகரங்களே இன்று வரலாற்றின் சாட்சியமாக நிற்கின்றன. இது போன்ற வரலாற்று சின்னங்களைப் பார்வையிட இளைஞர்கள் குறைவாகவே வருகை தருகிறார்கள். படத்தில் காட்டப்படும் பயணிகளில் அதிகமும் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள். அல்லது முதியவர்கள். இன்று எகிப்து தனது வரலாற்று முகத்தை மறந்து நவீன வாழ்க்கையின் அடையாளங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பண்பாட்டில், கலையில் அதன் அடையாளங்களை இழக்கவில்லை. பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது

எகிப்திய தொல்பொருள் ஆய்வின் முன்னோடியாகக் கருதப்படும் அமெலியா எட்வர்ட்ஸ் பற்றியும், அவரது எகிப்திய பயண அனுபவங்களை விவரிக்கும் புகழ்பெற்ற நூலான A Thousand Miles Up the Nile பற்றியும் ஆலிஸ் ராபர்ட்ஸ் விவரிக்கிறார். அத்தோடு அந்தப் புத்தகத்தைத் தனது கையிலே வைத்துப் படித்துக் கொண்டு செல்கிறார்

அமெலியா எட்வர்ட்ஸ் ஒரு ஆங்கில நாவலாசிரியர். தொல்பொருள் ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 1882 இல் எகிப்து ஆய்வு நிதியத்தை இணைந்து நிறுவியவர்.

1874ல் அமெலியா எகிப்துக்குச் சுற்றுப்பயணம் செய்தார். நீண்ட படகு பயணத்தை மேற்கொண்ட அவர் எகிப்தின் நினைவுச்சின்னங்கள் அழிந்து வருவதைக் கண்டு அதை மீட்பதற்கான முயற்சிகளைத் துவங்கினார். அறிவியல் பூர்வமான பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்த முனைந்ததோடு எகிப்தின் தொன்மைச் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதவும் பேசவும் துவங்கினார். இதனால் பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கபட்டதோடு அவை முக்கியச் சுற்றுலா மையங்களாகவும் உருமாறின. 1882ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் படைகளால் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டது. அதன்பிறகு பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். கல்லறையில் பாதுகாக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை அவர்கள் கொள்ளை அடித்துச் சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டு இன்று முன்வைக்கப்படுகிறது.

 நைல் பயணத்தின் முழு அனுபவத்தையும் ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு கழுதைச் சவாரி மற்றும் இடிபாடுகளை நோக்கிய படகு பயணம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் அமெலியா.

நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பற்றி ஒருவர் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறாரோ அதை வைத்துத் தான் அவரால் இந்த இடிபாடுகளை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் எனும் அமெலியா தனது பயண அனுபவத்தினைத் துல்லியமாக விவரித்திருக்கிறார்

இந்த ஆவணப்படத்தில் நான்கு எபிசோடுகளில் எகிப்தின் வரலாறு மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து எளிமையாக விவரித்துவிடுகிறார்கள்.அது ஒரு நல்ல அறிமுகம் என்றே சொல்வேன்

இந்த ஆவணப்படத்தில் ஆலீஸ் உடன் நாமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெயிலில் நடக்கிறோம். பிரமிடுகளில் ஏறி இறங்குகிறோம். சுரங்கப் பாதைகளுக்குள் நடந்து செல்கிறோம். வரலாற்றுப் பயணம் என்ற போது தனது தனிப்பட்ட ஆசைகள் விருப்பங்களையும் ஆலீஸ் பகிர்ந்து கொள்கிறார்.

முதல் பகுதியில் அவரது பயணம் அலெக்ஸாண்ட்ரியாவில் தொடங்கி, கிளியோபாட்ராவின் மாளிகையைத் தேடுகிறார் , எங்கே கிளியோபாட்ரா இறந்து போயிருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர் ஒரு இடத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அத்தோடு அடிமையாக இருந்த ஒருவர் எப்படிச் சுல்தானாகி தனது சொந்த சமாதியைக் கட்டியெழுப்பினார் என்பதை அறிந்து கொள்கிறார்.

இரண்டாவது பகுதியில் பாரோ குஃபுவின் கல்லறையைப் பார்க்கச் செல்கிறார். குஃபு எகிப்தின் மிகப்பெரிய பிரமிடு ஆகும்,  இது கிசாவில் அமைந்துள்ளது வரலாற்றாசிரியர்கள் இது கிமு 2560 இல் கட்டப்பட்டதாக நம்புகிறார்கள் இந்த பிரமிடு 455 மீட்டர் உயரம் உள்ளது

எகிப்தின் பிரமிடுகளில் உள்ள சுரங்கப்பாதைகள்  மர்மமானவை பிரமிடின் சுரங்கப்பாதையில் அவர் நடந்து செல்லும் போது கேமிரா அவரை நிழல் போல பின்தொடருகிறது.

அடுத்த பயணம் லக்சர் நோக்கியது. அங்கே துட்டன்காமூனின் கல்லறை மற்றும் மம்மியைப் பார்வையிடுகிறார்.

எகிப்தின் 13-வது மன்னனான துட்டன்காமூன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமூன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனதாக சொல்கிறார்கள். ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் லக்சர் நகரத்தில் துட்டன்காமூனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கல்லறை உள்ள அறையை ஒட்டி புதையலும் கண்டறியப்பட்டது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. அவற்றில் பாதி இறுதிச்சடங்கில் அளிக்கப்படும் இயற்கைப் பொருட்களாகும்

2005-ஆம் ஆண்டில் துட்டன்காமூனின் மம்மியை லேசர் மூலம் ஆய்வு செய்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அத்தோடு அவன் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கலாம் என்றும் அறிய வந்தது.

நான்காவது பகுதியில் அஸ்வானில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, ஃபிலே கோயிலைக் காணப் படகில் செல்கிறார்.

அஸ்வான் தெற்கு எகிப்தில் உள்ள நகரமாகும்.  எகிப்தின் முக்கிய வணிக மையமாகவும், சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் வெளியே பழங்கால எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. அஸ்வான் அணை நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.  ஃபிலே கோவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் ஊடாகப் பண்டைய எகிப்திய வாழ்க்கை முறை. விவசாயம். நகர உருவாக்கம் உணவுப்பண்பாடு இவற்றை விளக்குகிறார். அத்தோடு இன்றைய வாழ்க்கை முறை, வணிக அங்காடிகள். மதவழிபாட்டு முறைகள். சடங்குகள் மற்றும் பயணிகளுக்கான உல்லாச விடுதிகளைப் பற்றியும் பேசுகிறார்.

கெய்ரோவின் புகழ்பெற்ற கார்பெட் பஜார். அங்கு விற்கப்படும் பாரசீக மற்றும் சிரிய தரைவிரிப்புகள், பிரார்த்தனை-கம்பளங்களைக் காணுகிறோம். காபியின் மணமும் பூவேலைப்பாடு கொண்ட துணிகள் விற்கும் கடைகள். குறுகலான சந்துகள். அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள். சாலையோர ஓவியர்கள். வெள்ளிப்பொருட்கள் விற்கும் அங்காடி எனக் கெய்ரோவிற்குள் நாமே சுற்றி அலைகிறோம் கெய்ரோவில் பல சிறப்புப் பஜார்களும் உள்ளன; ஸ்வீட் மீட் பஜார், பழைய பொருட்கள் விற்கும் பஜார். புகையிலை பஜார்; வாள் மற்றும் ஆயுதங்கள் விற்கும் கடைகள். தொப்பி வாசனைத் திரவியம் விற்கும் கடைகள். என வரலாற்றின் தொடர்ச்சியாக விளங்கும் அங்காடிகளை இன்றும் காண முடிகிறது.

0Shares
0