நகரம் விழுங்கிய மனிதர்கள்.

ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும்.

அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல்.

ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன்

ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை.

1948ல் Cry, the Beloved Country வெளியானது. இது ஆலன் பேடனின் முதல் நாவல். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை குறித்து உண்மையாக எழுதப்பட்ட நாவல் என்று மிகுந்த வரவேற்பு பெற்றது.. இந்த நாவல் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது

ஆலன் ஸ்டீவர்ட் பாடன் நிறவெறிக்கு எதிராக எழுதியவர்களில் முதன்மையானவர். இவரது தந்தை ஆப்பிரிக்காவில் அரசு உயரதிகாரியாகப் பணியாற்றியவர். நடால் காலனியில் உள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க்கில் பிறந்த ஆலன் பாடன் நடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து கல்வியியல் டிப்ளமோ பெற்றார்.இக்ஸோபோ உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மாரிட்ஸ்பர்க் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

நிறவெறிக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய பாடன் இளங்குற்றவாளிகளுக்கான காப்பகத்திலும் பணியாற்றியிருக்கிறார். அங்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். இனவெறி குறித்து ஆராய்வதற்காக உலகப்பயணம் மேற்கொண்ட பாடன் நார்வேயிலிருந்த நாட்களில் இந்த நாவலை எழுதத் துவங்கியிருக்கிறார். அவரது பயணத்தின் முடிவிற்குள் நாவலை எழுதி முடித்திருக்கிறார்

ஒரு வெள்ளைக்காரரால் எப்படிக் கறுப்பின மக்களின் மனதையும் வாழ்க்கையினையும் இவ்வளவு உண்மையாக. ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்று இலக்கிய உலகம் வியந்து கொண்டாடியது

சில நாவல்களை Mini Epic என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நாவல்கள் இதிகாசம் போல வாழ்வின் பிரம்மாண்டத்தை அடிப்படை உண்மைகளை, கேள்விகளை முன்வைக்கக் கூடியவை. செவ்வியல் தன்மை கொண்டதான இதிகாச நாவல்களில் ஒன்றாகவே அன்னையின் குரலைக் காணுகிறேன்..

இந்த நாவல் ஒரு நவீன இதிகாசம். இந்த இதிகாசம் கறுப்பின மக்களின் வாழ்க்கை துயரை, நிறவெறியை, வாழ்க்கை அவலங்களைப் பேசுகிறது. வீடு திரும்புதல் தான் நாவலின் மையம். இது ஹோமரை நினைவுபடுத்துகிறது. பிரிந்து சென்ற உறவுகளைத் திரும்ப ஒன்று சேர்க்க முனைவது இதிகாசங்களின் முதன்மையான கூறு. இந்த நாவலும் அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது.

1940களில் இக்சோபோ என்டோட்ஷேனி என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது, அங்குப் பாதிரியாராக உள்ள ஸ்டீபன் குமாலோவிற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பாதிரியார் தியோபிலஸ் மிசிமாங்கு. அந்தக் கடிதத்தில் குமாலோவின் சகோதரி கெர்ட்ரூட் உடல்நிலை மோசமாகிக் கஷ்டப்படுவதால் அவளுக்கு உதவி செய்ய வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது

குமாலோ இதனால் ஜோகன்னஸ்பர்க் புறப்படுகிறார். நகரத்திற்குச் சென்றவர்கள் எவரும் ஊர் திரும்புவதில்லை என்று அவரை ஊர்மக்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். அவரோ தான் நிச்சயம் ஊர் திரும்பி விடுவேன் என்கிறார். நகரத்திற்குச் சென்று திரும்புகிறவன் ஏமாற்றங்களுடன் தான் வருவான் என்று ஒரு விவசாயி சொல்கிறார். அப்படியே கதையிலும் நடக்கிறது.

குமாலோவின் கிராமத்தில் வசிக்கும் வெள்ளையர்கள் கறுப்பின மக்களைத் துவேசத்துடன் நடத்துகிறார்கள். நிறவெறி அதிகமாக உள்ளது. குறிப்பாக அவரது கிராமத்தில் வசிக்கும் பணக்கார ஜேம்ஸ் ஜார்விஸ்: ஜோகன்னஸ்பர்க்கில் வெள்ளைக்காரர்கள் கறுப்பின மக்களுடன் கைகுலுக்குகிறார்கள் என்பதை அவமானத்துக்குரிய ஒன்றாக நினைக்கிறார். வெள்ளை அதிகாரம் அந்தக் கிராமத்தில் வலிமையாக இருக்கிறது.அவர்களிடம் பண்ணை அடிமை போலவே கறுப்பின மக்கள் பணியாற்றுகிறார்கள்

ஜோகன்னஸ்பர்க்கிற்கு முதன்முறையாக வரும் குமாலோ அங்குக் கறுப்பின மக்கள் இரண்டாந்தர பிரஜையாக நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்

அதே நேரம் நகரத்திற்கு வந்த உடன் அவர் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனால் ஏமாற்றப்படுகிறார். இது தான் உண்மையான சூழ்நிலை என்பது அவருக்குப் புரிகிறது

அவரது பயணத்தின் நோக்கம் சகோதரிக்கு உதவி செய்வது மட்டுமில்லை. தனது மகன் அப்சலோம் நகரிற்குச் சென்று வருஷங்களாகியும் வீடு திரும்பவில்லை. அவன் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

அவருக்கு உதவி செய்யப் பாதிரி தியோபிலஸ் முன்வருகிறார்கள். அவர்கள் கெர்ட்ரூட்டை தேடி அலைகிறார்கள். அந்தத் தேடுதலின் வழியே கறுப்பின மக்கள் வாழும் குடியிருப்புகளின் மோசமான நிலையினையும் வறுமையின் கோரத்தையும் குமாலோ அறிந்து கொள்கிறார். தேடுதலின் முடிவில் கெர்ட்ரூட்டை கண்டுபிடிக்கிறார்கள். அவள் விபச்சாரியாக இருக்கிறாள். அத்துடன் நாட்டுச் சாராயம் காய்ச்சி விற்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

அவளைச் சந்தித்துப் பேசும் இடம் அற்புதமானது. அவள் சூழ்நிலை தன்னை இப்படியாக்கிவிட்டது என்று கண்ணீர் விடுகிறாள். அவளிடம் பேசி சமாதானம் சொல்லி கிராமத்திற்கு வந்துவிடும்படி அழைக்கிறார். அவள் தனது மகனுடன் வந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறாள்

இதன்பிறகு குமாலோ தனது மகன் அப்சலோமைத் தேடுகிறார். இந்தத் தேடுதல் எளிதாகயில்லை. அப்சலோம் ஒரு இளம்பெண்ணுடன் வாழுவதை அறிந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கிறார். அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். தாங்கள் சேர்ந்து வாழுகிறோம் என்கிறாள்.. அப்சலோம் எங்கே எனக்கேட்க அவன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதாகவும் எப்போதாவது தான் வீட்டிற்குத் திரும்புவான் என்றும் குறிப்பிடுகிறாள்.

அப்சலோமை தேடி குமாலோ பல்வேறு இடங்களில் அலைகிறார். இதே நேரம் அவன் தனது சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆர்தர் ஜார்விஸ்: என்ற வெள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறான். அங்கே ஏற்பட்ட குழப்பத்தில் அவன் ஆர்தர் ஜார்விஸைக் கொன்றுவிடுகிறான் . போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது

ஆர்தர் ஜார்விஸின் தந்தை ஜேம்ஸ் ஜார்விஸ் மகன் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுத் துடித்துப் போகிறார். மனைவியோடு கிளம்பி மகனது இறுதிச் சடங்கிற்காக வருகிறார்

தனது மகன் கறுப்பின மக்களின் விடுதலைக்காகச் செயல்பட்டதையும் அவன் நிறவெறிக்கு எதிராக முன்னின்று செயல்பட்டதையும் அறிந்து கொள்கிறான். இப்படியான ஒருவன் கறுப்பின இளைஞனால் கொல்லப்பட்டதை நினைத்து வருந்துகிறார். மகனின் கடிதமும் எழுத்தும் அவரது மனதை மாற்றுகின்றன.

மகன் சிறையில் இருப்பதை அறிந்து கொண்ட குமாலோ அவனைச் சந்திக்கச் செல்கிறார். தந்தையும் மகனும் சிறைச்சாலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. ஏன் அவன் இப்படி மோசமான பாதையில் சென்று குற்றவாளியாக ஆனான் என்று குமாலோ கேட்கிறார். தனது சகவாசமே தன்னை இப்படி ஆக்கியதாகச் சொல்கிறான் அப்சலோம். நீதி விசாரணை நடைபெற இருப்பதால் அவனை மீட்க முயற்சி செய்கிறார் குமாலோ. அதன்பின் வரும் நிகழ்வுகள் நம்மைத் துயரம் கொள்ள வைக்கின்றன.

நாவலின் முடிவில் அப்சலோம் காதலித்த பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படுகிறார் குமாலோ. சகோதரி கெர்ட்ரூட் காணாமல் போய்விடுகிறாள் அவள் ஊர் திரும்புவதேயில்லை.

தனது கிராமத்தில் ஆர்தர் ஜார்விஸின் தந்தை ஜேம்ஸை சந்திக்கிறார் குமாலோ. தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறார். அவரை மன்னிக்கும் ஜேம்ஸ் குமாலோவை மிகுந்த நட்போடு நடத்துகிறார். இரண்டு தந்தையர்கள் சந்தித்துக் கொள்வதைப் பாடன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

மகனைத் தேடும் தந்தையின் வழியாக 1940களில் இருந்த ஜோகன்னஸ்பர்க் நகர வாழ்க்கையை, அன்று நிலவிய இனவெறியை ஆலன் பாடன் மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆணும் பெண்ணும் ஊரைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணால் இனியும் அவர்களைத் தக்க வைத்திருக்க முடியாது என்று நாவலில் ஒரு வரி இடம்பெறுகிறது.

நிலமும் மனித வாழ்க்கையும் கொண்டுள்ள பிணைப்பு மாறும் போது ஏற்படும் விளைவுகளையே நாவல் பேசுகிறது.

நல்லவர்களாகத் தான் வளர்த்த சகோதரியும் மகனும் ஏன் நகரிற்குச் சென்று இத்தனை மோசமான செயல்களில் ஈடுபட்டார்கள். எது அவர்களை இப்படியாக்கியது என்று குமாலோ யோசிப்பது முக்கியமான இடம். வாழ்க்கை நெருக்கடியும் ஏழ்மையும் குரூரமான இனவெறியும் அவர்களை வீழ்த்தியது என்ற உண்மையை நாவல் வெளிப்படுத்துகிறது

நாவலில் வரும் வெள்ளைக்கார வழக்கறிஞரும் ஆர்தர் ஜார்விசும் இனவெறிக்கு எதிராகப் பேசுகிறார்கள். செயல்படுகிறார்கள். இரண்டு இனங்களின் சமூகநிலை மற்றும் நடத்தைகள் பற்றிச் சார்பற்ற, புறநிலைப் பார்வையில் எழுதியிருக்கிறார் பாட்டன். நகர்ப்புற குற்றங்களின் பின்புலம், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்

நாவலில் வரும் இரண்டு பெண்களும் முக்கியமானவர்கள். காதலனை நம்பி ஏமாந்து விபச்சாரியாக வாழும் கெர்ட்ரூட் இப்படி வாழ்வதைத் தவிரத் தனக்கு வேறுவழியில்லை என்கிறாள். அவளது இன்னொரு வடிவம் போலவே அப்சலோம் காதலிக்கும் பெண் இருக்கிறாள். பதினாறு வயதிற்குள் அவள் மூன்று திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறாள். மூன்றும் ஏமாற்றமே அளித்திருக்கிறது. முடிவில் அப்சலோமினைக் காதலித்து அவனது கருவைச் சுமக்கிறாள். சூழலின் நெருக்கடியால் ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.

குமாலோ மிக அழகாகக் கதாபாத்திரம். கிராமத்து மக்களின் அபிமானத்துக்குரிய பாதிரியான அவர் நகரத்திற்கு முதன்முறையாக வந்த போது அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது மகனைத் தேடும் போது அவனைப் போல எண்ணிக்கையற்ற இளைஞர்கள் கைவிடப்பட்டவர்களாக மோசமான பாதையில் அலைவதைக் காணுகிறார். தீர்க்க முடியாத வறுமை. பொருளாதாரச் சீர்கேடுகள், குற்றங்கள் நிரம்பியிருப்பதைக் காணுகிறார். இந்த நரகத்திலிருந்து தனது மகனைச் சகோதரியை மீட்டுவிட நினைக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை

மகனை நினைத்துக் கவலைப்படும் இரண்டு தந்தைகளும் இருவேறான வாழ்க்கை நிலையில் இருக்கிறார்கள். பணக்கார ஜார்விஸ் வீட்டில் அவரது மனைவி பேப்பர் படிப்பதைக் கூட அவர் விரும்பவில்லை. ஏழ்மையில் வாழும் குமாலோ தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்கிறார்.

கிராமத்தில் வாழமுடியாதபடி இனவெறி பண்ணை அடிமைதனம் மிகுதியாக இருக்கிறது. அதிலிருந்து விடுபடவே நகரம் நோக்கி செல்கிறார்கள். நகரமோ அதன் ஆயிரம் கைகளால் சுற்றி இழுத்து அவர்களை விழுங்கிவிடுகிறது. நகரால் விழுங்கப்பட்டவர்கள் அதன் அடிவயிற்றுள் தான் வாழுவார்கள். அவர்களுக்கு மீட்சியில்லை.

இரண்டு மகன்களும் ஏன் கிராமத்தை விட்டு நகரிற்குப் போனார்கள். ஏன் அப்சலோம் இப்படி ஆனான் என்ற கேள்விக்கு விடையில்லை. ஆனால் தந்தையின் சொல்லப்படாத அன்பை, வலியைப் பேசுவதன் வழியே இந்நாவல் நவீன இதிகாசத்தின் தன்மையை அடைகிறது.

0Shares
0