நகுலனைக் கொண்டாடுவோம்

.

நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது.

தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது.

நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை அறிந்து கொள்ள விரும்பும் இளம் வாசகனுக்குச் சிறந்த வாசலாக அமையும்.

பலமுறை ,கோணங்கியும் நானும் திருவனந்தபுரத்திலுள்ள நகுலன் வீட்டிற்குச் சென்று உரையாடி மகிழ்ந்திருக்கிறோம்.. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட விழாவில் உரையாற்றியிருக்கிறேன். நகுலன் என்றும் என் விருப்பத்திற்குரிய படைப்பாளி.

இந்தத் தொகுப்பில் நகுலன் என்பது ஒருவரில்லை என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

நகுலனின் ஆங்கிலக் கவிதைகளை முன்பே வாசித்திருக்கிறேன். முதன்முறையாக அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். நகுலனை மொழியாக்கம் செய்வது எளிதானதில்லை. அந்தச் சவாலைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கவிதைகளாக இருந்தாலும் இன்றும் அதன் புதுமை மாறவில்லை. நேற்று எழுதியது போல அத்தனை புதியதாக, நெருக்கம் தருவதாக உள்ளது.

வாக்குமூலம் குறுநாவலை கிராபிக் நாவலாக உருவாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.

ஆ. பூமிச்செல்வம், ந. ஜயபாஸ்கரன், எம். யுவன், வரதராஜன் ராஜூ, கல்யாணராமன், ப. சகதேவன் என்னும் கிருஷ்ணசாமி, ஆனந்த், கலாப்ரியா, சி. மோகன், சுகுமாரன், கோணங்கி, அய்யப்ப பணிக்கர், பி. ரவிகுமார், ஆர் ஆர் சீனிவாசன், எஸ். சண்முகம், கண்டராதித்தன், ராணிதிலக், ஸ்ரீநேசன், ஆசை, சர்வோத்தமன் சடகோபன், பிரவீண் பஃருளி, விக்ரமாதித்யன், ஜி. முருகன், சபரிநாதன் என முக்கிய படைப்பாளிகள் நகுலனின் கவிதைகளையும் அவரது ஆளுமையினையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நூற்தொகுப்பினை உருவாக்குவதற்காக ஓராண்டிற்கும் மேலாக ஷங்கர் ராமசுப்பிரமணியன் அயராமல் வேலை செய்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. ஷங்கர் ராமசுப்ரமணியனுக்கு என் அன்பும் பாராட்டுகளும்.

அச்சும் புத்தக வடிவாக்கமும் அபாரம். சிற்பம் போல ஒரு புத்தகத்தை தேர்ந்த கலைப்படைப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். நூல்வனம் மணிகண்டனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

••

0Shares
0