புதிய குறுங்கதை
இது நடந்தது 1814ல்.
சுமேர்பூரில் முகாமிட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஜான் சாமுவேலிடம் கடிதம் பெறுவதற்காக அந்த ஆள் வெளியே காத்திருந்தார். ஆறடி அடிக்கும் மேலான உயரம். தலையில் பெரிய தலைப்பாகை. அடர்ந்து நரைத்த மீசை. தாடி. பழுப்பு நிறமான கண்கள். கூர்மையான மூக்கு. தோளில் போர்வை போன்றதொரு ஒரு துண்டு. பலானா கிராமத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் போது சாமுவேல் அவரது பெயரைக் கேட்டார்
“சாப்பன்“ என்று சொன்னார்.
ராஜஸ்தானிய கிராமங்களில் பலருக்கும் வயது தெரியாது. பஞ்சகாலத்தினை நினைவூட்டும் விதமாகவே பெயர் வைத்திருந்தார்கள். கடிதத்தை உறையிலிட்டு நீட்டியபடியே ராம்சிங்கிடம் அவருக்கு அரையணா தரச் சொன்னார்

சாப்பன் கடிதத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு காசை ஏற்க மறுத்துவிட்டார். கடிதம் கொண்டு செல்கிறவருக்கு வழக்கமாக அளிக்கப்படும் நடைக்கூலி தான் என சொன்னபோதும் சாப்பன் ஏற்கவில்லை.
சாமுவேல் ஏன் என்று புரியாமல் உதவியாளர் ராம்சிங்கிடம் விளக்கம் கேட்டார்.
ராம்சிங் சிரித்தபடியே சொன்னார்
“சாப்பன் ஊருக்கு பொதுவானவன். இவனைப் போன்றவர்கள் எந்த வேலைக்கும் காசு வாங்க மாட்டார்கள்.. ராஜஸ்தான் கிராமங்களில் இப்படி ஊர் காரியங்களைக் கவனித்துக் கொள்வதற்காகச் சிலரைப் பொதுமனிதராக விட்டுவிடுவார்கள். அவர்கள் தனது குடும்பத்திற்காகச் சம்பாதிக்க மாட்டார்கள். அவரது வீட்டிற்குத் தேவையான தானியங்களை ஊரே கொடுத்துவிடும். “
இது நிஜமா என்று யோசித்தபடியே சாப்பனிடம் “எத்தனை வருஷங்களாகக் கடிதம் கொண்டு போகிறாய்“ என்று கேட்டார் சாமுவேல்.
“வருஷம் தெரியாது. சிறுவனாக இருந்த போதிலிருந்து கடிதம் கொண்டு போகிறேன். இது வரை ஒரு கடிதத்தைக் கூடத் தொலைக்கவில்லை. பறி கொடுக்கவில்லை. அதிகாலையில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவேன். மாலைக்குள் ஊர் திரும்பி விடுவேன்“. என்றார் சாப்பன்.
சாப்பன் சொல்வது உண்மை. பாலைவனத்தில் அதிகமான வழிப்பறிகள் நடந்து வந்த காலமது. சாமுவேலிற்கு அந்த மனிதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அன்றாடம் அவர் சந்திக்கும் வணிகர்கள். கிராமசபைத் தலைவர்கள் காசிற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பேராசை கொண்டவர்கள். பேச்சில் கள்ளத்தனமிருக்கும். ஆனால் சாப்பன் அப்படியில்லை.
பலானாவிலிருந்து சுமேர்பூரிற்கு இருபத்திமூன்று மைல். தினமும் நடந்து வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடிதம் கொண்டு சென்றாலும் அதற்காகக் கூலி எதுவும் வாங்கியதேயில்லை. இங்கிலாந்தில் இப்படி ஒருவரைப் பார்க்க முடியாது என்று சாமுவேலிற்குத் தோணியது.
தனது பாராட்டின் அடையாளமாக அந்த அரையணாவை பெற்றுக் கொள்ளும்படி சொன்னார் சாமுவேல்,
“நான் இதுவரை கையில் காசைத் தொட்டதேயில்லை. அது பிசாசு. அதன் பின்னால் நம்மைக் கூட்டிக் கொண்டு போய்விடும். நடப்பதற்காக யாராவது கூலி வாங்குவார்களா என்ன“. என்றபடி சாப்பன் புறப்படத் துவங்கினார்.
சாமுவேல் வியப்புடன் சாப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு இந்தியர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
••