நமக்கான புத்தகம்

புத்தகங்களை எப்படி அறிமுகம் செய்வது என்பதைப் பற்றிய உரையாடலில் “எல்லா புத்தகங்களையும் விரிவாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில புத்தகங்களை எந்த அறிமுகமும் இன்றி அப்படியே கையில் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். வேண்டுமானால் இது உங்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று சில வார்த்தைகள் சொல்லலாம்“ என்கிறார் ஹென்றி மில்லர்

தற்செயலாகக் கையில் கிடைத்தோ, யாரோ கொடுத்தோ அறிமுகமாகும் புத்தகம் நாம் எதிர்பாராத மகிழ்ச்சியை, வியப்பை உருவாக்குவதை உணர்ந்திருக்கிறேன்

இதற்காகப் புத்தக அறிமுகமே தேவையில்லையா என்றால் தேவை தான். ஆனால் சில புத்தகங்கள் மௌனமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை. நாமே தேடிக் கண்டறிய வேண்டியவை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை லேண்ட்மார்க் புத்தகக் கடையில் நாவல்கள் வரிசையில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தலைப்பு வசீகரமாகயிருந்தது. அந்த எழுத்தாளரின் பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே அந்த இடத்திலே நாவலின் இரண்டு பக்கங்களைப் படித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. உடனே வாங்கிவிட்டேன். அடுத்த சில தினங்களில் படித்துமுடித்துவிட்டு நண்பர்கள் பலருக்கும் அவரைப் படிக்கும்படி சிபாரிசு செய்தேன்.

அப்போது ஒரு நாள் நண்பர் ஜி.குப்புசாமியைக் காண ஆரணி சென்றிருந்தேன். அவரிடம் இந்த நாவலைப் பற்றிப் பேசி வாங்கிப் படிக்கும்படி சொன்னேன். அவரும் உடனே நாவலை வாங்கிப் படித்துவிட்டு வியந்து பேசினார். ஆனால் அந்த நாவலை அவரே மொழிபெயர்க்கப் போகிறார் என்றோ. அந்த எழுத்தாளர் நோபல் பரிசு பெறப் போகிறார் என்றோ அன்றைக்குத் தெரியாது

லேண்ட்மார்க்கில் நான் தற்செயலாகக் கண்டுபிடித்து வாங்கியது My Name Is Red நாவல். அதை எழுதியவர் Orhan Pamuk.

ஒரான் பாமுக்கின் இந்த நாவலை ஜி.குப்புசாமி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அத்தோடு சிறந்த மொழியாக்கத்திற்காக விருதும் பெற்றிருக்கிறார். இன்றும் பாமுக்கின் முக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார்.

இப்படி முன் அறிமுகமின்றி வாங்கிய பல புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன.

ஹென்றி மில்லரிடம் ஒரு நாள் அவரது நண்பர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா நாவலைக் கொடுத்து இது உனக்கான புத்தகம் என்றாராம். அந்த நாவலைப் படித்துக் கிறங்கிப் போன மில்லர் தன் வாழ்க்கையை மாற்றிய புத்தகமது என்கிறார்.

நம்மை மாற்றிய சில புத்தகங்கள் இப்படிப் பெரிய அறிமுகமின்றிச் சரியான தருணத்தில் நம் கைகளுக்கு வந்து சேருகின்றன.

புத்தக விற்பனையாளர்களும் இது போலச் சில அவதானிப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

மில்லர் சித்தார்த்தா பற்றிச் சொன்னது போலவே லண்டனில் புத்தகக் கடை நடத்தும் மார்டின் லேதம் சித்தார்த்தா நாவலைத் தனது கடையில் வாங்கிச் செல்பவர்களிடம் ஒரு பொதுக்குணம் இருப்பதைப் பற்றிச் சொல்கிறார்.

“அவர்கள் நிழல் போலக் கடைக்குள் வந்து சரியாக இந்த நாவலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்பவராக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் எவரிடமும் பேசுவதில்லை. எங்களிடம் பரிந்துரை எதையும் கேட்பதில்லை“ என்கிறார்

நாவல் மட்டுமில்லை. அதைப் படிப்பவர்களும் விசித்திரமான மனநிலை கொண்டவர்களே.

எழுபதுகளில் சித்தார்த்தா நாவலைப் படித்துவிட்டு வெளிநாட்டு இளைஞர்கள் பலர் இந்தியாவை நோக்கி வரத்துவங்கினார்கள். சித்தார்த்தனைப் போல உருமாற ஆசை கொண்டார்கள். ஹிப்பிகள் பலரும் இந்த நாவலை தங்களின் ஆதர்சமாகக் கொண்டிருந்தார்கள்.

பணம் பொருள் என நாட்டம் கொண்டிருந்த மேற்கத்திய இளைஞர்களை ஞானத்தின் பாதையை நோக்கித் திருப்பிவிட்டது சித்தார்த்தா என்கிறார் மில்லர்

இந்த நாவலை எழுதிய ஹெஸ்ஸே இந்தியாவிற்கு வந்ததில்லை. இலங்கையில் அவர் கண்ட பௌத்தவிகாரைகளும் இயற்கைக் காட்சிகளும் இந்த நாவலில் இந்தியாவாக உருமாறியிருக்கின்றன. ஹெஸ்ஸேயின் தாத்தா கேரளாவில் கிறிஸ்துவ ஊழியம் செய்தவர். மலையாள அகராதி உருவாக்குவதில் பங்காற்றியவர். ஆகவே அவர்கள் குடும்பத்திற்கு இந்தியாவோடு நெருக்கமான தொடர்பு இருந்தது

ஒரு நாவல் இலக்கிய உலகைத் தாண்டி இப்படிப் பல்வேறு துறை சார்ந்தவர்களையும் ஈர்த்து பலரது சொந்த வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வைத்தது பெரிய சாதனையாகும்.

இந்த நாவலை ஒருமுறை மட்டுமே படித்தவர்கள் குறைவு. எதற்காகச் சித்தார்த்தா நாவலை விரும்புகிறீர்கள் என வாசகர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது பலரும் “அது தாங்கள் யார் என்பதை உணரச் செய்த புத்தகம். வாழ்க்கை குறித்த புதிய புரிதலை உருவாக்கிய நாவல்“ என்கிறார்கள்.

“சித்தார்த்தா நாவலைப் படித்தபோது எனது வயது இருபது. படித்து முடித்தபோது குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதைப் போல உணர்ந்தேன். அதிலிருந்து மீள உடனடியாக அன்றாட வாழ்க்கையை உதறி வெளியே போக வேண்டும் என்று துடித்தேன். ஆகவே வீட்டைவிட்டு வெளியேறி நீண்ட தூரம் பயணம் செய்தேன். நான் தான் சித்தார்த்தன் என்று நம்பினேன். அவனது தேடல் உண்மையானது. அதை முழுமையாக உணர்ந்து கொண்டேன்“ என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த எரிக் மில்டன்.

ஹெஸ்ஸேயின் மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் போது சித்தார்த்தா மிகவும் எளிமையான நாவல். அவரது The Glass Bead Game, Narcissus and Goldmund இரண்டும் சிக்கலானவை. ஆழ்ந்த விவாதத்தையும் தரிசனத்தையும் முன்வைப்பவை. கலைஞனின் வாழ்க்கை பெரியதா. இல்லை துறவு வாழ்க்கை பெரியதா என்பதைப் பற்றித் தனது படைப்புகளில் ஹெஸ்ஸே தொடர்ந்து விவாதிக்கிறார். இரண்டுக்கும் இடையில் ஒரு சந்திப்பை உருவாக்குகிறார்.

கீழைத்தேயச் சிந்தனைகளின் மீது ஹெஸ்ஸேயிற்கு இருந்த விருப்பமும் புரிதலும் முக்கியமானது. அதன் சாட்சியமாகவே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. சித்தார்த்தா இந்தியரால் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் இன்னும் ஆழமான விவாதங்களை எழுப்பியிருக்கும்.

நூலகத்தின் புத்தக அடுக்குகளில் யாரும் எடுக்காமல் போன புத்தகங்களைத் தான் நான் விரும்பி எடுப்பேன். இருபது முப்பது ஆண்டுகள் யாரும் எடுத்துப் போகாத புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு போய் நூலகரிடம் கொடுக்கும் போது அவர் திகைப்புடன் இதெல்லாம் படிப்பீர்களா என்று கேட்பார். பதில் சொல்லாமல் புன்சிரிப்புடன் பதிவேட்டில் பதிந்து வாங்கிச் சென்றுவிடுவேன். நாமாகத் தேடி ஒன்றைக் கண்டறிவதன் இன்பம் இணையற்றது. அது புத்தக வாசிப்பில் மிகவும் முக்கியமானது.

**

0Shares
0