நயாகரா முன்னால்

‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது
இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்றும் சிலர் வருவதாகத் திட்டம். காலையில் கிளம்பி மதியத்திற்கு நயாகரா சென்றுவிட்டு இரவு அலங்கார வெளிச்சத்தில் நயாகராவைக் காண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.
நயாகராவைப் பற்றி பாடப்புத்தகங்களில் வாசித்திருந்தபோதும், திரைப்படங்களில் பார்த்திருந்தபோதும், அதனை நேர்நின்று காணும்போது அடையும் மனவெழுச்சியை சொல்லில் வெளிப்படுத்துவது எளிதான தில்லை. மர்லின் மன்றோ ‘நயாகரா’ என்றொரு படம் நடித்திருக்கிறார். கதை நயாகராவிற்கு வரும் காதல்ஜோடி பற்றியது. நயாகரா அருவியை மர்லின் மன்றோ தனது அறையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டேயிருப்பார். அதில் அருவியைப் பற்றி how big they are and how small I am என்றொரு வசனம் இடம் பெறும், அந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை நயாகராவின் முன்னால் நின்றபோது முழுமையாக உணர்ந்தேன்.
நயாகராவைக் காண்பது என்பது மாபெரும் அனுபவம். அது ஒரு அருவியின் முன்நிற்கும் நிமிஷம் மட்டுமில்லை. மனிதர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணரும் தருணம். இயற்கையின் வலிமையை இந்த உலகில் எவரா லும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நயாகரா நிரூபணம் செய்கிறது. ஓடுகிற ஆறுதான் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் நீர்வீழ்ச்சியாகப் பாய்கிறது, தண்ணீரை இதுவரை நாம் கண்டிராத மாயமான திரவமாக மாற்றிக் காட்டுகிறது.
நயகாராவின் ஓசையைக் காரில் வரும்போது தொலைவில் இருந்தபடி கேட்கத்துவங்கினேன். அருவி கண்ணில் தென்படுவதற்கு முன்பு அதன் ஓசையைக் கேட்பது எத்தனை சந்தோஷமளிக்கிறது. ஒரு சிறுவனைப் போல அருவி எந்தத் திசையில் இருக்கும் என அண்ணாந்து பார்த்தபடியே வந்தேன். வழக்கமாக நாம் அருவி என்றவுடன் மலையின் உயரத்தில் இருந்து விழுவதைத் தானே கண்டிருக்கிறோம். நயாகராவில் அப்படியில்லை. அது சமதளத்தில் ஓடி பெரும் பள்ளத்தில் பொங்கி வழிகிறது.
கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ. நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது அருவி. இது இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. கனடா பகுதியில் ஹார்ஸ் ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை லாட அருவியாகவும், பப்பல்லோ பகுதியில் அமெரிக்க அருவியாகவும் விழுகின்றது.
குதிரை லாட அருவி 792 மீ அகலம் கொண்டது. உயரம் 53 மீ நயாகரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகரா பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் பாய்ந்து செல்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியைக் காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வந்துபோகிறார்கள். இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள லூயிஸ்டன் என்னும் இடத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
அமெரிக்காவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் நயாகரா.
குதிரை லாட அருவி அருகே செல்லும் படகுபயணத் தின் பெயர் மெய்ட் ஆஃப் த மிஸ்ட். இதன்மூலம் விசேஷமான நீர்கவச உடை அணிந்து கொண்டு குதிரை லாட அருவி மிக அருகே செல்ல முடியும்.
அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல் கின்றன. நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் வானவில் பாலம் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது. நயாகரா என்று அருவிக்குப் பெயர் வந்ததற்கு அது மோகாக் என்ற பழங்குடியினரின் சொல் என்றும் நயாக்கராராகே என்ற இனத்தின் பெயர் எனவும் பல்வேறுவிதமாகக் கூறுகிறார்கள். எப்படியாக இருந்தாலும் இதன் பெயர் பழங்குடியினர்கள் வைத்த ஒன்றே.
நயாகரா நீர்வீழ்ச்சி மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அங்கே காசினோ எனும சூதாட்ட விடுதி துவங்கி, பல்வேறு உணவகங்கள், கேளிக்கை விளையாட்டு கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், தங்குமிடங்கள் உள்ளன. அருவியைப் பார்த்தபடி உள்ள அறைகளுக்கு ஏக கிராக்கி. அதுவும் அருவியின் அருகாமையில் உள்ள உணவுவிடுதியில் இரவு வெளிச்சத்தில் அருவியைப் பார்த்தபடியே உணவு அருந்த பெரும் போட்டி நிலவுகிறது. நயாகரா அருவி விழும் ஒன்டாரியா பகுதி சிறுநகராக உள்ளது. அந்த ஊர் முழுவதும் அருவியில் தெறித்துவிழும் நீர், சாரலுடன் கூடிய புகையாக மாறி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. அழகாக வடிவமைக்கப்பட்ட பாதைகள், பூங்காக்கள், அருகில் நின்று பார்ப்பதற்கு ஏதுவாக அமைக் கப்பட்ட தடுப்புச் சுவர்கள். எவ்வளவு எட்டிப்பார்த்தாலும் அடியாழம் காண முடியாத அருவியின் பாய்ச்சல்.
நான் சென்றிருந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக நிக் வாலாண்டா என்ற ஒருவர் நயாகரா அருவியின் குறுக்கே கம்பியில் நடந்து காட்டி சாதனை செய்தார். அதைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நான் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தேன்.
நயாகராவின் குறுக்கே ஒற்றை மனிதன் தனியே நடந்து போகிறான், ஒரு பக்கம் சுழன்று அடிக்கும் காற்று; இன்னொரு பக்கம் பனிமூட்டம். அவன் கண்களில் பயமில்லை. ஒவ்வொரு அடியும் மெதுவாக எடுத்துவைக் கிறான். பார்வையாளர்கள் முகம் பயத்தில் உறைந்து போயிருக்கிறது. ஒரு அடி தவறாக எடுத்து வைத்தால் நீர்வீழ்ச்சிக்குப் பலியாகிவிடுவான். அவன் கம்பியில் நடந்து புகைமூட்டமாக உள்ள அருவியின் நடுப்பகுதியில் போய் நின்று ஒரு நிமிசம் கீழே குனிந்து பார்க்கிறான். என்ன ஒரு அற்புதமான தருணமது. எந்த மனிதனுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு அது. அவன் அருவியின் பிரம்மாண்டத்தை முழுமையாகக் கண்டு எழுந்தவன் போல கண்களைத் தாழ்த்திக்கொண்டு மறுபடி நடக்கத் துவங்குகிறான். அந்த ஒரு நிமிசம் வரலாற்றின் அரிய கணமாகப் பதிவாகிறது.
வெற்றிகரமாக அருவியைக் கடந்து மறுபக்கம் வந்து இறங்குகிறான். மக்கள் கைதட்டுகிறார்கள், ஆரவாரம் செய்கிறார்கள். அமெரிக்கப்போலீஸ் வந்து அவனது வருகையின் நோக்கம் குறித்து விசாரிக்கிறது. அவனது பாஸ்போர்ட்டைக் கேட்கிறது. நனைந்துபோன தனது மேலாடைக்குள் இருந்து அவன் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் காட்டுகிறான். அதில் அமெரிக்க பயண வருகை சீல் வைக்கப்படுகிறது. இதுதான் நிதர்சனம்.
நீங்கள் உயிரைக் கொடுத்து சாதனை செய்தாலும் கீழே இறங்கி பூமியில் நடக்க பாஸ்போர்ட் வேண்டும். நீங்கள் உலகமே வியந்து பார்க்க கம்பியில் நடந்து நயாகராவைக் கடந்து வந்தாலும் எதற்காக இந்தப் பயணம் என குடியுரிமை அதிகாரி அதிகாரத்துடன் விசாரணை செய்வதுதான் அமெரிக்காவின் நடைமுறை.
அந்த வெற்றி இரண்டு நாட்களுக்கு நயாகராவைப் பற்றி எங்கும் பேச்சாக இருந்தது. அதனால் நான் சென்றிருந்த நாளில் நயாகராவில் பலத்த கூட்டம். நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிருந்தது.
காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நாங்கள் அருவியை காண்பதற்காக நடக்க ஆரம்பித்தோம். சில்லிடும் காற்று, பனிப்புகை போல மிருதுவான புகைமூட்டம், நடக்க நடக்க நீண்டு செல்லும் புல்வெளி, யாரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. அருவி நம் பேச்சை ஒடுக்கிவிடுகிறது. குதிரை லாட வடிவத்தில் அருவி விழுகிறது. அதை நெருங்கி நின்று பார்க்க தடுப்புச் சுவர் அமைத்திருக்கிறார்கள், அந்த தடுப்புச் சுவரில் நின்றபடியே அருவியைப் பார்க்கிறேன். கண்கள் தனது பலவீனத்தை உணர்கின்றன. உடல் எழுச்சி கொள்கிறது. காதுகள் அருவி யின் பேரோசையை நிரப்பிக் கொள்கின்றன. இதயம் மகிழ்ச் சியால் துள்ளுகிறது.
நான் நயாகராவின் முன் நிற்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மழை பெய்யும் நாட்களில் ஓடியோடி பானைகுடங்களில், மழைத்தண்ணீர் பிடித்த சிறுவன், கோடை முற்றி கிணறுகள் வறண்டு போன காலத்தில் சைக்கிளில் தகரக்குடங்களைக் கட்டிக் கொண்டு அருகாமை ஊருக்குப் போய் தண்ணீர் இறைத்து வந்த சிறுவன், நள்ளிரவில் மழை பெய்யும்போது தண்ணீர் கொட்டுகிறது, குளி என்று வீட்டோர் துரத்திவிட தெருவில் நின்று குளித்த சிறுவன், ஆற்றையோ, நீர் நிரம்பிய குளங்களையோ கண்டறியாத ஒரு கிராமத்துவாசி நயாகராவின் முன்னால் நிற்கிறேன்.
தண்ணீர் என் முன்னால் பொங்கி வழிந்தோடுகிறது, ஒரு நிமிசம் ஒரு குடம் தண்ணீருக்காகப் பத்துமைல் கருவேலங்காட்டிற்குள் நடந்துபோன எங்கள் ஊர் பெண்கள் நினைவில் வந்து போகிறார்கள். மறுநிமிசம் அது மறைந்து எத்தனை ஆயிரமாண்டுகாலமாக இந்த அருவி இதே இடத்தில் விழுந்துகொண்டிருக்கிறது, இதைப் பார்க்கிற எத்தனையாவது மனிதன் நான் என்ற கேள்வி எழுகிறது. மறுநிமிசம் அதுவும் அழிந்து போய் இது அருவி, அதை வேடிக்கை பார்க்கும் சிறுவன் நான் என்று மனம் களிப்பு கொள்கிறது.
பின்பு, ஆஹா இதைக் காணும்போது உடன் மனைவி, பிள்ளைகள் அருகில் இல்லையே என்று ஆதங்கம் உருவானது. பின்பு அதுவும் அடங்கி ஒவ்வொரு மனிதனும் அருவியை ஒருவிதமாக உள்வாங்கிக் கொள்கிறான், ஒரு பாத்திரம் தண்ணீரை நிரப்பிக் கொள்வதைப் போல. அப்படி நான் என்னால் முடிந்த அளவு அருவியை எனக்குள் நிரப்பிக் கொள்ளப்போகிறேன். என் இதயம் இந்த அருவியை வேண்டும் மட்டும் நிரப்பிக் கொள்ளட்டும் என்று மௌனமாக ஒரு கூழாங்கல் அருவியை எதிர்கொள்வது போல அமைதியாக, முழுமையாக என்னை ஒப்படைத்துக் கொண்டு தனியே நின்று கொண்டேயிருந்தேன்.
பார்க்கப் பார்க்க அருவி பிரமிப்பை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. பார்வையாளர்கள் எல்லோரும் அப்படித் தான் உறைந்து போயிருந்தார்கள். அரைமணி நேரம் தனியே நின்று கொண்டேயிருந்தேன். பின்பு நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள், புகைப்படத்தில் மனிதர்கள் பெரியதாகி அருவி பின்புலத்தில் வெள்ளை புகைபோலாகத் தெரிந்தது. மனிதர்கள் எவ்வளவு சுயநலமானவர்கள் என்று அந்த நிமிசம் தோன்றியது.
நாங்கள் அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுமழை பெய்யத்துவங்கியது. அந்த சாரலில் நனைவது சுகமாக இருந்தது. யாரும் மழைக்கு முதுகுகாட்டி ஓடவில்லை. அப்படி அப்படியே நின்றபடி அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாரல் ஓங்கி அடித்து சிதறியது, நான் நனைந்தபடியே இன்னொரு இடத்தில் நின்றபடியே அருவியைப் பார்க்க துவங்கினேன். சாரலுடன் அருவியைக் காண்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாரல் நின்று போய் வெயிலடிக்கத் துவங்கியது. சாரலும்வெயிலும் ஒன்று சேர வானவில் ஒன்று தோன்றி அருவியின் குறுக்கே அமெரிக்கா, கனடா என தேசபேதமின்றி இரண்டின் மீது சரிந்துவிழுந்து கொண்டிருந்தது. வானவில்லைக் கண்டவுடன் மக்கள் ஆரவாரம் செய்தார்கள். மாறிமாறிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பறவைகளின் கூட்டம் ஒன்று கனடாவில் இருந்து அமெரிக்கப் பகுதியை நோக்கி அருவி மட்டத்தில் தாழப்பறந்து போனது, படகுகள் அருவியை நோக்கி சென்றவண்ணமிருந்தன.
நாங்கள் அருகாமை காபி ஷாப்பில் போய் அமர்ந்தபடியே காபி குடிக்கத் துவங்கினோம், செல்வம் பலமுறை நயாகரா வந்து போயிருக்கிறார். ஒவ்வொரு விருந்தினரும் நயாகராவைப் பற்றி என்ன சொன்னார்கள் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். நான் தனியே நடந்து போய் வருகிறேன் என்று நீண்ட சாலையில் தனியாக நடக்கத் துவங்கினேன். பரிச்சயமற்ற முகங்கள், தொலைவிற்குச் சென்று தனியாக நின்றபடியே அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே அருவிதான். ஆனால் ஒவ்வொரு கோணத்திலும் ஒரு அழகாகத் தோன்றுகிறது. அருவியைக் காணக்கிடைத்த அந்த சந்தர்ப்பத்திற்காக, அதை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்தபடியே நின்று கொண்டிருந்தேன்.
பிறகு ஒரு உணவகத்தை தேடிப்போய் சாப்பிட்டுவிட்டு இரவு வண்ணவிளக்குகள் வெளிச்சத்தில் நயாகராவைக் காண்பதற்காகக் காத்துக்கிடந்தோம். சர்க்கஸ் சர்ச்லைட்டுகள் போல நீண்டுபாயும் வண்ண விளக்குகளின் வெளிச்சம் அருவியை நோக்கிப் பாய ஆரம்பித்தது.
இது மனிதர்கள் உருவாக்கிய மாயம். இயற்கை தனது மாயத்தை எப்போதும் நிகழ்த்திக் கொண்டேதானிருக்கிறது. வண்ணவிளக்குகளும் அருவியும் ஒன்று கலந்து அந்த இடமே மாயாலோகம் போல மாறிக்கொண்டிருந்தது. மனிதர்கள் வெளிச்சத்தை அள்ளிக் குடிக்க விரும்புகிறவர்கள் போல கைகளை ஏந்தியபடியே ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். இசையும் நடனமும் துவங்கியது. பகலில் பார்த்த ஊரின் இயல்பு மாறி கொண்டாட்டமும் ஆரவாரமுமாக இரவு பொங்கியது. நயாகரா ஒரு திறந்தவெளியில் அரங்கேறும் கனவு. நயாகராவை விடிய விடிய மக்கள் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். பின்னரவில் நாங்கள் நயாகராவை விட்டுக் கிளம்பும்போது திரும்பி ஒரு முறை பார்த்துக்கொண்டேன். எவ்வளவு அற்புதமான தருணமிது. சாலையில் நீண்ட தூரம் பயணம் செய்து வந்தபோதும் மனதில் இருந்த அருவி மறையவேயில்லை. அறைக்கு வந்து உறங்கியபோதும் அருவி எனக்குள் பொங்கி வழிந்து கொண்டே தானிருந்தது.
அடுத்த நாள் ஒன்டாரியோ மியூசியத்திற்குப் போயிருந்த போது அங்கே ஒரு அரிய ஓவியத்தைக் கண்டேன். அது நயாகரா அருவி பனியாக உறைந்த நாளைப் பற்றிய ஓவியமது. அருவி அப்படியே உறைந்து பனிப்பாளமாக நின்று கொண்டிருக்கிறது, அதை சிலர் அருகில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். உலக வரலாற்றில் மறக்கமுடியாத நாள் அது. 1848ம் ஆண்டு மார்ச் 29இல் நயாகரா அருவி பனிப்படலமாக உறைந்திருக்கிறது நயாகரா ஆறு ஓடி வரும் பகுதியில் கடும் குளிர் வாட்டி எடுக்க, கூடவே பனிப் புயலும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக உறைய ஆரம்பித்த அருவி, ஒரு கட்டத்தில் முற்றிலும் பனிப் பாறைகளாக உறைந்து இறுகிப்போனது.
அதைக் கண்டு உலகமே அதிசயித்தது. ஆனால், முழுதாக ஒரு நாள் கடந்தும் பனிப்பாறை இறுகியபடியே இருக்க, Ôஇது உலக அழிவின் ஆரம்பம்’ என்று வதந்தி பரவி, மக்கள் தேவாலயங்களில் கூடி நின்று இறைவனை வேண்டத் தொடங்கினார்கள். 30 மணி நேரத்துக்குப் பிறகு பனிப் புயலின் சீற்றம் குறைய, நயாகரா உருகி மெதுமெதுவாக இயல்பாகப் பாயத் தொடங்கியிருக்கிறது.
ஓவியத்தில் உறைந்த நயாகராவைப் பார்த்துக்கொண்டிருந் தேன். அருவி அப்படியே பனிப்பாறையாக உறைந்து நிற்கிறது. அருகில் கறுப்புத் தொப்பி அணிந்த சில மனிதர்கள். அந்த ஓவியம் வரலாற்றின் மிக அரிய நாள் ஒன்றின் ஆவணக்காட்சியாக இருந்தது. கனடா ஒரு தண்ணீர் தேசம். அங்கே உலகின் மிகப்பெரிய ஏரிகள் இருக்கின்றன. தண்ணீர்தான் கனடாவை வாழவைக்கிறது. கனடாவாசிகளின் இயல்பு தண்ணீரைப் போலவே இருக்கிறது, அவர்களுக்கு இனபேதமில்லை, மதபேதமில்லை. இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் அன்பும், நேசமும் கொண்டிருக்கிறது கனடா.
நயாகராவில் நின்றபோது எனது பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து அருவியை நோக்கி வீசினேன். என் கரம் தொட முடியாத அருவியை நாணயம் தொட்டு உண ரட்டும். அருவியின் உள்ளே மனிதக்கரங்கள் தீண்ட முடியா மல் அந்த நாணயம் பயன்பாடு என்ற உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளட்டும். எனது வருகை அந்த நாணயத்தின் பெயரால் உறுதி செய்யப்படட்டும். அருவியைப் போல வாழ்க்கை எனக்கு தீரா சந்தோஷத்தை வாரி வழங்கட்டும் என நினைத்துக் கொண்டேன்.
பிரமிப்பிலிருந்து சந்தோஷத்திற்கும், சந்தோஷத்தில் இருந்து தனிமையை உணர்வதற்கும், தனிமையை உணர்வதில் இருந்து நான் தனியில்லை, இந்தப் பெரும் பிரபஞ்சத்தின் சிறுதுளி என அடையாளம் காண்பதற்கும் அருவி எனக்கு வழி காட்டியது.
வீடு வந்து சேர்ந்து நயாகராவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காணும்போது என் முகத்தில் ஏதோவொரு ஏக்கம், பரிதவிப்பு இருப்பதைக் காணமுடிந்தது. புகைப்படத்தில் பதிவாகி இருந்த அருவியில் ஓசையில்லை. ஆனால் அருவியின் ஓசை என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
இன்னொரு முறை நயாகராவைக் காண்பதற்காகவே கனடா போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே யிருந்தேன். ‘‘அடுத்த ஆண்டு கனடா வாருங்கள். மறுபடி நயாகராவைக் காண்போம்’’ என்று கனடா நண்பர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். 2014இல் மீண்டும் நயாகராவைக் காண்பதற்காக இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.
0Shares
0