நாடற்றவனின் நாட்கள்


Stefan Zweig: Farewell to Europe திரைப்படம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வேக்கின் அகதி வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig). ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர். ஹிட்லரின் நாஜி படைகளால் யூதர்கள் தேடித்தேடி கொலை செய்யப்பட்டார்கள். இந்த இன அழிப்பிலிருந்து உயிர்த்தப்ப முயன்ற எழுத்தாளர்கள். கலைஞர்கள். விஞ்ஞானிகள் பலரும் ஜெர்மனியை விட்டு வெளியேறினார்கள். அப்படி நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலைந்து திரிந்தவர் ஸ்வேக்.

தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் 1920 களில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். 1920ல் மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் ஸ்வேக். இந்தத் திருமணம் மனவேறுபாடு காரணமாக 1938ல் முறிந்தது. அதன்பிறகு உதவியாளராக இருந்த லோட்டியை திருமணம் செய்து கொண்டார்.

ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். ஹிட்லரின் யுத்த முனைப்புகள் காரணமாகப் பின்பு லண்டனிலிருந்தும் வெளியேறினார். பின்பு அங்கிருந்தும் ஐரோப்பாவெங்கும் அலைந்து தென் அமெரிக்க நாடுகளுக்குப் போய் முடிவில் பிரேசிலின் பெட்ரோபோலிஸ் என்ற ஊரில் வசிக்கத் துவங்கினார். பிரேசில் அரசும் இலக்கியவாதிகளும் அவரை மிகக் கௌரவமாக நடத்தினார்கள்.

இயற்கை எழில் சூழ்ந்த பெட்ரோபோலிஸில் வாழ்ந்த போதும் தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகமுடியவில்லையே என்ற ஏக்கம் அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. யூதப் படுகொலை கண்டித்து எழுதிய போதும் அதைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியிருந்தது. தானும் ஒரு நாள் நிச்சயம் நாஜி ராணுவத்தால் கைது செய்யப்படுவோம். விசாரணையின்றிக் கொல்லப்படுவோம் என்ற அச்சம் அவரை வாட்டியது.

எழுத்தாளன் ஒரு போதும் யுத்தத்தை விரும்பிகிறவனில்லை. சமாதானத்தையும் அன்பையுமே முதன்மைப்படுத்துகிறான் என உரை நிகழ்த்திய ஸ்வேக் நாடற்றவராக வாழ்வதன் துயரை தாங்கமுடியாமல் தீராத மனச்சோர்வுக்கு ஆளானார். முடிவில் அவரும் அவரது மனைவி லோட்டியும் பெட்ரோபோலிஸில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள். இது ஐரோப்பிய இலக்கிய உலகை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.

ஸ்வேக்கின் மரணத்தின் போது உடனிருந்து இறுதி நிகழ்வை ஒருங்கிணைத்தவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியலா மிஸ்ட்ரல். தற்போது பெட்ரோபொலிஸிலுள்ள ஸ்வேக்கின் வீடு காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஸ்வேக்கின் The Royal Game, Amok, Letter from an Unknown Woman போன்ற குறுநாவல்களும் Beware of Pity, Confusion of Feelings போன்ற நாவல்களும் உலகப்புகழ்பெற்றவை. The Royal Game, Amok, Letter from an Unknown Woman மூன்று குறுநாவல்களும் தமிழில் வெளியாகியுள்ளன. The World of Yesterday அவரது நினைவுகுறிப்புகளாகும்.. பால்சாக், ரோமன் ரோலண்ட், நீட்சே, தஸ்தாயெவ்ஸ்கி பற்றித் தனிநூல்களை எழுதியிருக்கிறார் ஸ்வேக்

ஸ்வேக் ரியோ டி ஜெனிரோவிற்கு வருகை தருவதில் படம் துவங்குகிறது. பிரேசிலின் வெளியுறவு துறை அமைச்சர் தரும் பெரிய விருந்து ஒன்றில் ஸ்வே கௌரவிக்கபடுகிறார். அந்த நிகழ்வில் அவர் கவலையுற்ற முகத்துடனே இருக்கிறார். ஜெர்மனியில் தனது நூல்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால் பிரேசில் தன் எழுத்துகளை வியந்து கொண்டாடுவதாகவும் கூறுகிறார். அத்துடன் பிரேசிலை தான் மிகவும் நேசிப்பதாகவும் அது பல்வேறு இன மக்களின் கூட்டு வாழ்வை கொண்டிருக்கிறது எனப் பாராட்டுகிறார்.

படத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் P.E.N. literary congress சார்பில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பில் ஸ்வே கலந்து கொள்கிறார்.

அந்தச் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் ஜெர்மனியில் நடப்பதை பற்றி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கிறார்கள். தன்னால் எதிர்காலம் குறித்து முன்னறிவிப்புச் செய்ய இயலாது என உறுதியான குரலில் மறுக்கிறார்.

யூத இன அழிப்பை அவர் கண்டிக்க மறுக்கிறாரா, ஹிட்லரை கண்டு பயப்படுகிறாரா என ஒருவர் நேரடியாகக் கேட்கிறார். அப்படியில்லை ‘I won’t speak against Germany. I would never speak against a country’ எனப் பதில் தருகிறார் ஸ்வேக்.

மற்ற எழுத்தாளர்களைப் போல வெளிப்படையாக அவர் ஹிட்லரை எதிர்க்க மறுக்கிறார் என ஒரு யூதப் பத்திரிக்கையாளர் கோவித்துக் கொள்கிறார். சர்வதேச எழுத்தாளர் சந்திப்பில் ஜெர்மனியை விட்டு வெளியேற்றப்பட்ட அத்தனை எழுத்தாளர்களின் பெயர்களும் வாசிக்கபடுகின்றன. அதைக் கேட்கும் ஸ்வேக்கின் முகம் கலக்கமடைகிறது. அறிவாளிகளாக அறியப்படும் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி இது போன்ற இனஅழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இந்த மாநாட்டின் நோக்கம் என மாநாட்டு நிர்வாகி கூறுகிறார்.

இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் சோபியா வாடியா, இவர் பென் இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியக் கிளையை உருவாக்கியவர். இவரது கணவர் வாடியா தியோசோபிகல் சொசைட்டியைச் சேர்ந்தவர். வாடியா ஒரு ஆன்மீகவாதி. மாநாடு ஜெர்மனியில் நடைபெற்று வரும் வன்செயல்களைக் கண்டிக்கிறது. எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து நீதிக்காகக் குரல் கொடுக்கிறார்கள்

எழுத்தாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு ஸ்வேக்கும் அவரது மனைவி லோட்டியும் அடுத்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்

அது பிரேசிலின் கரும்புத் தோட்டங்கள் நிரம்பிய பாகியா பகுதி. கரும்புத் தோட்ட தொழிலாளர்களை நேரில் காண்கிறார்கள். கரும்பு ஒன்றை வெட்டி சுவைக்கத் தருகிறான் தோட்ட தொழிலாளி. லோட்டி அதை ருசிக்கிறாள். அவளிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் எனக்கேட்கிறான் அந்த உழைப்பாளி.

தங்களுக்குக் குழந்தைகள் இல்லை என வருத்தமாகக் கூறுகிறார். கரும்பு தோட்டத்தை ஒட்டிய சிறுநகரில் அவருக்கு மேயர் வரவேற்பு கொடுக்கிறார். படத்தின் அற்புதமான காட்சியது. அந்த மேயர் பிரேசிலை உயர்த்திக் கூறும் ஸ்வேக்கைப் பாராட்டி இசை ஒன்றை இசைக்கச் செய்கிறார். அப்போது நாடற்றவர்கள் நிம்மதி இழந்தவர்கள். உங்களது சொந்த ஊருக்குப் போய்ச் சந்தோஷமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்கிறார் மேயர்.

அரசியல் காரணங்களாக அகதியாக்கபட்டவர்களின் துயரத்தை ஸ்வேக் துல்லியமாகப் பிரதிபலிக்கிறார். அடுத்து எந்த நாட்டிற்குப் போவது. எங்கே வாழ்வது எனத் தெரியாமல் அவதிப்படுகிறார். எப்படியாவது தனது விசாவை நீடிக்கச் செய்யப் போராடுகிறார்.

படத்தின் அடுத்த அத்தியாத்தில் அமெரிக்கா போய்ச் சேருகிறார். அங்கே வாழும் முதல் மனைவியைச் சந்திக்கிறார். அந்தப் பகுதி உணர்ச்சிபூர்வமானது. தங்களைக் காப்பாற்றும்படி ஸ்வேக்கை தொடர்பு கொள்ளும் யூதர்களைப் பற்றியது. அவர்களுக்குத் தன்னால் உதவமுடியாது. தன் நிலையே தத்தளிப்பில் இருக்கிறது என மரியாவிடம் சொல்கிறார். அவளோ நீ ஒரு சுயநலம் பிடித்தவன் எனத் திட்டுகிறாள். அமெரிக்கப் பதிப்பாளர்கள் ஸ்வேக் மற்றும் அவரது மனைவி தங்குவதற்கு மட்டுமே உதவி செய்கிறார்கள்.

அடுத்த அத்தியாயம் பிரேசிலின் மெட்ரோபோலிஸ் நகரில் நடக்கிறது. தனது 60வது பிறந்த நாள் அன்று ஸ்வேக் தனது பழைய நண்பரும் ஜெர்மன் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கிறார். அவர் இன்று உங்களது பிறந்த நாள் தானே எனக் கேட்கும் போது 60 வயதிற்குப் பிறகு பிறந்த நாள் என்பதெல்லாம் சுமை, எனக்கூறும் ஸ்வேக் டால்ஸ்டாயின் மேற்கோள் ஒன்றை சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இருவரும் ஒன்றாகப் பேசியபடியே நடக்கிறார்கள். அன்று மனச்சோர்வின் உச்சநிலையில் ஸ்வேக் நடந்து கொள்கிறார்.

கடைசிப்பகுதியில் ஒரு வீட்டில் ஸ்வேக் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கிடக்கிறார்கள். கண்ணாடியில் அவர்கள் உடல் தெரிகிறது. அண்டைவீட்டாரும் நண்பர்களும் அந்த உடலைக் காண கூடுகிறார்கள். ஸ்வேக்கின் கடைசிக் கடிதம் வாசிக்கபடுகிறது. “I send greetings to all of my friends: May they live to see the dawn after this long night. I, who am most impatient, go before them. என ஸ்வேக் அதில் எழுதியிருக்கிறார். யூத இன அழிப்பின் பயம் ஸ்வேக்கை தற்கொலை செய்து கொள்ளச் செய்தது.

தனது கதைகளில் காதலைக் கொண்டாடியவர் ஸ்வேக். அன்பையும் நம்பிக்கையையும் அழுத்தமாகப் பதிவு செய்த எழுத்தாளன் வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் அவநம்பிக்கையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியானதே,

Journey into the past என்ற அவரது நூல் யுத்தநெருக்கடியில் காதல் கொள்ளும் இருவரைப் பற்றியது. யுத்தம் முடிந்த பிறகு ஒன்று சேர்ந்தால் கூட மீண்டும் பழைய வாழ்வு. பழைய இன்பங்கள் கிடைப்பபதில்லை என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்தும் கதையிது.

வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்வேக் , உடற்தகுதியில்லை என ராணுவ சேவை மறுக்கபட்டவர். ரோடின். ரில்கே என முக்கியக் கலைஞர்கள் பலரையும் தேடிச் சென்று பார்த்து நட்பை உருவாக்கிக் கொண்டவர். கவிஞராகவே தனது இலக்கிய வாழ்க்கையைத் துவக்கினார். 1920களில் அவரது நூல்களுக்கு மிகச்சிறந்த வரவேற்பிருந்தது.

இப்படத்தைக் காணும் போது புலம் பெயர்ந்த ஈழ தமிழ் எழுத்தாளர்களும் அவர்களின் துயர்மிகு வாழ்வுமே நினைவில் வந்து போகிறது.

ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் யூதனாக இருப்பது அபாயம், எந்நேரமும் கொல்லப்படக்கூடும் என்ற பதைபதைப்பில் வாழ்வது கொடுமையானது. அதை முழுமையாக உணர்ந்திருக்கிறார் ஸ்வேக். இப்படம் அவரது வாழ்வின் சில அத்தியாயங்களை மட்டுமே முன்வைக்கிறது. ஆனால் அதன் வழியே நாம் ஸ்வேக்கின் தவிப்பை, துயரை ஆழமாகப் புரிந்து கொள்கிறோம்.

ஸ்வேக் 1909ல் இந்தியா வந்திருக்கிறார். இந்தியா இலங்கை பர்மா நாடுகளில் ஐந்து மாதப்பயணம் மேற்கொண்டார். நாடு திரும்பிய பிறகு இந்தியாவில் காணப்படும் வேறுபாடுகள். வறுமை குறித்துக் கவலையோடு எழுதியிருக்கிறார்.

1909ல் மதன் லால் திங்ரா லண்டனில் வைத்து கர்சன் வைலியை படுகொலை செய்த சம்பவம் குறித்து இங்கிலாந்திற்கு எச்சரிக்கை விடுகிறது இந்தியா என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார் ஸ்வேக். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதற்பலி கர்சான் வைலியுடையது. திங்ராவிற்கு அப்போது வயது 22. வங்கபிரிவினைக்கு எதிராகத் திங்ரா இப்படுகொலையைச் செய்தான்.

வைலியை கொன்றுவிட்டுத் திங்ரா தப்பி ஓடவில்லை. துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தவாரே அப்படியே நின்றான். போலீஸ் அதிகாரிகள் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஸ்வேக் இது நாட்டுபற்றின் அடையாளம் எனக்கூறுகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் அவருக்குப் பரிசாக ஒரு நாய்குட்டி ஒன்றை அளிக்கிறார் நண்பர். ஸ்வேக் அந்த நாய்க்குட்டியை கொஞ்சி, தான் பேசுவது புரிகிறதா எனக்கேட்கிறார். நாயின் தலையோடு தன் தலையை முட்டிமுட்டி விளையாடுகிறார். அது ஒன்று தான் அவர் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சி.

படத்தின் இறுதிகாட்சியில் இறந்த உடல்களின் அருகே அந்த நாய் தனியே குரைத்துக் கொண்டிருக்கிறது. யாரோ அதை இழுத்துக் கொண்டு போகிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் புகழும் பெருமைகளும் உலகிற்குத் தெரிகின்றன. ஆனால் அவன் சந்தித்த அவமானங்கள். வலிகள், நிராகரிப்பு உலகிற்குப் புரிவதில்லை. ஸ்வேக்கை சந்திக்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். ஸ்வேக் அவர்களின் பாராட்டை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அவரது மனதில் நாட்டை இழந்த மனிதனுக்கு இதுவெல்லாம் அதிகம் என்றே தோன்றுகிறது.

தனது சமகாலப் படைப்பாளிகளைப் போல ஹிட்லருக்கு எதிராக ஸ்வே குரலை உயர்த்தி முழக்கமிடவில்லை. தெருவில் இறங்கி போராடவில்லை. இதனால் மற்றவர்களால் கோழை என விமர்சிக்கபட்டார். தான் கோழையில்லை. வெறுப்பைக் கக்கும் வார்த்தைகளைத் தன்னால் ஒரு போதும் பயன்படுத்த முடியாது. எனது மௌனத்தை இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை. என்னைத் தனிமைப்படுத்திப் பந்தாடுகிறது என வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்

இன்று ஸ்வேக் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார். அவரது காலத்தில் போராளிகளாக இருந்த படைப்பாளிகளை விடவும் இவரை அதிகம் பேர் படிக்கிறார்கள். அவரது மௌனத்தைப் புரிந்து கொண்டவர்களாகப் பாராட்டுகிறார்கள்.

காலம் எழுத்தாளனை புரிந்து கொள்கிறது. அவனுக்கு உரிய இடத்தையும் அங்கீகாரத்தையும் வழங்குகிறது என்பதற்கு உதாரணமே ஸ்வேக்கின் வாழ்க்கை. இப்படத்தை உருவாக்கியிருப்பவர் பெண் இயக்குனர் Maria Schrader.

0Shares
0