நானும் எனது இலக்கியத் தேடலும்.

(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.)

எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது.

என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் அறிமுகமானது.

“மல்லாங்கிணர்’ எனும் எனது கிராமத்தின் நூலகத்திலிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தான் நான் உருவானேன். அதன் பின்பு புத்தகம் வாங்குவதற்காகப் பழைய புத்தகக் கடைகளைத் தேடி ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தேன். எனது சேமிப்பில் உள்ள அரிய நூல்கள் யாவும் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியவையே. புத்தகங்கள் தான் என்னை எழுத்தாளனாக உருவாக்கின.

கால இயந்திரத்தில் ஏறி வேறுவேறு காலங்களுக்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையே புத்தகங்களும் தருகின்றன. “பொன்னியின் செல்வனை’ப் புரட்டியதும் சோழர் காலத்திற்குப் போய்விடுகிறீர்கள். “போரும் அமைதியும்’ வாசிக்கையில் ரஷ்யப்பனியில் நனைய ஆரம்பிக்கிறீர்கள். சங்க கவிதைகளை வாசிக்கையில் நாமும் சங்க காலத்திற்கே போய்விடுகிறோம். மனிதனின் வாழ்க்கை கால அளவில் மிகச்சிறியது. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கைகளை, பல்லாயிரம் அனுபவங்களைப் புத்தகம் வழியே அனுபவித்துவிட முடிகிறது. ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் துணையிருப்பது போலச் சிறந்த புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.

சிறிய கிராமங்களில், சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்குக் கடைகள் கிடையாது. பெரிய நகரங்களைத் தேடிப்போய்ப் புத்தகம் வாங்க வேண்டும். இன்றும் அதே நிலை தான் உள்ளது.

ஐந்தாயிரம் பேர், பத்தாயிரம் பேர் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடப் புத்தகக் கடை கிடையாது. தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் ஒன்றில் கூடப் புத்தகக் கடை கிடையாது. அண்ணாபல்கலைக்கழகமாவது இதை முன்னெடுக்கலாம்.

எனது கல்லூரி நாட்களில் புத்தகம் வாங்குவதற்காகவே பயணம் செய்யத் துவங்கினேன். கல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் என்று சென்று வருவேன். லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸிற்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியைப் படித்த உடனே அவரது புத்தகம் வாங்க வேண்டும் என்று தேடினேன். தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஆகவே அவரது புத்தகம் வாங்குவதற்காகவே டெல்லிக்குப் பயணம் செய்தேன். அங்கேயும் உடனே கிடைக்கவில்லை. காத்திருந்து புத்தகம் வாங்கி வந்து படித்தேன்.

இன்று அந்தக் காத்திருப்பு, நீண்ட பயணம் யாவும் தேவையற்றதாகிவிட்டது. வீட்டிலிருந்தபடியே எந்தப் புத்தகத்தையும் ஆன்லைன் விற்பனையகம் மூலம் பெறமுடிகிறது. தமிழ்நாட்டில் பெரிய, சிறிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதனால் புத்தகங்களைத் தேடும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்து விடப்பட்டிருக்கிறது.

பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படித்தேன். இன்றும் கிராபிக் நாவல்கள். மாங்கா போன்ற வரைகலை புத்தகங்களை விரும்பிப் படிக்கிறேன்.

ரஷ்ய இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு எனக்குண்டு. அவற்றை அறிமுகம் செய்து நிறைய எழுதியிருக்கிறேன். பேசி யிருக்கிறேன். அது போலவே சர்வதேச இலக்கியங்களை அறிமுகப்படுத்தி இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்த ஆண்டு அப்படி ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய உரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்த கையோடு அந்த நூல்களையும் வாங்கி வாசிக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இதுவரை முப்பதாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்திருக்கிறேன். புத்தகங்களை வைத்துக் கொள்ளப் போதுமான இடம் தான் இல்லை. தற்போது எனது நூலகத்தை மின்னூல்களாக மாற்றிப் பாதுகாத்து வருகிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் வருகிறேன். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போல எனது பண்டிகை இந்தப் புத்தகக் கண்காட்சி நாட்களே. வாசகர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும் விரும்பிய புத்தகங்களைத் தேடி வாங்குவதும் இனிமையான அனுபவம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். காரில் உள்ளே நுழைய இயலவில்லை. எங்கும் ஜனத்திரள். இவ்வளவு வாசகர்கள் ஆசையாகப் புத்தகம் வாங்கச் செல்கிறார்கள் என்பதும் வாங்கிய புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் தூக்கி வருகிறார்கள் என்பதும் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

கரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலை நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட்டது. மக்கள் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இன்று அதிலிருந்து மீண்டுவர மக்கள் புதிய நம்பிக்கையை, உத்வேகத்தைப் பெறப் புத்தகங்களை நாடுகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் டி.ஜி. டெண்டுல்கரின் எட்டு தொகுதிகளை இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். “பிறக்கும் தோறும் கவிதை’ என்ற கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கட்டுரைத் தொகுப்பு. நேமிசந்த்ரா எழுதி கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற “யாத் வஷேம்’ என்ற நாவல், கவிஞர் ஞானக்கூத்தன் மொத்த கவிதைகளின் தொகுப்பு, நபகோவ் இன் அமெரிக்கா, மோகன் ராகேஷ் சிறுகதைகள் போன்றவற்றை வாங்கினேன்.

ரீடர் என்ற வார்த்தை பொதுவாக வாசகரைக் குறிப்பதாக மட்டுமே நம்பியிருந்தேன். ஆனால் பார்வையற்றவர்களுடன் பழகிய பிறகு தான் அது தனக்காகப் புத்தகம் வாசிக்கும் நபரைக் குறிக்கும் சொல் என்பதை அறிந்து கொண்டேன். இந்தக் கண்காட்சியிலும் பார்வையற்றவர்கள் துணையோடு வருகை தந்து விருப்பமான புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள்.

அவர்களின் ஒரே வேண்டுகோள். பார்வையற்றவர்களுக்கான பிரையில் வெளியீடுகள். ஆடியோ புத்தகங்கள் கொண்ட தனி அரங்கு ஒன்றைக் கண்காட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். வருங்காலத்திலாவது அந்தக் கனவு நனவாக வேண்டும்.

நன்றி :

தினமணி நாளிதழ்

0Shares
0