அநங்கம் சிற்றிதழ்
நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.
இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.
பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.
கே. பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமாக இளைஞர். வாசிப்பதிலும் விவாதிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரோடு நவீன் மற்றும் மஹாத்மன் இருவரும் ஆலோசனை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாக யிருந்தது நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.
அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.
ananggam@hotmailcom. Tel. 016 4806241
**
வாழும் சுவடுகள் இரண்டாம் தொகுதி – டாக்டர் என். எஸ். நடேசன்
டாக்டர் நடேசன் ஆஸ்திரேலியாவில் கடந்த இருபதாண்டுகாலமாக கால்நடை மருத்துவராக பணியாற்றுகின்றார். சிறந்த எழுத்தாளர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர். இவரது படைப்புகளில் வெளிப்படும் தனித்துவமான கதை சொல்லும் முறையும் எளிமையும் உளவியல் தன்மையும் என்னை பெரிதும் வசீகரித்துள்ளது. இவரது நாவல் ஒன்றிற்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்.
சமீபமாக இவரது வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுதியை வாசித்தேன். இந்த நூலில் நடேசன் தனது கால்நடை மருத்துவ அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வளர்ப்பு பிராணிகள் குறித்து தமிழில் யாரும் அதிகமாக பதிவு செய்ததில்லை, ஒன்றிரண்டு வளர்ப்பு பிராணிகள் பற்றிய புத்தகங்கள் உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கிய பதிவுகள் மிக குறைவே.
நான் வாசித்த வரை ராபர்ட் டி ருவாக்கின் தாத்தாவும் பேரனும் என்ற அமெரிக்க நாவலும், ஜாக் லண்டனின் கானகத்தின் குரலும் நாய்களை பற்றிய நுட்பமான பதிவுகள் கொண்டவை. பூனையை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட ஜப்பானிய நாவல் I Am a Cat. இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki).
நடேசன் காட்டும் உலகம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாய்கள் பூனைகள் மற்றும் நம்மை சுற்றியுள்ள மிருகங்கள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன. அதற்கான நோய்மையை எப்படி நாம் அறியாமல் புறக்கணிக்கிறோம் என்பதை நடேசன் பதிவுசெய்திருக்கிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் ஈயத்தொழில் சாலை பகுதியில் வாழும் நாய்கள் எலும்புகளை மண்ணில் புரட்டி தின்னும் போது அதன் குடலில் ஈயக்கழிவுகள் சேர்ந்து அவதிப்படுவதை பற்றியும், தெருவில் அடிபட்டு குடல் சரிந்து கிடந்த நாயை அதன் உரிமையாளரை நெருங்கி போக மனதில்லாமல் நின்ற காட்சியையும் பற்றிய அவரது பதிவுகள் மிகுந்த அக்கறையானவை.
ஆஸ்திரேலியாவின் அணில் போன்ற மிருகம் பொசம். அது வீடுகளின் மீதேறி அலைந்து திரியக்கூடியது. அப்படியொரு பொசம் தன் வீட்டிற்குள் நுழைந்த போது அதை எப்படி காப்பது என்ற அவரது போராட்டமும் அந்த பொசத்தை தன் வீட்டின் மரத்தில் வைத்த போது ஆதிவாசி ஒருவனை துரத்தியதற்கு சமமான மனவலியை உணர்வதும் அற்புதமானது.
பூனை, நாய்களும் சக்கரை நோயால் அவதிப்படுவதையும் சக்கரை நோய் முற்றிய நாய்களை கருணை கொலை செய்வதையும் பற்றிய குறிப்பும் திகைப்பூட்டும் தகவல்கள்.
ஆஸ்திரேலியாவில் சாலையில் அடிபட்டு இறக்கும் பூனை நாய்களை அடக்கம் செய்ய வேண்டிய செலவு யார் அடித்தார்களோ அவர்களே சாரும் என்பது போன்ற விபரங்களை காணும் நமது ஊர்களில் சாலையில் அடிபடும் மனிதர்களை கவனிக்கவே நமக்கு அக்கறையில்லையே என்ற ஆதங்கம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை.
நடேசன் உலகை மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கான இடம் என்று பார்க்கவில்லை மாறாக குற்றஉணர்ச்சியோடு மிருகங்கள் பறவைகள் மற்றும் எளிய உயிர்களை மனிதர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த அளவு வதைக்கிறார்கள். கொலை செய்கிறார்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை கவனம் கொடுத்து எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தின் எளிமையும் ஈர்ப்பும் குறிப்பிடப்பட வேண்டியது. அவ்வகையில் வாசிக்கபட வேண்டிய முக்கிய நூலாகும்.
வெளியீடு. மித்ரா ஆர்ட்ஸ். 32 ஆற்காடு சாலை சென்னை .24.
**
குற்றமும் தண்டனையும் – நாவல்
தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை நான், சி.மோகன், சா. தேவதாஸ் மூவரும் இணைந்து மொழியாக்கம் செய்வது என்று ஒரு விளம்பரத்தை பல வருடங்களுக்கு முன்பு கல்குதிரை வெளியிட்டது. நாங்களும் ஆர்வத்துடன் அந்தப் பணியைத் துவங்கினோம். அப்போது கி.அ. சச்சிதானந்தம் அந்த நாவலை முழுமையாக மொழி பெயர்த்து வைத்திருக்கிறார் என்ற தகவலை அறிந்தவுடன் எங்கள் மொழியாக்கபணி சற்றே சோர்வடைந்தது. நான் அறிந்தவரை சச்சிதானந்தம் மொழிபெயர்த்த கரமசோவ் சகோதரர்களின் சில பகுதிகள் இணைய இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு அப்படியே நின்று போனது. ஏன் இன்னும் அது வெளிவர வில்லை என்று தெரியவில்லை.
கிருஷ்ணையா மொழியாக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை என் கல்லூரி நாட்களில் கூடவே வைத்திருந்து பலமுறை வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்கியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், சூதாடி போன்ற கதைகள் அதில் உள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க துவங்கும் எவரும் இந்த புத்தகத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன்.
குற்றமும் தண்டனை நாவலின் சுருக்கம் 1950களில் தமிழில் வெளியாகியிருக்கிறது. இந்த நாவலின் காமிக்ஸ் புத்தகம் கூட ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. அதை நான் வைத்திருக்கிறேன். நான்கு வேறுபட்ட இயக்குனர்களால் திரைப்படமாக்கபட்டிருக்கிறது
ஆங்கிலத்தில் கான்ஸ்டாட் கார்நாட் உள்ளிட்ட இரண்டு மூன்று பிரபலமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. தற்போது பேராசிரியர் சுசிலா அதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். நூலை சிறப்பாக பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
பாரதி புக் ஹவுசை நடத்தும் துரைப்பாண்டியன் நூல் பதிப்பதிலும் விற்பனையும் பல வருடம் அனுபவம் பெற்றவர். முன்னதாக டால்ஸ்டாயின் அன்னாகரீனனாவை தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள். அத்தோடு டால்ஸ்டாயின் சிறுகதை தொகுதிகள் மூன்றை பதிப்பித்து உள்ளார். மதுரை பேருந்து நிலையத்தின் உள்ளே இவரது புத்தககடை உள்ளது.
எம்.ஏ. சுசிலா எனக்கு பேராசிரியராக அறிமுகமானார். பாத்திமா கல்லூரியின் தமிழ் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மதுரையில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் அவரை சந்தித்தேன். புதுமைபித்தன் துவங்கி சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், கோணங்கி, நான் உள்ளிட்ட அத்தனை எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறார். அதைப் பற்றி பெரியதாக காட்டிக் கொள்ளாதவர்.
தமிழ் பயிலும் மாணவிகளிடம் நவீன தமிழ் இலக்கியத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். அதற்காக வகுப்பறைகளில் நவீன தமிழ் இலக்கியத்தையும் புதிய விமர்சன கோட்பாடுகளையும், போர்ஹே, மார்க்வெஸ், காப்கா, காம்யூ என்று உலக இலக்கியங்களையும் அறிமுகம் செய்த பெருமை இவருக்குண்டு.
நான் ஒருமுறை இவர்கள் கல்லூரியில் உரையாற்றியிருக்கிறேன். மாணவிகள் போர்ஹேயின் படைப்புலகம் பற்றி நிறைய கேள்விகேட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது.
குற்றமும் தண்டனை நாவலை சுசிலா சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவலை தமிழ்படுத்துவதில் உள்ள பெரிய சிக்கல் உரையாடல்கள் மிக எளிமையாக துவங்கி அப்படியே தத்துவார்த்த தளத்திற்கு உயர்ந்துவிடும். நுட்பமான விவரணைகள். ருஷ்ய கலாச்சாரம் சார்ந்த உணவுவகைள் மற்றும் அன்றாட குறிப்புகள் , அது போலவே மனநிலையின் தீவிரத்தை வெளிப்படுத்துவற்காக சிறிய வாசகங்கள், திரும்ப திரும்ப வரும் சில சொற்கள் நாவலில் இடம் பெற்றுள்ளது. பலநேரங்களில் கதைசொல்பவனின் குரல் பதற்றத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும். சுசிலா அதை மிக சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
நாவல் வெளியாகி நூறு வருடங்களை கடந்துவிட்ட போதும் வாசிக்கையில் இன்று காலை எழுதப்பட்டது போன்ற ஈரமும் நெருக்கமும் இருப்பதே நாவலின் சிறப்பம்சம். நாவல் வாசிப்பிற்கு தடையில்லாமல் சுசிலா கவனம் எடுத்து செய்துள்ள மொழியாக்கம் நன்றாகவே வந்திருக்கிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
வெளியிடு. பாரதி புக் ஹவுஸ். டி.28 மாநகராட்சி வணிக வளாகம். பெரியார் பேருந்து நிலையம். மதுரை. 1 பக்கங்கள் 562 விலை. 500.
**
தமிழ்க்கப்பல் – முனைவர் கு. அரசேந்திரன்
தமிழ்துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்து பெரிதும் ஒரு ஏளனமே தீவிர இலக்கியவாதிகள் பலரிடமும் காணமுடிகிறது. இதற்கு நேர் எதிராக நான் அறிந்த பல தமிழ் பேராசிரியர்கள் தீவிரமான தளங்களில் தமிழ் மரபிலக்கியம், இலக்கணம் மற்றும் சங்க கவிதைகள், காப்பியங்கள் ,நவீன இலக்கியம் என்று வகுப்பறைகளில், விவாத அரங்கங்களில் தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களின் சில வெளியிடுகளை வாசிக்கும் போது எந்த அளவு நுட்பமான வாசிப்பு திறன் கொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியம் கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் நான் வாசித்த மொழி ஆய்வு புத்தகம் இது. 21 கட்டுரைகள் கொண்ட இந்த தொகுப்பில் தமிழின் தொன்மையை விளக்கும் பதினைந்து கட்டுரைகள் காணப்படுகின்றன.
கப்பல் என்ற ஒரு சொல்லின் பின்னால் சென்று அதன் வேர் சொல்லை ஆராய்வதன் வழியே தமிழின் தொன்மையான நினைவுகளை மொழியின் வளர்ச்சியை அடையாளம் காண முயற்சிக்கும் அரசேந்திரன் அதை சிறப்பாக விளக்கி கொண்டு செல்கிறார்
கப்பல் என்ற சொல்லை கப்பு + அல் = கப்பல் என்று பிரிப்பது பொருத்தமே. தொல்பழந்தமிழில் கப்பு ன்ற சொல் வழங்கபடவில்லை. ஆனால் கப்பு எனும் அடிச்சொல்லிற்கு பிளவு என்று பொருள் கம்பர் பாடலில் உள்ளது. பள்ளமான உட்குழி கொண்ட கலத்தை கப்பரை என்று சொல்கிறார்கள்.
இந்த கப்பு என்ற சொல் மேலைமொழிகளில் புகுந்து பள்ளம் குழி துளை ஆகிய பொருளில் விழங்குகின்றது. உதாரணத்திற்கு லத்தீன் மொழியில் கப்பா என்ற நீர்கலம் கிரிக் மொழியில் கப்பனோ என்றால் பெட்டி அல்லது நீர்தொட்டி பாஸ்கில் கபா என்றால் மரக்கலம் கபால் என்றால் துணிதுவைக்கும் கலம். ஜெர்மன் மொழியில் கோபர் என்றால் பெட்டி பெட்டகம், ஆங்கிலத்தில் கப் என்றால் குவளை என்று இந்த வேர்சொல்லோடு தொடர்பு உடைய பிற சொற்களை ஆராய்ந்து தமிழின் தொன்மையை விளக்குகிறார் அரசேந்திரன். இந்த நூலில் வரலாற்று பேராசிரியர் ந.சி. கந்தையா பற்றிய சிறப்பான கட்டுரை இடம்பெற்றுள்ளது.
புத்தகம் கிடைக்கும் இடம்
காவிரி பதிப்பம் 6 பெருஞ்சித்திரனார் தெரு சிட்லப்பாக்கம் சென்னை 64 விலை 150
**