நான்கு ஜன்னல்கள்.

இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது.

சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர்.

வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் மற்றும் சத்யஜித்ரேயின் இரண்டு கதைகளைத் தேர்வு செய்து ஒரு தொகுப்பாக உருவாக்கியுள்ளார்

சிறந்த சிறுகதைகளை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது. முதற்கதை ஒரு எழுத்தாளரைப் பற்றியது. அவர் எழுதி வரும் தொடர்கதையில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் நோயுற்று மருத்துவமனையிலிருக்கிறாள். அவள் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று வாசகர்கள் விரும்புகிறார்கள். எழுத்தாளரோ அவளைக் கொன்று கதாநாயகன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற துயர முடிவை எழுத விரும்புகிறார். எதிர்பாராத விதமாக ஒரு வாசகர். ஒரு டாக்டர் ஒரு நடிகை அந்த எழுத்தாளரைச் சந்தித்து அந்தப் பெண் கதாபாத்திரம் நலம்பெற்று வீடு திரும்புவதாக எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள். எழுத்தாளர் என்ன செய்கிறார் என்பதே மீதக்கதை.

இரண்டாவது கதை இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் இரண்டு நண்பர்களைப் பற்றியது. இதிலும் கதையைச் சொல்பவர் ஒரு எழுத்தாளரே. பள்ளி வயதில் இரண்டு நண்பர்கள் இருபத்தைந்து வருஷம் கழித்து நாம் எங்கிருந்தாலும் ஒரு சினிமா தியேட்டர் முன்பு சந்திப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் அந்தச் சினிமா தியேட்டர் முன்பாக எழுத்தாளர் காத்துக்கிடக்கிறார். வாக்குறுதி தந்த நண்பன் வரவில்லை. காத்திருந்து பொறுமை இழந்த நேரம் அவருக்கு ஒருவர் கடிதம் கொண்டு வந்து தருகிறார். அதில் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை. இன்னொரு நாள் அவசியம் வந்து பார்க்கிறேன் என நண்பன் எழுதியிருக்கிறான். அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை நண்பனுக்காகக் காத்திருக்கிறார் எழுத்தாளர். நண்பனும் வருகிறான். இருவரும் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். விடைபெறும் தருணத்தில் எழுத்தாளன் வியப்பூட்டும் உண்மையை அறிந்து கொள்கிறான். படத்தின் கிளைமாக்ஸ் ஆச்சரியமானது.

மூன்றாவது கதை பாதி வழியில் கார் ரிப்பேராகி நின்றுவிடவே என்ன செய்வது எனத் தெரியாமல் காத்திருக்கும் ஒரு பாடகரின் கதை. கடந்தகாலத் தவறு நிகழ்காலத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள். நீண்டுசெல்லும் பாதையும் வயல்வெளியும் காத்திருப்பின் வெறுமையும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது

நான்காவது கதை திருமணம் செய்து கொள்ளப்போகிறவனைச் சந்தித்துத் தனிமையில் உரையாடும் ஒரு பெண்ணின் கதை. பி.சி.பரூவா படப்பாணியில் அதே போன்ற பிரேம்களுடன் அந்தக் கால ஒப்பனைகளுடன் உருவாக்கப்பட்ட படம்.

கதையின் முடிவு எப்போதும் சுபமாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மை வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஒரு கட்டுரையைச் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பகிர்ந்திருந்தேன். தற்செயலாக நேற்று இந்தப்படத்தைப் பார்த்தபோது இதே விஷயத்தைப் பரசுராம் ஒரு சிறுகதையாக எழுதியிருப்பது ஆச்சரியமாக இருந்தது. கதாபாத்திரங்களின் விதி என்பது எழுத்தாளரால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்துபோனதாக ஆர்தர் கோனான் டாயில் எழுதியதை வாசகர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே அவர் மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸை உயிர்பிக்க வேண்டியதாகியது.

இது போலவே பள்ளி வயதில் நண்பன் ஊர்மாறிப்போகும் போது இனி எப்போது சந்திப்போம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியிருப்போம். சத்தியம் செய்திருப்போம். இரண்டாவது கதையில் வரும் பையன்களும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். பள்ளி வயதின் சத்தியங்கள் பெரியவர்கள் ஆனதும் மறந்துவிடுகின்றன. அல்லது கடந்து போகின்றன. ஆனால் இந்தக் கதையில் அந்த நண்பர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். எழுத்தாளரின் மனைவி கணவரின் பால்ய ஸ்நேகிதனைக் காண ஆவலாக இருக்கிறார். எழுத்தாளன் பழைய சினிமா தியேட்டர் முன்பாகக் காத்து கிடக்கையில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் பால்ய நண்பனாக இருப்பானோ என ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறான். நாமும் அப்படியே உணருகிறோம்.

மூன்றாவது கதையில் வரும் அந்த மண்சாலையும் எப்போதாவது கடந்து செல்லும் வாகனமும் முடிவற்ற வயல்வெளியும் வானும் மரங்களும் மயக்கமூட்டுவதாக உள்ளன. கனவுப்பிரதேசம் ஒன்றினுள் காத்துகிடப்பது போலவே தோன்றுகிறது.

நான்கு கதைகளும் கடந்தகாலத்தின் மீதே காலூன்றி நிற்கின்றன. நினைவுகளால் வழிநடத்தப்படுகின்றன. துண்டிக்கபட்ட சிறிய கயிறு ஒன்றினைப் போன்றதே சிறுகதைகள். கதைக்கு முன்பும் பின்பும் நிறைய இருக்ககூடும். அதை வாசகனே தன் கற்பனையால் நிரப்பிக் கொள்கிறான். இந்த கதைகளிலும் என்னால் அப்படி முன்பின்னாக யோசிக்க முடிந்தது.

வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன என்ற வகையில் நான்கு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு சிறப்பானதாகவுள்ளது.

0Shares
0