நாயர் சான்எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார்

நான் உடனே நாயர் சானின் வாழ்க்கையைப் படமாக்கலாமே என்றேன். அவர் திகைத்தபடியே யார் நாயர் சான் என்று கேட்டார்.

அவர் ஒரு மலையாளி. சுதந்திரப் போராட்ட வீரர் கேள்விபட்டதில்லையா என்றேன். தான் அப்படியொரு பேரைக்கூட கேட்டதில்லை என்றார்.

நாயர் சான் மட்டுமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவிற்கு வெளியில் இருந்து போராடியவர்களைப் பற்றி அதிகம் நாம் கவனம் கொண்டதில்லை. குறிப்பாக இந்திய தேசிய ராணுவம் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து இன்று வரை முழுமையான தகவல்கள் நமக்கு கிடைப்பதில்லை. இன்றும் மதுரை மாவட்டத்தில் ஐஎன்ஏ வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நேதாஜி குறித்து கதை கதையாகச் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தில் அவை அதிகம் பதிவு செய்யப்படவில்லை.

சில வருடங்களுக்கு முன்பாக சொர்ணவேல் இயக்கிய ஐஎன்ஏ படத்தில் நேதாஜியின் அந்தரங்க உதவியாளர் பாஸ்கரனின் பேட்டியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாஸ்கரன் ஒரு தமிழர். நேதாஜி குறித்து நெருக்கமான, உண்மையான தகவல்கள் அறிந்தவர். ஆனால் அந்தத் தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. படத்தில் அவர் சொன்னது மிகக் குறைவு. அதற்குள் பாஸ்கரன் மறைந்து விட்டார். சரித்திர உண்மைகள் அவரோடு புதையுண்டு போய்விட்டன

நாயர் சான் எனப்படும் அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் பூர்வீகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பாவின் ஊர் கும்பகோணம். அப்பா அந்தக் காலத்திலே பொறியியல் படித்தவர் என்பதால் அவரை திருவிதாங்கூர் மன்னர் அழைத்து திருவனந்தபுரத்தில் உள்ள பல முக்கிய கட்டிடப்பணிகளை மேற்பார்வையிடும்படியாக கேட்டுக் கொண்டார்.

அதனால் கேரளாவிற்கு குடி வந்து அங்கே நாயர் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் . நாயர் சானின் அப்பா தன்னுடைய பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி கற்க வைத்தார். ஒரு பையனைப் படிப்பிற்காக ஐப்பானில் உள்ள பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தார். மீன்வளத்துறை தொடர்பாக ஜப்பானில் படிக்கச் சென்ற முதல் தென்னிந்தியர் அவரே.

நாயர் சான் சிறுவயதிலே வெள்ளைக்காரர்களின் கெடுபிடியான சட்டங்களை எதிர்த்து ஊர்வலம் நடத்துவது, போராடுவது என்று களத்தில் குதித்தார். அதனால் அவரைக் கைது செய்ய வெள்ளைக்காரர்கள் துரத்தினார்கள். அவரைக் காப்பாற்ற முடிவு செய்து கப்பலில் இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து ஜப்பான் அனுப்பி வைத்தார்கள்.

ஜப்பான் பல்கலைகழகத்தில் படித்தபடியே அங்கிருந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடத் துவங்கினார். அந்த நாளில் டோக்கியோவில் இருந்த ராஷ் பிகாரி கோஸின் நட்பு கிடைத்தது. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் இந்த ராஷ் பிகாரி கோஸ். அதைத் தலைமை ஏற்றவர் தான் நேதாஜி.

அவர்களுக்கான பொருளதார உதவி மற்றும் ஜப்பானிய அரசோடு பேச்சு வார்த்தை நடத்துவது போன்றவற்றை நாயர்சான் மேற்கொண்டார். அதனால் அவரைக் கைது செய்ய பிரிட்டீஷ் உளவுப்படை ஜப்பானிலே அலைந்து கொண்டிருந்தது. அவர்கள் கண்ணில் இருந்து தப்பி புத்த பிட்கு போல வேஷம் அணிந்து நடந்தே சீனாவிற்குள் சென்று அங்கே மன்னரைச் சந்தித்து உதவி கேட்டார் நாயர் சான். அங்கிருந்து சில மாதங்களுக்குப் பிறகு ஜப்பான் திரும்பி வந்து ஜப்பானிய மன்னரைச் சந்தித்து தனது சீனப்பயணம் பற்றிச் சொல்லி புதிய நட்புறவுப் பாலத்தை உருவாக்கினார்.

ஜப்பானியப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராணுவ சேவையில் சில காலம் பணியாற்றினார். கம்பளி வியாபாரம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இந்தியாவிற்கு ஆயுதம் கடத்துவதற்கான மலைப்பாதையை கண்டறிய தனியே சீனா திபெத் வழியில் இந்தியா நோக்கி பயணம் செய்தார். வழிப்பறி கொள்ளையில் மாட்டி மொட்டையடிக்கபட்டு சித்ரவதைக்கு உள்ளானார்.

இரண்டாம் உலகயுத்தத்தின் போது விமானப்படையில் சேவை செய்தார். ஹிரோஷிமா குண்டு வீச்சில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிப் பணியாற்றினார். ஆனால் ஜப்பான் இந்திய தேசிய ராணுவத்திற்கு துரோகம் செய்துவிட்டதை உணர்ந்து மனக்கசப்பு கொண்டு அரசின் தொடர்பை துண்டித்துக் கொண்டார். நேதாஜியின் எதிர்பாராத மரணத்திற்கான விசாரணைக் குழுவில் பணியாற்றி ஜப்பானிய அரசு பல முக்கிய உண்மைகளை மறைக்கிறது என்று துணிச்சலாகத் தெரிவித்தார்.

இந்திய சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15ம் நாள் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருகை தந்து தனது மனைவியின் பெயரை மாற்றம் செய்து கொண்டு திருவனந்தபுரத்தில் தங்கினார். ஆனால் தான் கனவு கண்ட சுதந்திரம் இதுவல்ல என்று சில மாதங்களில் புரிந்து கொண்டு திரும்பவும் டோக்கியோ பயணமானார்.
அங்கே இந்திய அரசு அவரைத் தூதுவராக நியமிப்பதாக உறுதி தந்தது. ஆனால் நாயர் சான் தனக்குப் பதவி தேவையில்லை என்றபடியே டோக்கியோவில் நாயர் உணவகம் என்ற சிறிய இந்திய உணவகத்தை நடத்திக் கொண்டு ஜப்பான் வரும் இந்தியர்களை வரவேற்று உபசாரம் செய்தபடியே தன் வாழ்நாளைக் கழித்தார்

எம்.ஜி.ஆர் ஜப்பானில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்கு போன போது அவருக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் முன்நின்று செய்தவர் நாயர் சானே.

பணம், பதவி, அதிகாரம் எதற்கும் ஆசைப்படாத நாயர் சான் தன் உணவகத்தில் இந்திய தேசிய ராணுவம் பற்றிய புகைப்படங்களும் தகவல்களையும் சுவர்கள் முழுவதும் தொங்க விட்டிருக்கிறார்.

சுயலாபமின்றி இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய அந்த வீரனின் வாழ்க்கை சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா இப்படி மோசமான அரசியல் விளையாட்டுக்களமாகிப் போனதே என்ற ஆதங்கத்துடன் முடிந்து போனது.

நாயர் சான் பற்றி நான் அறிந்த விஷயங்களைச் சொன்னதும் ஆல்பர்ட் நம்பமுடியாமல் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். என்னிடமிருந்த நாயர் சான் நினைவு
குறிப்புகள் புத்தகத்தை தேடிக் கொடுத்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை வாசித்துவிட்டு வந்த ஆல்பர்ட் உணர்ச்சி வசப்பட்டபடியே இதை ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் படமாக்கினால் பெரிதாகக் கவனிக்கபடும் என்று உத்வேகம் கொண்டு உடனே அதற்கான திரைக்கதையை உருவாக்குவோம் என்றார். சில வாரங்கள் ஒன்றாகப் பேசி விவாதம் செய்து அடிப்படைக் கதைப்போக்கினை முடிவு செய்தோம்.

ஆல்பர்ட்டின் முந்தைய திரைப்படமான கண்ணே மடங்குக என்ற மலையாளப்படம் கேரள அரசின் விருது, ஜான் ஆபிரகாம் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருந்தது. அதனால் அவரால் இதை சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.

ஆல்பர்ட் ஒரு நாள் போன் செய்து தான் இது குறித்து மோகன்லாலைச் சந்திக்கப் போவதாகவும் அவருக்குப் பிடித்துவிட்டால் உடனே இது படமாக்கப்பட்டுவிடும் என்றும் சொன்னார். அதன்படியே சில நாட்களில் மோகன்லாலைச் சந்தித்தும் விட்டார்.

முன்னதாக நாயர்சானின் பல முக்கிய புகைப்படங்களை ஆல்பர்ட்டிடம் தந்திருந்தேன். அதைப் பார்த்த மோகன்லால் உடனே நடிப்பதற்கு ஒத்துக் கொண்டு விட்டார். ஆனால் இதற்கான தயாரிப்பு முதலீட்டைப் பற்றி யோசிக்கும்படியாக சொன்னார்.

மோகன்லாலோடு நான் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மிகச்சிறந்த நடிகர். பண்பாளர். சினிமாவில் புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். அவரோடு கொச்சியில் கதையை விவரிக்க சென்று இரண்டு நாட்கள் சந்தித்தேன்.

அப்போது நேரில் கண்ட அவரது இசை ஆர்வமும், மலையாள எழுத்தாளர்களின் மீதுள்ள பற்றும், சமைப்பதில் உள்ள ஆர்வமும், நகைச்சுவையும், எளிமையும் மறக்க முடியாதவை.

மோகன்லாலோடு இந்திய சுதந்திரப்போராட்ட வீரரின் வாழ்வு குறித்த முக்கியப் படத்தில் பணியாற்ற போகின்றோம் என்ற ஆசை துளிர்விடத் துவங்கியது. சில மாதங்களில் படம் துவங்கிவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் எதிர்பார்த்த முதலீடு கிடைக்கவில்லை

ஆல்பர்ட் உடனே டோக்கியோ புறப்பட்டுச் சென்று அங்கே நாயர் சானின் மகனையும் அவரது உணவு விடுதியையும் நேரில் கண்டார். அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய அப்பாவை பற்றி அறிந்து ஒருவர் தேடி வந்திருக்கிறார் என்று உபசாரம் செய்தார்கள். ஆனால் அவர்களால் உதவி செய்யமுடியவில்லை.

ஆல்பர்ட் இந்தத் திரைப்படத்திற்கான தயாரிப்பு நிதிக்காக ஜப்பானிய நிறுவனங்களை அணுகி விசாரணை செய்யத் துவங்கினார். ஆரம்ப நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக பொய்க்கத் துவங்கின. திரைப்படத்திற்கான செலவு இருபது கோடிக்கும் அதிகமாகும் என்பதை அறிந்தவர்கள் மெல்லப் பின்வாங்கத் துவங்கினார்

ஆல்பர்ட் தன் முயற்சியை கைவிடாமல் இன்றும் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் அலைந்து கொண்டேயிருக்கிறார். மனச்சோர்வு அவரை நண்பர்களிடமிருந்தும் தள்ளி வைத்து விட்டது. யாருடனும் தொடர்பில் இல்லை. தன் கனவைத் துரத்திக் கொண்டு தனி ஆளாக அலைந்து கொண்டிருக்கிறார்.

எப்போதாவது நாயர்சானுக்காக எழுதப்பட்ட கதையை வாசிக்கும் போது ஆல்பர்ட் நினைவில் வந்து போகிறார். இன்று வரை நாயர் சான&#3021எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார்

எப்போதாவது நாயர்சானுக்காக எழுதப்பட்ட கதையை வாசிக்கும் போது ஆல்பர்ட் நினைவில் வந்து போகிறார். இன்று வரை நாயர் சான் திரைப்படம் முற்றுப்பெறாத கனவாகவே உள்ளது. ஒருவேளை அந்தக் கனவு நாளை நனவாக கூடும். சாத்தியமானால் இந்திய சினிமாவில் அது தனித்துவம் மிக்கதாக இருக்கும்.

அதுவரை கனவைத் துரத்தும் எண்ணிக்கையற்ற இளம் இயக்குனர்களில் ஒருவராகவே ஆல்பர்டும் இருப்பார். சினிமாவின் எழுதப்படாத விதி இது தான் போலும்

0Shares
0