நாற்பது ஆண்டுக்கால கேள்வி

வாழும் காலத்தில் சொந்த தேசத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நாவலாசிரியன் தனது மறைவிற்குப் பிறகு உலகின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அவரது நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாவது புரிந்து கொள்ளமுடியாத புதிராகும்

நல்ல நாவல்கள் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொள்கின்றன. யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர் வாசகர், அந்த நாவலைக் கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அப்படித் தான் சண்டோர் மராயிற்கும் நடந்தது

ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் சண்டோர் மராய். (Sándor Márai)அவர் மறைந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பே அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின. இன்று உலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.

மராய் வாழும் போது ஹங்கேரியில் கம்யூனிஸ்ட்டுகள் அவரது புத்தகங்களைத் தடை செய்ததோடு நாவலின் பிரதிகளைத் தேடிப் பிடித்து அழித்தார்கள்.

இத்தாலிய எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் முயற்சியால் தான் மராயின் நாவல்கள் மறுபதிப்புக் கண்டன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட்டோ கலாஸ்ஸோ புதிய நூல்களின் மொழியாக்க உரிமைக்கான பட்டியலில் தடைசெய்யப்பட்ட தலைசிறந்த நூல் பட்டியலில் ஒரு பெயரைக் கண்டார். அதற்கு முன்பு கேள்விப்படாத பெயரது. அவர் ஹங்கேரிய நாவலாசிரியர் சண்டோர் மராய்.

அவரது நாவலைப் படிக்க விரும்பி அதன் பிரெஞ்சு மொழியாக்கப் பிரதியை வரவழைத்தார்.

வாசிக்கத் துவங்கியதுமே மராயின் மேதமையை உணரத்துவங்கினார். , மிக முக்கியமான இலக்கியப் படைப்பு என்பதை உணர்ந்து கொண்டவரா அதன் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மராயின் எல்லா நூல்களையும் இத்தாலியில் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார். தொடர்ந்த முயற்சியின் பலனாக உரிமை கிடைத்தது.

இதன்பின்பு ஃப்ராங்க்ஃபர்ட் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சண்டோர் மராயின் புத்தகங்களைப் பற்றிக் கலாஸ்ஸோ சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். இதன் பலனாக உடனடியாக ஆறு மொழிகளில் சண்டோர் மராயின் நூல்கள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டன. அப்படித் தான் அவரது ஆங்கிலப் பதிப்பு வெளியானது.

இத்தாலி மற்றும் ஜெர்மனியில் சண்டோர் மராயின் நாவல்கள் வெளியாகி விற்பனையில் பெரிய சாதனை படைத்தன. இதன் விளைவாக இருபத்திமூன்று மொழிகளில் அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டன

சண்டோர் மராய் 1900 இல் ஹங்கேரியில் பிறந்தவர், பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர் ஃபிரான்ஸ் காஃப்கா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காஃப்காவின் படைப்புகளை ஆராய்ந்து விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். 1940களில் மராயின் நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்டன.

948 இல் ஹங்கேரியில் ஏற்பட்ட கம்யூனிச ஆட்சியின் காரணமாக அவர் “முதலாளித்துவ எழுத்தாளர்” என்று கண்டனம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். மராய் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், செல்வ செழிப்பில் வளர்ந்தவர். ஆகவே கம்யூனிஸ்ட்டுகள் அவரை முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகக் கருதினார்கள்

தேசத்தை விட்டு வெளியேறி இத்தாலிக்கும் பின்பு அமெரிக்காவிற்கும் சென்ற மராய் ஹங்கேரிய கம்யூனிச ஆட்சிக்கு எதிராக நேரடியாகக் குரல் கொடுக்கத் துவங்கினார். இதன் காரணமாகவே இவரது நூல்கள் தடைசெய்யப்பட்டன.

பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட இவரது நாவல்கள் இலக்கிய உலகில் அவருக்குப் புகழ்தேடி கொடுத்தன. தனிமையில் கசப்பான வாழ்க்கை அனுபவங்களுடன் வாழ்ந்த மராய் தனது 89 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது Embers நாவல் மிக முக்கியமானது. இத்தனை அடர்த்தியான, கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட நாவலைக் கண்டதில்லை. மராயின் நாவலில் பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு போட வேண்டியதாகியது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய நாவல் என்றே இதைக் குறிப்பிடுகிறார்கள்.

Embers நாவல் நீண்ட காலத்தின் பின்பு சந்தித்துக் கொள்ளும் இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறது. ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் ஓய்வுபெற்ற ஜெனரலான ஹென்ரிக், நாற்பத்தியோரு வருடங்களுக்குப் பிறகுத் தனது நண்பன் கொன்ராட்டின் வருகைக்காகக் காத்திருக்கிறார். அவர் மலையிலுள்ள அரண்மனை போன்ற வீட்டில் வாழுகிறார்.

அவர்கள் இருவரும் இராணுவப் பள்ளியில் ஒன்றாக பயின்றவர்கள். ஒரே அறையில் தங்கியவர்கள். ஹென்ரிக் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கொன்ராட் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். இப்படி வேறுபட்ட பின்புலம் கொண்டிருந்த போதும் இருவரும் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்கள்.

அந்த நட்பினை ஹென்ரிக்கின் குடும்பமும் ஏற்றுக் கொண்டது.

இளம் வீரர்களாக அவர்கள் வியன்னாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தார்கள். அந்த நகரின் இன்பங்களை தேடித்தேடி அனுபவித்தார்கள். வியன்னா என்பது நகரமில்லை. அது ஒரு இசை. மனதில் நிரம்பி வழியும் இசை என்கிறார் மராய்.

தனக்கு இந்த உலகிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பது போலக் கான்ராட் ஒரு துறவியைப் போல வாழுகிறான். தனது கடமையைச் சரியாக, முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்கிறான். இதனால் கான்ராட் வேகமாக வயதான தோற்றத்தை அடைகிறான். அவனது 25 வயதிலே வாசிப்பதற்குக் கண்ணாடி போட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

கான்ராட்டின் தோழியான கிறிஸ்டினாவை ஹென்ரிக் காதலித்தார். மூவரும் ஒன்றாகச் சுற்றினார்கள். எதிர்பாராத விதமாகக் கான்ராடின் நட்பு முறிந்து போகிறது. இதன்பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. நாற்பது வருஷங்கள் கடந்து போகின்றன. தற்போது அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

எதற்காக இந்தச் சந்திப்பு என நினி கேட்கிறாள். உண்மையை அறிந்து கொள்ள என்கிறார் ஹென்ரிக். என்ன உண்மை. எதனால் அதை அறிந்து கொள்ள முற்படுகிறார் என்று கதை வளர்க்கிறது.

இந்தச் சந்திப்பின் வழியே கடந்து போன தங்களின் வாழ்க்கையை, ஏற்பட்ட கசப்புணர்வுகளை, அவர்கள் மீண்டும் ஞாபகம் கொள்கிறார்கள். இழந்தவற்றை விசாரணை செய்கிறார்கள்.

வாழ்க்கையில் ஏன் இப்படியான நிகழ்வுகள் நடந்தேறின. ஏன் இந்த இடைவெளி உருவானது. ஏன் துரோகத்தால் நண்பர்கள் பிரிய நேரிடுகிறது என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் கேட்கிறார். அந்தக் கேள்வி மராயின் சொந்த வாழ்க்கையிலிருந்து எழும் கேள்வியாகும்.

கடந்தகாலத்தைச் சொற்களின் வழியாக மீட்டு எடுக்க முடியவே முடியாது. நினைவு கொள்ளவும் வருந்தவும் ஏக்கம் கொள்ளவும் மட்டுமே சொற்கள் துணை செய்கின்றன. எல்லா பதில்களும் தற்காலிக திருப்தியை தான் தருகின்றன. உண்மை என்பது சம்பவமில்லை. அதன் பின்னுள்ள மனநிலை. வெளிப்படுத்தமுடியாத உணர்வு.

இவ்வளவு தான் நம் வாழ்க்கையா. எதையோ நினைத்துக் கொண்டு உறவுகளைத் தொலைத்த நமது கடந்த காலம் மீட்க முடியாதது தானா என்று ஹென்ரிக் கேள்வி எழுப்புகிறார்.

இந்த மறுசந்திப்பின் வழியே அவர்கள் நட்பில் ஏற்பட்ட இடைவெளியை அழிக்க முயலுகிறார்கள். ஆனால் அந்த விரிசல் ஒட்டமுடியாதது என்பதை உணருகிறார்கள்.

இருவரும் அறிந்தே கிறிஸ்டினாவை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

கடந்தகாலம் ஏற்படுத்திய குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவே இந்தச் சந்திப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கவிஞனாக விரும்பிய ஹென்ரிக் ஏன் ராணுவ அதிகாரியாக மாறினார். ஏன் கான்ராட் அவரைத் தனது வறுமையான குடும்பத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றான். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசங்களை நட்பு கடந்து சென்ற போதும் காதலித்த பெண் வழியே அவர்கள் ஏன் பிரிய நேர்ந்தது என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது

வாழ்க்கையில் நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளவே முடியாத ரகசியங்கள் சில இருக்கின்றன. அவை நண்பர்களிடமும் பகிர முடியாதவை. ஒரு மனிதன் தன் இதயத்திற்குள் மட்டுமே புதைத்து வைத்துக் கொள்ளவேண்டிய ரகசியங்கள். அவற்றை நாம் விரும்பினாலும் வெளிப்படுத்தவே முடியாது என்று கிறிஸ்டினா சொல்வது உண்மையே.

கிறிஸ்டினா வீட்டை விட்டு வெளியேறும் போது பாதிபடித்த புத்தகத்தை விட்டுச் செல்கிறாள். அது ஒரு குறியீடே.

பணிந்து போவதை ஒரு ஒழுக்க முறையாக அதிகாரம் நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது. அது தான் பலரையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மன்னரை தெய்வமாக நினைக்க வைக்கிறது. கட்டளைகளுக்கு அடிபணியச் செய்கிறது. தேசசேவைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பலவீனத்தைப் பெரும்பான்மை மக்கள் உணரவேயில்லை என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் சொல்கிறான். இதுவும் மராயின் ஒப்புதல் வாக்குமூலமே

நமது ஆசைகள், கனவுகளை உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை அந்த அளவு நேசிப்பதில்லை. புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் நாம் விரும்பும் படியாக இல்லை. துரோகத்தையும் புறக்கணிப்பையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் உலகை நம்புவது போல உலகம் நம்மை நம்புவதில்லை. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்று நாவலில் ஹென்ரிக் சொல்கிறார். இவை வாழ்க்கை அனுபவத்திலிருந்து வெளிப்படும் நிதர்சனங்கள்.

நம்மை நாம் அறிந்து கொள்வதேயில்லை. நமது நிறைகுறைகளை நாம் கண்டுகொள்ளும் போது வாழ்க்கை நமக்கு பதக்கங்கள் எதையும் தந்துவிடுவதில்லை. ஆனால் இந்தத் தேடல் நமக்காக நாம் முனைந்து செய்ய வேண்டிய காரியமாகும்.

உண்மையை விடவும் அதைப்பற்றி நினைப்பு முக்கியமானது. அந்த நினைப்பு நம்மைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. மீட்சியைத் தேடச் செய்கிறது. வாழ்க்கை நம்மைப் பற்றிய தீர்ப்பை வாசிக்காவிட்டாலும் நாம் ஒன்றும் அப்பாவியில்லை என்பதை நாம் அறிந்து தானே இருக்கிறோம்.

நமது செயல்கள் யாவும் தூய்மையானவையில்லை. அதில் கசடுகளும் இருக்கத்தானே செய்கிறது.

சொற்களால் மழையின் ஈரத்தைக் காகிதத்தில் உருவாக்கிட முடியாது. ஆனால் உணரவைக்க முடியும்.

நட்பு என்பது வெறும் உறவில்லை. அது ஒரு சட்டம். அதற்கெனக் கடமைகள் இருக்கின்றன. இந்தச் சட்டம் விசித்திரமானது. ஆனால் தொன்மையானது. நட்பை உயர்வாகக் கருதாத பண்பாடே கிடையாது.

இப்படி நாவல் முழுவதும் மறக்கமுடியாத வரிகள்

ஹென்ரிக் வீட்டில் பணிபுரியும் நினிக்கு 90 வயது கடந்துவிட்டது. ஒருவர் 90யைக் கடந்தபிறகு வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஐம்பது அறுபது வயதுகளில் முதுமையைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போலக் கவலை கொள்வதில்லை. அவளுக்கு 90 வயது என்பதே கூட ஹென்ரிக் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் 75 ஆண்டுகள் அந்த வீட்டில் பணியாற்றியிருக்கிறாள். மௌனமான புன்னகையுடன் அவள் அந்த வீட்டிற்குள்ளே வளர்ந்திருக்கிறாள். அவளது திறமைகள் யாவும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. அவளுக்குச் சொந்த வாழ்க்கை என்ற ஒன்றேயில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக விருந்தாளிகள் யாரும் அந்த வீட்டிற்கு வந்ததேயில்லை. அவள் அந்த வீட்டினையும் கர்னலையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்.

கிறிஸ்டினாவின் மரணத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொள்ளும் போது அவளது கணவராக நீங்கள் அவளது இல்லாமையை உணரும் விதமும் ,அவளது தோழனாக நான் அந்த இன்மையை உணரும் விதமும் வேறு வேறானது. மரணம் எல்லாவற்றுக்கும் முடிவான பதிலைத் தந்துவிடுகிறது என்கிறான் கான்ராட்.

“All of a sudden the objects seemed to take on meaning, as if to prove that everything in the world acquires significance only in relation to human activity and human destiny”

என நாவலின் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. இது தான் நாவலின் திறவுகோல். நீண்டகாலத்தின் பின்பு அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பழைய பொருட்களும் அவர்களுடன் புத்துயிர்ப்புப் பெறுகின்றன. அதே போன்ற சூழலை மறுபடியும் உருவாக்க முனைகிறார்கள்.

There are very few people whose words correspond exactly to the reality of their lives என்று நாவலின் ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது.

இப்படி மராயின் எழுத்திலும் அவரது வாழ்க்கை தன் முழுவீச்சோடு வெளிப்படுகிறது

•••

0Shares
0