நாவலின் விதி

எழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல் அவர் மறைந்து அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மனிதர்களைப் போலவே நாவலின் விதியும் விசித்திரமானதே. எழுதப்பட்ட உடனே எல்லா நாவல்களும் வெளியாவதில்லை. சில நாவல்கள் பதிப்பகத்தாலும். எழுத்தாளரின் விருப்பமின்மை மற்றும் மனச்சோர்வினால் அப்படியே முடங்கிப் போய்விடுகின்றன. காலத்தின் வெளிச்சம் அதன் மீது எப்போதும் படும் என யாருக்கும் தெரியாது.

தன் பதின்வயதுகளிலே கவிதை எழுதத்துவங்கிய ஐரின் Suite française எழுதுவதற்கு முன்பு இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். இதில் முதலாவது நாவல் David Golder அவரது புனைப்பெயரில் வெளியானது. பதிப்பாளரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துத் தேடினார். அதன்பின்பு அது ஐரின் எழுதிய நாவல் என்று கண்டறியப்பட்டது.

புலம் பெயர்ந்த ரஷ்ய யூதர் என்ற அடையாளம் ஐரினை வாழ்நாள் முழுவதும் துரத்தியது. இந்தக் காரணத்தாலே அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை கிடைக்கவில்லை.

பிரான்ஸ் முற்போக்கு சிந்தனைகளின் கொண்ட தேசமாக இருந்த போதும் அங்கே பெண்களுக்கு வாக்குரிமை மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது. மார்க்ரெட் யூரிசனார் தான் பிரெஞ்சு அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளர். நாற்பது உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில் பெண்கள் தலைமை பொறுப்பு ஏற்க நீண்டகாலம் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் ரஷ்யாவைச் சேர்ந்த ஐரின் பிரெஞ்சில் எழுதுகிறார், அதுவும் ஒரு யூதர் என்பதை இலக்கியச் சூழல் அவரைப் பொருட்படுத்தவேயில்லை                                                

ஐரின் இந்த நாவலைச் சிறிய நோட்டு ஒன்றில் அடித்தல் திருத்தல்களுடன் எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஜெர்மன் ஆதிக்கத்திற்கு உள்ளான பாதிப்பைப் பற்றி இந்த நாவலை ஐந்து பகுதிகளாக எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இரண்டு பகுதிகளை மட்டுமே எழுதி முடிக்க முடிந்தது. இதனிடையில் கைது செய்யப்பட்டு யூதமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டார். யூதமுகாமிற்குப் போவதற்கு முன்புநாவலின் கையெழுத்துப்பிரதியை ஒரு சூட்கேஸில் மறைத்து வைத்து மகளிடம் ஒப்படைத்திருக்கிறார்

சிறுமி டெனிஸ் அந்தச் சூட்கேஸை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ரோஸ் என்ற குடும்ப நண்பரிடம் ஒப்படைத்திருக்கிறார். நீண்ட பலகாலத்தின் பின்பே அது டெனிஸின் கைக்குக் கிடைத்தது.

ஐரீனின் இரண்டாவது மகள் எலிசபெத் பதிப்புத்துறையில் ஈடுபடத் துவங்கியபோது தனது அன்னையைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுத முற்பட்டார். அப்போது ஏற்பட்ட தேடுதலின் போதே சூட்கேஸில் இருந்த நாவல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நோட்டில் காணப்பட்ட கடிதம் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்த எலிசபெத் தனது அம்மா ஏதோ டயரி எழுதியிருக்கிறார் என நினைத்துப் படித்தபோது அது முடிக்கப்படாத நாவல் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த நாவலை வெளியிடுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டபோது அது நிறைவுபெறாத நாவல் என்பதால் பதிப்பகங்கள் வெளியிட முன்வரவில்லை. எலிசபெத்தும் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். அவரது மறைவிற்குப் பிறகு எலிசபெத்தின் அக்கா டெனிஸால் நாவல் மறுமுறை தட்டச்சு செய்யப்பட்டு 2004ல் வெளியிடப்பட்டது

நாவல் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய விருதான Renaudot Prize பெற்றது. பின்பு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 21 மொழிகளில் இந்த நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டதுடன் இதன் திரைப்பட உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஐரீன் மகளுக்குக் கிடைத்தது

தன் வாழ்நாளில் ஐரீனுக்குக் கிடைக்காத கௌரவம் அவர் மறைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு கிடைத்தது. தனது தாயின் மூலம் இப்படி ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிடைக்கும் என நினைக்கவேயில்லை என்கிறார்கள் டெனிஸின் குடும்பத்தினர்.

அறுபது ஆண்டுகளுக்கு முந்திய நாவல் ஒன்றை அங்கீகரித்து வெற்றிபெறச் செய்த பிரெஞ்சு இலக்கியச் சூழலை நாம் பாராட்டவேண்டும்.

1942, ஜூலை மாதம் பிரெஞ்சு காவல்துறையால் ஐரீன் கைது செய்யப்பட்டார் அவர் பிதிவியர்ஸில் உள்ள யூத முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து ஆஷ்விட்சுக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு விஷவாயு கூடத்தில் நிறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது கணவருக்கும் இது போன்ற குரூர மரணமே ஏற்பட்டது.

தான் எழுதிய நாவல் உலகின் கவனத்தைப் பெற்றுக் கொண்டாடப்படும் என அறியாமலே ஐரீன் இறந்து போனது பெரும்சோகம்.

ஐரீன் நெமிரோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டில் உக்ரேனில் பிறந்தார், அவரது தந்தை லியோன் ஒரு வங்கி உரிமையாளர். ரஷ்யப்புரட்சியின் போது தங்கள் குடும்பம் பாதிக்கப்படக்கூடும் என நினைத்த லியோன் அங்கிருந்து வெளியேறி பாரீஸில் தஞ்சம் புகுந்தார். தனது பதினெட்டு வயது முதல் ஐரீன் எழுத ஆரம்பித்தார். பாரீஸில் தன் வாழ்நாளைக் கழித்த போதும் யூதர் என்பதால் அவருக்குக் குடியுரிமை கிடைக்கவில்லை.

தனது 23வது வயதில் வங்கிப்பணியில் இருந்த மைக்கேல் எப்ஸ்டீனை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகள்கள்: மூத்தவர் டெனிஸ், இளையவர் எலிசபெத், ‘

சூட் ஃபிரான்சைஸ் நமிரோவ்ஸ்கியின் வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டது

இந்த நாவல் ஜெர்மன் ராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பிரான்ஸ் கொண்டுவரப்பட்ட ஆரம்ப நாட்களை விவரிக்கிறது. பாரீஸ் நகரின் மீது ராணுவ விமானங்களின் குண்டுவீச்சினைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள்.

பஸ்ஸி என்ற சிறிய நகரில் கதை நிகழுகிறது. லூசி ஏஞ்செலியர் என்ற இளம்பெண் தனது மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். வசதியான குடும்பம். லூசியின் கணவன் ராணுவத்தின் பணியாற்றுகிறான்.

லூசியின் மாமியார் கறாரானவர். பண்ணையில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்வதிலும் பண்ணை வருவாயைப் பெறுவதிலும் இரக்கமின்றி நடந்து கொள்கிறார். இது லூசிக்குப் பிடிக்கவில்லை. லூசிக்கு இசையில் ஆர்வம் அதிகம் ஆனால் அவரது மாமியார் வீட்டில் இசை வாசிக்கக் கூடாது என்கிறார்.

இந்தச் சூழலில் ஜெர்மன் விமானத்தாக்குதல் நடக்கிறது. அதில் மக்கள் இடம்பெயர்ந்து போவதைக் காணுகிறாள் லூசி. அவளது நகரமும் ஜெர்மன் ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

ராணுவ அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான வீடுகளை ஆக்கிரமித்துக் குடியேறுகிறார்கள். அப்படி லூசியின் வீட்டின் ஒருபகுதியை . ஜெர்மனிய தளபதி புருனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான். அவன் ஒரு இசைக்கலைஞன். ஆகவே வீட்டில் இருக்கும் நேரங்களில் லூசியின் ப்யானோவில் இசைக்கோர்வை ஒன்றை எழுதுகிறான். அவன் எழுதுகிற இசைக்கோர்வையே Suite française

ஜெர்மன் ராணுவத்தின் பிடியில் அவர்களின் வாழ்க்கை மிகவும் நெருக்கடியாக உள்ளது. எதிரியான ஜெர்மனி ராணுவத்தினை மக்கள் வெறுக்கிறார்கள். இந்தச் சூழலில் புருனோவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறாள் லூசி. அதை ஊர்மக்கள் வம்பு பேசுகிறார்கள். அவளை மோசமான பெண் என்று திட்டுகிறார்கள்.

புருனோவுடன் அவள் நெருக்கமாகப் பழகுவதை மாமியாரும் கண்டிக்கிறாள். ஆனால் புருனோவின் இசைத்திறமையை உணர்ந்த லூசி அதை ரசிக்கிறான். கணவன் இல்லாத ஏக்கம் அவனுடன் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஜெர்மன் ராணுவத்திடம் பிடிபட்டு யுத்த கைதியாக மாறுகிறான் லூசியின் கணவன். அதை அவனது அம்மாவால் தாங்க முடியவில்லை.

இதற்கிடையில் பெனாய்ட் என்ற பண்ணையாளின் மனைவியை அடைய ஒரு ஜெர்மானிய அதிகாரி பல்வேறுவிதமான தொல்லைகள் தருகிறான். இதில் ஆத்திரமான பெனாய்ட் அந்த அதிகாரியைக் கொன்றுவிடவே அவனை ராணுவம் தேட ஆரம்பிக்கிறது. ராணுவத்தின் பிடியிலிருந்து பெனாய்ட்டை காப்பாற்ற லூசி அவனைத் தன் வீட்டில் மறைத்து வைக்கிறாள். பெனாய்ட்டை பிடிக்கும் பொறுப்பு புருனோ வசம் ஒப்படைக்கப்படுகிறது. பெனாய்ட்டை எப்படி லூசி காப்பாற்றினாள் என்பதே நாவலின் இறுதிப்பகுதி. ஜெர்மன் ராணுவம் அந்த நகரிலிருந்து வெளியேறுவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது

ஜெர்மன் ஆக்ரமிப்பின் போது வீடுகள் எவ்வாறு சூறையாடப்பட்டன. மக்கள் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதை லூசியின் மூலம் ஐரீன் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஐரீனின் எழுத்து ஆன்டன் செகாவ் மற்றும் டால்ஸ்டாயின் பாதிப்பில் உருவானது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இதை அவரே தனது நேர்காணலில் ஒத்துக் கொள்கிறார்.

ஐரீனுக்கும் அவரது அம்மாவிற்கும் இடையில் நல்ல உறவில்லை. வறுமையான சூழலிலிருந்த நாட்களில் ஐரீனின் பிள்ளைகள் தனது பாட்டியைத் தேடிப்போய் உதவி கேட்டபோது அவர்களைத் துரத்தி அனுப்பி வைத்தார் ஐரீனின் அம்மா. தாயோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தனது படைப்புகளில் தொடர்ந்து ஐரீன் பதிவு செய்திருக்கிறார். இந்த நாவலில் வரும் மாமியாரின் செயல்களும் அவரது அன்னையின் பிரதிபலிப்பே.

இசையின் வழியே தான் லூசியும் புருனோவும் ஒன்று சேருகிறார்கள். அவளது நினைவாகவே அவன் இசைக்கோர்வையை எழுதுகிறான்.அந்த இசைக்குறிப்புகளை அவளிடம் ஒப்படைக்கிறான். அவனைப்பற்றிய நினைவுகள் இசையாக மலருகின்றன.

ஐரீன் ரஷ்யாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பிரெஞ்சு எழுத்தாளராகவே கருதுகிறார்கள். 64 வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாவல் புத்துயிர்ப்புப் பெற்றிருக்கிறது என்பது நம்பிக்கையின் அடையாளம். நல்ல எழுத்து ஒருபோதும் கைவிடப்படாது. மறைந்து போய்விடாது. அது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே செய்யும் என்பதன் சாட்சியமாகவே இந்த நாவலைக் காண்கிறேன்

••

0Shares
0