கவிஞர் நிசார் கப்பானியின் (Nizar Qabbani) அராபிய காதல்கவிதைகள் தொகுப்பினை வாசித்தேன். மிகச்சிறந்த காதல்கவிதைகள்.
காதலிப்பவர்களுக்கு வழக்கிலுள்ள சொற்கள் போதுமானதாகயில்லை. புதிய சொற்களை தேடுவதை விடவும் சொற்கள் இல்லாமல் காதலிக்க முயலுகிறார்கள் என்கிறார் கப்பானி.
இவரது கவிதைகள் எளிமையானவை. ஆனால் வியப்பூட்டுபவை. காதலின் பித்து கவிதையாக மலருகிறது. குறிப்பாக முட்டாள் பெண்ணின் கடிதம் போன்ற கவிதையில் வரலாற்று நினைவுகளின் வழியே காதலைப் பேசுகிறார்.
விளக்கை விடவும் வெளிச்சம் முக்கியம்,
குறிப்பேடினை விடவும் அதில் எழுதப்பட்ட
கவிதை முக்கியம்,
உதடுகளை விடவும் முத்தம் முக்கியம்.
நான் எழுதிய கடிதங்கள்
நம் இருவரையும் விட முக்கியமானது. சிறப்பானது
உனது அழகையும் எனது பைத்தியக்காரத்தனத்தையும்
மக்கள் கண்டறியும் ஆவணங்கள்
அவை மட்டுமே
என்கிறது கப்பானியின் காதல்கவிதை.
••
வழக்கறிஞரான நிசார் கப்பானி சிரியாவில் பிறந்தவர்
அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே வாழ்ந்திருக்கிறார்.
மனதிற்கு பிடிக்காத ஒருவரை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் அவரது சகோதரியின் தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிப்பு கப்பானியின் மனதில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரது கவிதைகளில் அந்த துயரம் வழிந்தோடுகிறது.
••
கோடையில்,
நான் கடற்கரையில் கிடந்தபடி
உனைப் பற்றி நினைக்கிறேன்,
நான் உணர்ந்தவற்றை
கடலிடம் சொன்னால் ,
அது தன் கரையையும், சிப்பிகளையும், மீனையும் விட்டுவிட்டு
என்னைப் பின்தொடர்ந்திருக்கும்.
என்ற கப்பானியின் கவிதை எளிமையானது. ஆனால் அது கடலையும் பொறாமை கொள்ள வைக்கும் காதலைப் பேசுகிறது.
••
காதலன் என்னிடம் கேட்கிறான்:
“எனக்கும் வானத்திற்கும் என்ன வித்தியாசம்?”
வித்தியாசம் என்னவென்றால் அன்பே,
நீ சிரிக்கும்போது,
நான் வானத்தை மறந்து விடுகிறேன்.
என்கிறது இன்னொரு கவிதை.
•••
என் மகன் தனது வண்ணப் பெட்டியை
என் முன்னே வைத்து
அவனுக்காக ஒரு பறவையை
வரையச் சொல்கிறான்.
சாம்பல் நிறத்தில் நான் தூரிகையை நனைத்து
பூட்டுகள் மற்றும் கம்பிகளுடன் ஒரு சதுரத்தை வரைகிறேன்.
திகைப்பு அவன் கண்களை நிரப்புகிறது:
“…ஆனால் இது ஒரு சிறைச்சாலை, அப்பா ,
பறவையை எப்படி வரைய வேண்டும் என்று
உங்களுக்குத் தெரியாதா?”
நான் அவனிடம் சொன்னேன்:
“மகனே, என்னை மன்னிக்கவும்.
பறவைகளின் வடிவங்களை நான் மறந்துவிட்டேன்.”
••
அடுக்கடுக்காக நீண்டு செல்லும் இக்கவிதை இப்படி முடிகிறது.
••
என் மகன் எனது படுக்கையின் விளிம்பில்
அமர்ந்து ஒரு கவிதையை வாசிக்கச் சொன்னான்,
என் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்
தலையணை மீது விழுந்தது.
“அப்பா இது கண்ணீர், கவிதை அல்ல!” என்றான் மகன்
நான் அவனிடம் சொன்னேன்
” மகனே, நீ வளர்ந்து,
அரேபியக் கவிதைகளை படிக்கும்போது,
வார்த்தையும் கண்ணீரும் இரட்டையர்கள் என்பதை அறிவாய்
அரபுக் கவிதை என்பது விரல்களால் அழும் கண்ணீர்
என்பதை தெரிந்து கொள்வாய்
••