நிஜமான பசு ஒன்று ஓவியத்திலிருக்கும் பசுவைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வரைந்திருக்கிறார் மார்க் டான்சி, The Innocent Eye Test என்ற அந்த ஓவியம் எது யதார்த்தம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
டச்சு ஓவியர் பவுலஸ் பாட்டர் வரைந்த பசுக்களின் ஓவியத்தைத் தான் இந்தப் பசுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதே ஓவியத்தின் இடதுபுறத்தில் மோனெட்டின் வைக்கோல் போர் ஓவியம் காணப்படுகிறது.
“வெவ்வேறு யதார்த்தங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன” என்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டான்சி.,
வரையப்பட்ட சித்திரம் என்பது தனியுலகம். அங்கே நாம் காண்பவை நிஜமில்லை. ஆனால் நிஜம் போன்று தோற்றம் அளிக்க கூடியவை. அங்கே காணப்படும் உருவங்கள். நிலப்பரப்பு, இயக்கம் யாவும் நிஜத்தை நினைவுபடுத்துகின்றன. ஆனால் கற்பனையான தளத்தையும் கொண்டிருக்கின்றன.
சீனக் கதை ஒன்றில் ஓவியத்தின் வழியாக இயற்கை மீது காதல் கொண்ட அரசன் குறிப்பிட்ட இயற்கைக் காட்சியை நேரடியாகக் காணும் போது அது ஓவியம் போலில்லை என்று கோவித்துக் கொள்கிறான். இயற்கையை ஓவியம் நகலெடுப்பதில்லை என்று ஓவியன் விளக்குகிறான். தனக்குக் கலையின் வழியே வெளிப்படும் இயற்கை தான் வேண்டும் என்கிறான் மன்னன். இந்தக் கதை விவரிப்பதையே மார்க் டாவின்சி தனது ஆய்வாகக் கொண்டிருக்கிறார்.
அவரது ஓவியத்தில் வரையப்பட்ட பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு காணுகிறது. அந்தப் பசுவும் வரையப்பட்டது தான். ஆனால் உண்மையும் கற்பனையும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வது போல நாம் உணருகிறோம் ஓவியத்திலிருக்கும் பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு நிஜமானதாக நினைக்குமா என்று அருகில் விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓவியம் சித்தரிப்பது தான் “யதார்த்தமா, அல்லது சட்டகத்திற்கு வெளியே மாடு பார்த்துக் கொண்டிருப்பது தான் யதார்த்தமா என்ற கேள்வியை மார்க் எழுப்புகிறார்
கேலரியில் உள்ள ஓவியத்தை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை விலகி நின்று ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்தையே ஓவியம் தருகிறது.
உண்மையில் ஒரு பசு, ஓவியத்திலுள்ள பசுவைக் காணும் போது என்ன நினைக்கும் , எப்படிப் புரிந்து கொள்ளும் என்று கேட்கிறார் மார்க். விலங்குகளின் கலையுணர்வு பற்றிப் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. குரங்கினை வண்ணம் தீட்ட வைத்திருக்கிறார்கள். நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து படம் வரையச் செய்திருக்கிறார்கள். அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. விலங்குகளைக் குறியீடுகளாக, உருவகமாக இலக்கியம் மாற்றியது. பூமியில் வாழாத விலங்குகளைக் கற்பனையாக வரைந்திருக்கிறார்கள். விலங்குகளில் சில தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன. கிரேக்க, சீன,இந்திய இலக்கியங்களில் விலங்குகளின் உருவம் எடுத்து கடவுள்கள் பூமிக்கு வருகிறார்கள். செயலாற்றுகிறார்கள். இன்று விலங்குகளின் கலைஉணர்வை புரிந்து பல்வேறு பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆயினும் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை.
மார்க் ஓவியத்திலுள்ள யதார்த்தம் பற்றி மட்டுமின்றிப் பொதுவாகக் கலைகளைப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். அந்த வகையில் இது மிகவும் தனித்துவமான கலைப்படைப்பாக கருதப்படுகிறது.