ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.
கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை எவராலும் அணைக்கமுடியாது. அந்த நெருப்பின் பெயர் காலம். அதை நீங்கள் காணமுடிகிறதா என்று கேட்கிறார்.
காலத்தின் சுடர் தீண்டாத பொருளேயில்லை. ஒவ்வொரு நிமிஷமும் உலகிற்கு வயதாகிறது. மனிதர்கள், விலங்குகள் பறவைகள் தாவரங்கள் என அனைத்தும் காலநெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அனுபவத்தை முழுமையாக உணர்ந்த மனிதரைப் போலவே இருக்கிறார் வான்கோ. அவரது ஒவியத்தில் கோடுகள் நெருப்பு பற்றிக் கொள்வது போலவே மேல்நோக்கி எழுகின்றன. அடர்ந்து பரவுகின்றன.
தீவிரம் தான் அவரது ஒவியங்களின் தனித்துவம். அந்தத் தீவிரம் வாழ்நாள் முழுவதும் வான்கோவை வதைத்தது. நுண்ணுர்வுகள் கொண்ட கலைஞர்களுக்கு வாழ்க்கை எப்போதும் துயரமே. அதிலும் மனம் நிறையப் படைப்பாற்றல் பொங்கி வழியும் சூழலில் கையில் காசில்லாமல், இருக்க இடமில்லாமல் அவதிப்படும் வாழ்க்கை இருக்கிறதே அது பெருந்துயரம். அப்படியொரு வாழ்க்கையைத் தான் வான்கோ ஏற்றுக் கொண்டிருந்தார்.
குளிர்காலத்திற்குத் தேவையான உடைகள் அவரிடமில்லை. கணப்பு அடுப்புக் கொண்ட அறையில்லை. தகுதியான காலணிகள் கூடக் கிடையாது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்குக் கூட அவரிடம் பணம் இல்லை ஆனால் மனதில் நெருப்பு பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அறைகுறை குளிராடைகளுடன் அவர் ஒவியம் வரைவதற்காக நிலக்காட்சிகளைத் தேடிச் சென்றார். குளிர்காற்றில் கைகள் விரைத்துப் போக ஒவியம் வரைந்தார்.
வான்கா இயற்கையை நகல் எடுக்கவில்லை. மாறாகப் புரிந்து கொள்ள முயன்றார். எது இயற்கையாக உருவெடுத்துள்ளது என்பதை அறிந்து கொண்டிருந்தார். சூரிய ஒளியை அவரைப் போல நேசித்தவரில்லை. அவரே ஒரு சூரியக்காந்திச் செடியைப் போலத் தானிருந்தார். சூரியன் செல்லும் திசைதோறும் உடன் சென்றார். மரங்களை, நிலவெளியை எப்படிச் சூரிய வெளிச்சம் நிரப்புகிறது. இலைகள் சூரிய வெளிச்சத்தில் எவ்வாறு மின்னுகின்றன. கடினமான பாறைகள் கூடச் சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தில் எப்படி உருகியோடுகின்றன என்பதை வான்கோ அவதானித்தார். அதைத் துல்லியமாகத் தனது ஒவியங்களில் இடம்பெறச் செய்தார்.
மோனே நிலக்காட்சிகளை வரைவதில் விற்பன்னர். அவர் நீரின் இயக்கத்தைத் துல்லியமாக வரைந்திருக்கிறார். பூக்கள் அவரது கித்தானில் நேரடியாக பூத்திருந்தன. மோனேயிடமிருந்து வான்கோ இயற்கையை அவதானிக்கும் முறையைக் கற்றுக் கொண்டார். ஆனால் மோனேயின் தியான நிலையோ, நிசப்தமோ வான்கோவிடமில்லை.
பதற்றம், ஒலம், துடிதுடிப்பு இவையே அவரது காட்சிகளின் பொதுத்தன்மை. மனிதர்களின் மனநிலையை ஒவியவமாக வரைவதிலே வான்கோ ஈடுபாடுகாட்டினார். அவர் வரைந்த மனிதர்களில் பெரும்பான்மையினர் எளியோர். தபால்காரனை வரைந்திருக்கிறார். விடுதியின் பணிப்பெண்ணை, வேசையை, சுரங்கத்தொழிலாளிகளை, விவசாயிகளை, அறுவடைசெய்பவர்களை, வண்டி ஒட்டிகளை வரைந்திருக்கிறார். அந்த மனிதர்களின் கண்களைப் பாருங்கள். அதில் அவர்களின் மொத்த வாழ்க்கையும் பீறிடுகிறது. மனித ஆன்மாவை தொட்டுவிடும் மகத்தான கலைஞனாக விளங்கினார் வான்கோ
தனிமையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெண்துணை தேடி ஏங்கினார். கொஞ்சம் பணம் கிடைத்தால் நல்ல துணையைத் தேடிக் கொள்ள முடியும். ஆனால் பணம் இல்லையே என்று ஆதங்கப்பட்டார். விடுதியின் உரிமையாளரும், வேசைகளுமே அவரைப் புரிந்து கொண்டார்கள். அரவணைத்துக் கொண்டார்கள்.
வான்கோ ஒவியம் வரைவதற்கும் வாழ்வதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர் அவரது அண்ணன் தியோ. வான்கோவின் சகோதரர் தியோவும் ஒரு ஒவியரே. இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். வான்கோவுக்குச் சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். வான்கோவின் தந்தை மதபோதகராகயிருந்தார்.
கலைக்கூடம் ஒன்றை நடத்தி வந்த தியோ தனது தம்பிக்காக மாதம் தோறும் பணம் அனுப்பிவைத்தார். ஒவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்தார். பயணம் செய்வதற்கும், உடைகள் வாங்கிக் கொள்ளவும் உதவி செய்தார். மனநலமற்ற நிலையில் சிகிட்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்து உடனிருந்தார். இவ்வளவு ஏன், தனது தம்பி தனிமையில் துயருற்றிருக்கிறான் அதைப் போக்கி கொள்ள நல்ல நண்பன் வேண்டும் என்று அறிந்து வான்கோவிற்குப் பிடித்தமான ஒவியராகப் பால் காகினை வரவழைத்துப் பணம் கொடுத்து வான்கோவோடு உடன் தங்கிக் கொள்ளச் செய்தார்.
தனது அண்ணன் தியோவிற்கு வான்கோ நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதங்கள் தற்போது ஒரு நூலாக வெளியாகியுள்ளன. அந்தக் கடிதங்களின் வழியே தான் வான்கோவின் எண்ணங்களும் கனவுகளும் உலகிற்கு அறிமுகமாகின.
முப்பது வயதிற்கு மேல் தீவிரமாக தொடர்ந்து ஓவியம் வரைய ஆரம்பித்தார். அவரது கடைசி ஆறு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒவியங்களை வரைந்தார் வான்கோ.
வான்கோவின் வாழ்க்கை குறித்து ஐந்து திரைப்படங்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. அதில் Vincente Minnelli’ இயக்கத்தில் வெளியான “Lust for Life” Robert Altman இயக்கத்தில் வெளியான “Vincent & Theo”, Alain Resnais இயக்கிய ஆவணப்படமான “Van Gogh, Maurice Pialat இயக்கிய Van Gogh, சென்ற ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான Loving Vincent ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிரப் பிபிசி வான்கோ குறித்து ஆவணப்படம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது
இந்த வரிசையில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள படம் ”At Eternity’s Gate,” Julian Schnabel, என்ற ஒவியரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் Willem Dafoe. இதுவரை வெளியான வான்கோ பற்றிய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
குறிப்பாக வான்கோவின் கண்களின் வழியாக உலகைக் காட்டுகிறது இப்படம். ஆகவே காட்சிக்கோணங்கள் அற்புதமாகவுள்ளன- கேமிரா வான்கோவின் மனதைப் போலவே அலைபாய்ந்தபடியே உள்ளது. வான்கோவின் தீவிரம், பதற்ற நிலை, வியப்பு, கோபம் இயலாமை, தனிமை என அத்தனையிலும் கேமிரா அவரது உடலைப் போலவே செயல்படுகிறது. எப்படி இது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள் என்ற வியப்பு மறையவேயில்லை.
படத்தின் இயக்குனர் ஜுலியன் ஒரு ஒவியர். இவரது முந்தைய படமான The Diving Bell and the Butterfly படுக்கையில் கிடக்கும் நோயாளியின் கண்ணோட்டத்தில் உருவாக்கபட்டது. அதிலும் இது போலக் காட்சிகள் படுக்கையில் கிடப்பவரின் பார்வையிலே பெரிதும் படமாக்கபட்டிருக்கும். இது மட்டுமின்றி Basquiat என்ற திரைப்படம் அமெரிக்க ஒவியரைப் பற்றியதே. ஜுலியன் வான்கோ வரலாற்றைப் படமாக்குவதற்கு முன்பு அவரைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார்.
வான்கோ பயணம் செய்த இடங்களுக்கு முழுமையாகப் பயணம் செய்திருக்கிறார். வான்கோவின் படைப்பாளுமையைப் புரிந்து கொண்டிருக்கிறார். படத்தின் சிறப்பு வான்கோவாக நடித்துள்ள வில்கெம் டீபோ. அவரது நடிப்பு வாழ்வில் இது ஒரு மைல்கல். இந்த ஆண்டுச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். வான்கோவாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தருணத்தில் அவர் வான்கோவே தான்.
திரைப்படம் வான்கோவின் இறுதிநாட்களைத் தான் முதன்மைப்படுத்தியுள்ளது. ஒவியம் வரைவதற்காகப் பிரான்சின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை நோக்கி செல்கிறார் வான்கோ. அங்கே ஒரு சிறிய அறை எடுத்து தங்குகிறார். போதுமான வசதியில்லை. விடுதி உரிமையாளர் அவர் மீது இரக்கம் கொண்டு யாரும் உபயோகம் செய்யாத மஞ்சள் அறையை அவருக்காக ஒதுக்குகிறார். அந்த அறை அவரது ஒவியத்தில் பின்னாளில் இடம்பெற்றது. மஞ்சள் அறையில் தங்குகிறார் வான்கோ.
At Eternity’s Gate முழுப்படமும் மஞ்சள் நிறத்தில் செய்யப்பட்ட அர்ப்பணிப்பே. மஞ்சள் அடர்வண்ணமாகும். அது வெறும் நிறமில்லை. தீவிரமான மனநிலையின் அடையாளம். படம் முழுவதும் மஞ்சள் நிறம் பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது. மஞ்சள் வெளிச்சத்தில் பொருட்கள் மின்னுகின்றன. மஞ்சள் ஒரு ஆறு போல ஒடிக் கொண்டிருக்கிறது. மஞ்சள் மலர்களான சூரியகாந்திப் பூக்கள் வாடி கருகியுள்ளன. ஆனால் வானெங்கும் மஞ்சள் நிறம். சூரியன் மஞ்சள் தெய்வமாக அறியப்படுகிறான். மஞ்சள் கீற்றுகள் ஒளிருகின்றன. மஞ்சளின் களியாட்டமே உலகம் என்பது போலக் காட்சிகள் உருவாக்கபட்டுள்ளன. அடர்நீலமும் மஞ்சளும் சிவப்பு வான்கோவிற்குப் பிடித்தமான வண்ணங்கள். அந்தக் கலவையைப் படம் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது. Benoît Delhomme என்ற பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் படத்தில் பணியாற்றியுள்ளார். திரைக்கதை உருவாக்கதில் பணியாற்றியவர் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் Jean-Claude Carrière.
படத்தின் ஒரு காட்சியில் மலையுச்சி மீது ஏறி அமர்ந்து சூரியனைக் காணுகிறார் வான்கோ. நிகரற்ற அழகைக் கண்டு வியந்து தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். இன்னொரு காட்சியில் ஆள் அரவமற்ற நிலப்பரப்பில் பெருவிருட்சம் ஒன்றை வரைந்து கொண்டிருக்கிறார் வான்கோ. பள்ளி மாணவர்களை இயற்கை வனப்பை காண அழைத்துக் கொண்டு வருகிறாள் ஒரு பள்ளி ஆசிரியர். மாணவர்கள் ஒவியரைக் கண்டதும் ஆரவாரமாக ஒடிவருகிறார்கள். அவர் என்ன வரைந்து கொண்டிருக்கிறார் என்று கேட்கிறார்கள். மரத்தின் வேர்களை வரைந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் வான்கோ. ஏன் மரத்தை வரையவில்லை என ஒரு மாணவன் கேட்கிறான். எதற்காக மரத்தை வரையவேண்டும். வேர்கள் தானே மரத்தின் ஆதாரம் என்று கேட்கிறார் வான்கோ. அவரைப் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் கூச்சலிடுகிறார்கள். இடையூறு செய்கிறார்கள். கோபம் கொண்டு அவர்களைத் துரத்தியடிக்கிறார். அந்த மாணவர்கள் அவரை நோக்கி கல்லெறிகிறார்கள்.
அன்றிரவு வீடு திரும்பும் வான்கோ மீண்டும் கல்லெறி படுகிறார். தன் மீது கல்வீசிய மாணவன் ஒருவனைத் துரத்திப்பிடிக்கிறார். அவனது தந்தையும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து வான்கோவை அடித்து துவைக்கிறார்கள். எதற்காக ஒரு கலைஞன் இப்படி அடிபடுகிறான். என்ன தவறு செய்துவிட்டான். உலகம் ஏன் இப்படி இரக்கமற்று நடத்துகிறது. அந்த வன்முறை கலைகளைப் புரிந்து கொள்ளாத உலகின் வெளிப்பாடு. உலகம் கலைஞர்களை ஒதுக்கி வைக்கிறது. சித்ரவதை செய்கிறது. முடக்கிப் போட முயற்சிக்கிறது. ஆனால் கலைஞர்கள் முடங்குவதில்லை. மீண்டும் எழுச்சியோடு செயல்படவே செய்கிறார்கள்.
வான்கோவிற்கு நல்ல நண்பன் துணையிருக்க வேண்டும் என்று ஒவியர் பால் காகினை உடன் இருக்க வைக்கிறான் தியோ. இதற்குப் பணமும் தருகிறான். இருவரும் ஒன்றாகப் படம் வரைகிறார்கள். குடிக்கிறார்கள். காகின் எளிதாகப் பெண்களுடன் பழகி நெருக்கமாகக் கூடியவன். அது வான்கோவிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது.
நீ ஒவியம் வரையும் போது பதற்றமாகிவிடுகிறாய். நிதானமாக, பொறுமையாக, தியானத்தில் இருப்பது போல ஒவியம் வரைய பழகிக் கொள் என்று அறிவுரை கூறுகிறான் காகின். ஆனால் ஒவியத்தை அப்படி வரைய முடியாது. அது தீவிரமான மனநிலையின் வெளிப்பாடு. சீற்றத்தை தானே வெளிப்படுத்தவே செய்யும் என்கிறார் வான்கோ.
காகின் வரைந்த ஒவியங்கள் விற்பனையாகின. அவன் புகழ்பெறுகிறான். வான்கோவை விட்டுப் பிரிந்து பாரீஸ் நகரிற்குப் போக முயற்சிக்கிறான். இதை அறிந்த வான்கோ துடித்துப் போய்விடுகிறார். அவனைத் தடுப்பதற்கு என்ன செய்வது எனப்புரியாமல் புலம்புகிறார். கல்லறைத்தோட்டத்தினுள் ஒடி அலையும் அந்தக்காட்சி மறக்கமுடியாதது.
பால்காகின் தன்னைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காகத் தனது இடது காதை துண்டித்து அதை ஒரு காகிதத்தில் சுற்றி வாசகம் ஒன்றை எழுதி அனுப்பி வைக்கிறார் வான்கோ. நட்பிற்காகக் காதை அறுத்துக் கொடுத்த ஒரே கலைஞன் வான்கோ மட்டுமே.
இச்செய்கையை உலகம் மனநலமற்றவனின் செயல் என்று புரிந்து கொள்கிறது. மனநல சிகிட்சைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபடுகிறார் வான்கோ. அதற்கு முன்பாக அவரைக் காண வரும் தியோவை கட்டிக் கொள்கிறார். அந்தக்காட்சி அபாரமானது. இரண்டு பெண்களைப் போலவே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். காதலியைக் கட்டிக் கொள்வது போலவே அண்ணன் தியோவை வான்கோ கட்டிக் கொள்கிறார்.
மனநல மருத்துவமனையில் இருந்த போதும் ஒவியம் வரைவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கபடுகிறது. அந்த நாட்களில் அவர் வரைந்த ஒவியங்கள் துர்கனவின் சித்திரங்களைப் போலவே இருக்கின்றன.
சூரியக்காந்தி பூவை வான்கோ வரைந்துள்ள விதம் நிகரற்றது. படத்தில் கருகிப்போன சூரியகாந்தி தோட்டம் முதலில் வருகிறது. பின்பு மலர்ந்த சூரியகாந்திகள் தோன்றுகின்றன. கோதுமை வயல்களை வான்கோ வரைந்துள்ள விதம் காற்றின் லயத்தைக் காட்சிப்படுத்துவதாகவுள்ளன. தனது நோட்புக்கில் அவர் விருப்பமான காட்சிகளை ஒவியமாக வரைந்து வைத்துக் கொள்கிறார். பின்பு அதிலுள்ள சில காட்சிகளை முழு ஒவியமாக வரைகிறார்.
பகலை விடவும் இரவு எப்போதும் அழகானது. புதிரானது. விசித்திரமானது என்கிறார் வான்கோ. கடலின் சீற்றத்தை அறிந்திருந்த போதும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே விரும்புகிறார்கள். ஒவியனும் அப்படியே. அங்கீகாரங்களை எதிர்பாராமல் கலையின் உன்மத்த பீடிப்பில் தொடர்ந்து வரையவே முயற்சிக்கிறார்கள்.
வான்கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை. முடிவு வேறுவிதமானது என்கிறது இந்தத் திரைப்படம். அவரது வாழ்க்கை வரலாற்றைப் புதிதாக எழுதியுள்ள ஸ்டீவன் நைபே, மற்றும் கிரெகோரி ஒயிட் ஸ்மித் புதிய தகவல்களைக் கூறுகிறார்கள். அதையே படமும் எதிரொலிக்கிறது
This is a film about painting and a painter and their relationship to infinity. It is told by a painter. It contains what I felt were essential moments in his life; this is not the official history – it’s my version. One that I hope could make you closer to him. Those paintings are not paintings of madness. They’re paintings of sanity. என்று வான்கோ திரைப்படம் பற்றிக் குறிப்பிடுகிறார் இயக்குனர் ஜுலியன்
ஒவியரின் வாழ்க்கையை அல்ல அவரது மனஉலகின் விசித்திரங்களையே படம் முதன்மைப்படுத்துகிறது. பொன்னிற வெளிச்சமும் உணர்ச்சிப் பெருக்கும், தனிமையின் தீரா அலைதலும் நிராகரிப்பும் கொண்டிருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.
கவிதை என்பது காகிதத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை. அது திரைச்சீலையில் வண்ணங்களாலும் எழுதப்படுகிறது. அப்படி எழுதப்பட்ட கவிதைகளே வான்கோவின் ஒவியங்கள். படமும் அத்தகைய ஒரு கவிதையாகவே உருவாக்கபட்டிருக்கிறது
••