நினைவில் ஒளிரும் காதல்

Past Lives 2023ல் வெளியான கொரியத் திரைப்படம். அழகான காதற்கதை. இயக்குநர் செலின் சாங்கின் முதற்படம் என்பதை நம்ப முடியவில்லை செலின் சாங் பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன்.

செலின் சாங் கொரியாவைச் சேர்ந்தவர். கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார். நாடக இயக்குநராகப் பணியாற்றியிருகிறார். ஆன்டன் செகாவின் நாடகத்தை இயக்கியிருக்கிறார். அவரது ஆதர்ச எழுத்தாளர் செகாவ்.

Past Lives அவரது முதற்படம். மிகுந்த கவித்துவத்துடன் கலைநேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் நாயகி நோரா இவரைப் போலவே நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். கொரியாவிலிருந்து அவளது பெற்றோர் கனடாவிற்கு இடம் மாறுகிறார்கள். செலின் போலவே நோராவும் நியூயார்க் நகரில் வசிக்கிறாள் . செலினின் பெற்றோர் போலவே திரைப்படத்திலும் நோராவின் பெற்றோர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை படமே அவரது சொந்த வாழ்க்கை நினைவுகள் தானா.

பள்ளி வயதில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு எவ்வளவோ எழுதப்பட்டிருக்கின்றன. திரைப்படமாகவும் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இப்படம் போல உண்மையாக, மனதிற்கு நெருக்கமாகப் படம் உருவாக்கப்படவில்லை.

சியோலில் வசிக்கும் நா யங் மற்றும் ஹே சங் இருவரும் ஒரே பள்ளியில் பயிலுகிறார்கள். வகுப்புத் தோழர்கள். நா யங் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுகிறாள். ஹே சங்கிற்கு எப்போதும் இரண்டாம் இடம் தான். ஒரேயொரு முறை அவளை முந்திக் கொண்டு முதல்மதிப்பெண் வாங்கிவிடுகிறான். அதனால் நா யங் கோவித்துக் கொண்டு எப்போதும் எதிலும் தானே முதலிடம் பெற வேண்டும் என்கிறாள். சைகோ என்று அவளைத் திட்டுகிறான் ஹே சங், பள்ளி வயதின் இனிமையான நாட்கள் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

திடீரென நா யங்கின் குடும்பம் டொராண்டோவுக்கு இடம் மாறிப் போகிறது. இதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. காலம் மாறுகிறது. ராணுவப் பயிற்சி பெறும் இளைஞனான ஹே சங் இப்போதும் அவளை நினைத்துக் கொண்டேயிருக்கிறான். நா யங் எங்கே இருக்கிறாள் என்று இணையத்தில் தேடுகிறான்

அவள் தனது பெயரை நோரா மூன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறாள். தற்போது நியூயார்க்கில் நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். புதிய நாடகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறாள். ஃபேஸ்புக் மூலம் அவளைக் கண்டறிகிறான். அவர்களுக்குள் மீண்டும் நட்பு மலர்கிறது. வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆயினும் மனதிலுள்ள காதலை சொல்லிக் கொள்வதேயில்லை.

தீவிரமாகத் தான் எழுத்து வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்காலிகமாக உறவை துண்டித்துக் கொள்வோம் என்று சொல்லி நோரா மீண்டும் அவனைப் பிரிகிறாள். அதை ஹே சங்கால் ஏற்க முடியவில்லை. மனம் உடைந்து போகிறான்..

நோரா எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் ஒன்றில் கலந்து கொள்கிறாள். அங்கே ஆர்தர் என்ற இளம்எழுத்தாளன் அறிமுகமாகிறான். இருவரும் நெருக்கமாகப் பழகுகிறார்கள். அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நோரா அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.

சீனாவிற்குச் சென்று மாண்ட்ரின் பயிலுகிறான் ஹே சங். படிப்பை முடித்துவிட்டுச் சியோலில் வேலைக்குச் சேருகிறான். அவனும் ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். நெருங்கிப் பழகுகிறான். ஆனால் பொருளாதாரக் காரணங்களால் அந்த உறவு முறிந்து போகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹே சங் நியூயார்க் செல்ல திட்டமிடுகிறான். அதன் உண்மையான நோக்கம் நோராவை சந்திக்க வேண்டும் என்பதே. நியூயார்கில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். படத்தின் மிகச்சிறந்த பகுதி அதுவே. நோராவோடு ஹே சங் மேற்கொள்ளும் ஊர்சுற்றலும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் அற்புதமானவை.

ஒரு நாள் நோராவிற்கு வீட்டிற்கு வருகை தரும் ஹே சங் அவளது கணவன் ஆர்தரைச் சந்திக்கிறான். இந்தக் காட்சி ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை நினைவூட்டியது.

அவர்கள் ஒன்றாக இரவு உணவிற்குச் செல்கிறார்கள். ஆர்தர் முன்பாகவே கடந்த கால நினைவுகளைப் பேசிக் கொள்கிறார்கள். ஊரைவிட்டு அவள் போகாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்கிறான் ஹே சங். கடந்த காலம் மாற்ற முடியாதது ஆயினும். ஏக்கம் கொண்ட மனது கடந்தகாலத்தை மாற்றியமைக்க விரும்புகிறது..

ஹே சங்கை சந்தித்த இரவில் வீடு திரும்பும் நோராவிடம் ஆர்தர் கேட்கும் கேள்விகளும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று ஹே சங் கேட்டதற்கு ஒரே தொட்டிக்குள் வைக்கபட்ட இரண்டு செடிகள் வேர்விடுவதற்கு எவ்வளவு போராடுமோ அவ்வளவு சண்டைகள் கொண்டது என்கிறாள் நோரா.

கொரிய மொழியில் இன்-யுன். என்றொரு வார்த்தையிருக்கிறது அதன் பொருள் “விதி”. அல்லது “ஊழ்”. பௌத்த சமயச் சொல்லாகும். இரண்டு அந்நியர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களின் உடை உரசிக் கொண்டால் அது தற்செயல் கிடையாது. அது இன்-யுன் ஆகும். ஏனென்றால்,கடந்தகால வாழ்க்கையில் அவர்களுக்கு இடையே ஏதாவது உறவு இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தம். எட்டாயிரம் இன்-யுன் இழைகள் கொண்ட இருவரே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்கிறார்கள். நாம் ஆயிரம் காலப் பந்தம் என்று சொல்வதன் மறுவடிவம் போன்றதே இந்த நம்பிக்கை. இன்-யுன் குறித்துப் படத்தில் நோரா பேசுகிறாள். அதை முழுவதும் நம்புகிறாள். அல்லது அப்படிச் சொல்லி தனது செயலை நியாயப்படுத்திக் கொள்கிறாள். ஒருவேளை முந்தைய பிறவில் ஹே சங் தான் பெண்ணாக இருந்திருப்பானோ என்னவோ.

சொந்த ஊரைவிட்டு அவர்கள் ஏன் திடீரெனக் கனடாவிற்கு இடம் பெயர நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கு நோராவின் அம்மா நேரடியாகப் பதில் சொல்வதில்லை. ஆனால் ஒன்றை இழந்தால் பெரிதாக மற்றொன்று கிடைக்கும் என்று பதில் தருகிறாள். அப்படி அவர்களுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்ததா என்று தெரியவில்லை.

அம்மாவை போலவே நோரா கடந்தகாலத்திலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கையை வாழுகிறாள். ஆனால் அவளது மனது கடந்தகால வாழ்விற்கு, சொந்த தேசத்திற்கு ஏங்குகிறது. அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. ஹே சங் மனதில் பனிரெண்டு வயது சிறுமியாக நா யங் இருக்கிறாள். நியூயார்க்கில் அவன் காணுவது நோரா மூன். அவள் இன்னொருவன் மனைவி. அவர்கள் உரையாடுவதன் வழியாக மட்டுமே நெருக்கமாகிறார்கள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு நோராவை ஹே சங் நியூயார்க்கில் சந்திக்கும் காட்சியில் அவனது முகத்தில் வெளிப்படும் தயக்கம். ஆசை, மகிழ்ச்சி, தன் உணர்ச்சிகளை முழுவதும் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவது என அக்காட்சி அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. அவர்கள் வேடிக்கையான சப்தம் எழுப்பிக் கொண்டு நடக்கும் விதம் அபாரம். படம் முழுவதும் ஹே சங்கின் கண்களில் காதலின் ஏக்கம் உறைந்திருக்கிறது.

நோரா ஒரு ஊஞ்சலைப் போல முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டேயிருக்கிறாள். வாழ்க்கையின் வேகம் அவளை இழுத்துச் செல்கிறது. விரும்பாத சில முடிவுகளை எடுக்கிறாள். அதனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுகிறாள்.

காலம் உருவாக்கிய பிரிவை மறப்பதற்கு நினைவுகளே துணையாகின்றன. நினைவில் வாழுகிறவனுக்கு அந்தக் காதலே போதுமானது. ஹே சங் அப்படித்தானிருக்கிறான்.

Francisco de Quevedo எழுதிய Love constant beyond death என்ற கவிதையைப் படித்திருக்கிறீர்களா.  அதில் memory will not abandon love என்ற வரி இடம்பெற்றுள்ளது.  அது போன்ற காதலின் ஒளிரும் நினைவுகளை இப்படமும் பேசுகிறது

0Shares
0