புதிய சிறுகதை
ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை.

ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் ஒரு பெட்டியினுள் இருந்தது. அந்தக் கொலைக்கேஸ் பத்திரிக்கைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கொலையைச் செய்த டாக்டர் கடைசியில் அந்தமானில் வைத்து கைது செய்யப்பட்டார். அதிலிருந்து இப்படிக் கைவிடப்பட்ட மரப்பெட்டி இருப்பதாகக் கேள்விபட்டாலே காவல்துறை எச்சரிக்கையாகி விடுவார்கள்.
மார்க்கண்டன் அந்த மரப்பெட்டியைத் திறக்கச் சொல்லி பரிசோதனை செய்த போது கெட்டுப்போன காளான்கள் டப்பா டப்பாவாக இருப்பதைக் கண்டுபிடித்தான். இதை எங்கே கொண்டு போகிறார்கள். எதற்காகக் கைவிட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை. குப்பையில் கொண்டு போய்க் கொட்டும்படி துப்பரவு பணியாளர்களிடம் சொல்லிவிட்டு ஸ்டேஷன் திரும்பிய போது அவனது மேஜையில் அந்தப் பர்ஸை வைக்கப்பட்டிருந்தது.
ரயிலில் காணாமல் போகும் பொருட்களைத் தேடிக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் வேலை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ரயில்வே காவல்துறை என்பது விசித்திரமான உலகம். பயணத்தின் ஊடே இவ்வளவு குற்றங்கள். பிரச்சனைகள் ஏற்பட முடியுமா என வியப்பாக இருக்கும்.
செல்போன். லேப்டாப். சூட்கேஸ்கள். வாட்ச். கம்மல், பைக் சாவி, மூக்கு கண்ணாடி, மாத்திரை டப்பா, வீட்டுச்சாவி, பர்ஸ், கேமிரா, குடை, கிதார், மடக்கு கத்தி, பிளாஸ்க், கூலிங்கிளாஸ், ஸ்வீட் பாக்ஸ், விளையாட்டுப் பொம்மைகள் என ஏதேதோ பொருட்கள் ரயிலில் கிடந்ததாகக் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பலர் தொலைத்த பொருளைத் திரும்பக் கேட்டு வருவதேயில்லை. விநோதமாக ஒருமுறை ஒருவரின் பல்செட் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதை யாரிடம் ஒப்படைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.
விலைமதிப்புள்ள பொருளை தொலைத்த சிலர் உடனே பதற்றத்துடன் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ரயில் என்பது ரகசிய கைகள் கொண்டதாகத் தோற்றம் அளிக்கும் போலும். அவர்கள் கண்களில் உடன் வந்த பயணிகள் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக மாறிவிடுவார்கள்.
அன்றாடம் ரயிலில் எண்ணிக்கையற்ற பொருட்கள் தொலைக்கப்படுகின்றன. இதில் குடையும் சாவிகளும் தான் அதிகம். சமீபத்தில் அந்த இரண்டினையும் விடச் செல்போன் அதிகம் தொலைக்கப்படுகிறது.
பயணத்தின் போது ஒருவன் தன்னைப் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருப்பதால் தான் கொண்டுவந்த பொருளை மறந்துவிடுகிறானோ என்று மார்கண்டனுக்குத் தோன்றும்.
சிறுவயதில் வீதியில் ஏதாவது ஒரு பொருளைக் கண்டெடுத்தால் அதை அதிர்ஷ்டம் என்றே அவன் நினைத்திருந்தான். அவனுடன் படித்த தாசன் ஒரு நாள் நூறு ரூபாயைச் சாலையில் கிடந்து கண்டெடுத்தான். அதை வைத்துக் கொண்டு அவர்கள் இரண்டு ஷோ சினிமா பார்த்தார்கள். இப்ராகிம் கடையில் போய்ப் பரோட்டா சாப்பிட்டார்கள். நிறையச் சாக்லெட் வாங்கித் தின்றார்கள். அன்றிலிருந்து சாலையில் ஏதாவது பணமோ நாணயமோ கிடைக்குமா எனப் பார்த்தபடியே மார்கண்டன் நடந்திருக்கிறான். ஆனால் எதுவும் கிடைத்ததில்லை.
காவல்துறையில் வேலைக்கு வந்தபிறகு பொருளைத் தொலைத்தவர்களின் முகங்களையும் துயரக்குரல்களையும் கேட்டும் பார்த்தும் இழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பொருட்கள் தொலைவது ஒரு மாயம். அது எப்படி நிகழுகிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திருட்டுப் போன பொருட்களின் கதை வேறு. ஆனால் தானே ஒன்றை மறந்து வைத்துவிட்டுப் போவது ஒரு மயக்கநிலை. அது யாருக்கு எப்படி ஏற்படும் என்று கண்டறியவே முடியாது. காவல்துறையில் வேலை செய்தாலும் அவனே இரண்டு முறை பைக்சாவியைத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை பேங்கிலே கூலிங்கிளாஸை வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறான். இன்னொரு முறை வீட்டுக்கு வாங்கிப் போன ஸ்வீட் பாக்ஸை பார்மசி கடையிலே மறந்துவிட்டுப் போயிருக்கிறான். காவல்துறையில் வேலை செய்தாலும் மறதியிடமிருந்து தப்பிக்க முடியாது தானே

அன்றைக்கும் அப்படி ஒரு செல்போன். ஒரு சாவிக்கொத்து, ஒரு லெதர்பேக் என நாலைந்து பொருட்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தனது இருபது வருஷ பணிக்காலத்தில் மார்கண்டன் வேறுவேறு ரயில் நிலையங்களில் பணியாற்றியிருக்கிறான். இதில் ஒரு நாள் கூடத் தொலைத்த பொருட்களைக் காணாமல் இருந்ததில்லை. எல்லா ஊர்களிலும் மறதி ஒன்றுபோலவே இருக்கிறது. மனிதர்கள் ஒன்று போலவே பொருட்களைத் தொலைக்கிறார்கள்.
திடீரென ஒரு பொருள் உரியவரிடமிருந்து ஒளிந்து கொண்டுவிடுகிறது. எளிய பொருட்களைக் கையாளுவது எளிது என நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. எளிய பொருட்கள் சட்டென உங்களிடமிருந்து ஒளிந்து கொண்டுவிடும். மறைந்துவிடும். கண்டுபிடிக்கவே முடியாது.
ரயிலில் தொலைத்த பொருளை உரியவரிடம் ஒப்படைக்கும் போது சிலர் அதை ஏதோ புத்தம் புதிய பொருள் போலத் திரும்பத் திரும்பப் பார்ப்பதையும் ஆசையாகத் தடவிக் கொள்வதையும் கண்டிருக்கிறான்.
மீட்கப்படும் பொருட்கள் புதிதாகிவிடுகின்றன என்பதே நிஜம். எல்லாப் பொருட்களும் மனிதர்களால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்தக்கூடியவை. பின்பு மாயக்கரம் ஒன்றை அதை அவர்களிடமிருந்து பிரித்து விடும். உருமாற்றிவிடும். அதன்பிடியிலிருந்து எதுவும் தப்ப முடியாது.
எந்த ரயிலில் எந்தப் பொருள் கண்டறியப்பட்டது என்பதை ஒரு பதிவேட்டில் அவர்கள் முறையாகப் பதிவு செய்தல் வேண்டும். அன்றைக்கும் ரயில் வந்த நேரம். பொருளை ஒப்படைத்தவர் பெயர், என்ன பொருள், எங்கே கிடந்தது போன்றவற்றைப் பதிவு செய்துவிட்டு ஒவ்வொரு பொருளாகப் பார்வையிட்டான்.
சில நேரம் தொலைத்த செல்போனை கண்டறிய உரியவரே தொடர்ந்து அழைப்பதுண்டு. அப்படி அன்றும் தொலைத்த செல்போனுக்கு உரியவன் அழைத்தபோது அவனை ஸ்டேஷனில் வந்து பெற்றுக் கொள்ளும்படியாகச் சொன்னான். ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த அந்தப் பயணி உடனே வருவதாகச் சொன்னான். அவனது குரலின் நடுக்கத்தை மார்கண்டனால் உணர முடிந்தது
ஹீப்ளி ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற பர்ஸை திறந்து அதிலிருக்கும் பொருட்களை வெளியே கொட்டினான். அது ஏதோ ஒரு நகைக்கடை இனாமாகக் கொடுத்த பர்ஸ். நகைக்கடையின் முத்திரையாக இருந்த மான் கொம்புகள் விரிந்ததாக இருந்தது. நான்காக மடிக்கப்பட்ட ஒரு ஐம்பது ரூபாய். ( அப்படி ரூபாய் நோட்டுகளை மடிப்பது மார்கண்டனுக்குப் பிடிக்காது. ) ஒரு ரூபாய். ஐந்து ரூபாய் நாணயங்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு. ஸ்டிக்கர் பொட்டு அட்டை, இரண்டு தலைவலி மாத்திரைகள். ஒரு விக்ஸ்டப்பா, ஹேர்பின், ஒரு பக்கம் பிள்ளையார் மறுபக்கம் சாய்பாபா படம் உள்ள சிறிய பிளாஸ்டிக் உறை. அடகுகடையின் விசிட்டிங் கார்ட், ஒரு சாக்லேட், இரண்டு ஊக்குகள் இருந்தன. நிச்சயம் இந்தப் பெண் தொலைத்த பர்ஸை தேடி வரமாட்டாள். அவளது முகவரியோ, ஏதாவது தொலைபேசி எண்ணோ கிடைக்குமா என்று பார்ப்பதற்காக அடகுகடை விசிட்டிங் கார்ட் பின்னால் பார்த்தான்.
அதில் 3600 ரூபாய் என்று பேனாவால் கிறுக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் உறையிலிருந்து சாய்பாபா, பிள்ளையார் படங்களை வெளியே எடுத்தான். இரண்டு படங்களுக்கும் நடுவே பழைய புகைப்படம் ஒன்று இரண்டாக மடிக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகைப்படத்தை விரித்துப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. அது அவனது புகைப்படம். அதுவும் கல்லூரி நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படம். எப்போது எங்கே வைத்து எடுத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் புகைப்படத்தில் அவனோடு யாரோ நின்றிருக்கிறார்கள்.
அந்த ஆளைத் துண்டித்துவிட்டு தனது புகைப்படத்தை மட்டுமே அவள் வைத்துக் கொண்டிருக்கிறாள். இருபது வயதிருக்கும், கைப்பிடிச் சுவர் ஒன்றில் கைவைத்தபடியே நின்றிருக்கிறான். சிறிய தாடி, பச்சை வண்ண சைனா காலர் சட்டை, கறுப்புப் பேண்ட். குழப்பமான கண்கள். இடது கண்ணை மறைக்கும் தலைமுடி. உடன் நிற்பவன் யார், எங்கே அந்தப் புகைப்டபம் எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
இதை ஏன் இவள் தனது பர்ஸில் வைத்திருக்கிறாள். இப்படி ஒரு புகைப்படம் தன்னிடம் கூட இல்லையே. யார் அந்தப் பெண். எதற்காகத் தனது புகைப்படத்தை இத்தனை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறாள். யோசிக்க யோசிக்கக் குழப்பமாகயிருந்தது
ஹீப்ளி ரயிலில் சென்னை வந்திருக்கிறாள் என்றால் யாராக இருக்கும். அவனுக்கு நினைவு தெரிந்தவரை யாரையும் காதலிக்கவில்லை. எந்தப் பெண்ணோடும் நெருங்கிப் பழகியதுமில்லை.
கல்லூரியில் அவன் அதிகமும் விளையாட்டில் தான் கவனம் செலுத்தினான். வகுப்பு இல்லாத நேரம் பேஸ்கட் பால் ஆடுவான். அதுவும் இல்லை என்றால் மைதானத்தில் ஓடுவான். பையன்கள் கிரிக்கெட் ஆடுவதை வேடிக்கை பார்ப்பான். ஒரு போதும் நூலகத்திற்கோ, கேண்டியனுக்கோ போனதில்லை. அரட்டை அடித்ததில்லை . பெரும்பாலும் தனியே எதையோ யோசித்துக் கொண்டிருப்பான். சில வேளை தனக்குதானே பேசிக் கொண்டிருப்பதும் உண்டு.
நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போதும் நண்பனின் தங்கையோ, அக்காவோ ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தைக்கு மேல் பதில் சொல்ல மாட்டான். சில நேரம் அவர்களை திரையரங்கத்தில் எதிர்பாராமல் சந்திக்கும் போது கூடத் தெரியாதவன் போலவே நடந்து கொள்வான்.

படித்து முடித்த இரண்டு ஆண்டுகளில் அவன் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். ரயில்வே போலீஸில் வேலை என்பதால் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய முடியும். ஆகவே நினைத்த நேரம் சொந்த ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்து வருவான். அம்மா அவனது சொந்தத்தில் உள்ள பெண்ணான சாரதாவைத் திருமணம் செய்து வைத்தாள். இரண்டு பிள்ளைகள். புரசைவாக்கத்தில் வீடு.
இப்போதும் ஸ்டேஷனில் ஏதாவது இளம்பெண்கள் புகார் கொடுக்க வந்தால் அதிகம் பேச மாட்டான். இப்படி ஒதுங்கியே இருக்கும் தன்னை எதற்காக ஒரு பெண்ணிற்குப் பிடித்திருக்கிறது. ஏன் அவள் ரகசியமாகத் தனது புகைப்படத்தைச் சாமி படங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள் என்று குழப்பமாக வந்தது.
அதே நேரம் யாரோ முகம் தெரியாத ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள். தனது புகைப்படத்தை ஆசையாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மிகுந்த சந்தோஷமாகவும் இருந்தது
நம்மை நமக்குத் தெரியாமல் நேசிப்பவர்கள் இருக்கிறார் என்பது எவ்வளவு சந்தோஷம். தன் மனைவி தனது பர்ஸில் ஒரு போதும் இப்படி அவனது புகைப்படத்தை வைத்துக் கொண்டதில்லை. ஆனால் இந்தப் பெண் வைத்திருக்கிறாள்.
அந்தப் பெண் எப்படியிருப்பாள். யாராக இருக்ககூடும் என்று நினைவில் தெரிந்த முகங்களாகத் தேட ஆரம்பித்தான்.

ஒருவேளை தான் கல்லூரியில் படித்த நாட்களில் படித்தவளாக இருப்பாளோ. அப்படி இருந்தால் ஏன் அவள் தன்னிடம் ஒருமுறை கூடப் பேசியிருக்கவில்லை. இல்லை யாராவது நண்பனின் தங்கையா, இல்லை தனது வீதியில் வசித்த பெண்களில் ஒருத்தியா, சைக்கிளில் டைப்ரைட்டிங் கற்கச் செல்லும் பெண் இருந்தாளே அவள் தான் இவளா, போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்த நெளிந்த கூந்தல் கொண்ட பெண்ணா, எங்கேயிருந்து இந்தப் புகைப்படம் அவளுக்குக் கிடைத்தது
யாரென அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேஜையில் கொட்டப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் இப்போது விநோத தோற்றம் கொள்ளத் துவங்கின.
அவளுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. விக்ஸ் டப்பா வைத்திருக்கிறாள். ஆகவே ஜலதோஷமும் பிடித்துக் கொள்கிறது. தன்னைப் போலவே அவளும் நடுத்தர வயதில் தானிருப்பாள். அடகுக்கடை ஒன்றின் விசிட்டிங் கார்டை வைத்திருக்கிறாள். நிச்சயம் கஷ்டப்படுகிறவளாக இருக்கக்கூடும். மூவாயிரத்து அறுநூறு ரூபாய்க்கு என்ன பொருளை அடமானம் வைத்திருப்பாள். வளையலாக இருக்குமோ, அல்லது மோதிரமா,
பர்ஸில் இருந்த பொருட்களைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கும் இந்த விளையாட்டு அவனுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது.
தனது புகைப்படத்தைக் காவல்நிலையத்திலுள்ள யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதால் உடனே தனது பர்ஸில் வைத்துக் கொண்டான்.
அந்தப் புகைப்படம் கிடைத்தவுடன் சட்டெனத் தனது வயது கலைந்து போய்விட்டதைப் போலவே உணர்ந்தான். கல்லூரியில் படித்த நினைவுகள் நிறைவேறாத ஆசைகள். அந்த வயதில் சந்தித்த மோசமான வறுமை என மறந்து போன நினைவுகள் மீண்டும் மனதில் தோன்ற ஆரம்பித்தன
ஏதாவது வேலையாக ஊர்பக்கம் போகும்போதும் கல்லூரி பக்கம் போகத் தோன்றியதேயில்லை. உடன் படித்த நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போதும் அவன் நட்பாக உணரவேயில்லை. கல்லூரி வாழ்க்கை எல்லாம் யாரோ ஒருவனுக்கு நடந்தவை என்றே எண்ணிக் கொள்வான்
அவனிடம் பள்ளியில் படித்தபோது எடுத்த குரூப் போட்டோ ஒன்று கூடக் கிடையாது. உண்மையில் அவன் அதிகம் புகைப்படம் எடுத்துக் கொண்டதே கிடையாது. கல்யாண ஆல்பம் மட்டும் தான் அவன் வீட்டிலிருக்கிறது.
ஆனால் அவன் மனைவி நிறையக் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை வைத்திருந்தாள். அடிக்கடி அவற்றை எடுத்துப் பார்த்துக் கொள்வாள். மகளுக்கோ, மகனுக்கோ காட்டுவாள். எட்டு வயதில் எப்படியிருந்தேன் என்று மார்க்கண்டனுக்கு நினைவேயில்லை.
சிவப்பு பர்ஸை யார் கொண்டு வந்து கொடுத்தது என்று கான்ஸ்டபிளிடம் கேட்டான் மார்கண்டன்
“வித்யானு ஒரு பொண்ணு. போன் நம்பர் இருக்கு.. வேணுமா“
“சொல்லுங்க“ என்று அந்த நம்பரைக் குறித்துக் கொண்டான்
ஒருவேளை அவளும் இந்தப் பெண்ணும் ஒரே கம்பார்ட்மெண்டில் பயணம் செய்து வந்திருக்கக் கூடும். அவளிடம் கேட்டால் இப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து தொடர்பு கொண்டான். போன் ரிங் போனது. ஆனால் எடுக்கவில்லை. இரண்டாம் முறை அழைத்த போது அந்தப் பெண் பேசினாள்
“அன்ரிசவர்ட் கம்பார்ட்மெண்டில் கிடந்தது“ என்றாள்.
அவளுக்கும் யாருடைய பர்ஸ் என்று தெரியவில்லை. தனது புகைப்படம் வைத்திருந்த பெண் எந்த ஊரில் ரயிலில் ஏறினாள். எதற்காகச் சென்னை வந்திருக்கிறாள் என்று எதையும் மார்கண்டனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரயில்வே கேமிராவில் ஒருவேளை பதிவாகியிருக்குமா. எதற்கும் அதையும் பார்த்துவிடலாம் என்று கேமிரா அறைக்குச் சென்றான். அன்றைக்கு ரயில் நிலையத்தில் நிறையக் கூட்டம். ஏராளமான ஆட்கள். தெளிவற்ற முகங்கள். அதில் எந்தப் பெண் அவன் போட்டோ வைத்திருந்தவள் என்று அறிய முடியவில்லை
அந்தப் புகைப்படம் ஒரு சுழல் போல அவனை உள்ளே இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது. தன்னைப் பற்றித் தான் வைத்திருந்த பிம்பம் உண்மையில்லையா. யாரோ ஒரு பெண்ணிற்கு ஏன் தன்னைப் பிடித்திருக்கிறது. அவளை எதை ரசித்திருக்கிறாள். பழகாத பெண்ணாக இருந்தால் இப்படிப் புகைப்படத்தை ஒளித்து வைத்துக் கொள்ள மாட்டாளே. யாராக இருக்கும். நிச்சயம் அவளுக்கும் தன்னைப் போலவே திருமணமாகி இருக்கும். கணவனுக்குத் தெரியாமல் தான் இந்தப் புகைப்படத்தை வைத்துக் கொண்டிருப்பாள். நினைவின் சுழல் அவனை உள் இழுத்துக் கொண்டது.
திடீரெனக் காவல்நிலையத்தினுள் ஒரு வானவில் தோன்றியது போலிருந்தது. வெளியே நடந்து போய்ப் பிளாட்பாரக் கடையில் ஒரு டீ சாப்பிட்டான். வழக்கமாகச் சாப்பிடும் தேநீர் இன்றும் அபார சுவையுள்ளதாக இருந்தது. தொலைவில் கேட்கும் சினிமா பாடலை ரசித்துக் கேட்டான். உலகம் சட்டென எடையற்றுப் போய்விட்டது போல உணர்ந்தான்.
தான் இப்போது நடுத்தரவயதுடையவனில்லை. அதே கல்லூரி காலத்து இளைஞன். மதிய வெயிலைப் போல உக்கிரமானவன். அவனே மறந்துவிட்ட அவனை இளமைக்காலத்தை அந்தப் பெண் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். யாரோ சிலரது நினைவில் நாம் எப்போதும் இளமையாக இருக்கிறோம்.
இவ்வளவு ஆசையுள்ள பெண் ஏன் தன்னை ஒருமுறை கூடத் தேடி வரவில்லை. எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை என யோசித்தான்.
அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் கொப்பளிக்கத் துவங்கியது. அன்று வீடு திரும்பிய போது அவனது மனைவி வயதான பெண்ணாகத் தோன்றினாள். அவளது தலையில் தெரியும் ஒன்றிரண்டு நரைமயிர்கள் கூடத் துல்லியமாக அவன் கண்ணுக்குத் தெரிந்தன. மகளும் மகனும் கூட யாரோ போலிருந்தார்கள்.
அவர்களிடம் தனது கல்லூரி காலப் புகைப்படத்தைக் காட்டலாமா என்று நினைத்தான். பிறகு அது எதற்கு வேண்டாமே என்றும் மனதில் தோன்றியது.
எங்கே கிடைத்தது என்று சொல்லாமல் மகளிடம் மட்டும் காட்டலாம் எனத் நினைத்துக் கொண்டு, மகளை அருகில் அழைத்துப் பர்ஸில் இருந்த பழைய புகைப்படத்தைக் காட்டினான்
“நீயாப்பா“ என்று வியப்போடு கேட்டாள் சரண்யா
“நானே தான்“ என்றான் மார்கண்டன்
“அப்போ நிறையத் தலைமுடி இருந்திருக்கு. இப்போ தான் கொட்டிபோச்சி. வழுக்கை மண்டை“ என்று சிரித்தாள் சரண்யா
“காலேஜ்ல படிக்கிறப்போ எடுத்தபடம்“
“அப்பவும் உம்னு தான் இருந்திருக்கே“ என்று சொன்னாள் சரண்யா. பிறகு அந்தப் புகைப்படத்தைத் தன் அம்மாவிடம் கொண்டு போய்க் காட்டினாள்
சாரதா அவனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு“ என்று ஒரு வார்த்தை தான் சொன்னாள். வேறு எதையும் கேட்கவில்லை. ஏன் இவர்களுக்குத் தனது கல்லூரி நாட்கள் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை இந்தப் போட்டோ தன் வீட்டில் இருந்திருந்தால் ஏதோ ஒரு பழைய ஆல்பத்தில் வைத்துப் பெட்டியில் தான் போட்டிருப்பார்கள். இப்படி ஆசையாகப் பர்ஸில் வைத்திருக்க மாட்டார்கள்.
மனைவியைச் சீண்டும் விதமாக மார்கண்டன் கேட்டான்
“உன் காலேஜ் போட்டோவை காட்டு“
“அது எதுக்கு இப்போ“ என்றபடியே அவள் கேரட்டை துருவ ஆரம்பித்தாள்
“அதுல எப்படியிருக்கேனு பார்க்கணும்“ என்றான்
“இருக்கிற அழகு தான் இருக்கும்“ என்றபடியே அவள் சமையல் வேலையில் ஈடுபடத் துவங்கினாள்.
நம்மிடம் குடும்பத்தினருக்கு தெரியாத ஏதோ ஒன்றை வெளியாட்கள் கண்டறிந்துவிடுகிறார்கள். ஆராதிக்கிறார்கள். அந்தப் பழைய புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணாடி முன்பாக நின்று பார்த்தான். இரண்டுக்கும் இடையில் எவ்வளவு மாற்றங்கள். புகைப்படங்கள் காலம் கடந்து போகும்போது தான் ஒளிர ஆரம்பிக்கின்றன. இருபது வயதின் புகைப்படம் ஐம்பது வயதில் தான் ஒளிரும் படமாக மாறுகிறது. அந்தந்த வயதுகளில் புகைப்படம் சந்தோஷத்தின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் காலம் கடந்துவிட்டால் அது நினைவின் அடையாளமாக மாறிவிடுகிறது.
இவ்வளவு பெரிய சென்னை நகரில் அவள் எங்கிருப்பாள். இந்தப் புகைப்படத்தைத் தவறவிட்டதற்காக வருத்தம் அடைவாளா. அவளாகவே காவல் நிலையத்திற்கு வந்து தொலைந்த பர்ஸை பற்றிக் கேட்க கூடும் என்றும் தோன்றியது. அப்படி ஒரு சந்திப்பு நடந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அந்தப் புகைப்படம் கிடைத்த நாளிலிருந்து அவன் மாறத்துவங்கினான். அடிக்கடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். பழைய நண்பர்களிடம் பேசினான். ஒருமுறை சொந்த ஊருக்குப் போய் வந்தான். நண்பர்களின் தங்கைகள் பற்றி விசாரித்தான். அவனது வீதியில் வசித்த குடும்பங்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டான். எந்த விதத்திலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்றாடம் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் கிளம்பும் வரை அந்தப் பெண் வருவாளா என்று காத்திருப்பான். இரவில் பணியாற்றும் நேரங்களில் அந்தப் புகைப்படத்துடன் பிளாட்பார பெஞ்சில் உட்கார்ந்து அவளையே நினைத்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் தனது பழைய நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஹூப்ளியில் இருக்கிறார்களா என்று விசாரித்தான். ஒருவருமில்லை.
தனது கல்லூரி நாட்களில் எடுத்த புகைப்படம் ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா என்று கேட்டுவாங்கினான். முருகனிடம் மட்டுமே ஒரேயொரு போட்டோ இருந்தது. அது ஊட்டி டூர் போனபோது எடுத்த போட்டோ. அதில் நாலைந்து பேர் ஒன்றாக இருந்தார்கள்
பழைய புகைப்படத்தின் பின்னுள்ள சுவர் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிய ஒரு தெரிந்த ஸ்டுடியோ ஒன்றில் கொடுத்து போட்டோவை பெரிதாக்கிக் கண்டறிய முயன்றான். அந்தச் சுவரில் ஏதோ எழுத்துகள் அழிந்த நிலையில் காணப்பட்டன. நிச்சயம் அது கல்லூரி சாலையிலிருந்த சுவர் தான். எப்போது இந்தப் போட்டோ எடுத்தோம் என்று நினைவில்லை. நமக்கு நடந்த விஷயங்கள் ஏன் இப்படி மறந்து போய்விடுகின்றன. இவற்றை எப்படி மீட்பது. தொலைந்த பொருளை மீட்பது போலத் தொலைந்த நினைவுகளை மீட்க முடியாதா. ஈரத்தை காகிதத்தால் எப்படித் தடுக்க முடியாதோ அப்படித் தான் பழைய நினைவுகளும். அது எழுவதை நாம் தடுக்கவே முடியாது.
நீண்டகாலம் ஓடாமல் நின்றிருந்த கடிகாரத்திற்கு யாரோ சாவி கொடுத்து ஓட வைத்துவிட்டதைப் போலவே அவனிருந்தான்.
பின்பு ஒரு நாள் அவளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக ஹூப்ளிக்குச் சென்றான். மழைக்காலமது. லேசான தூறல் பெய்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய ஊரில் எங்கே போய் அவளைத் தேடுவது. அவனுக்குத் தெரிந்த ஒரே முகவரி அந்த அடகுக்கடை விசிட்டிங் கார்டு மட்டும் தான். ஆகவே அந்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றான்.
நிச்சயம் அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும். அவன் போலீஸ்காரன் என்பதால் சேட் பயந்து போய்த் தனக்கு எதுவும் தெரியாது என்றார். ஒரு பெண் ஏதோ ஒரு பொருளை அடகுவைத்திருக்கிறாள். மூவாயிரத்து அறுநூறு ரூபாய் என்று சொன்னபோது பேரட்டினை புரட்டி நிறையப் பெண்களின் பெயர்களைச் சொன்னார். அதில் எந்தப் பெண் அவனது புகைப்படம் வைத்திருந்தவள். இந்தப் பெயர்களில் நடுத்தர வயது பெண் யார் என்று சேட்டிற்குத் தெரியவில்லை. அவர் எழுதிக் கொடுத்த முகவரிகளைத் தேடி ஆட்டோவில் சுற்றினான்.
யாருக்கும் அவனைத் தெரியவில்லை. அவன் தேடுகிற பெண் அவர்களில் இல்லை. ஆனாலும் ஹூப்ளியில் சுற்றித்திரிவது பிடித்திருந்தது. அந்த ஊர் அவனை நேசிக்கும் பெண் வசிக்கும் ஊர். சப்தமில்லாமல் சூரிய வெளிச்சம் வீடுகளுக்குள் நுழைந்துவிடுவது போலத் தனது வருகையும் அவள் மனதில் தானே அறியப்பட்டுவிடும் என்று நினைத்தான்.
ஒவ்வொரு வீதியாக நடக்கும் போதும் அவள் ஏதோ ஒரு கதவின் பின்னால் இருப்பது போலவே உணர்ந்தான். அவள் வரக்கூடுமோ என நினைத்து கோவிலுக்குச் சென்றான். அங்கிருந்த சிற்பங்களைக் காணும் போது அவளது நினைவாக இருந்தது. ஆசையாக ஒரு பெண் சிற்பத்தின் தலையை வருடிக் கொடுத்தான். திடீரென மழை வேகமெடுத்துப் பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையை அவளும் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது
பின்பு அவளது மணிபர்ஸில் இருந்த நகைக் கடைக்குச் சென்று விசாரணை செய்தான். அது போன்ற பர்ஸ் இருபதாயிரம் இனாமாக வழங்கப்பட்டிருப்பதால் யார் வைத்திருப்பார்கள் என கண்டறிய முடியாது என்றார்கள். தமிழ் பெண் என்று சொன்னதால் கடைப்பையன் ஒருவனை அனுப்பி முத்துசாமி மகளா இருக்கும், அவளை கூட்டிக்கிட்டு வா என்றார்கள்.
அவள் வரும்வரை பதற்றமாகவே இருந்தான் மார்கண்டன். ஆட்டோ வந்து நின்று அதிலிருந்து இருபது வயது பெண் இறங்கினாள். நிச்சயம் இவள் இல்லை என்றானது . அவள் எதற்காக விசாரணை செய்கிறீர்கள் என்று கேட்டாள். எப்படி சொல்வது எனத் தெரியாமல் ஒரு போலீஸ் கேஸிற்காக என்று பொய் சொன்னான். அவள் சிரித்துக் கொண்டே உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு என்றாள். அவளை அனுப்பிவிட்ட ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தபோது ரயில் பெண்ணின் பின்னலிட்ட நீண்ட கூந்தலைப் போலிருந்தது.
ரயில் பயணம் என்பது வெறும் நிகழ்வில்லை. அதனுள் சில மர்மங்களும் வெளிப்படாத ரகசியங்களும் விம்மல்களும் இருக்கத்தானே செய்கின்றன. இரவெல்லாம் மழை பெய்தபடியே இருந்தது. ரயிலில் அந்தப் பெண் வைத்திருந்த புகைப்படத்தைக் கையில் வைத்தபடியே வந்தான். அரூபமாக அந்தப் பெண்ணும் அருகிலிருந்து தன்னைக் காணுவது போலவே உணர்ந்தான்.
இருண்ட மழைநாளில் சட்டென ஒரு மின்னல்வெட்டில் உலகம் கொள்ளும் பெருவெளிச்சம் போல அந்தப் புகைப்படம் மனதில் அளவில்லாத சந்தோஷத்தை உருவாக்கிவிட்டது. அதை நீடிக்கச் செய்ய முடியாது. இதுவும் நிமிஷத்தில் தோன்றி மறையும் இன்பம் தான். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டறிந்தாலும் உறவை நீடிக்க முடியாது. அது தான் நிஜம்.
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரயில் வந்து நின்றபோது தொலைந்து போன ஆயிரக்கணக்கான பொருட்களில் தானும் ஒருவன் என உணரத் துவங்கினான். தன்னை அவள் தொலைத்திருக்கிறாள். ஆனால் தேடிவந்து பெற்றுக் கொள்ளமாட்டாள். உரியவர்களிடம் சேராத பொருட்களைப் போலவே தானும் கைவிடப்பட்டுவிட்டோம் என்று பட்டது.
ஒருவேளை தன்னிடம் வந்து சேரட்டும் என்று விரும்பி தான் பர்ஸை ரயில் பெட்டியில் விட்டுப் போனாளா?. அவளுக்குத் தான் காவல்துறையில் வேலை செய்வது நன்றாகத் தெரியும். தெரிந்து தான் இந்த விளையாட்டினை செய்திருக்கிறாளா. ?
வீடு திரும்ப ஆட்டோவில் ஏறிய போதும் அவள் நினைவிலிருந்து விடுபட முடியவில்லை. பாலைவனத்தில் தூரத்து நட்சத்திரத்தை பார்த்தபடியே செல்லும் வழிதவறிய பயணியைப் போலிருந்தான்.
வீடு வந்து குளித்தபோது அவளைத் தன்னால் கண்டறியவே முடியாது. தானாக நடந்தால் மட்டுமே உண்டு என்று தோன்றியது. சில நேரம் வானில் வெண்புகை நீண்ட சாலை போல வளைந்து வளைந்து செல்வதைக் கண்டிருக்கிறான். அந்த வெண்புகைச்சாலையின் வழியே வானிற்குள் போக முடியுமா என்ன. அது போன்ற மயக்கம் தான் இந்தத் தேடுதலும்
இனிமேலும் அவளைத் தேடி அலைவது வேண்டாம். போதும் என்று முடிவு கொண்டவனாகத் தனது பணிக்கு ஆயுத்தமானான்.
இரண்டு நாட்கள் விடுப்பின் பின்பாக வேலைக்குப் போனபோது ரயிலில் தொலைக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருட்கள் நிறையக் குவிந்திருந்தன. அந்தப் பொருட்களை முறையாகப் பதிவு செய்து உரியவரைத் தொடர்பு கொள்ளும் போது பழைய மனிதனாகத் திரும்பியிருந்தான்.
அவனது இருபது வயதில் என்ன நடந்தது. எப்படியிருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் முக்கியம். உலகிற்கு அதைப் பற்றிக் கவலையேயில்லை. அதை உணர்ந்தவன் போல ஆழமான பெருமூச்சைவிட்டபடியே பணியில் ஆழ்ந்து போனான்.
, கைக்கடிகாரம் அவனுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய ஒசையில் துடித்துக் கொண்டிருப்பது போல சில நாட்கள் பர்ஸில் வைத்திருந்த அந்தப் பழைய புகைப்படம் துடிப்பதாக அவனுக்குத் தோன்றும்.
அது போன்ற தருணங்களில் அது கற்பனையில்லை நிஜம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வான்.
•••