நிறங்களை இசைத்தல்

ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது.

மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார்.

பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் பாடம் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.

பின்யன் ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் நாடகாசிரியர். ஆகவே மிகுந்த கவித்துவத்துடன் கலையின் நுட்பங்களை விவரித்து எழுதியிருக்கிறார்.

இங்கிலாந்தின் லான்காஸ்டரில் பிறந்த இவரது தந்தை ஒரு மதகுரு. பின்யன் தனது கல்லூரிப்படிப்பினை ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலும் படித்தார், அங்குக் கவிதைக்கான நியூடிகேட் பரிசை வென்றார். அவர் 1893 முதல் 1933 இல் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் கலை குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதினார். அதில் கீழைத்தேயக் கலைகள் குறித்த நூல்கள் முக்கியமானவை.

பின்யன் தனது கலைகுறித்த பார்வையை உருவாக்கிக் கொள்ளப் பௌத்தம் மற்றும் கிறிஸ்துவச் சமயத்தின் வரலாற்றை ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். குறிப்பாகப் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்ற விதம் மற்றும் அங்கிருந்து ஜப்பானில் வேரூன்றியது. காந்தாரக்கலைகளின் வரலாறு கிரேக்கத்துடன் இந்தியாவிற்கு இருந்த கலைத்தொடர்புகள் என வரலாற்றினை மையமாக் கொண்டு அதிலிருந்து இந்தக் கலைகள் எப்படி உருவாகின என்பதை அடையாளப்படுத்துகிறார்.

குறிப்பாகப் பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பு சீனாவிலிருந்த ஓவியக்கலைஞர்களைப் பற்றிக் கூறும் பின்யன் அந்த ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்த போதும் அதற்கெனத் தனிச்சிறப்புகள் எதுவுமில்லை. ஆனால் பௌத்த சமயத்தின் வருகை சீன ஓவியங்களுக்குப் புதுப்பரிமாணத்தை உருவாக்கின. குறிப்பாகப் புத்தரின் வாழ்க்கை எப்படிச் சீன ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு மூலப்பொருளாக விளங்கியது என்பதை அழகாக விவரிக்கிறார்

கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கத்தினை எப்படி மேற்கத்திய ஓவியங்களில் துல்லியமாகக் காணமுடிகிறதோ அதற்கு இணையானது பௌத்த சமயத்தின் தாக்கம் என்கிறார்

இரண்டாம் நூற்றாண்டின் முன்பு வரை புத்தரின் உருவச்சிலைகள் செதுக்கப்படவில்லை. அதன்பிறகே புத்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்பத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. காந்தாரக்கலையின் வளர்ச்சியில் புத்தரின் உருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டது. குறிப்பாக அவரது தலையிலுள்ள சுருள் கேசம் கிரேக்கப்பாதிப்பில் உருவாக்கப்பட்டது.

மேற்கத்தியக் கலைகளுக்கும் கீழைத்தேயக் கலைகளுக்குமான அடிப்படை வேறுபாடு கலை குறித்த அதன் கண்ணோட்டத்தில் இருக்கிறது.

மனிதனை இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதும் மேற்கத்தியக் கலைகள் அவனது வெற்றிகள் மற்றும் சாதனைகள். தெய்வீகத்துடன் மனிதனுக்குள்ள உறவு மற்றும் அற்புதங்கள். மனிதனின் பாவம் மற்றும் தண்டனைகளை முதன்மையான கருப்பொருளாகக் கருதின. அதைத் துல்லியமாகச் சித்தரிப்பதைக் கலையின் நோக்கமாகக் கொண்டன.

ஆசிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் மனித உடல்கள் பிரம்மாண்டமாக்கப்படுவதில்லை.ஆனால் மேற்கத்தியச் சிற்பங்களில் உடலை மிகைப்படுத்துகிறார்கள். உடலின் பரிமாணத்தைப் பெரியதாக்கி சிற்பத்தை உருவாக்குகிறார்கள். இந்தப் பிரம்மாண்டம் காண்பவர்களை வியக்க வைக்கிறது.

கலையின் ஆதாரமாக வடிவமே கருதப்பட்டது. ஆகவே நிறங்களை விடவும் ஓவியத்தின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருள் தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய ஓவியர்கள் விரும்பினார்கள்.

காரணம் அது போன்ற ஓவியங்களே அறிவினைத் தூண்டக்கூடியது. கலையின் முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவை மகிழ்ச்சிப்படுத்தவும் வழிநடத்தவும் வேண்டும் என்று கலைஞர்கள் நினைத்தார்கள் என்கிறார் பின்யன். அது உண்மை என்பதைப் புகழ்பெற்ற மேற்கத்திய ஓவியங்களைப் பார்த்தாலே புரியக்கூடும்.

Chinese mural patterns backgrounds, Mogao caves. Before the Tang Dynasty.

ஏன் மேற்குலகம் நிறங்களை முக்கியமாகக் கருதவில்லை என்றால் நிறங்கள் பெரிதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டன. உணர்ச்சிகளை விடவும் அறிவைத் தான் கலை முக்கியமாகக் கருத வேண்டும் என்ற எண்ணம் மேற்கில் மேலோங்கியிருந்தது.

வடிவத்தினை முதன்மையாகக் கருதியதால் அதில் எல்லையற்ற பரிசோதனைகளை மேற்கத்தியக் கலைஞர்கள் செய்து வந்தார்கள். அதனால் புதிய கலைவெளிப்பாடுகளை அவர்களால் உருவாக்க முடிந்தது. கீழைத்தேய கலைகளில் வரம்பு உண்டு. மரபை மீறி ஒருவனால் செயல்படமுடியாது. எதை எல்லாம் வரையக்கூடாது என்பதினை தீர்மானமாக வரையறை செய்திருந்தார்கள். அத்துடன் கலைஞர்கள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவனது கலையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே மிகப்பெரிய சிற்பங்களைச் செய்தவர்கள் கூடத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

சீன ஜப்பானிய பெர்ஷிய ஒவியங்களில் வண்ணங்களே முதன்மையானது. அதுவும் வசீகரமான, அடர் வண்ணங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியது. தனித்துவமிக்க வண்ணங்களைப் பிரயோகிப்பதன் வழியே ஓவியத்தை மகத்தான கலைப்படைப்பாக மாற்றினார்கள்.

உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு ஏற்பவே வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று ரசாயானத்தைக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை வண்ணங்களை விட மேலாக அவர்களே விதவிதமான நிறங்களை உருவாக்கினார்கள். வான்கோ போன்ற ஓவிய மேதைகளே ஜப்பானிய ஓவியத்தின் வண்ணத்தைக் கண்டு மயங்கி அந்தப் பாணியைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிறத்தைத் தேர்வு செய்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும் ஓவியனின் ஆளுமை வெளிப்படுவதாகக் கீழை தேயக் கலைஞர்கள் நம்பினார்கள். அதைச் சீன ஜப்பானிய ஓவியங்களில் தெளிவாகக் காணமுடிகிறது. இசைக்கருவியை மீட்டுவது போலவே வண்ணங்களை மீட்ட வேண்டும். தேர்ந்த இசையில் வெளிப்படும் இனிமையை நிறங்களும் வழங்கும். அதை உருவாக்க கடுமையான பயிற்சிகள் அவசியம்.

சீனாவின் கலைகளே ஆசியக் கலைகளுக்கான துவக்கப்புள்ளி. அங்கே உருவாக்கப்பட்ட அழகியலே பிற நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. சீனக்கலைகள் புத்தியைக் காட்டிலும் புலன்களை நோக்கியே விரிவு கொள்கின்றன.

பண்டைய சீன ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களில் வடிவப் பரிசோதனைகள் மிகக் குறைவு. ஆனால் துல்லியமான கோடுகள் மூலம் அவர்கள் ஓவியத்திற்கு ஒரு லயத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஒழுங்கமைவு அபாரமானது. அது ஓவியத்தை உயிரோட்டமாக்குகிறது.

வண்ணத்தினை வெறும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்தவும் காட்சியின் பின்புலத்திலுள்ள சூழலை வெளிப்படுத்தவும் வண்ணம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய ஓவியர்களைப் போல சீனர்கள் மாடலை முன் வைத்து ஓவியம் வரையவில்லை. கற்பனையின் துணை கொண்டே ஓவியம் மற்றும் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனையின் வழியே இவ்வளவு துல்லியமாக உருவங்களை வெளிப்படுத்த முடிந்திருப்பதே அவர்களின் சிறப்பு.

சீன ஓவியங்களில் நிர்வாணத்திற்கு இடம் கிடையாது. நிர்வாணமாகப் பெண்ணை வரைவது ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம். ஆனால் மேற்குலகில் நிர்வாண ஓவியங்களை வரைவது, அதிலும் மாறுபட்ட கோணத்தில் நிர்வாணத்தைப் பதிவு செய்வது சிறந்த கலைவெளிப்பாடாகக் கருதப்பட்டது. ஏன் உடல்களை நிர்வாணமாக வரைவதைச் சீன தடைசெய்தது. அது வெறும் கலாச்சாரத் தணிக்கை மட்டுமில்லை. பாலின்பம் சார்ந்த ஒவியங்கள் பொதுவெளிக்கானதில்லை என்ற எண்ணம் சீனாவில் மேலோங்கியிருந்தது. மேலும் பெண் உடலைக் கொண்டாடுவது கலையின் நோக்கமாகக் கருதப்படவில்லை.

கிரேக்கம் மற்றும் சீனத்தின் ஓவியக்கலை பற்றி ஒரு பழங்கதையிருக்கிறது. அதில் எந்த நாட்டின் ஓவியம் சிறந்தது என்பதை நிரூபிக்க ஒரு போட்டி நடத்தப்பட்டது. ஒரு சுவரைத் தேர்வு செய்து அதில் விதவிதமான ஓவியங்களைச் சீனர்கள் வரைந்து தள்ளினார்கள். சுவரே ஒரு மிகப்பெரிய கேன்வாஸாக மாறியது போலிருந்தது. ஆனால் கிரேக்கர்கள் அது போன்ற ஒரு சுவரினை தேய்த்துத் துடைத்து சுத்தமாக்கி அந்தச் சுவர் ஒளிரும்படி செய்தார்கள். வெறும் சுவர் சொர்க்கத்தின் மாளிகைச்சுவர் போல மின்னியது. அந்தச் சுவரின் மூலையில் ஒரேயொரு படம் வரைந்தார்கள். இரண்டினையும் பார்வையிட்ட நடுவர்கள் கிரேக்க ஓவியர்களைச் சிறந்தவர்களாகத் தேர்வு செய்தார்கள். காரணம் அவர்கள் வடிவத்தை முதன்மையாகக் கொண்டவர்கள். சுவரை அவர்கள் ஒளிரச் செய்தபிறகே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டார்கள். அது தான் கிரேக்கக் கலையின் சிறப்பு என்கிறார் பின்யன்.

சீனாவில் இது போன்ற கலைஞர்களின் விசித்திரங்கள் பற்றி நிறையக் கதைகள் விளங்குகின்றன. டிராகன் ஒன்றை உயிரோட்டமாக வரைந்த ஓவியர் ஒருவர் அதை வரைந்து முடித்தபோது டிராகன் மூச்சுவிட்டு நிஜமாக வெளிப்பட்டுச் சுவரை உடைத்து எழுந்தது என்றொரு கதையிருக்கிறது. இது கலையின் உச்சத்தில் அது நிஜமாகிவிடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

மனித வாழ்க்கையின் நிலையாமையை ஆசியக்கலைகள் சுட்டிக்காட்ட விரும்பின. ஆகவே மலர்களை வரையும் போதும் அதை மகத்தான ஒன்றாக அவர்கள் சித்தரிப்பதில்லை. மலர்கள் இயல்பாக, அழகின் முழுமையுடன் வரையப்பட்டன. ஆனால் மேற்குலகில் காணப்படுவது போல வியப்பூட்டும் விதமாக வரையப்படவில்லை.

பௌத்தம் சார்ந்த தொன்மக்கதைகள். மாயக்கதைகள். அற்புத நிகழ்வுகள் மக்கள் மனதில் வேரூன்றியிருந்த காரணத்தால் அன்றாட வாழ்க்கையின் சித்திரங்களை விடவும் இந்த மாய, விநோத உலகினை, விந்தை விலங்குகள், உருவங்களைச் சீன ஓவியர்கள் அதிகம் வரைந்திருக்கிறார்கள். சிற்பமாக உருவாக்கியிருக்கிறார்கள். பூமியில் உள்ள வாழ்க்கையைப் போன்று வானிலும் பூமிக்கடியிலும் தனித்த வாழ்க்கையிருக்கிறது. அந்த ஒளிரும் அல்லது இருண்ட வாழ்க்கையின் காட்சிகளையும் அவர்கள் சித்திரமாக்கியிருக்கிறார்கள்.

கவிஞர் Wang Wei மிகச்சிறந்த ஓவியராகவும் விளங்கினார். இவரது ஓவியங்களில் வெளிப்படும் அழகு நிகரற்றது. Han Kan போன்ற ஓவியர்கள் பிரதானமாகக் குதிரைகளை மட்டுமே வரைந்தார்கள். எனச் சீன ஓவிய வரலாற்றின் அரிய கலைஞர்கள் பலரையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்

நாம் ஏன் கீழைத்தேய நாடுகளின் கலைவரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் போலப் பின்யன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்தக் கலைப்படைப்புகள் குறித்தசரியான புரிதலுக்காகவும், தேவையற்ற குழப்பங்களைக் கலைக்கவும், அழகினை ஆழ்ந்து ரசிக்கவும் நாம் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கலைப்படைப்பு காலத்தை வென்று நிற்பது எதனால் என்று தெரிந்து கொள்ளாமல் அதை ரசிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று கேட்கிறார்.

ஆசிய கலைபாரம்பரியத்தின் தனித்துவங்களை நாமே அறிந்து கொள்ளாமல் போனால் மேற்குலகம் எப்படிப் புரிந்து கொள்ளும் என்று பின்யன் எழுப்பிய கேள்வி முக்கியமானது. கலைகளைப் புரிந்து கொள்வதன் வழியே தான் மானுடத்தின் கனவுகளை,  கற்பனையின் வீச்சினை, மகத்தான படைப்பாற்றலைப் புரிந்து கொள்ளமுடியும். அதற்குப் பின்யன் போன்றவர்களே வழிகாட்டுகிறார்கள்.

••

0Shares
0