ஒரு கனவைத் துரத்திச் செல்லும் மனிதனின் கதை தான் The Promised Land. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. Ida Jessen எழுதிய நாவலைத் தழுவி, நிகோலஜ் ஆர்செல் இயக்கியுள்ளார். லுட்விக் கஹ்லெனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மிக்கெல்சென்.
படத்தின் சில காட்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் நாவலை நினைவூட்டுகிறது.
லுட்விக் கஹ்லென் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர், டென்மார்க்கில் மக்கள் வசிக்காத ஜுட்லாந்து நிலப்பகுதியை விவசாய நிலமாக மாற்ற விரும்புகிறார்
வடக்கில் கிரெனன் ஸ்பிட் முதல் தென்கிழக்கில் எல்பே மற்றும் சூட் சங்கமம் வரை ஜுட்லாந்து நீண்டுள்ளது.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஏழ்மையான வாழ்க்கையை நடத்தி வரும் கஹ்லெனுக்கு ஜுட்லாந்தை சீர்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
அதற்குக் காரணம் அவரது பிறப்பிலிருந்து தொடரும் களங்கம். கள்ளஉறவில் பிறந்த பையன் என்று அவரைச் சமூகம் கேலி செய்கிறது. இதிலிருந்து விடுபட்டு தானும் உயர்குடியைச் சேர்ந்த கனவான் என்று நிரூபணம் செய்வதற்காக இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்.
இதற்காக, மன்னரின் அனுமதியைப் பெற அரண்மனைக்குச் செல்கிறார். நீதித்துறை அதிகாரிகள் அவரது விண்ணப்பதைக் கண்டு கேலி செய்கிறார்கள். உதவாத வேலை என்று அவமானத்தைப் படுத்துகிறார்கள். முடிவில் மன்னரை சந்தித்துத் தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.
விவசாய நிலமாக மாற்றிவிட்டால் தன்னைப் பிரபுவாக அங்கீகரித்துப் பட்டம் அளித்துக் கௌரவிக்கவும் சலுகைகள் தரவும் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். இது ஒரு போதும் நடக்காத காரியம் என்பதால் போதையிலிருந்த மன்னரும் அனுமதி அளிக்கிறார். ஆனால் எந்த நிதி உதவியும் அளிக்க முடியாது என்கிறார்.
கஹ்லென் ஜுட்லாந்தை நோக்கி தனது பயணத்தைத் துவங்குகிறார். அந்த நிலப்பரப்பு வசீகரமானது. புதிரானது. உயிரைப் பறிக்கும் அழகோடு விளங்குகிறது.
ஜுட்லாந்தின் ஒரு பகுதியை தனதாக்கி வைத்துள்ள பணக்கார பிரபு ஃபிரடெரிக் டி ஷிங்கெல் தனது பணியாளர்களை அடிமைகள் போல நடத்துகிறான். தன்னை எதிர்ப்பவர்களை மிக மோசமாகத் தண்டிக்கிறான். கண்களில் கொடூரம் மினுங்க சைக்கோபாத் போல நடந்து கொள்ளும் ஷிங்கெல் பசித்த ஓநாயைப் போலவே காட்சியளிக்கிறான்.
லுட்விக் ஜுட்லாந்தில் விவசாயம் செய்வதற்கு அங்குள்ள இளம் போதகர் உதவி செய்கிறார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு சிறிய மரவீடு ஒன்றை அமைத்துக் கொள்கிறான். விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆள் கிடைக்கவில்லை. ஷிங்கெல்லிடமிருந்து தப்பியோடி வாழ்ந்து வரும் ஜோன்ஸ் மற்றும் அவனது மனைவி பார்பராவை வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.
மூவருமாக நிலத்தைச் சீர் செய்து விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனை அறிந்த ஃபிரடெரிக் கஹ்லெனை விருந்திற்கு அழைக்கிறான். அங்கே அவனை நிலத்தைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு ஒடிவிடும்படி எச்சரிக்கை செய்கிறான். அந்தச் சந்திப்பில் கஹ்லெனின் பிடிவாதம் மற்றும் கனவு வெளிப்படுகிறது.
நார்வே அரச குடும்பத்தைச் சேர்ந்த எடேல் தன்னைத் திருமணம் செய்து கொள்வாள் என்று ஷிங்கெல் நம்புகிறான். அவளோ விருந்திற்கு வந்த கஹ்லெனின் மீது காதல் கொள்கிறாள். அவருக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்கிறாள்.
இதனால் ஷிங்கெல் ஆத்திரம் கொள்கிறான். ஜுட்லாந்திலிருந்து கஹ்லெனைத் துரத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். புதுப்புதுப் பிரச்சனையாக முளைக்கிறது.
இதனிடையில் ஜிப்ஸி சிறுமி ஒருத்தி அவர்கள் வீட்டில் திருட வந்து பிடிபடுகிறாள். அவளைத் தனது மகளைப் போல வளர்க்க ஆரம்பிக்கிறான். விவசாயத்திற்கான பணியாட்கள் கிடைக்காத சூழலில் ஜிப்ஸிகளை அழைத்து வந்து வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.
விவசாய வேலைக்கு ஜிப்ஸிகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று டென்மார்க்கில் சட்டமிருக்கிறது. ஆகவே அதைக் காரணம் காட்டி அவனைக் கைது செய்ய முயலுகிறான் ஷிங்கெல்.
முடிவில்லாத போராட்டங்களைத் தாண்டி உருளைகிழங்கு விவசாயம் செய்கிறான். இயற்கையும் அவனை வஞ்சிக்கிறது. கஹ்லென் பனிப்பொழிவினுள் உருளைக்கிழங்கினைக் காப்பாற்ற போராடும் காட்சி மறக்க முடியாதது
ஷிங்கெல் ஒரு நாள் ஜோன்ஸை பிடித்துவந்து கஹ்லென் கண்முன்னால் சித்ரவதை செய்கிறான். ஜோன்ஸ் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கதற விடுகிறான். கஹ்லெனால் தடுக்க முடியவில்லை. சட்டம் ஷிங்கெல் பக்கமிருக்கிறது.
கணவனை இழந்த பார்பராவை தனது துணையாக்கிக் கொள்கிறான் கஹ்லென். அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் அவர்கள் இணைந்து வாழும் காட்சிகளும் அழகாக உருவாக்கபட்டுள்ளன.
கஹ்லென் தங்கள் நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கினை மன்னருக்கு பரிசாக அனுப்பி வைக்கிறான்.
அவனுக்கு உதவி செய்ய ஆட்கள் அனுப்பி வைக்கபடுகிறார்கள். புதிய குடியிருப்புகள் உருவாகின்றன. ஆனால் ஜிப்ஸி சிறுமியை அவன் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அவள் சாத்தானின் வடிவம் என்று வந்தவர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். இதனைக் கஹ்லென் ஏற்க மறுக்கிறான். அப்படி என்றால் தாங்கள் அங்கே வசிக்க முடியாது என்று வந்தவர்கள் மிரட்டுகிறார்கள். இன துவேசத்தைக் கஹ்லென் எதிர்க்கிறான். ஆயினும் அவனால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.
மனித நடமாட்டமில்லாத நிலவெளி. ஊடுருவ முடியாத மூடுபனி , ஊளையிடும் காற்று. ஒளிரும் சூரியன், ஆபத்துகள் நிறைந்த இருண்ட விசித்திரக் காடு. ஷிங்கெல் வீட்டில் நடைபெறும் விருந்து. அந்த மாளிகையில் எரியும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள், என Rasmus Videbæk இன் ஒளிப்பதிவு நிலப்பரப்பையும் அதன் மனிதர்களின் விசித்திர மனநிலையினையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. டான் ரோமரின் இசையமைப்பு மிகச்சிறப்பானது.
மிக்கெல்சென் போன்ற சிறந்த நடிகரை ஹாலிவுட் பயன்படுத்தும் விதமும் டேனிஷ் சினிமா பயன்படுத்தும் விதமும் எவ்வளவு மாறுபட்டது என்பதற்கு இப்படமே சாட்சி.
இப்படத்தைத் திரைவிமர்சகர் மாட் மஹ்லர் ஹாலிவுட்டிற்குச் சவால்விடும் சிறந்த கலைப்படைப்பு என்கிறார். அது சரியான மதிப்பீடே.