நிழல் பேசுவதில்லை.

புகைப்படக்கலைஞர் ஜான்ஐசக் நேர்காணல் ஒன்றில் அவர் யுனெஸ்கோவிற்காகப் பிரபல நடிகை ஆட்ரி ஹெபர்னுடன் செய்த பயண அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார்.

அதில் புகழ் வெளிச்சத்தைத் தன் மீது படிய விடாமல் ஹெபர்ன் எளிமையாக எல்லோருடன் பழகினார்.ஆதரவற்ற குழந்தைகளைத் தேடிச் சென்று உதவிகள் செய்தார். நோயுற்ற குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார். கைவிடப்பட்ட சிறார்களுடன் கைகோர்த்து நடந்தார். குழந்தைகளுடன் இருக்கும் போது மிகச் சந்தோஷமாக உணர்வதாக ஹெபர்ன் சொன்னார். அந்த மகிழ்ச்சி அவரது கண்களில் பிரதிபலித்தது என்று ஐசக் குறிப்பிடுகிறார்.

சமீபத்தில் ஹெலினா கோன் இயக்கிய Audrey: More Than An Icon ஆவணப்படத்தைப் பார்த்தேன். அதிலும் ஜான் ஐசக் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. முன்பு சொன்ன விஷயங்களின் தொடர்ச்சியைப் போல இதிலும் ஹெபர்னைப் பற்றிப் பேசியிருக்கிறார்

ஆட்ரி ஹெப்பர்ன் தனது 24 வயதில் தனது முதல் ஆஸ்கார் விருதை வென்றார் இன்றும் ஹாலிவுட்டின் நிகரற்ற நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார். திரை வெளிச்சத்தைத் தாண்டி உண்மையான ஆட்ரி ஹெபர்ன் யார் என்பதையே இந்த ஆவணப்படம் ஆராய்கிறது.

தனது தந்தையால் கைவிடப்பட்டு, ஹாலந்தில் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் வளர்ந்து வந்தவர் ஹெபர்ன், ஒரு பாலே நடனக் கலைஞராக வேண்டும் என்பதே அவரது கனவு. இதற்காக நீண்டகாலப்பயிற்சிகள் எடுத்தவர் ஆட்ரி ஹெபர்ன். திரைத்துறைக்குள் நுழைந்தது தற்செயலே.

பிரஸ்ஸல்ஸில் உள்ள இக்செல்லஸில் பிறந்த ஹெபர்ன் தனது குழந்தைப் பருவத்தின் சில ஆண்டுகளைப் பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் கழித்தார். ஆம்ஸ்டர்டாமில் சோனியா காஸ்கலுடன் மற்றும் லண்டனில் மேரி ராம்பெர்ட்டிடம் பாலே நடனம் பயின்றார். வெஸ்ட் எண்ட் இசை நாடக தயாரிப்புகளில் கோரஸ் பெண்ணாக நடிக்கத் தொடங்கி, பின்னர்ப் பல பிரிட்டீஷ் திரைப்படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்தார். 1951 ஆம் ஆண்டுப் பிராட்வே நாடகமான GIGIயில் ஹெப்பர்ன் நடித்தார், அதில் பிரெஞ்சு நாவலாசிரியர் கோலெட்டால் ஹெபர்ன் நாடக மேடைக்கு அறிமுகமானார்.

வில்லியம் வைலர் இயக்கி தயாரித்து 1953 ஆம் ஆண்டு வெளியான ரோமன் ஹாலிடே மூலம் ஆட்ரி ஹெபர்ன் சினிமாவில் அறிமுகமானார். இளவரசியாக ஆனாக அவர் தோன்றும் காட்சியில் தான் எத்தனை கம்பீரம். எவ்வளவு அழகு. அது போல வேடிக்கையான இளம்பெண்ணாக அவர் ஸ்கூட்டர் ஒட்டும் காட்சி உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டாடச் செய்தது.

இந்தப் படத்திற்காக ஆட்ரி ஹெபர்ன் ஆஸ்கார் விருது பெற்றார். ஒரே படத்தின் வழியே அவர் ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக உருமாறினார்

ரோமன் ஹாலிடே திரைப்படத்தில் எலிசபெத் டெய்லரே இளவரசி கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் வில்லியம் வைலர் செய்த ஸ்கிரீன் டெஸ்டில் ஹெபர்ன் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றவே அவரைப் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள். வசீகரமாக முகமும், அப்பாவித்தனமான தோற்றமும் சிறந்த நடிப்பு திறமையும் கொண்டிருந்தார் ஹெபர்ன் ஆகவே அவரைத் தேர்வு செய்தேன் என்கிறார் வைலர்..

1964 ஆம் ஆண்டில் வெளியான ஹெபர்னின் My Fair Lady அவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.

இந்த ஆவணப்படத்தில் ஹெபர்னின் சினிமா பற்றிய செய்திகள் குறைவாகவே உள்ளன. அவரது சொந்தவாழ்க்கையினைத் தான் படம் விரிவாகப் பேசுகிறது. திரையுலகின் பேரழகியாகக் கொண்டாடப்பட்ட ஹெபர்னின் திருமண வாழ்க்கை ஏமாற்றமானதாக மாறியது.

1954,ல் ஹெப்பர்ன் அமெரிக்க நடிகர் மெல் ஃபெரரை சந்தித்தார், மேலும் அவர்கள் ஒரு நாடகத்தில் ஒன்றாக நடித்தார்கள். அந்த நட்பு காதலாக மாறியது. எட்டு மாதங்களின் பின்பு, சுவிட்சர்லாந்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், War and Peace திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனைக் கவனித்துக் கொள்வதாகத் திரையுலகில் தனது கவனத்தைக் குறைத்துக் கொண்டார் ஹெபர்ன். 14 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இருவரும் 1968 இல் விவாகரத்துச் செய்து கொண்டார்கள்.

அதன்பிறகு இத்தாலிய மனநல மருத்துவர் ஆண்ட்ரியா டோட்டியை ஜூன் 1968 இல் ஹெபர்ன் மத்திய தரைக்கடல் பயணத்தில் சந்தித்தார். அப்போது உருவான நட்பு மெல்ல வளர்ந்தது. அவர்கள் 18 ஜனவரி 1969 இல் திருமணம் செய்து கொண்டனர், அவர்களது மகன் லூக 1970ல் பிறந்தார். ரோமில் வாழத்துவங்கிய ஹெபர்ன் தனது புகழை மறந்து குடும்பத் தலைவியாக இயல்பாக வாழ்க்கையை மேற்கொண்டார். ஆனால் டோட்டிக்கு பல்வேறு பெண்களுடன் இருந்த கள்ள உறவும் அவரது நாணயமற்ற நடத்தையும் ஹெபர்னை வேதனைப்படச் செய்தது. அந்தத் திருமணமும் 1982 இல் விவாகரத்தில் முடிந்தது.

1980ல் இருந்து ஹெபர்ன் இறக்கும் வரை, டச்சு நடிகர் ராபர்ட் வோல்டர்ஸுடன் நெருக்கமாக இருந்தார். ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கை அவருக்கு ஆறுதல் தருவதாக இருந்தது என்கிறார்கள்

உலகையே சந்தோஷப்படுத்திய ஹெபர்னின் சொந்த வாழ்க்கை வேதனையும் பிரச்சனைகளும் நிரம்பியதாகவே இருந்தது. அவளது புகழும் பணமும் மட்டுமே அவளது கணவருக்குத் தேவையாக இருந்தது. அவளைப் புரிந்து கொள்ளவேயில்லை. தனது குடும்ப வாழ்க்கைக்காக அவள் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்த போதும் அவர்கள் உறவு சீராகயில்லை. ஹெபர்ன் ஏமாற்றப்பட்டார். கணவராலும் நண்பர்களாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்.

இந்த ஆவணப்படத்தின் சில காட்சிகளில் அவரது கண்களில் தெரியும் துயரம் அவரது வாழ்க்கையின் அடையாளம் போலிருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் சொந்த வாழ்க்கையின் துயரங்களைக் கடந்து அவர் உலகின் மீது அன்பு காட்டவே யுனெஸ்கோவின் தூதுவராகச் செயல்படத் துவங்கினார். அந்தப் பயணமும் அனுபவமும் அவரைக் கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்க வந்த தேவதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.

புகழ் தான் ஹெபர்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம். எந்த நேரமும் அவரது வீட்டினை புகைப்படக்கலைஞர்கள் சுற்றிக் கண்காணித்துக் கொண்டேயிருந்தார்கள். சுதந்திரமாக எங்கும் செல்லமுடியவில்லை. தோழிகள் இல்லை. அரிதாக வெளியே செல்லும் போதும் தேவையற்ற தொந்தரவுகளைச் சந்தித்தார்.

ஸ்விட்சர்லாந்தில் மகன் படிப்பதற்காகத் தனிவீடு வாங்கி அங்கே வாழ்ந்த ஹெபர்ன் அன்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கியிருக்கிறார். இளமையில் அவரது முகத்திலிருந்த வெகுளித்தனம் மெல்ல உறைந்து கலக்கமான, குழப்பமான முகமாக முதுமையில் மாறிவிட்டிருக்கிறது.

இளவரசியாகத் திரையில் அறிமுகமான ஹெபர்ன் மகாராணி போல வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் வேடிக்கையான இளம்பெண்ணாகத் திரையில் ஒடியோடி சந்தோஷங்களை அனுபவித்த அந்த இளம்பெண் தான் நிஜவாழ்க்கையில் முடக்கப்பட்டார். அவருடன் பணியாற்றிய திரைப்பட இயக்குநர்கள் நடிகர்கள் அவரது நடிப்புத் திறனை வெகுவாகப் புகழ்ந்து பேசுகிறார்கள். அவரது சந்தோஷத்தை நடிப்பில் மட்டுமே காணமுடிந்திருக்கிறது.

சிறுவயதில் தன்னைக் கைவிட்டுப் போன தந்தை எங்கேயிருக்கிறார் என்று ஹெபர்ன் தேடிக் கண்டறிகிறார். அவரைத் தேடிப்போய் மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். இத்தனை ஆண்டுகள் தன்னை வெறுத்துப் போன தந்தையை ஏன் அவர் இன்னும் நேசித்தார். எது அவரைத் தந்தையினைத் தேடிப்போய் உறவு கொள்ள வைத்தது. அவருக்குத் தந்தையின் நேசம் அன்பு தேவைப்பட்டது. ஆவணப்படத்தில் அந்தப்பகுதி சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1992 இன் பிற்பகுதியில் சோமாலியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்குத் திரும்பியதும், ஹெபர்ன் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படத் தொடங்கினார். சுவிட்சர்லாந்தில் மருத்துவச் சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனாலும் புற்றுநோயின் தாக்கம் என்பதால் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் அங்கே அவருக்குக் கீமோதெரபி தரவேண்டிய நிலை உருவானது.

ஹெபர்ன் தனது கடைசிக் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காகச் சுவிட்சர்லாந்திற்கு வீடு திரும்ப முடிவு செய்தார் அவருக்கெனச் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் பயணம் செய்து சுவிட்சர்லாந்து சென்றார் ஹெபர்ன். அதுவே அவரது கடைசிப்பயணம். பின்பு அவர் வீட்டில் படுக்கையிலே நாட்களைக் கழித்தார்

ஜனவரி 20, 1993 அன்று, ஹெபர்ன் வீட்டில் தூக்கத்தில் இறந்து போனார். அவரது மரணத்திற்குப் பிறகு, கிரிகோரி பெக் கண்ணீர் மல்க ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “முடிவில்லாத காதல்” என்ற கவிதையைப் பாடினார். அது அவர்களுக்குள் இருந்த காதலின் அடையாளமாக ஒலித்தது.

சினிமா பெரும்புகழ் பணம் இரண்டினையும் அவருக்குத் தந்தது. ஆனால் இந்த இரண்டாலும் வாழ்க்கையைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவில்லையே. அவரது பணம் புகழ் இரண்டும் அவருடன் இருந்தவர்களுக்கே அதிகம் பயன்பட்டிருக்கிறது. சினிமாவை விட்டு விலகிய போதும் அவரால் எளிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. காய்கறி கடை அல்லது இறைச்சிக் கடையில் அவரைக் காணும் பொதுமக்கள் அவரைத் துரத்தினார்கள். புகைப்படம் எடுக்கப் போட்டிப்போட்டார்கள். விருந்திற்குச் செல்வதற்கே ஹெபர்ன் பயந்தார்.

அவர் விரும்பி திருமணம் செய்து கொண்ட இரண்டு திருமணத்திலும் ஹெபர்ன் ஏமாற்றப்பட்டார். எது அவரது வாழ்க்கையினை இப்படிச் சுழித்தது. ஏன் அவர் விரும்பிய படி வாழ இயலவில்லை.

திருமண உறவின் சிக்கல்களை எப்படியாவது சரிசெய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும் எனப் போராடியிருக்கிறார். ஆனால் அது இயலவில்லை. திரைப்படம் போல வாழ்க்கையில் முடிவு சந்தோஷமாக இருப்பதில்லையே.

Giving is living. If you stop wanting to give, there’s nothing more to live for. என்று ஹெபர்ன் சொல்கிறார். அது உண்மை. ஹெபர்ன் பணம், பொருள் மட்டும் கொடுக்கவில்லை. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாறாத நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு தேவதைக் கதை போலவே அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வெற்றி அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் எந்தத் தேவதையும் திருமணத்தால் இப்படி வீழ்ச்சி அடைந்ததில்லை. அந்த வகையில் அவள் ஒரு மானுடப்பெண் என்பதையே நிரூபித்திருக்கிறார்

••

0Shares
0