நீண்ட வாக்கியம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நார்வேஜிய எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸே தனது எழுத்துமுறையை Slow Prose என்கிறார்.

எழுத்தை அதன் சொந்த வேகத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும். தேவையற்ற பரபரப்பு. வேகத்தை நாமாக உருவாக்க வேண்டியதில்லை என்கிறார் ஜான் ஃபோஸ்ஸே

இந்த எழுத்துமுறை கவிதையைப் போல ஒவ்வொரு சொல்லும் முக்கியம் கொண்டதாக, நுணுக்கமான விவரிப்புகள் கொண்டதாக, ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பது அவரது வாதம்.

சொற்களின் தாளம் மற்றும் வாக்கியக் கட்டமைப்பில் முழுமையை கொண்டு வர மெதுவான எழுத்துமுறை அவசியம்.

அவரது ஏழு தொகுதியான ‘செப்டாலஜி’ நாவல் ஒரே நீண்ட வாக்கியம் கொண்டது. ஆம். முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியமாகத் தனது ஏழு நாவல்கள் கொண்ட தொகுதியை எழுதியிருக்கிறார்.

மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியம். மரணம் தான் முற்றுப்புள்ளியை ஏற்படுத்துகிறது.

நீண்டவாக்கியங்கள் கொண்ட உரைநடையை வாசிப்பது பலருக்கும் கடினமானதே. ஆனால் அப்படி எழுதுவது தவறு என்று நாம் வாதிட முடியாது.

மிக வேகமான இன்றைய வாழ்க்கையின் வேதனையும் பாடுகளுமே மெதுவான, நிதானமான, ஆழ்ந்த பார்வை கொண்ட உரைநடையின் தேவையை உருவாக்குகிறது. இன்று புதிய எழுத்தின் தேவை குறித்து உலகெங்கும் விவாதிக்கிறார்கள்.. நாவல் மற்றும் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி புதியதாக மாறியிருக்கிறது.

திரைப்படங்களில் இன்று சிங்கிள் ஷாட்டில் ஒரு நிகழ்வு முழுவதையும் படமாக்குகிறார்கள். அந்த அனுபவம் புதியதாக இருக்கிறதே. அதற்கு இணையானதே நீண்ட வாக்கியங்களையும் உள்மடிப்புகளையும் கொண்ட Slow Prose. இதில் வாசகன் அவசரமாக, மேலோட்டமாகக் கதையைப் படித்துப் போய்விட முடியாது. நுண்ணோவியங்கள் அளவில் சிறியவை, மிகுந்த நுட்பமாக உருவாக்கபட்டவை. நுண்ணோவியம் போல எழுத்துமுறையும் முழுமையான கவனத்துடன், கச்சிதமாக மாற வேண்டும்.

பொதுவாக நாவல் என்பதை உரையாடல்களின் வழியே கதையை விவரித்துக் கொண்டே போவது என்று நினைக்கிறார்கள் . அதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்று அதன் வழியே கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் அகக்கொந்தளிப்புகளையும், நாடகீயமான தருணங்களையும் நாவல் உருவாக்குகிறது என்று நம்புகிறார்கள்.

சம்பிரதாயமான நாவல்கள் இதையே செய்கின்றன. ஆனால் நோபல் பரிசு பெற்ற நாவல்களை வாசித்துப் பாருங்கள். அது கதைசொல்லல் மற்றும் நாவலின் வடிவம்,உள்ளடக்கம் என மூன்றிலும் கவனம் கொண்டிருக்கிறது.

சாமுவேல் பெக்கெட்டின் நாவல்கள். ஹெஸ்ஸேயின் நாவல்கள். மார்க்வெஸின் நாவல்கள் சரமாகோவின நாவல்கள். பாமுக்கின் நாவல்கள் அனைத்தும் நோபல் பரிசு பெற்ற படைப்புகள் என்றாலும் அவற்றை ஒரே தட்டில் வரிசைப்படுத்த முடியாது.

இந்த நாவல் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைக்களனும் கதாபாத்திரங்களும் கதை சொல்லும் முறையில் புதுமையும், வடிவ ரீதியாகத் தனித்துவமும் கொண்டிருக்கின்றன.

ஜான் ஃபோஸ்ஸே நாவலில் நடக்கும் உரையாடல்கள் தனித்து எழுதப்படவில்லை. விவரிப்பின் பகுதியாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவற்றைத் தனிமொழி போலவே எழுதியிருக்கிறார்.

ஓவியரான ஆஸ்லே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழுவதே நாவலின் மையக்கதை. நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழவே ஆசைப்படுகிறோம். கிராமத்தில் வாழுகிறவருக்கு நகரவாழ்க்கையின் மீது ஆசையாக இருக்கிறது. நகரவாசிகளுக்குக் கிராமம் சொர்க்கமாகத் தெரியாது. ஆனால் நடைமுறையில் இரு இடங்களிலும் ஒருவர் வாழ முடியாது. புனைவில் இது சாத்தியம்

ஓவியர் ஆஸ்லே பிஜோர்க்வினுக்கு வடக்கே உள்ள டில்க்ஜாவில் தனியாக வசிக்கிறார், மற்றொரு ஆஸ்லே பிஜோர்க்வின் நகரில் வசிக்கிறார், ஒரே பெயர் கொண்ட இருவர் இருவேறு இடங்களில் வாழுகிறார்கள்.

இருவரும் ஒருவர் தானா. அல்லது ஒரே பெயரில் ஒரே பணியைச் செய்யும் இருவர் வசிக்கிறார்களா என்பது தான் புனைவின் சிறப்பு.

ஒருவர் இருவராகிவிடுவது நாவலின் பழைய உத்தி. டாக்டர் ஜெகில் மற்றும் மிஸ்டர் ஹைடில் ஒருவர் இருவராகிறார்கள். ஆனால் அது நன்மையும் தீமையுமான இரண்டு வடிவங்கள். ஒரே நபரின் இரண்டு வெளிப்பாடுகள் இருவராக அறியப்படுகின்றன. ஆனால் ஜான் ஃபோஸ் தனது நாவலை டாப்பல்கெஞ்சர் வகையாகச் சொல்கிறார். அதாவது ஒரே மாதிரியிருக்கும் இரட்டை நபர்கள் பற்றியது.

இடம் மாறும் போது நிகழ்ச்சியின் இயல்பும் கனமும் மாறிவிடுகின்றன. அனுபவம் திரளுவதும் கலைவதும் உருமாறிவிடுகிறது. ஆஸ்லே தனது கடந்த கால வாழ்க்கையை நண்பரிடம் நினைவு கூறுகிறார். நாவலின் ஊடாக ஓவியம், கலையின் நோக்கம். கடவுள் நம்பிக்கை, தனிமையின் துயரம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. மனதின் நீரோட்டம் போல வாக்கியம் நீண்டு சென்றபடியே இருக்கிறது.

நீண்ட ஒற்றை வாக்கியம் கொண்ட இந்த நாவல்வரிசை முப்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தீவிரமாக வாசிக்கபட்டு வெற்றி அடைந்திருக்கிறது. இன்று ஜான் ஃபோஸ்ஸேயிற்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளது. இதனைப் புதிய எழுத்துமுறைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

இவ்வளவு கடினமான நாவலையும் சிறப்பாக மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலத்திற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பை உருவாக்குகிறார்கள் என்பது பாராட்டிற்குரியது

நார்வேயின் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஜான் ஃபோஸ்ஸே. அவரை இப்சனுக்கு இணையாகக் கொண்டாடுகிறார்கள். அவருக்குத் தற்போது அறுபது வயதாகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

ஆண்டுக்கு ஒரு நாடகம் எழுதும் ஜான் போஸ் மற்ற மாதங்களில் பயணம் செய்கிறார். புத்தக வெளியீடுகள், கல்விப்புல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். கவிதை, கட்டுரை, சிறார்களுக்கான கதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார் ஜான் ஃபோஸ்

“வலி, துக்கம், மனச்சோர்வு ஆகியவையும் ஒரு பரிசு தான்“. “எழுதும் போது நான் அனுபவிப்பது வாழ்க்கையில் நான் அனுபவிப்பதை விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எழுதுவது என்பது விழித்தபடியே கனவு காண்பது “ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

நாடக வாழ்க்கை போதும் என்று விலகி அவர் நாவல் எழுதத் துவங்கினார். அது தான் ’செப்டாலஜி’. அவரே ஒரு ஓவியர் என்பதால் ஆஸ்லே கதாபாத்திரத்தை எளிதாக எழுத முடிந்திருக்கிறது.

நாவலின் வேலை அனுபவங்களைத் தொகுத்து தருவதில்லை. அது தனிமனிதனின் ஆசைகள். உறவுகள், பயம். வெற்றி தோல்விகளை ஆராய்வதுடன். கலை, தத்துவம். அறிவியல். சமயம், வரலாறு. அரசியல் எனப் பல்வேறு விஷயங்களை விவாதிக்கவும் மாற்றுபார்வைகளை முன்வைக்கவும் இடம் தருகிற வடிவம்.

டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தாமஸ் மன்னும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மட்டும் நாவலாக எழுதியவர்களில்லை. அவர்கள் புறவாழ்வின் மாற்றங்களை, சமூக அரசியல் போராட்டங்களை, தனிமனிதனின் கனவுகள். ஆசைகள். வெற்றிதோல்விகளை எழுதியவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தனது படைப்புகளையும் உருவாக்குகிறேன் என்கிறார் ஜான் ஃபோஸ்.

வடிவரீதியாக ஜான் ஃபோஸ்ஸேயின் எழுத்து செவ்வியல் நாவலாசிரியர்களிடமிருந்து வேறுபட்டது. குறிப்பாக அவரது மொழி பனிஉருகுவது போல நிசப்தமாக உருகியோடிக் கொண்டிருக்கிறது. இவரது நாவலை ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நாவலோடு ஒப்பிடலாம்.

வாசிக்கக் கடினமாக உள்ள இந்த நாவல்கள் உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகம் புதிய எழுத்திற்காகக் காத்திருக்கிறது என்பதையே இது நினைவுபடுத்துகிறது.

0Shares
0