என்.எஸ்.மனோகரன் மிகச்சிறந்த ஓவியர். சென்னை ஒவியக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி நிறைய இளம் ஓவியர்களை உருவாக்கியவர்.
மனோகரின் நீர்வண்ண ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிராமிய வாழ்வின் காட்சிகளைத் தனது தூரிகையின் வழியே நுட்பமான கலைப்படைப்பாக உருவாக்குகிறார்.
சீன நிலக்காட்சி ஓவியங்களில் காணமுடிகிற நுட்பமும் எளிமையும் இவரது ஓவியங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக ஒளியும் நிழலும், வசீகரமாக வண்ணங்களைப் பயன்படுத்தும் விதமும் புதிய ஓவிய மொழியாக வெளிப்படுகின்றன.
ஓவியர் என்.எஸ். மனோகரன் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்த ஆவணப்படமான நீர்மை மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது
அசோகன் நாகமுத்து இதனை இயக்கியிருக்கிறார். இளவேனில் இதனைத் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிக அழகான கோணங்களின் வழியே காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார் இளவேனில். குறிப்பாக மனோகர் நீர்வண்ண ஓவியத்தை வரையும் காட்சி பரவசமூட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வயல்வெளி, வளைந்து செல்லும் சாலை, அதில் நடக்கும் ஆண்பெண் உருவங்கள் லயத்தோடு உயிர்பெறுகிறார்கள். குறிப்பாகப் பனைமரங்கள் சிறிய தீற்றலில் உயிர்பெறும் விந்தை மறக்கமுடியாதது
ஆடு வரைவதில் மனோகர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆவணப்படத்திலும் ஆடு ஒன்றை மனோகர் வரைகிறார். அந்தக் காட்சியில் ஆட்டின் உருவம் மட்டுமில்லை அதன் உடல்மொழியும் உணர்ச்சிகளும் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஆட்டின் முதுகில் நிற்கும் குருவியின் அழகு நிகரற்றது.
மனோகரின் ஓவியங்கள் குறித்துப் புகழ்பெற்ற ஓவியர்கள் ஆர்.எம். பழனியப்பன், இளையராஜா, சந்தான கிருஷ்ணன் ஆகியோரின் நேர்காணலின் வழியே மனோகரின் ஆளுமையும் தனித்துவமும் திறம்பட வெளிப்படுகிறது.
மனோகரின் மனதில் தஞ்சை மண்ணின் கிராமிய வாழ்க்கை மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே அவரது உயிரோட்டமான ஓவியங்கள்..
காலம் தான் அவரது உண்மையான கருப்பொருள். காலமாற்றத்தில் கைவிடப்பட்ட, இடிந்து போன. தொலைந்து போன பண்பாட்டு அடையாளங்களை அவர் தொடர்ந்து மீள் உருவாக்கம் செய்து வருகிறார். புதிய மோஸ்தர்கள், போலியான வெளிப்பாட்டு வடிவங்களைத் தாண்டி அசலாகத் தனது மண்ணின் கலைஞனாக ஓவியங்களை வரைந்து வரும் மனோகரன் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
நீர்மை ஆவணப்படத்தின் வழியே மனோகரின் நிகரற்ற கலையாளுமை சிறப்பாகக் கவனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த இளவேனில் மற்றும் அசோகன் நாகமுத்துவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
Neermai | நீர்மை | Documentary on art works of N.S.Manoharan