நீலக்குதிரைகளின் மௌனம்.

ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில்  இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார்.

இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற கதையின் தலைப்பு என் மனதில் தோன்றுகிறது. என்ன தொடர்பு எதற்காக அந்தத் தலைப்பு மனதில் வந்து போகிறது எனத் தெரியவில்லை.

ஆனால் இது துயிலின் நடனம் என்றே மனது உணர்கிறது. மூன்று நீலக்குதிரைகளும் கனவில் தோன்றும் உருவங்கள் போலிருக்கின்றன

சிவப்புமலையுள்ள நிலப்பரப்பில் மூன்று நீலநிறக்குதிரைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து லயத்துடன்  நடனமாடுவது போலக் காட்சி அளிக்கின்றன. குதிரைகளின் உடலில் வெளிப்படும் தளர்வும் முகத்தைத் திருப்பியுள்ள விதமும் அபாரமான அழகுடன் வரையப்பட்டுள்ளன. ஃபிரான்ஸ் மார்க் 1911 ஆம் ஆண்டில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்  ஹிட்லர்  காலத்தில் இவரது ஒவியங்கள் மலினமானவை எனக்கூறி தடைசெய்யப்பட்டன.

தி ப்ளூ ரைடர் என்ற கலை இயக்கத்தை முன்னெடுத்தவர் ஃபிரான்ஸ் மார்க் இந்த இயக்கம் ஓவியத்தில் உணர்ச்சிகள் வெளிப்படுவதே முதன்மையானது எனக் கருதியது.

நீலக்குதிரைகள் ஓவியத்தில் அமைதி மற்றும் சாந்தநிலையின் அடையாளமாகவே குதிரைகள் தோற்றமளிக்கின்றன. ஓவியரின் கற்பனையில் குதிரையும் தாவரங்களைப் போலவே  தளர்ந்திருக்கின்றன/ இந்த ஓவியம் குறித்துப் பல்வேறு குறியீட்டு விளக்கங்களைக் கலைவிமர்சகர்கள் கூறுகிறார்கள்.

முதலாம் உலகப்போரில் பங்குபெற்றவர் ஃபிரான்ஸ் மார்க் . குண்டுவெடிப்பு சிதறல் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தனது 36வது வயதில் இறந்து போனார்.

நீல வண்ணத்தை மார்க் விரும்பி உபயோகிக்கக் கூடியவர். அவரது வேறு நீலக்குதிரைகளிலும் இதனைக் காணலாம். மார்க் வரைந்த குதிரைகளிடம் விசித்திரமான கவர்ச்சியைக் காணமுடிகிறது..

போர்ஹெஸ் தனது புகழ்பெற்ற நீலப்புலிகள் கவிதையில் பிளேக்கின் புலியை பற்றிச் சொல்லும் போது அதன் அச்சமூட்டும் அழகினைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அவரது கனவில் கங்கைப்பிரதேசத்தில் ஒரு நீலப்புலி தோன்றுகிறது. கவிதையில் வெளிப்படும் நீலப்புலியிடம் நாம் காணும் அதே விசித்திரம் தான் மார்க் ஒவியத்தில் காட்சியாக விரிந்திருக்கிறது.

மூன்று குதிரைகளில் முகம் தெரியாத குதிரை தான் என்னை அதிகம் கவர்கிறது.

0Shares
0