1980களில் இது நடந்திருக்கலாம்.
அவரது பெயர் ஜெகநாதராவ்.
அவருக்கு அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்தவகையில் மூன்று லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் பாக்கியிருந்தது. அந்தப் பணத்தை வசூல் செய்ய யாராலும் முடியவில்லை. நீண்டகாலப் பாக்கியை வசூல் செய்வதற்காக அவனை நீலாம்பூர் அனுப்பி வைத்தார்கள்.
.••
அவனது பெயரை தெரிந்து கொள்ளும் முன்பு, அவன் ஏன் நீலாம்பூருக்கு செல்ல விரும்பினான் என்பதைத் தெரித்துக் கொள்வது முக்கியம்.

சில மாதங்களுக்கு முன்பு விடிகாலையில் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த
கனவில் அவன் ஒரு ரயில் நிலையத்தில் நின்றிருந்தான் அங்கே அவனைத் தவிர ஒரு பசு மட்டுமே இருந்தது
அது நீலாம்பூர் என்பதை ரயில் நிலையத்தின் பெயர் பலவையிலிருந்து தெரிந்து கொண்டான்
பயணிகளோ ரயில் நிலைய ஊழியர்களோ எவரையும் காண முடியவில்லை. அந்தப் பசுவும்கூடக் கண்களைமூடி சிலையைப் போல உறைந்திருந்தது. அதன் காதுகள் அசைவதைக் கொண்டே உயிருடன் இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தூங்குமூஞ்சி மரங்கள் கொண்ட அந்தப் பிளாட்பாரத்தின் தொலைவில் காகம் தென்பட்டது
அது காகம் தானா
அல்லது கிழிந்த துணியா என்று சரிவரத் தெரியவில்லை.
தான் எதற்காகப் பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் காத்திருக்கிறோம் என்றும்
அவனுக்குப் புரியவில்லை.
எந்தப் பக்கம் போக விரும்புகிறான் அல்லது யாரைக் காண காத்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை.
தொலைவில் எழும் ஓசைக் கேட்டு ஏதோ ரயில் வருகிறது என்று நினைத்து வடக்கே திரும்பி பார்த்தான்.
ரயில் எதுவும் வரவில்லை மீண்டும் அந்த ஓசையைக் கேட்கவும் முடியவில்லை.
மழை வருவதற்கான அறிகுறி ஏதுமின்றித் திடீரென அங்கே மழை பெய்யத் துவங்கியது. ஒதுங்குவதற்காக ஸ்டேஷன் அறையை நோக்கி ஒடும் போது மழை தன்மீது பெய்தாலும் அது தன்னை நனைக்கவில்லை என்பதை உணர்ந்தான். அவனை மட்டுமில்லை. பிளாட்பாரத்தில் மழை பெய்தும் ஒரு துளி ஈரமில்லை. ஆனால் மழைக்காற்றில் பசு வானில் பறந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன விநோதம் என நினைத்து திடுக்கிடும் போது அவன் விழித்துக் கொண்டான். அது ஒரு கனவு என்று அவனால் நம்ப முடியவில்லை.
அன்று நாள் முழுவதும் நீலாம்பூர் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேயிருந்தான். ஏனோ நீலாம்பூருக்கு ஒருமுறை போய்வர வேண்டும் என்றும் விரும்பினான்.
••
இன்று கடை உரிமையாளர் நீலாம்பூர் போய் வர சொன்னதும் அவன் தனது
கனவுக்குள் திரும்பி செல்வதைப் போலவே உணர்ந்தான்.
ஆயிரத்து முந்நூறு ரூபாய் பணமும் வசூல் செய்ய வேண்டிய பில் விபரங்களும் பழைய ரசிது புக் ஒன்றையும் மேலாளர் அவனிடம் கொடுத்து இரண்டு நாளுக்குள் திரும்பி விட வேண்டும் என்றார்.
முழுமையாகக் கடனை வசூல் செய்துவிட்டு திரும்பி வருவேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு உற்சாகமாகப் பயணம் கிளம்பத் தனது அறைக்குத் திரும்பினான்.
தேவையான உடைகள், படிப்பதற்கான புத்தகம், சிறிய சோப்புக்கட்டி, பற்பசை டூத்பிரஷ் எனத் தேவையானதை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டான்
அவன் அறிந்தவரை நீலாம்பூர் மேற்கில் சில மணி நேர பயணத் துரத்தில் இருந்தது.
••

அந்த நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தன. ஒன்று வெளியூர் பேருந்துகள் செல்வது மற்றொன்று நகரப்பேருந்துகளுக்கானது. அவன் வெளியூர் பேருந்துகள் கிளம்பும் நிலையத்திற்குச் சென்றான்
துர்வாடையுடன் அழுக்கும் குப்பையுமாக அந்தப் பேருந்து நிலையம் திறந்தவெளி குப்பைமேடு போலக் காட்சியளித்தது. மின்விளக்குகளில் பல எரியவில்லை. இந்த இருட்டிற்குள் மக்கள் பேருந்தை தேடி போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
கை குழந்தையுடன் ஒரு பெண் தான் செல்ல வேண்டிய பேருந்து ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தாள்.
பிளாஸ்டிக் பழங்கள் போல உறைந்து போய்க் காட்சி தந்த பழக்கடையைத் தாண்டி மரப்பெட்டிகள். சாக்கு மூட்டைகளையும் கடந்து முக்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்து மனிதரிடம் நீலாம்பூர் பேருந்து எப்போது புறப்படும் என்று கேட்டான்
அந்த நபர் எந்த நீலாம்பூர் என்று கேட்டார்.
குழப்பத்துடன் அவன் ”எத்தனை நீலாம்பூர் இருக்கிறது” என்று திருப்பிக் கேட்டான்.
மூன்று நீலாம்பூர் இருக்கிறது , எதற்கும் இரவில் பேருந்து கிடையாது நீ எந்த நீலாம்பூருக்கு போக வேண்டும் என்று கேட்டார்.
அவனுக்குப் பதில் சொல்ல தெரியவில்லை.
“ ஜெகநாதராவ் உள்ள நீலாம்பூர்“ என்று சொன்னான்
அந்த நபர் அவனை முறைத்தபடியே, “தெற்கு நீலாம்பூரா? என்று கேட்டார்.
“இருக்கலாம்“ என்று சொன்னான்
“காலையில்தான் பஸ் புறப்படும்“ என்று சொல்லிவிட்டு தன் சட்டைப்பையில் வைத்திருந்த ரசீது ஒன்றை எடுத்து பார்க்கத் துவங்கினார்.
அவர் சொல்லது உண்மையா?
தான் காலை வரை பேருந்துநிலையத்தில் காத்திருக்க வேண்டுமா?. அல்லது அறைக்குச் சென்று திரும்பிவரலாமா?. என்று குழப்பமாக இருந்தது.
வேறு எவரிடமாவது விசாரிக்கலாம் என்று பேருந்து நிலையத்தின் உட்புறமாக அலைந்தான்.
பிறரிடம் விசாரிப்பதற்கு முன்பு தான் எந்த நீலாம்பூருக்கு போக விரும்புகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பழைய ரசிது புக்கை வெளியே எடுத்து புரட்டிப் பார்த்தான்.
அதில் நீலாம்பூர் நெடுங்கோட்டை ஜில்லா என எழுதப்பட்டிருத்தது. மேற்கே செல்லும் பேருந்துகள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சென்று நீலாம்பூர் போக வேண்டும் என்றான்.
அதற்கு அந்த ஆள் “நேரடியாகப் பஸ் கிடையாது. நெடுங்கோட்டையில் இறங்கி, பேருந்து மாறினால் நிலாம்பூர் போகலாம்“ என்று சொன்னார்.
“இந்த பேருந்து நெடுங்கோட்டை போகிறதா “என்று அவன் கேட்டதற்கு மூன்றாவது பேருந்தை சுட்டிக்காட்டினான்.
அதில் ஏறி அமர்ந்து கொண்டு கண்களை மூடும்போது அவன் கனவில் பார்த்த
ரயில்நிலையம் நினைவில் வந்து போனது.
இரவு முழுவதும் பயணம் செய்து நெடுங்கோட்டைக்குப் போய் இறங்கி அங்கிருந்து நீலாம்பூர் செல்லும் பேருந்தை பிடித்தபோது, காலை மணி ஐந்தரையாகி இருந்தது.
நீலாம்பூர் செல்லும் பேருத்தில் கூட்டமில்லை, பச்சை சால்வை ஒன்றை தலையோடு போர்த்திய ஒரு கிழவர் அவனது முன்னிருக்கையில் இருந்தார். பேருந்து புறப்பட்டதும் அவன் திரும்பவும் கண் அயர்ந்தான்.
மழைதான் அவனை விழிக்கச் செய்தது. நீலாம்பூருக்குச் செல்லும் வழிமுழுவதும் அடர்த்தியான மழை, பேருத்துக்குள் கூட மழை நீர் சொட்டியது. காற்றோடு இவ்வளவு வேமமாகப் பெய்யும் மழையை அவன் கண்டதில்லை. பாதை தெரியாத படி பெய்த மழையில் ஊடாகப் பேருந்து மெல்ல ஊர்ந்து சென்றது. எந்தத் திசையில் பேருந்து செல்கிறது என்று தெரியவில்லை. காற்றும் மழையும் ஒன்று சேர்ந்து பேருத்தை புரட்டித்தள்ளிவிடுமோ எனும் அளவு வேகமிருந்தது.
இந்தப் பேருத்தில் இருந்தவர்கள் இப்படி மழைபெய்வது இயல்பு தான் என்பது போல் அமைதியாக இருந்தார்கள்.

அவன் நீலாம்பூரில் போய் இறங்கியபோது மழை ஒய்ந்திருந்தது, லேசான சாரல் மட்டுமே விட்டுவிட்டு அடித்துக் கொண்டிருந்தது.
பள்ளத்திற்குள் இருந்த பேருந்து நிலையமது வெளியே தேனீர் கடைகள் எதுவும் காண முடியவில்லை.
அவன் தகரக் கொட்டகை ஒன்றில் அடியில் நின்றபடியே, சாலையில் வடிந்து செல்லும் மழைநீரை பார்த்துக் கொண்டிருந்தான். தெருவிளக்கின்
வெளிச்சத்தையும் கரைத்தோடிக் கொண்டிருந்தது மழைநீர்.
தொலைவில் குடையோடு ஒருவர் வருவதைக் கண்டான்.
அந்த நபர் அவனை நோக்கி வருவதைப் போலவே தோன்றியது. அருகில் வந்து குடையைச் சற்றே சாய்த்து “ ஜெகநாதராவ் வீட்டிற்குத்தானே“ என்று கேட்டார். “ஆமாம்“ என்று தலையாட்டினான்.
“போகலாம்“ என்று சொன்னபடி குடைக்குள் அவனையும் சேர்த்துக் கொண்டார்.
வடக்கு நோக்கி நீண்டு கொண்டிருந்த சாலை வழியாக அவர்கள் நடந்தார்கள். அங்கிருந்து இடப்பக்கம் நீளும் தெரு ஒன்றின் வழியாக நடந்து சென்றபோது மழை வேகமெடுத்தது
“இந்த ஊரில் ரயில்வே ஸ்டேசன் இருக்கிறதா” என்று அவன் கேட்டான் .
குடைவைத்திருந்தவர் “இல்லை” என்றார்
பின் எப்படித் தன் கனவில் ரயில்நிலையம் வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை, அவர்கள் மழை நீர் தேங்கியிருந்த ஒரு மைதானத்தின் வழியாக நடந்து கோயில் கதவு போன்ற பெரிய கதவின் முன் போய் நின்றார்கள்.
குடைவைத்திருந்த நபர் ”யோசே” என்று உறக்க சப்தமிட்டார்.
கதவின் பின்பக்கம் யாரோ ஒரு பெண் நடந்துவந்து பெரிய கதவின் சிறு வழியைத் திறந்துவிட்டாள். அவர்கள் உள்ளே சென்றபோது, அரண்மனை போலப் பெரியதான வீடு கண்ணில் பட்டது.
“இதுதான் ஜெகநாதராவ் வீடா” என்று கேட்டான்.
“அவர் பெயரை நாங்கள் சொல்வதில்லை” என்று குடைவைத்தவர் பதில் சொன்னர்.
உண்மையில் அது சிறிய அரண்மனையேதான் அதனால்தான் இத்தனை அலங்கார விளக்குகள் நிலைக் கண்ணாடிகள் அவர்களிடம் வாங்கியிருக்கிறார்கள்.
அவன் மாளிகையினுள் நுழைந்தபோது அபூர்வமான நறுமணம் கசிந்துவருவதை உணர்ந்தான். ஏதேனும் பூஜை நடக்கிறதோ என்னவோ என நினைத்தபடி தர்பார் ஹால் போல் இருந்த அறைக்குள் சென்றான். சுவரில் ஆள் உயர ஒவியங்கள். பூவேலைப்பாடு கொண்ட பெரிய இருக்கைகள். நடுவில் ஒரு சிம்மாசனம் காணப்பட்டது.
பட்டுதுணியில் பூ வேலைப்பாடு செய்த நாற்காலி ஒன்றில் அவனை உட்கரச் சொல்லிவிட்டுக் குடைவைத்திருப்பவர் உள்ளே சென்றார்.
நீண்ட காத்திருப்பின் பிறகு விளக்கின் சுடர் அசைந்து வருவதுபோல
அழகு மின்னும் இளம் பெண் ஒருத்தி அவனருகே வந்து “ஜெகநாதராவை
பார்க்கத்தானே வந்திருக்கிறீர்கள்“ என்று கேட்டாள்
“ஆமாம்“ என்றதும் அவனது கையைப்பற்றி மணமகனை மேடைக்கு அழைத்துச் செல்லும் பெண்போல எழிலாகக் கூட்டிச் சென்றாள்.
அந்த மாளிகை சுற்றுச்சுழல் பாதைகள் கொண்டதாக இருந்தது. ஒரு அறையைப் போலவே இன்னொரு அறையும் இருந்தன. அகலமான மரப்படிகளில் மேலும் கீழுமாக இறங்கி, பெரிய ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில் அவன் உட்கார வைக்கப்பட்டான்.
அவள் மாறாச் சிரிப்புடன் “ ஜெகநாதராவ் வருவார் காத்திருங்கள்“; என்றாள். அந்தப் பெண்ணின் சிரிப்பிற்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்திருக்கலாம் எனத் தோன்றியது.
அவன் ஜெகநாதராவ்விற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.
பகல் முடிந்து இரவாகியது. ஜெகநாதராவ் வரவில்லை
இரவெல்லாம் காத்திருந்தான். அடுத்தப் பகல் அடுத்த இரவு மீண்டும் பகல் இரவு எனத் தொடர்ச்சியாக நாட்கள் கடந்தன,
பருவகாலம் மாறியது. வருஷங்களும் ஓடி மறைந்தன. அந்த அறையில் ஜெகநாதராவ்விற்காக அவன் காத்துக்கொண்டே இருந்தான். அவர் இன்னும் வரவில்லை.
அவனுக்குத் தெரியாது,
அவனைப் போல ஜெகநாதராவ்வைக் காண வந்த சிலர் அதே மாளிகையில் வேறு வேறு அறைகளில் பல ஆண்டுகளாக உறைந்து போய்க் காத்திருக்கிறார்கள் என்பது,
ஜெகநாதராவைத் தேடி வருபவர்கள் ஏன் அங்கே உறைந்து போகிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் கனவில் நீலாம்பூர் ரயில் நிலையம் வந்திருக்க வேண்டும்.
மழையோடு நீங்கள் அங்கே சென்றிருக்க வேண்டும்
இதைத் தவிர வேறு வழியில்லை.