இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா இயக்கிய உம்பர்தோ டி திரைப்படம் வறுமையான சூழலில் வாழும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் உலகைச் சித்தரிக்கிறது. டி சிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை விடவும் சிறந்த படமிது.

உம்பர்டோ டியால் வாடகை தர இயலவில்லை. நிறையக் கடன். அவருக்குத் துணையாக இருப்பது ஒரு நாய்க்குட்டி மட்டுமே. அவர் இல்லாத நேரத்தில் அவரது அறையைக் காம தம்பதிக்கு மணி நேரத்திற்கு வாடகைக்கு விடுகிறாள் வீட்டு உரிமையாளர்.
உடல்நலமற்று மருத்துவமனை போய்த் திரும்பும் போது அவரது குடியிருப்பு இடிக்கப்படுகிறது. அறைச்சுவரில் பெரிய ஒட்டை காணப்படுகிறது. அது அவரது வாழ்வின் சாட்சியம் போலவேயிருக்கிறது.

இந்தப் படத்தில் இரண்டு மறக்க முடியாத காட்சிகள் உள்ளன. ஒன்று உச்சபட்ச வறுமையில் உம்பர்த்தோ ஒரு காட்சியில் பிச்சை எடுப்பது என முடிவு செய்கிறார். அதற்காகச் சாலையில் போகிறவர்களை நோக்கி கையை நீட்ட விரும்புகிறார். ஆனால் அவரது கை நீள மறுக்கிறது. தயக்கத்துடன் நடுக்கத்துடன் கையை முன்நீட்ட முயலுகிறார். நடுங்கும் கைகளை நீட்டி யாசிக்க இயலவில்லை. வேறுவழியின்றித் தனது நாய்க்குட்டியின் கையில் தொப்பியைக் கொடுத்து யாசிக்க முனைகிறார். அப்போது தெரிந்தவர் வந்துவிடவே அதை ஒரு விளையாட்டு என்று சொல்லிச் சமாளிக்கிறார். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது

பிச்சையெடுத்தாவது வாழ்வோம் என ஒருவன் நினைத்தாலும் அவனது கைகள் தானே நீளுவதில்லை போலும். அந்தக் கைகள் இத்தனை ஆண்டுக்காலம் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியமாக இருக்கின்றன. அவை எளிதாக யாசகம் கேட்டு முன் நீளுவதில்லை.
முதுமையில் ஏன் ஒருவனை உலகம் கைவிடுகிறது. அவரது கடந்தகால வாழ்க்கையோ, குடும்பமோ, உறவுகளோ எதுவும் படத்தில் விவரிக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த கால நினைவுகள் அவரை வழிநடத்துவதை நம்மால் உணர முடிகிறது
உம்பர்த்தோ தன்னோடு வேலை செய்த ஒரு நண்பரைப் பார்க்கச் செல்கிறார். அலுவலகம் விட்டு வெளியே வரும் அந்த நபர் அவரை உதாசீனப்படுத்துகிறார். கொஞ்ச தூரம் பேசிக் கொண்டு நடக்கலாம் என்று சொல்கிறார் உம்பர்த்தோ. அதற்கு மட்டுமே அந்த நபர் சம்மதிக்கிறார். அந்த நடையின் ஊடாகத் தனது வறுமையை, அவலத்தை நண்பருக்குப் புரிய வைக்க முயலுகிறார். வாய்விட்டு ஒரு காபி குடிக்கலாமா என்று கூடக் கேட்கிறார். நண்பர் அவரது நிலையைப் புரிந்து கொண்ட போதும் உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு காபி வாங்கித் தரக்கூட மனதின்றி நடந்து கொள்கிறார். இது தான் உலகம். வறுமையான மனிதனை இப்படித் தான் உலகம் நடத்தும் என்று டிசிகா சொல்கிறார். படம் வெளியாகி எழுபது ஆண்டுகள் ஆன போதும் இந்தக் காட்சி மாறவேயில்லை.

அவரது ஒரே துணையாக உள்ள நாய்க்குட்டியைத் தெருவில் அலைகிறது என நாய்பிடிப்பவர்கள் பிடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அதை மீட்கச் செல்லும் உம்பர்த்தோ கண்ணில் சொந்த மகனைத் தேடும் தந்தையின் அன்பே வெளிப்படுகிறது
படத்தின் முடிவில் இத்தனை அன்பாக நேசித்த அந்த நாய்க்குட்டியை தன்னால் வைத்துக் காப்பாற்ற முடியாது என உணர்ந்த உம்பர்த்தோ அதைத் தொலைத்துவிட முயல்கிறார். மனம் துவளும் காட்சியது.
யாராவது அந்த நாய்க்குட்டியை ஆசையாக வீட்டில் வைத்துக் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்குகிறார். தெரிந்த ஒரு சிறுமிக்குப் பரிசாகத் தர முன் வருகிறார். ஆனால் அவளது தாதி அதை ஏற்க மறுக்கிறாள்.
விரக்தியின் உச்சத்தில், உம்பர்தோ நாயைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள ரயில் பாதையின் குறுக்கே செல்கிறார். நாயை அணைத்தபடியே நிற்கிறார். ரயில் பாய்ந்து வருகிறது. நாய் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டு தப்பிக்கத் தாவுகிறது. உண்மையில் அந்த நாய்க்குட்டி தான் அவரது உயிரைக் காப்பாற்றுகிறது. உயிர் தப்பிய நாய்க்குட்டி அவரது புறக்கணிப்பை முற்றிலும் உணர்ந்துவிடுகிறது. இனி அவரோடு வாழத் தேவையில்லை என விலகிப் போகிறது.அவர் மனம் மாறி அதைத் திரும்ப அழைக்கும் போதும் நாய்க்குட்டி திரும்புவதில்லை. அது இனி அவரது நாயில்லை. அவரைப் போலவே கைவிடப்பட்ட இன்னொரு உயிர்.
பணமும் வசதிகளும் இல்லாமல் போனால் கூட மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் நேசிக்கத் துணையில்லாமல் போனால் அந்த வாழ்க்கை மரணத்திற்குச் சமமானதே.

அறிந்தவர்கள் முன்பாகத் தனது அவல நிலையை மறைத்துக் கொள்ளவே உம்பர்த்தோ முயலுகிறார். பொய்யாக நடிக்கிறார். ஆனால் அவர்கள் தான் அவரை அதிகம் அவமானப்படுத்துகிறார்கள். கைவிடுகிறார்கள்.
உலகம் ஒருவனைக் கைவிடும் போது அவனது உருவம் சிறியதாகிவிடுகிறது. அவன் வசிக்கும் நகரம் சுருங்கிப் போகிறது. அவனது வயது திடீரென மிக அதிகமாகிவிடுகிறது. அவன் தனக்குத் தானே பேசிக் கொள்ளவும் முடியாமல் போகிறான்.
படத்தின் துவக்கக் காட்சியில் தங்களின் ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி முதியோர்களின் போராடுகிறார்கள். அந்தக் கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை முயல்கிறது. அந்தப் போராட்டத்தில் ஒருவராக உம்பர்தோ டி காணப்படுகிறார். அவரும் காவலர்களுக்குப் பயந்து ஒடி ஒளிந்து கொள்கிறார். படத்தில் உம்பர்த்தோ தனது அழகான கடிகாரம் மற்றும் சில புத்தகங்களை விற்கிறார். இரண்டும் இனி அவரது வாழ்விற்குத் தேவையில்லை. நகரம் கைவிடப்ப;டடவர்களால் நிரம்பியது என்கிறார் டிசிகா. அது மாறவேயில்லை. இல்லாதவர்களே ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள். உதவிக்கரம் நீட்டுகிறார்கள். குறைந்தபட்ச சந்தோஷத்தை பெரிதாக நினைக்கிறார்கள்.
படத்திலிருந்து நாய்க்குட்டியை நீக்கிவிட்டால் படம் இத்தனை உயிர்ப்போடு இருக்காது. அது தான் திரைக்கதையின் பலம். படத்தில் வரும் பணிப்பெண்ணை தனது மகளைப் போல நேசிக்கிறார் உம்பர்த்தோ. மருத்துவமனைக் காட்சியில் ஒருவர் அவளைக் காட்டி உங்கள் மகளா என்று கேட்கிறார். உருவாக்கிக் கொள்வது தான் உறவுகள். இத்தனை துயரங்களுக்கு நடுவிலும் உம்பர்த்தோ யாரையும் வெறுக்கவில்லை. அது தான் அவரை மகத்தான கதாபாத்திரமாக்குகிறது.