நூரெம்பெர்க் விசாரணை

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமானது. ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளை விசாரிக்க நூரெம்பெர்க்கில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சர்வதேச நீதிபதிகள் முன்பாக நாஜி ராணுவ தளபதி, அன்றைய அமைச்சர்கள். உயரதிகாரிகள். நீதிபதிகள் எனப் பலரும் நீதி விசாரணை செய்யப்பட்டார்கள்.

இந்த விசாரணையைப் பற்றி Judgment at Nuremberg என்றொரு படம் 1961ல் வெளியானது. மிகச் சிறந்த படமிது.

அந்தத் திரைப்படத்தில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை அவரை மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடிய அனைவரும் குற்றத்திற்கு உடந்தையானவர்களே. அப்படி அவரை நாயகனாகக் கொண்டாடிய தேசங்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாஜி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து செயல்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகள் தான் என்று படம் சுட்டிக்காட்டுகிறது

நூரெம்பெர்க் நீதி விசாரணையைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று மணிநேரம் கொண்ட அந்தத் தொடரைக் கண்டேன். (Nuremberg -miniseries)

நூரெம்பெர்க் விசாரணையின் அறியப்படாத விஷயங்களைப் படம் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொலைக்காட்சி தொடர் ஜோசப் பெர்சிகோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது

இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜி விமானப்படையின் தளபதி ஹெர்மன் கோரிங் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைய ஒரு காரில் தன் குடும்பத்துடன் வந்து இறங்குகிறார். விமானப்படை தளபதியிடம் சரண்டைகிறார். அமெரிக்க ராணுவம் கோரிங்கையும் அவரது குடும்பத்தினையும் தங்கள் விருந்தினர் போல நடத்துகிறார்கள். புகைப்படம் எடுத்து சந்தோஷப்படுகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரூமனின் உத்தரவின் பேரில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ராபர்ட் எச். ஜாக்சனை நூரென்பெர்க் விசாரணையை நடத்த அழைப்பு விடுக்கிறார்கள். அவர் அரசிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதை அரசு ஏற்றுக் கொள்கிறது.

ஜாக்சன் நீதி விசாரணையை எங்கே, எப்படி நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய நூரெம்பெர்க்கிற்குப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். இங்கிருந்து தான் படம் துவங்குகிறது. ஜாக்சனுடன் அவரது உதவியாளரான எல்ஸி டக்ளஸ் பயணிக்கிறாள்.

நாஜி ராணுவம் நடத்திய குற்றங்களுக்காகக் கோரிங், ஆல்பர்ட் ஸ்பியர் மற்றும் பலர் போர்க்குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு லக்சம்பெர்க்கிலுள்ள பேட் மொன்டோர்ஃப் என்ற இடத்தில் அடைக்கப்படுகிறார்கள். நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படும் வரை அவர்களுக்குப் பலத்த காவல் விதிக்கப்படுகிறது.

இந்தக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மனநல நிபுணர் குஸ்டாவ் கில்பர்ட் நியமிக்கப்படுகிறார். அவர் ஒரு யூதர். அவர் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடுகிறார். தாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று போர் குற்றவாளிகள் நினைக்கிறார்கள். வருந்துகிறார்கள்.

நூரெம்பெர்க்கிற்கு வருகை தரும் ஜான்சன் இடிபாடுகளுக்குள் பயணம் செய்து புகழ்பெற்ற நூரென்பெர்க் நீதி சபை கட்டிடத்தைக் காணுகிறார். அக் கட்டிடம் இடிந்து சரியும் நிலையில் இருக்கிறது. அதைப் புதுப்பித்து அங்கேயே நீதிவிசாரணையை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கான பணிகள் உடனே துவங்குகின்றன. மூன்று நாடுகளின் சார்பில் மூன்று நீதிபதிகள் இந்த விசாரணையை மேற்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள்.

ஜாக்சன் எப்படி ஆதாரங்களைத் திரட்டி நீதி விசாரணையை நடத்த இருக்கிறார் என்பது விரிவாகக் காட்டப்படுகிறது. படத்தின் சிறப்பு கோரிங்கின் பிடிவாதமான செயல்கள். சிறைப்பட்ட போதும் அவர் தான் எந்தத் தவற்றையும் செய்யவில்லை.  என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.

ஹிட்லர் மாபெரும் வரலாற்று நாயகன் என மற்றவர்களை மீண்டும் விசுவாசியாக மாற்றுகிறார். அவரிடம் மரணபயமில்லை. சிறைக்காவலர்களைக் கூடத் தன்னுடைய பேச்சில் மயக்கிவிடுகிறார். நீதிமன்றத்திலும் தன்னுடைய தரப்பு நியாயமானது என்றே சொல்கிறார். அவரை ஜாக்சன் நீதி விசாரணை செய்யும் காட்சிகள் மறக்கமுடியாதது.

நீதி விசாரணை துவங்கும் நாளில் தாங்கள் எவரும் குற்றவாளிகள் அல்ல என்று பிரதிவாதிகள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செய்த குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு ஜாக்சனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவர் இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கிறார். யூதர்களுக்கு எதிரான படுகொலைக் காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகிறது. வதை முகாம்களின் கொடூரத்தை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. படத்தில் உண்மையான ஆவணக்காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதைக் காண முடியாமல் நீதிமன்றத்திலே பலர் கண்ணீர் விடுகிறார்கள். தலைகவிழ்ந்து கொள்கிறார்கள். பார்வையாளராக நாமும் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறோம். ஆனால் இக் காட்சிகள் கோரிங்கை உலுக்கவில்லை. அவர் இப்படி எல்லாம் நடந்தது தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். இவை யாவும் புனைந்து உருவாக்கப்பட்டவை என்று மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் நீதிபதிகளால் கூட இந்தக் காட்சிகளைக் காண முடியவில்லை. மன வருத்தம் கொண்டவர்களாக நீதிமன்றத்தை ஒத்தி வைக்கிறார்கள்.

ஜாக்சனின் நீதிமன்ற உரைகள் மிக விரிவாக நாஜிக் குற்றங்களை விளக்குகின்றன. அவர்கள் காட்டிய இனவெறி. முகாமில் அவர்கள் யூதர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னிருந்த ராணுவத்தின் மறைமுக உத்தரவுகள் எனச் சாட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார். ஆனால் இந்த உத்தரவுகளில் கையெழுத்துப் போட்டவர்கள் அவை பொய்யான தகவல்கள் என மறுக்கிறார்கள்.

குறுக்கு விசாரணையில் ஜாக்சனின் முனைப்பை முடக்க வேண்டும் என்பதே கோரிங்கின் நோக்கம். அதில் அவர் நிறைய நேரங்களில் வெற்றி பெறுகிறார். குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாகக் கோரிங்கை ஆதரிக்கிறார்கள். இதனால் ஜாக்சன் சோர்ந்து போகிறார். அவரது அணுகுமுறையைச் சோர்வடையத் தொடங்குகிறது.

கோரிங்கை தனிமைப்படுத்தி வைக்காவிட்டால் அவர் மற்ற கைதிகளைத் தூண்டிவிடுவதை நிறுத்தமுடியாது என்று ஜாக்சன் நன்றாக உணருகிறார். இதன்படி கோரிங் தனிமைப்படுத்தப்படுகிறார்.

நீதி விசாரணையின் துவக்கத்திலிருந்தே ரஷ்யா தனி நிலைப்பாடு எடுக்கிறது. ரஷ்ய ராணுவத் தளபதி தன் அதிகாரத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பக் காட்சியிலே ஜாக்சன் அதைச் சாதுர்யமாகக் கையாண்டு மோதலை தடுத்துவிடுகிறார்.

ஜாக்சன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ஜெர்மானியரின் மனைவி ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில், ரஷ்ய ராணுவ அதிகாரிகளுக்குச் சேவை செய்யமுடியாது. அவர்கள் தன் மகனைக் கொன்றவர்கள் என்று மறுக்கிறார். இதனால் ரஷ்யத் தளபதி கோபம் அடைகிறார். அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக எல்சி தானே உணவு தட்டினை எடுத்துப் போய்ப் பரிமாறுகிறாள்.

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட கோரிங் தனது காவலரான லெப்டினென்ட் டெக்ஸ் வீலிஸுடன் நட்பாகப் பழக ஆரம்பித்து நெருக்கமாகிறார். டெக்ஸ் அவருக்காக மதுவைப் பரிசாக அளிக்கிறான். கோரிங்கை மிகப்பெரிய ஆளுமையாக நினைக்கிறான். கோரிங்கின் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறான். தன் தரப்பு நியாயங்களை அவனிடம் விளக்குகிறார் கோரிங். அதில் தானும் அமெரிக்காவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

ஆஷ்விட்சின் கொடூரத்தை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துகிறார் ஜாக்சன். இதனால் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கான கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறார். நீண்ட குறுக்குவிசாரணைக்குப் பிறகு நீதி விசாரணை முடிவு பெறுகிறது.

முடிவில் கோரிங் மற்றும் சிலர் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறார். ஒன்றிரண்டு பேர்களுக்கு இருபது ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு மூலம் கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கோரிங் எழுப்புகிறார். ஆனால் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடுகிறது.

தூக்குலிடுவதற்கு முன்பாகக் கோரிங் தன் அறையிலே தற்கொலை செய்து கொள்கிறார். மற்றவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள். முடிவில் ஜாக்சன் நீதியை நிலை நாட்டியவராக அமெரிக்கா திரும்புகிறார்.

யூதரான மனநல மருத்துவர் கில்பெர்ட்டை கோரிங் சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் கோரிங் யூதப்படுகொலைக்காக வருத்த மடைவதேயில்லை. அவர் யூதர்கள் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது

இதே போல இன்னொரு காட்சியில் கோரிங்கின் மனைவி குழந்தையை மனநல மருத்துவர் சந்தித்து உரையாடும் காட்சியும் முக்கியமானது. அதில் ஹிட்லர் தங்களை அழித்துவிடும்படி உத்தரவிட்டிருந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்கவே அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் சொல்கிறாள்.

Judgment at Nuremberg படத்தில் இடம்பெற்றது போல நீதிமன்றக் காட்சிகள் வலுவாக இல்லை. ஜாக்சன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியதால் படம் அழுத்தமாக மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜாக்சனாக அலெக் பால்ட்வின் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் வரலாற்றுத் தகவல்கள் துல்லியமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது.

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் பங்களிப்பை ஒத்துக் கொள்ளாத மனநிலையே படம் முழுவதும் வெளிப்படுகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவத் தளபதி, அதிகாரிகள் அனைவரும் முட்டாள் போலவே சித்தரிக்கப்படுகிறார்கள். அது ஹாலிவுட்டின் வழக்கமான தந்திரமாகும்.

நூரெம்பெர்க் விசாரணையை அமெரிக்கா தான் முன்னின்று நடத்தியது என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்தப் படம் முயலுகிறது. அது வரலாற்று உண்மையில்லை.

நீதிவிசாரணையின் ஊடாக ஜாக்சனுக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்படும் நெருக்கம். காதல் காட்சிகள் கதையின் போக்கோடு ஒட்டவேயில்லை.

இடிபாடுகளுடன் உள்ள நூரெம்பெர்க் வீதியினுள் கார் பயணிப்பதும். நீதிமன்ற காட்சிகள். மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஜெர்மானியர்கள் எப்படிக் கட்டுப்பாடுகளுக்கு பழக்கப்பட்டு, யாரோ ஒருவரின் விசுவாசியாக, உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுகிறவர்களாக இருந்தார்கள். அது மரபாக எப்படி அவர்களிடம் தொடர்கிறது என்பதைப் படம் விளக்குகிறது. உத்தரவிற்குக் கட்டுபடுவது ஜெர்மானியர்களின் இயல்பு. அதை ஹிட்லர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். ஆகவே அவர் தன் இஷ்டம் போல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். கட்டளைக்குப் பணியும் அவர்களும் ஹிட்லரின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றி வந்தார்கள் என்பதைக் கில்பெர்ட் விளக்குகிறான்.

எந்த இடத்தில் நீதிமறுக்கபட்டதோ அதே இடத்தில் நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதே படத்தின் முக்கியச் செய்தியாக இருக்கிறது.

••

0Shares
0