நூற்றாண்டின் சாட்சியம்

குமாரமங்கலம் தியாக தீபங்கள் என்று டாக்டர் சுப்பராயன் வாழ்க்கை வரலாற்றை கே.ஜீவபாரதி எழுதியிருக்கிறார். மிக முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல். 500 பக்கங்களுக்கும் மேலாக டாக்டர் சுப்பராயனின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனை பொள்ளாச்சி மகாலிங்கம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் வழியே டாக்டர் சுப்பராயன் குடும்பத்தினைப் பற்றி மட்டுமின்றி, நீதிக்கட்சி உருவான வரலாறு. அதன் செயல்பாடுகள். அன்றைய சட்டமன்ற நடவடிக்கைகள். அரசு பணியாளர் தேர்வாணையம் உருவானது. அறநிலையத் துறையை உருவாக்கியது. திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடச் செய்தது என முக்கியச் சமூக அரசியல் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்திய அரசியலில் சுப்பராயன் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அவரது மகன் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் இந்திய இராணுவத்தின் தலைமைப் படைத் தலைவராக இருந்தவர். இரண்டாவது மகன் ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்  நெய்வேலி நிலக்கரிக்கழகத்தின் தலைவராக விளங்கியவர். மூன்றாவது மகனான மோகன் குமாரமங்கலம் மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். மகள் பார்வதி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பார்வதியின் கணவர் கிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட். அவர்களின் காதல்கதை திரைப்படமாக்க வேண்டிய அளவு சுவாரஸ்யமானது.

அன்று Court of Wards சட்டப்படி தந்தையை இழந்த ஜமீன்தார்களின் பிள்ளைகளைப் பிரிட்டிஷ் அரசே படிக்க வைத்துப் பராமரிப்பு செய்தது. இந்தச் சட்டத்தின் கீழே சுப்பராயன் படிப்பைப் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற சுப்பராயன் உயர்கல்வி பெற லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வாதாம் கல்லூரியில் சேர்ந்தார். அவரது மனைவி ராதாபாய் மங்களூரைச் சேர்ந்தவர். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த ராதா பாயைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ராதாபாயும் சுப்பராயனுடன் லண்டன் சென்று அதே பல்கலைகழகத்தில் கல்வி பயின்றிருக்கிறார். முதல் உலகப்போரை ஒட்டி இந்தியா திரும்ப முடியாமல் இங்கிலாந்திலே சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

சுப்பராயன் குடும்ப வரலாற்றின் வழியே நூற்றாண்டுகாலத் தமிழ் வாழ்க்கையின் மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது.

தமிழக அரசியல் தலைவர்களில் அதிகப் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றிப் பெருமை சேர்ந்தவர் டாக்டர் சுப்பராயன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று படித்திருக்கிறார். சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். .தமிழகத்தின் முதலாவது அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். (அவரது காலத்தில் முதலமைச்சர் இப்படித் தான் அழைக்கப்பட்டார் ) முதல்வர் பதவிக்கு அவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார். அதில் அன்றைய கவர்னரின் பங்கு எப்படியிருந்தது என்பதைப் பற்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார்கள்.

மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மத்திய அமைச்சர், இந்தோனேசியத் தூதுவர். மாநில ஆளுநர், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்று சுப்பராயன் வகித்த பொறுப்புகள் முக்கியமானவை.

அவரது குடும்பத்தில் அனைவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். டாக்டர் சுப்பராயன் மனைவி ராதாபாய் பிராமணப்பெண். மங்களூரைச் சேர்ந்தவர். அவரது ஒரு மருமகள் பஞ்சாபி. இன்னொரு மருமகள் வங்காளி. மருமகன் கேரளாவைச் சேர்ந்தவர். பேரன் பேத்திகளும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களே. அவரது குடும்பம் தான் உண்மையான பாரதவிலாஸ்.

டப்ளினில் படித்துக் கொண்டிருந்த போது அயர்லாந்து விடுதலை அமைப்புடன் இணைந்து போராடியிருக்கிறார். சில காலம் இங்கிலாந்து பிரதமர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1911ல் டெல்லியில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற துணைத்தலைவரானவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அதற்குக் காரணமாக இருந்தவர் டாக்டர்சுப்பராயன் . இந்தியாவிலே சமூகநீதி அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை மாகாணத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது.

அந்தக்காலத்தில் எல்லோருக்கும் வாக்குரிமை கிடையது. நிலவரியாகப் பத்து ரூபாய் செலுத்தியவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டு வரியாக ஆண்டுக்கு மூன்று ரூபாய் செலுத்தியவர்கள் மற்றும் பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும், வேட்பாளராக நிற்க முடியும்.

கவர்னர் 29 உறுப்பினர்களைத் தானே நேரடியாக நியமனம் செய்வார். ஆந்திரா, கர்நாடகம். கேரளா ஆகிய மூன்றும் தமிழகத்துடன் இணைந்திருந்த காலமது. அன்றைய தேர்தல் எப்படி நடந்தது. வாக்குப் பெட்டிகள் என்ன வண்ணத்திலிருந்தன. எப்படி அமைச்சரவை உருவாக்கப்பட்டது என்ற தகவல்களை இந்தநூலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

பார்வதி கிருஷ்ணன்

தந்தை காங்கிரஸ் கட்சியிலும், மகனும் மகளும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள். மருமகன் கிருஷ்ணனை கைது செய்யப் போலீஸ் தேடிக் கொண்டிருந்த காலத்தில் சுப்பராயன் அமைச்சராக இருந்திருக்கிறார். இப்படி அரசியலில் எதிர்நிலைகளைக் கொண்டிருந்த போதும் டாக்டர் சுப்பராயன் குடும்பம் தேசத்தின் நலனை முதன்மையாகக் கொண்டிருந்தார்கள் என்பதையே ஜீவபாரதி விளக்கியிருக்கிறார்.

டாக்டர் சுப்பராயன் இங்கிலாந்தில் படிக்க சென்ற போது நேருவும் அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நீண்டகாலம் நீடித்தது. டாக்டர் சுப்பராயனுக்கு நேரு எழுதிய கடிதங்களில் அந்த நட்பினையும் அன்பினையும் காண முடிகிறது. இது போலவே இந்திரா காந்தி. மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பாசு, பார்வதி கிருஷ்ணனுடன் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பார்வதி. இவர்கள் திருமணம் மும்பை கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அதற்கான செலவு ரூபாய் 20 மட்டுமே.

பாரதி நூலின் தடைக்கான சுப்பராயனின் நிலைப்பாடு, மற்றும் சட்டமன்ற உரையில் அவர் தெரிவிக்கும் பல கருத்துகள். அவரது பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாடு குறித்த மாற்றுக்கருத்துக்கள் எனக்கிருக்கின்றன. ஆயினும் நீண்ட அரசியல் பராம்பரியம் கொண்ட குடும்பமாக அவர்கள் பொதுவாழ்க்கையில் செயல்பட்ட விதம்.  சமூக அரசியல் தளங்களில் உருவாக்கிய மாற்றங்கள், அதற்காகச் சந்தித்த பிரச்சனைகள். அடைந்த வெற்றிகள் வியப்படையவே வைக்கின்றன.

0Shares
0