Libraries are mankind’s common memory – Umberto Eco
Umberto Eco – A Library of the World ஆவணப்படம் உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றியும் புத்தக வாசிப்பு குறித்த அவரது எண்ணங்களையும் கொண்டுள்ளது
இந்த ஆவணப்படத்தில் ஈகோவின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகத்தைக் காணுகிறோம். தனிநபர் சேமிப்பில் உலகின் பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. இதில் அரிய நூல்கள் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அரிய நூல்களைத் தேடிச் சேகரித்தவர் ஈகோ. அவரது சேமிப்பில் ரசவாதம் துவங்கி அழிந்து போன மொழிகள் வரை பல்வேறு துறைகள் சார்ந்த விசித்திரமான நூல்கள் இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மின்புத்தகங்கள் வந்துவிட்டாலும் தனக்குக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே பிடித்தமானது என்கிறார். குறிப்பாகப் புத்தகங்களைத் தொடும் உணர்வு பற்றி அவர் குறிப்பிடுவது முக்கியமானது. தான் தொழில்நுட்பத்திற்கு எதிரானவனில்லை. ஆனால் அதைத் தொந்தரவாகவே நினைக்கிறேன் என்று சொல்லும் ஈகோ தன்னிடம் ஒரு செல்போன் இருக்கிறது. அதை ஒரு அடையாளத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறேன். பெரும்பாலும் அணைக்கபட்டேயிருக்கும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
ஐநூறு வருஷங்களுக்கு முன்பு அச்சிடப்பட்ட புத்தகங்களை இன்று கையில் எடுத்து வாசிக்க முடியும். ஆனால் தொழில்நுட்பம் மாறிக் கொண்டேயிருப்பதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மின் புத்தகங்களில் பலவற்றை இன்று திறந்து படிக்க முடியவில்லை. பார்மெட் மாறிவிட்டிருக்கிறது. அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு இது போன்ற அப்டேட் செய்ய வேண்டிய பிரச்சனையில்லை என்கிறார்.
ஈகோவின் பேரன் இந்த ஆவணப்படத்தில் தனது தாத்தாவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் சிறப்பானவை. அவர் தனக்குப் பரிசாகக் கொடுத்த புத்தகம் பற்றி நன்றியோடு நினைவுகூறும் அவன் தனக்குப் புத்தகம் படிப்பதில் ஆர்வமேயில்லை என்கிறான். இந்தத் தலைமுறையின் குரல் இதுவே. ஆனாலும் தாத்தாவின் சேமிப்பிலுள்ள புத்தகங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் தான் உணர்ந்துள்ளதாகச் சொல்கிறான்.
ஈகோவின் நூலகத்தில் அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரைப்பற்றிய புத்தகங்களும் வரிசை வரிசையாக இடம்பெற்றுள்ளன.
உம்பெர்தோ ஈகோ கடந்த ஆண்டுத் தனது 84வது வயதில் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்தக் கூட்டம் தன்னை உள்ளே நுழைய விடவில்லை. வரிசையில் வரும்படி சொன்னார்கள் என்கிறார் ஈகோவின் மனைவி.
அவரது நூலகத்தில் அரிய புத்தகங்களுக்கென்றே தனியறையிருக்கிறது. அந்த அறைக்குள் அமர்ந்து படிக்கப் பெரிய மேஜை. நாற்காலிகள். அங்கே ஈகோ புத்தகம் படித்து முடித்தவுடன் புல்லாங்குழல் வாசிப்பது வழக்கம் என்று அவரது புல்லாங்குழலை அடையாளம் காட்டுகிறார்கள். அரிய புத்தகங்களும் புல்லாங்குழலும் இணையும் இடத்தை ரசித்துப் பார்த்தேன்.
இந்த ஆவணப்படத்தில் அதானசியஸ் கிர்ச்சர் (Athanasius Kircher) என்ற 17 ஆம் நூற்றாண்டு இறையியல் அறிஞரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவர் எல்லாத் துறைகள் சார்ந்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தவறான விளக்கத்தை ஆர்வத்துடன் எழுதியவர் என்று ஆவணப்படத்தில் அவரை அறிமுகப்படுத்துவது சிறப்பானது.
தனக்கு ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கு ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை வருடங்கள் எழுதுவதற்காகச் செலவிடுவதை ரசித்து அனுபவிக்கிறேன். அவசரமாக ஒரு நாவலை எழுதக்கூடாது என்று அறிவுரை தருகிறார் ஈகோ.
இவரைப் போலவே நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான யோசே ஸரமாகோவும் ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் எனத் தொடர்ச்சியாக எழுதினால் போதும். ஒரு நாவல் முடிந்துவிடும். என்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டும் நினைப்பவன் பேராசை கொண்டவன் என்றும் கேலி செய்கிறார்.
உம்பர்டோ ஈகோவை மிகவும் பாதித்த நவீன எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஈகோ தனது இரண்டு புத்தகங்கள் அவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அத்தோடு தனது மகனுக்கு ஸ்டெஃபனோ என்று ஜாய்ஸின் கதாபாத்திரப் பெயரை வைத்திருக்கிறார். அத்தோடு யுலிஸஸ் மற்றும் ஃபின்னெகன்ஸ் வேக்கின் அரிய பதிப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்.
தனது Name of the Rose நாவலை ஜனவரி 5ம் தேதி எழுதி முடித்தார் ஈகோ.ஆகவே அவரது மற்ற நாவல்களை எழுதும் போதும் அதை ஜனவரி 5ம் தேதி முடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இப்படியான விசித்திர நம்பிக்கைகள் தேவை தான் என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அது போலவே இரவில் சில பக்கங்களாவது நாவல் வாசிப்பது தனக்கு வழக்கம். அது புதிய கனவினை உருவாக்கக் கூடியது என்றும் சொல்கிறார். நோயுற்ற நாட்களில் மனதிற்கு ஆறுதலாக இருப்பது மீள் வாசிப்பே. அதுவும் செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது விரைவாகக் குணமடைவதாக உணர்கிறேன் என்கிறார்
அவரிடம் இரண்டு நூலகங்கள் உள்ளன. ஒன்று நகரிலுள்ள அவரது வீட்டில் மற்றொன்று அவரது கிராமப்புற வீட்டில். இரண்டு பிரதிகள் உள்ள புத்தகங்களில் ஒன்றைக் கிராமத்து வீட்டிலுள்ள நூலகத்திற்கு அனுப்பிவிடுவேன். அப்படியே அங்கே இருபதாயிரம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன என்கிறார். ஈகோவின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. அது குறித்த கேள்விக்கு அவரது பதில் இதுவே
Not taking yourself too seriously and not taking others too seriously.