நூலகத்தின் புத்தக அடுக்குகளில் நாவல் பகுதியில் யார் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தாலும் அவராக வந்து அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்.
அப்படித் தான் எனக்கும் ஒரு நாள் அறிமுகம் ஆனார்.
நாற்பது வயதிருக்கும். அரைக்கை சட்டை போட்டிருந்தார். பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. மெலிந்த தோற்றம். பேசும்போது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துக் கொண்டார். எதையோ தொலைத்துவிட்டுத் தேடுபவரைப் போல அவரது குரல் இருந்தது
“1984ல் ஒரு புத்தகத்தைப் பாதிப் படிச்சிட்டு ரிடர்ன் பண்ணிட்டேன். புக் பேரு ஞாபகமில்லை. ஆனால் அது ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். போர் நடக்கிறப்போ ஒரு சிட்டில குண்டுவீசுறாங்க. அதுல வீடு இழந்து போன ஒரு அம்மா தன்னோட மூன்று பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு ரயில்வே ஸ்டேஷன் போவாங்க. அங்கே ஆயிரக்கணக்கில் கூட்டம். அப்போ பார்த்து விமானத்துல இருந்து குண்டு போறாங்க. ரயில்வே ஸ்டேஷன் மேல பாம் விழுந்து ஒரே அலறல். அந்த அம்மாவோட ஒரு பொண்ணு காணாமல் போயிடுவா.. இடிபாடுகளுக்குள்ளே அந்த அம்மா தன் மகளைத் தேடி போவாங்க. அது வரைக்கும் தான் படிச்சேன். அதுக்குள்ளே புக்கை ரிடர்ன் பண்ணிட்டேன். என்ன புத்தகம்னு தெரியலை. ஆனா படிக்கணும் ஆசையா இருக்கும். நானும் வருஷக்கணக்கிலே தேடிப் பார்க்குறேன். ஒருத்தருக்கும் அந்தப் புக்கை பற்றித் தெரியலை“ என்றார்
“எந்த நாட்டு நாவல்“ என்று கேட்டேன்
“தெரியலை சார். பைண்டிங் பண்ணின புத்தகம்“ என்றார்
“கேரக்டர் பேரு ஏதாவது ஞாபகம் இருக்கா“ என்றேன்
“வெளிநாட்டு பேரு எல்லாம் மனசுல நிக்காது“ என்றார்
“எரிக் மரியா ரிமார்க் எழுதிய நாவலா“ என்று கேட்டேன்
“தெரியலை சார். நீங்க சொல்ற நாவல் இங்கே இருக்கா“ என்று கேட்டார்
“துன்பக்கேணினு ஒரு நாவல் இருந்தது. முன்னாடி படிச்சிருக்கேன் “என்றேன்
“தேடிப்பாக்குறேன் சார். அந்தப் புக்கை முழுசா படிக்காமல் ஏன் ரிடர்ன் பண்ணினேனு தெரியலை. ஆனா அந்தக் கதையை மறக்க முடியலை. மனசுலயே நிக்குது“ என்றார்
பாதிப் படித்த புத்தகம் இப்படிப் பலரது மனதிலும் நிற்கவே செய்கிறது. என்றோ படித்த அந்தப் புத்தகத்தைத் திரும்ப தேடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
மகளைத் தேடிச் சென்ற அம்மாவிற்கு என்ன ஆனது என்பதை அவர் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். போரில் பாதிக்கபட்ட அந்தக் குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்தது என்ற கேள்வி அவர் மனதை அரித்துக் கொண்டேயிருக்கிறது.
படித்த புத்தகங்களின் கதாபாத்திரங்கள். நிகழ்வுகள் இப்படி எத்தனை காலம் கடந்தாலும் மனதில் பசுமையாக நின்றுவிடுகின்றன. புத்தகத்தின் பெயர் மறந்து போய்விடுகிறது. எழுத்தாளர் பெயர் மறந்து போய்விடுகிறது. ஏன் கதாபாத்திரத்தின் பெயர் கூட மறந்து போய்விடுகிறது. ஆனால் நிகழ்ச்சிகள் ,தருணங்கள் மறப்பதேயில்லை. உடலில் ஏற்பட்ட வடு போல மனதில் இந்த நிகழ்வுகள் தங்கிவிடுகின்றன.
காணாமல் போன குழந்தையைத் தேடுவதைப் போல உண்மையான அக்கறையோடு அவர் அந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிப்பது என்பது தனிவகைச் சந்தோஷம். பள்ளி வயதில் இதற்காகவே சின்னஞ்சிறிய புத்தகங்களை எடுத்து வருவேன். 24 பக்கங்களைப் படித்து முடிக்கும் போது பெரிய சாதனை செய்துவிட்டதைப் போலவே தோன்றும்.
பின்பு மெல்லப் பெரிய பெரிய புத்தகமாக எடுத்துவந்து படித்து நிறையப் பக்கங்களைப் படித்து முடிக்கும் போது விருந்து சாப்பிட்டது போலவே உணர்வேன்.
சில புத்தகங்களைப் படிக்கும் போது அது முடித்துவிடக்கூடாது என்று தோன்றும். உண்மையில் ஒரு புத்தகம் அதன் கடைசிப்பக்கத்தோடு முடிந்துவிடுவதில்லை. அது வாசகர் மனதில் விரிவடைய ஆரம்பிக்கிறது.
டால்ஸ்டாயின் அன்னாகரீனனா நாவல் அன்னாவின் தற்கொலையோடு முடிந்து போகிறது. ஆனால் அதற்கு அப்புறம் அன்னாவின் மகன் எப்படி வளர்ந்தான். அவன் தன் தாயின் மரணத்தை எவ்வாறு புரிந்து கொண்டான் என்றெல்லாம் வாசகர்கள் தானாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.
அப்படி அன்னாகரீனனாவின் மகன் தாயின் காதலன் விரான்ஸ்கியை சந்தித்து உரையாடும் திரைப்படம் ஒன்றை கூடச் சமீபத்தில் பார்த்திருக்கிறேன்.
ஏன் ஒரு நாவலோ, கதைப்புத்தகமோ இப்படி வாசகர் மனதில் தீராமலரைப் போல மலர்ந்து கொண்டேயிருக்கிறது
வாசகர் அதை வெறும் கதையாக நினைப்பதில்லை. நாவல் என்பது ஒரு வகை வாழ்க்கை என்றே நினைக்கிறார்கள். கால இயந்திரம் வழியே நீங்கள் வேறு ஒரு காலத்திற்குப் பயணிக்க முடியும் என்பதற்கு சாட்சிகள் இல்லை. ஆனால் அதே கால இயந்திரமாக வாசிப்பு நம்மை நாவலுக்குள் பயணித்து அந்த மனிதர்களை அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வைக்கிறது. அதனால் தான் நாவலின் கதாபாத்திரங்கள் அடையும் வேதனைகள் படிப்பவரைக் கண்ணீர் சிந்த வைக்கிறது.
எரிக் மரியா ரிமார்க் நாவலைப் பற்றி சொன்ன இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரைத் திரும்பவும் நூலகத்தில் சந்தித்தேன்
“நீங்க சொன்ன புக் இல்லை சார். அது வேற கதை. நான் சொன்னது வேற கதை “என்றார்
“நீங்க படிச்ச புத்தகத்துல கதை எந்த நகரத்துல நடக்குதுனு ஞாபகம் இருக்கா“
“ஞாபகமில்லை“
“எந்த நாட்டு விமானம் குண்டுபோட்டதுனு நினைவு இருக்கா“
“அதுவும் ஞாபகமில்லை“
“இந்த அம்மா, மகள் குண்டு போட்டது தவிர வேற ஏதாவது விஷயம் மனசில இருக்கா“ என்று திரும்பவும் கேட்டேன்
“அவங்க ஒரு சதுக்கத்தைக் கடந்து வருவாங்க. அங்கே ஒரு பேக்கரி மேல் குண்டு போட்டு ரொட்டி எல்லாம் வெளியே சிதறிக் கிடக்கும். பையன் அதைத் திரும்பித் திரும்பி பார்த்துகிட்டே போவான்“
ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட நாவல் தான் என்பது தெரிந்தது. ஆனால் செக் நாவலா, ஜெர்மானிய நாவலா, அல்லது பிரெஞ்சு நாவலா என்று தெரியவில்லை
“யாருக்கும் தெரியலை சார். அந்தப் புக்கை நான் ஒருத்தன் மட்டும் தான் படிச்சேனா“ என்று ஏக்கத்துடன் கேட்டார்
“நான் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் படிச்சிருக்கேன். ஆனால் நீங்கள் சொல்கிற தகவல்களை வைத்து எந்த நாவல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மொழிபெயர்ப்பாளர் பெயர் தெரிந்தால் உடனே கண்டுபிடித்துவிடலாம்“ என்றேன்
அதுவும் அவருக்கு நினைவில்லை என்பது போல மௌனமாக இருந்தார். இன்றிருப்பது போலக் கூகுளில் தேடும் வசதி அன்று கிடையாது. சில மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் மூலநூலின் பெயர் இருக்காது. எழுத்தாளரின் பெயர் ஆங்கிலத்தில் இருக்காது. அதே எழுத்தாளரின் வேறு புத்தகத்தைத் தேடி வாங்க வேண்டும் என்றால் அது பகீரதப் பிரயத்தனமாக இருக்கும். அப்படி நிறைய அலைந்து சிரமப்பட்டிருக்கிறேன்.
இந்தச் சூழலில் அவர் சொல்லும் தகவல்களை வைத்து ஒரு புத்தகத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அவருக்காகப் பல மொழிபெயர்ப்பு நாவல்களைத் தேடிப் பார்த்தேன். ஒன்றிலும் அவர் சொன்ன கதையில்லை. நினைவிலிருந்து சொல்லும் போது துல்லியமாக இருக்காது. ஒருவேளை அவர் சொன்னது வேறு ஏதாவது சிறுகதையில் படித்த விஷயமாகக் கூட இருக்கலாம். நினைவில் அது நாவலோடு தொடர்பு கொண்டிருக்கும் என்றும் தோன்றியது
ஆனால் அவர் தன் முயற்சியைக் கைவிடாமல் நூலகத்தில் சந்திக்கும் பலரிடமும் விசாரித்துக் கொண்டேயிருந்தார். ஒருவராலும் அவர் சொல்லும் புத்தகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வளவு தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. சரி போகட்டும் என்று அந்த மனிதரால் விடமுடியவில்லை. பாதியில் ஒரு புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்ததை ஒரு குற்றமாக அவர் நினைக்கிறார். வருத்தமடைகிறார். ஒரு புத்தகத்திற்காக ஒருவர் இவ்வளவு குற்றவுணர்வு கொள்வார்களா என்று தோன்றியது
அவர் நூலகத்திலிருந்து எந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படித்தாலும் பாதியில் படிக்காமல் விட்ட புத்தகமே நினைவிற்கு வந்து கொண்டிருக்கும். ஏழெட்டு ஆண்டுகள் அவர் இப்படித் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். பிறகு அவரை நான் சந்திக்கவேயில்லை.
ஆனால் அவர் தேடிய புத்தகம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த மொழிபெயர்ப்பு நாவலைத் தேட ஆரம்பித்தேன். பலரும் ஆலோசனை சொன்னார்கள். வேறுவேறு நாவல்களில் அது போன்ற நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் சரியாக எந்த நாவல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மொழியாக்க நாவல்களைப் பற்றி ஆய்வு செய்யும் ஒருவரை கூடச் சந்தித்துப் பேசினேன். அவராலும் உதவி செய்ய முடியவில்லை. ஜெர்மனியிலுள்ள ஒரு நண்பர் மூலம் அங்கேயும் தேடச் சொன்னேன். இது போலப் பல நாவல்கள் இருக்கிறது. எது என்ன சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவரும் சொன்னார்.
தொலைத்த மோதிரத்தையோ, பணத்தையோ கூட இவ்வளவு காலம் தேடுவார்களா எனத் தெரியாது. ஆனால் ஒரு புத்தகத்தை ஒரு மனிதர் ஆண்டுக்கணக்கில் தேடிக் கொண்டேயிருக்கிறார் என்பது வியப்பாகவே இருந்தது.
இப்படியான விசித்திரமான மனிதர்களைக் கொண்டது தான் நூலகம். குடும்பத்தின் பார்வையில் அவர் ஒரு முட்டாளாகத் தோன்றக்கூடும். உலகம் அவரை உருப்படாத வேலை செய்கிறவராக நினைக்கக்கூடும். ஆனால் அந்த மனிதரின் தவிப்பு உண்மையானது. புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
காலத்தின் கருணை தான் பிரிந்தவர்களை ஒன்று சேர்கிறது. காலம் தான் அவருக்கும் பாதியில் படித்த புத்தகத்தை மீண்டும் கண்ணில் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
எனது நண்பர்களில் ஒருவர் எந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தாலும் அதன் கடைசிப்பக்கத்தில் எப்போது படித்து முடித்தோம் என்ற நாள் நேரத்தை எழுதிவைத்துக் கொள்வார். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த வயதில், எந்த ஆண்டில் ஒரு புத்தகம் படித்தோம் என்பது முக்கியமானது. என் தந்தை கற்றுக் கொடுத்த பழக்கம். என் பதினெட்டு வயதில் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய The Problems of Philosophy படிச்சிருக்கேன். அது முக்கியமில்லையா என்பார்.
நான் இப்படி நாள் நேரம் குறித்துக் கொள்வதில்லை. ஆனால் மனதில் சில புத்தகங்களைப் படித்து முடித்த நேரமும் நாளும் மஞ்சள் வெளிச்சத்தோடு அப்படியே ஒளிர்கிறது. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அடைந்த வியப்பு இன்றும் மறையவேயில்லை. புத்தகம் என்பது ஒரு கிரகம் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கும் போதும் விண்வெளிப் பயணியைப் போலவே உணருகிறேன்.
••
11.11.20