சிலரால் ஒரு நிமிஷம் கூடக் காத்திருக்கமுடியாது. சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்க வேண்டும். உடம்பில் பரபரப்புத் தொற்றிக் கொண்டேயிருக்கும். பேசும் போதும் அவசரமாகப் பேசுவார்கள். சாப்பிடுவதிலும் அவசரம். பஸ் வந்து நிற்பதற்குள் ஏறி அமர்ந்துவிடுவார்கள். திரையரங்கில் சினிமா போடுவதற்கு அரை மணி நேரம் ஆகும் என்றால் காத்திருக்கமாட்டார்கள். இவ்வளவு ஏன் டீயை வாங்கினால் கூட இரண்டே உறிஞ்சில் குடித்து முடித்துவிடுவார்கள்.
அவ்வளவு அவசரம் எதற்கு என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு அது அவசரம், பதற்றம். அவர்களுக்கோ அது தான் இயல்பு. ஏன் தன்னைப் போல மற்றவர்கள் இல்லை. எதற்காக இவ்வளவு மெதுவாகச் செயல்படுகிறார்கள் என்று கோபம் அடைவார்கள்.
அப்படி ஒருவரை நூலகத்தில் சந்தித்திருக்கிறேன். வந்த வேகத்தில் சைக்கிளைச் சரியாகப் பூட்டக்கூட மாட்டார். வேப்பமரத்தில் சாய்த்து வைத்துவிடுவார். நூலக அடுக்குகளுக்குள் போய்த் தேட பொறுமையிருக்காது. நூலகர் மேஜையில் இருக்கும் புத்தகத்தில் ஒன்றை எடுத்துக் கொள்வார். நியூஸ் பேப்பரை அவர் புரட்டும் வேகம் ஆச்சரியமாக இருக்கும். அவர் ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை செய்கிறவர் என்பதும் அவர் கொடுத்த காலண்டர் தான் நூலகத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு பதற்றமான ஒருவர் ஒரு நாள் திடீரென நூலகரிடம் வந்து நியூஸ் பேப்பரில் வந்திருந்த ஒரு புத்தக விமர்சனத்தைக் காட்டி கேட்டார்
“தட்சிண இந்திய சரித்திரம் நம்ம லைப்ரரில இருக்கா. உடனே படிக்கணும்“
“கேட்லாக்கை பாத்து சொல்றேன்“
“இப்பவே பார்த்து சொல்லுங்க சார். எடுத்துட்டு போகணும்“ என்று அவசரமாகக் கேட்டார்
நூலகர் இவரைப் போலக் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு கத்தும் பலரையும் கடந்து வந்தவர் தானே. ஆகவே அவர் நூலகப் பணியாளரை அழைத்து கேட்லாக்கில் தேடச் சொன்னார்
பணியாளர் தேடிப்பார்த்து கேட்லாக் எண்ணை சொன்னார்
“என்னாலே தேட முடியாது. கொஞ்சம் எடுத்துக் கொடுத்துருங்க“ என்றார் அந்தக் கூட்டுறவு வங்கி ஊழியர்
நூலகப் பணியாளர் முறைத்தபடியே புத்தக அடுக்குகளுக்குள் சென்று பார்த்துவிட்டு “லெண்டிங் போயிருக்கு“ என்றார்
“யாரு எடுத்துட்டு போயிருக்கா. எப்போ ரிடர்ன் வரும்“
“வரும்போது எடுத்து வைக்கச்சொல்கிறேன்“
“கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார்“ என வற்புறுத்தினார் ஊழியர்
“உடனே பார்க்க முடியாது. நீங்க நாளைக்கு வாங்க“ என்று நூலகர் அவரை அனுப்பி வைத்தார். மனசேயில்லாமல் கையில் கிடைத்த புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த ஊழியர் வெளியேறிப் போனார்
மறுநாள் மாலை திரும்பவந்தவுடன் “தட்சிண இந்திய சரித்திரம் ரிடர்ன் வந்துருச்சா“ என்று கேட்டார்
நூலகர் இல்லை எனத் தலையசைத்தவுடன் “யாரு எடுத்துட்டு போயிருக்கா“ என்று அதிகாரமான தோரணையில் சொன்னார்
“சீனிவாசன்னு ஒருத்தர் எடுத்துட்டுப் போயிருக்கார். ஆறு மாசமா வரலை“. என்றார் நூலகர்
“அப்போ புத்தகம் கிடைக்காதா “என்று முறைத்தபடியே கேட்டார் ஊழியர்
“போஸ்ட் கார்ட் போட்டு இருக்கோம். அவர் கொண்டுவந்து கொடுத்தால் தான் உண்டு “என்றார் நூலகர்
“அந்த ஆள் அட்ரஸ் என்ன சொல்லுங்க. நான் நேர்ல போய்க் கேட்டு பார்க்குறேன்“ என்றார் ஊழியர்
“அப்படி நீங்க போய்க் கேட்க கூடாது சார் “என நூலகர் மறுத்தார்
“எனக்கு தட்சிண இந்திய சரித்திரம் படிக்கணும் சார். அந்த ஆள் ஆறு மாசமா வீட்ல வச்சிகிட்டா என்ன அர்த்தம். இதை இப்படியே விடக்கூடாது“ என்றார்
வங்கியில் கடன் வசூல் அவரது அனுபவம் கோபமாக வெளிப்பட்டது. அதை உணர்ந்தவரைப் போல நூலகர் சொன்னார்
“நானே ஒரு ஆளை அனுப்பிக் கேட்டுட்டு வரச்சொல்றேன்“ என்றார் நூலகர்
“வீடு அட்ரஸ் மட்டும் சொல்லுங்க சார். புக் தானா வந்துரும்“ என்று மீண்டும் வற்புறுத்தினார் ஊழியர்
நூலகர் சீனிவாசனின் முகவரியைச் சொன்னார்
“பாண்டியன் நகர் தானே. நான் வீட்லயே போய்க் கேட்டுட்டு வந்துருறேன்“. என்றபடியே வெளியேறிப் போனார். அவர் செல்லும் வேகத்தில் நேரடியாகச் சீனிவாசன் வீட்டிற்குத் தான் போவார் என்று தோன்றியது. நாங்கள் நினைத்தது போலவே அவர் அன்று மாலையே சீனிவாசன் வீட்டிற்குப் போயிருந்தார். ஆனால் சீனிவாசன் ஊரில் இல்லை. அவர் திண்டுக்கல்லில் உள்ள மில் ஒன்றில் வேலைக்குப் போய்விட்டார் என்றும் வீட்டில் அவரது அம்மா மட்டுமே இருப்பதாகவும் சொன்னார்.
“சரி விடுங்க. சீனிவாசன் வரும்போது ரிடர்ன் பண்ணினா தான் உண்டு“ என்றார் நூலகர்
“ஆறாம் தேதி வருவார்னு அவங்க அம்மா சொன்னாங்க. நான் அன்னைக்குப் போய்ப் பாத்துட்டு வர்றேன்“
தன் சொந்த விஷயங்களைக் கையாளுவதைப் போல ஒருவர் நூலகத்தில் எடுத்துப் போன புத்தகத்தை மீட்க அலைவதைக் காண வேடிக்கையாக இருந்தது.
சொன்னது போலவே ஆறாம் தேதி அவர் சீனிவாசன் வீட்டிற்குப் போயிருக்கிறார். ஆனால் சீனிவாசன் ஐந்தாம் தேதியே வந்துவிட்டு திரும்பி போய்விட்டதாக அவர் அம்மா சொன்னாராம். சீனிவாசன் பேர்ல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துருவேனு மிரட்டி வைத்துவிட்டு வந்துள்ளதாகச் சொன்னார் வங்கி ஊழியர்
“ஏன் அப்படிச் செய்தீர்கள் “என்று பயத்துடன் கேட்டார் நூலகர்
“அப்படிச் சொன்னா தான் புக் உடனே ரிடர்ன் கொடுப்பாங்க. சீனிவாசன் அம்மா என் கிட்ட அவங்க மகன் ஏதோ கடன் வாங்கியிருக்கிறதா நினைச்சிகிட்டு இருக்காங்க. அப்படியே இருக்கட்டும்னு நானும் உண்மையைச் சொல்லவில்லை“ என்றார்
நூலகருக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் தான் லெண்டிங் எடுத்துப் போன புத்தகத்தை நூலகர் மேஜையில் போட்டபடியே “சீனிவாசனை நேர்ல போய்ப் பாத்துட்டு வந்துட்டேன் சார்“. என்றார்
“திண்டுக்கல் போயா“ என்று வியப்பாகக் கேட்டார் நூலகர்
“ஒரு கல்யாண விஷயமா திண்டுக்கல் போகவேண்டியது இருந்தது. அப்படியே சீனிவாசன் வேலை பாக்குற மில்லுக்குப் போய் நேர்ல பாத்துட்டேன். “
“என்ன சொல்றார்“
“புக் வீட்ல தான் இருக்காம். ரிடர்ன் பண்ணிடுறேனு சொல்றார். “
“உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம்“ என்றார் நூலகர்
“அப்படி விடக்கூடாது சார். வெள்ளிகிழமை நைட் சீனிவாசன் வீட்டுக்கு வருவார். சனிக்கிழமை காலையில் புக் ரிடர்ன் வந்துரும்“
ஆனால் அவர் சொன்னது போலச் சீனிவாசன் வெள்ளிக்கிழமை ஊருக்கு வரவில்லை. புத்தகமும் சனிக்கிழமை திரும்பிக் கிடைக்கவில்லை. ஆத்திரமான வங்கி ஊழியர் நேரடியாகச் சீனிவாசன் வீட்டிற்குப் போய் அவர் அம்மாவிடம் சண்டை போட்டு அவராகத் தேடி புத்தகத்தை மீட்டுக் கொண்டுவந்துவிட்டார்
கையில் தட்சிண இந்திய சரித்திரம் புத்தகத்தை வைத்துக் கொண்டு வெற்றிவீரனைப் போல அவர் நின்ற காட்சி மறக்க முடியாதது.
“இந்தப் புக் ஆறுமாசமா ரிடர்ன் பண்ணலை. அவர் பைன் கட்டணுமே“ என்றார் நூலகர்
“பைன் தானே சார். நான் கட்டுறேன். ஆனா எனக்கு இந்தப் புக் வேணும்“
சீனிவாசன் கட்டவேண்டிய அபராத தொகையை அவரே கட்டி புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனார். ஒரு புத்தகத்தினைத் தேடி இப்படி ஒருவர் திண்டுக்கல் வரை வந்து விசாரணை செய்துவிட்டுப் போவார் என்று சீனிவாசன் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரது அம்மா பேங்கில் இருந்து வந்து தன் வீட்டினை சோதனை போடும் அளவிற்கு மகன் என்ன தவறு செய்தான் என்று அறியவேயில்லை. ஆனால் மிகவும் பயந்து போயிருப்பார்.
எப்படியே தட்சிண இந்திய சரித்திரத்தை மீட்டுக் கொண்டுவந்துவிட்ட அவரது செயலை நூலகர் பாராட்டவே செய்தார். தட்சிண இந்திய சரித்திரம் எடுத்துக் கொண்டு போன ஊழியர் மறுநாளே அதை ரிடர்ன் செய்துவிட்டு சொன்னார்
“என்னவோனு நினைச்சேன். ஊர் சுற்றுவதை பற்றியே இருக்கு“ என்றார் ஊழியர்
“பயண நூல் அப்படித் தானே இருக்கும்“
“இப்படி அந்த ஊருக்கு போ. இந்த ஊருக்குப் போன்னா. யாருகிட்ட காசு இருக்கு.. இது எல்லாம் வேஸ்ட் சார். தட்சிண இந்திய சரித்திரம் ரொம்பச் சுமாரான புக் “என்றார் ஊழியர்
“ஒரு சிலருக்கு பிடிக்கும்“ என்றார் நூலகர்
தட்சிண இந்திய சரித்திரம் பற்றி அந்த ஊழியர் மனதில் தோன்றி ஆசையும் புத்தகமும் ஒன்று சேரவில்லை. அவர் ஏமாந்து போயிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போலப் பரபரப்புடன் நூலகர் மேஜையில் கிடந்த யவனராணியைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனார்.
நானும் தட்சிண இந்திய சரித்திரம் படித்திருக்கிறேன். வங்கி ஊழியர் சொன்னது போல அது சுமாரான புத்தகமில்லை. இந்தியா முழுவதும் சுற்றிய அலைந்து கிடைத்த அனுபவத்தை கொண்டு எழுதப்பட்ட பயணநூல். அந்தக் கால பயண வழிகாட்டி. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் நிறையவே உள்ளன.
“படிப்பதில் கூடவா இவ்வளவு அவசரம்“ என்று நூலகர் எவரிடமோ சொல்லிச் சிரிப்பது கேட்டது.
படிப்பதில் நிறைய ரகமிருக்கிறது. தினமும் பத்து பதினைந்து பக்கம் மட்டுமே படிப்பவர்கள் இருக்கிறார். ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்காதவர்கள் இருக்கிறார்கள். சிலரோ தினமும் கொஞ்சம் எனச் சீராகப் படிப்பார்கள். சிலர் ஒரே நேரத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்கக் கூடியவர்கள். சிலருக்குப் புத்தகத்தைப் படிக்கும் போது எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வேறு சிலரோ இரவில் மட்டும் தான் புத்தகம் படிப்பார்கள். சிலரால் நூலக வாசலில் நின்றபடியே சில பக்கங்களையாவது புரட்டிப் படிக்காமல் போக முடியாது. ஒரு சிலருக்குப் படிப்பதற்குத் தோதான இடம் வேண்டும். படுக்கையில் படுத்தபடியே தான் படிக்க முடியும். இப்படி நூறு வகைக்கும் மேலிருக்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பமே முடிவானது.
பணம் பதவி அதிகாரம் என எதை எதையோ துரத்திச் செல்லும் அவசர யுகத்தில் இப்படி ஒருவர் தான் படிக்க விரும்பிய புத்தகத்தைத் துரத்திச் சென்றது வியப்பானதே.
தட்சிண இந்திய சரித்திரம் காட்டும் இந்தியா இன்றில்லை. ஆனால் இன்றும் இது போல இந்தியா முழுவதும் பயணித்து விரிவாக எழுதப்படும் பயணநூல் தேவையாகவே உள்ளது. என் பயணத்தில் நான் பத்துவிழுக்காடு மட்டுமே எழுதியிருக்கிறேன். எழுதப்படாத நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றை எழுத வேண்டும் என உட்கார்ந்தவுடன் மனது திரும்ப அந்த இடத்திற்கு எப்போது போவோம் என்று ஏங்க ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே எழுத முடியவில்லை.
தமிழில் நிறைய பயணநூல்கள் இல்லை. கதை கவிதைகள் எழுத பல நூறு இளைஞர்கள் புதிதாக வருகிறார்கள். அவர்களைப் போல பயணம் செய்து எழுதும் எழுத்தாளர்கள் நிறைய உருவாக வேண்டும். எவ்வளவு எழுதினாலும் முடிவில்லாமல் விரிந்து கொண்டே போகும் பெருநிலம் இந்தியா. அதை என் பயணத்தில் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்
••