பள்ளி வயதில் நூலகத்திற்குச் செல்லும் போது காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று தான் முதலில் தேடுவேன். பொதுநூலகங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதில்லை. காமிக்ஸ் புத்தகம் என்பதை ஏதோ தீண்டத்தகாத பொருளாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பள்ளிச் சிறுவர்கள் முதலில் தேடுவது காமிக்ஸ் தான். அதுவும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் கிடைக்குமா என்று பரபரப்பாகத் தேடுவேன்.
பள்ளியின் அருகிலுள்ள பெட்டிக்கடை ஒன்றில் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பார்கள். அதை விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் அங்கேயே அமர்ந்து படிக்கலாம். ஒரு காமிக்ஸ் படிக்கப் பத்து காசு கட்டணம். புதிய காமிக்ஸாக இருந்தால் இருபது பைசா. ஆகவே அந்தப் பெட்டிக்கடை பெஞ்சிலே அமர்ந்து காமிக்ஸ் படித்து முடித்துவிடுவேன். இந்தக் கடையைப் போலப் பத்து காசு கொடுத்துக் காமிக்ஸ் படிக்கும் வசதி பொதுநூலகத்தில் ஏன் இல்லை என்று ஏக்கமாக இருக்கும்.
சிவகாசியில் தான் காமிக்ஸ் புத்தகம் அச்சிடுவார்கள்.ஆகவே டவுன்பஸ் பிடித்துச் சிவகாசிக்குப் போய்ப் பழைய புத்தகக் கடைகளில் காமிக்ஸ்வாங்கி வருவதும் உண்டு.
சிறுவர்கள் படிப்பது பற்றி நூலகத்தில் எவருக்கும் ஒரு அக்கறையும் கிடையாது. உயரமான நாற்காலியில் எப்படி ஏறி அமர்ந்து படிப்பது என்று குழப்பமாக இருக்கும். உயரம் குறைவான நாற்காலிகள். மேஜைகள் இருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என யோசித்திருக்கிறேன். அதை விடவும் பெரும்பாலும் பொதுநூலகங்களில் கழிப்பறைகள் கிடையாது. இருந்தாலும் பராமரிக்கப்படாமலே இருக்கும். ஆகவே மூத்திரத்தை அடக்கிக் கொண்டு படிக்க வேண்டியது வரும்
கோடை விடுமுறைக்கு ஆச்சி ஊரான கோவில்பட்டிக்குப் போகையில் நிறையக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்க முடியும். அதற்குக் காரணம் மாமாவின் நண்பர் ஒருவரது வீட்டில் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனச் சிறிய நூலகம் இருந்தது அந்த வீட்டிலிருந்த பெரியவர் காமிக்ஸ் படிப்பவர். எப்போதும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே அவர் காமிக்ஸ் படித்துக் கொண்டிருப்பார். மெலிந்த உருவம். முண்டா பனியன் அணிந்திருப்பார். ஒடுக்கமான முகம். குச்சியான அவரது கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டிருப்பார்..
இரண்டு இரண்டு காமிக்ஸாக ஒன்று சேர்த்துப் பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள். மரபீரோ நிறையக் காமிக்ஸ் புத்தகங்கள் தான். அவர் சிவாஜி ரசிகர் என்பதால் சிவாஜி ரசிகர் மன்றம் வெளியிட்ட மலர்கள். பாட்டுப்புத்தகங்கள் இருக்கும். தான் நடித்த படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வரிக்குறிப்பு ஒன்றைச் சிவாஜி எழுதிய அழகான புகைப்படங்கள் கொண்ட பெரிய மலர் ஒன்றை அங்கே பார்த்திருக்கிறேன்.
காமிக்ஸ் தவிர வீட்டுப் பெண்கள் படிக்கும் தொடர்கதைகள் யாவும் தனியே தொகுத்துப் பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள். தொடர்கதைகளை அப்படிப் படிக்கும் போது கிடைக்கும் அனுபவமே தனி.
காமிக்ஸ் புத்தகங்களை ஒரு பெரியவர் விரும்பி படித்துக் கொண்டிருப்பதைக் கோவில்பட்டியில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். அவர் எத்தனை காமிக்ஸ் புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்பார். ஆகவே தினமும் மூன்று நான்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன்.
சில நேரம் அவர் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் பற்றிக் கேள்வி கேட்பார். ஜானி நீரோ பயன்படுத்தும் துப்பாக்கி என்ன ரகம் என்று சொல்லுவார். கௌபாய் என்ற பெயர் எப்படி வந்தது. கௌபாய்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று விவரிப்பார். இப்படி ஒருவர் ஆசையாகக் காமிக்ஸ் பற்றிப் பேசுவது வியப்பாக இருக்கும்.
பெரும்பான்மையினர் காமிக்ஸ் என்பதே சிறுவர்கள் படிக்கும் புத்தகம் என நினைக்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமில்லை. எல்லா வயதினரும் காமிக்ஸ் விரும்பிப் படிக்கிறார்கள். காமிக்ஸ் புத்தகங்கள் தான் உலகில் அதிகம் விற்பனையாகின்றன. ஜப்பானில் வயதுக்கு ஏற்ப காமிக்ஸ் புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். மாங்கா காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்றே தனிக்கடைகள் இருக்கின்றன. கிராபிக் நாவல்கள் வந்தபிறகு உலகப்புகழ் பெற்ற இலக்கியங்கள் கூடக் கிராபிக் நாவலாக வெளியிடப்படுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் கூடக் கிராபிக் வடிவில் வெளியாகியிருக்கின்றன.
என்னைப் போலவே அந்தப் பெரியவருக்கும் இரும்புக் கை மாயாவியைப் பிடிக்கும் என்பதால் அவருடன் மிக நெருக்கமாக இருந்தேன். சிவகாசியோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்பதால் அந்த பெரியவர் காமிக்ஸ் வெளியிடுவது பற்றி நிறைய சொல்லுவார். இரும்புக்கை மாயாவியின் வரலாறே அவருக்குத் தெரிந்திருந்தது.
1972-ம் ஆண்டு பொங்கலின் போது வெளியான முத்துக் காமிக்ஸ் மூலமாகவே `இரும்புக் கை மாயாவி’ அறிமுகமானார் . இரும்புக் கை மாயாவி கதாபாத்திரத்தை உருவாக்கியவர் கென் பல்மர். இதற்கு ஒவியம் வரைந்தவர் பிளாஸ்கோ
1962ல் லண்டனில் Fleetway பதிப்பகத்தின் வழியே அறிமுமாகி பிரபலம் அடைந்த The Steel Claw தான் இரும்பு கை மாயாவியாகத் தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்புத் துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திர கதைகள் வெளியிடுவதில் முன்னோடியாக இருந்தார்கள்.
இரும்புக் கை மாயாவியின் உண்மைப் பெயர் லூயிஸ் கிராண்டேல். அவர் ஒரு விபத்தின் காரணமாக உலோக கையைப் பொருத்திக் கொள்கிறார். அந்தக் கையில் மின்சாரம் பாயும் போது அவர் உருவம் மறைந்துவிடுகிறது. ஆகவே அரூப மனிதனாக நிறையச் சாகசங்களைச் செய்ய முடிந்தது. குற்றங்களைத் தடுக்கப் பிரிட்டிஷ் உளவுத்துறை அவரைப் பயன்படுத்திக் கொண்டது.
சிவகாசி முத்துகாமிக்ஸ் உரிமையாளர் சௌந்தரப் பாண்டியன் லண்டனுக்குச் சென்று Fleetway பதிப்பகத்திடம் இரும்புக் கை மாயாவி வெளியிடுவதற்கு முறையான அனுமதியை வாங்கியிருக்கிறார். இந்தக் காமிக்ஸை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் முல்லை தங்கராசன்.
இரும்புகை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR அதைத் தமிழில் திறம்பட அகொதீகழகம் என்று மாற்றியது இன்று வாசிக்கையிலும் வியப்பளிக்கிறது.
காமிக்ஸ் புத்தகங்களின் வழியே நான் நிறையக் கனவு கண்டேன். எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியது காமிக்ஸ் புத்தகங்களே. இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, டேவிட் லாரன்ஸ், வேதாளம், மாண்ட்ரெக், என்று காமிக்ஸ் நாயகர்கள் கனவில் உலாவினார்கள்
புதிதாக எந்தக் காமிக்ஸ் புத்தகம் வந்தாலும் அந்தப் பெரியவர் வாங்கி வாசித்துவிடுவார். எது அவரைத் தொடர்ந்து காமிக்ஸ் படிக்க வைத்தது. காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தவுடன் நாம் சாகச உலகிற்குள் நுழைந்துவிடுகிறோம். வாழ்க்கையில் கிடைக்காத பரபரப்பு கதையின் வழியே உருவாகிறது. காமிக்ஸ் என்பது ஒரு மௌனப்படம். சூப்பர் ஹீரோ என்பது காமிக்ஸ் கண்டுபிடித்த விஷயம் தானே.
திரைப்படத்தில் இருவர் சண்டையிடும் போது டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்புவார்கள். அந்த ஒலி கோடுகளாகவும் ஒற்றை சொல்லாகவும் மாறியதை காமிக்ஸ் புத்தகத்தில் தான் கண்டேன். சிறிய சதுரத்திற்குள் வரையப்பட்ட கோடுகள் திரையில் காணும் காட்சிகளைப் போல உயிர்பெறும் அதிசயம் காமிக்ஸில் மட்டுமே சாத்தியம்.
சிறுவர்களுக்காக எழுதப்பட்ட Heidi, Pinocchio, Alice in wonderland. Little Women. Charlie and the Chocolate Factory போன்ற நாவல்களை இப்போது வாசிக்கையில் வியப்பாக இருக்கிறது. குறிப்பாகக் கதை சொல்லும் முறை. மற்றும் கதை விவரிக்கும் நிகழ்வுகள் பேரிலக்கியங்களின் சாயலில் இருப்பதாகவே உணருகிறேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த போது எனது நண்பர் சொர்ணவேல் Michigan State University – East Lansing வளாகத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனத் தனியே ஒரு நூலகம் இருக்கிறது என்று அழைத்துக் கொண்டு போனார். ஒரு பல்கலைகழகம் இப்படிக் காமிக்ஸ் புத்தகங்களுக்காகச் சிறப்பு நூலகம் அமைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மூன்று லட்சத்திற்கு மேலாகக் காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
தேசந்தோறும் வெளியான காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரித்துத் தனியே ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் மூல ஒவியங்கள், முதற்பதிப்புகள் மிகக் கவனமாகப் பாதுகாத்து வைக்கபட்டிருந்தன. அந்த நூலகத்தில் இந்தி, தெலுங்கு, மலையாள காமிக்ஸ் புத்தகங்கள் கூட இருந்தன. ஆனால் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இல்லை. ஆகவே உடனே அந்த நூலகப் பொறுப்பாளரிடம் பேசி முத்துக் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், லயன்காமிக்ஸ் வெளியீடுகளைப் பற்றி விவரித்துச் சொன்னோம். அடுத்த ஆண்டே அவர்கள் நேரடியாகத் தமிழகம் வந்து அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி விட்டார்கள்.
இத்தனை ஆயிரம் காமிக்ஸ் ரசிகர்கள் இருந்த போதும் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனத் தனியே ஒரு நூலகம் கிடையாது. முத்துகாமிக்ஸ் இன்றும் சிறப்பாக தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். புதிய காமிக்ஸ் புத்தகங்களும் பழைய காமிக்ஸ் பிரதிகளும் அவர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றன.
என் பள்ளி வயதில் தேடிப்படித்த பெரியவரின் வீட்டுநூலகம் அவரது மறைவிற்குப் பிறகு செயல்படவில்லை..
பழைய காமிக்ஸ் புத்தகங்களைத் தேடி சேகரிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதன் விலையும் பல ஆயிரங்கள். ஆனால் பெரியவர் சேகரித்து வைத்த அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் அதன் மதிப்புத் தெரியாமல் பழைய பேப்பர்காரனிடம் தூக்கி போட்டிருந்தார்கள்.
பெரும்பான்மையான வயதானவர்கள் சாய்வுநாற்காலியில் படுத்தபடியே ஆன்மீக நூல்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரேயொருவர் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தது மனதில் நிழலாடுகிறது.
காமிக்ஸ் புத்தகங்களும் ஒருவகை ஆன்மீக அனுபவத்தைத் தான் தருகின்றன. அதை ஆழ்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்
••