நூலக மனிதர்கள் 14 சார்லியுடன் ஒரு பயணம்.

9/11க்கு முன்பு வரை சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குப் போய் வருவதற்கு எந்தக் கெடுபிடியும் கிடையாது. வாசலில் ஒரு காவலர் பரிசோதனை செய்வார். அவ்வளவே. உறுப்பினர் ஆவதும் எளிதானதே.

வேலையில்லாமல் சுற்றித்திரிந்த என்னைப் போன்றவர்களுக்குப் பல ஆண்டுகள் அடைக்கலம் தந்த இடம் அமெரிக்கன் சென்டர் நூலகம். அன்றாடம் அந்த நூலகத்திற்குப் போய்வருவேன். அமெரிக்கா சார்ந்த அனைத்துத் துறை நூல்களைக் கொண்ட அழகான நூலகம்.

நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு மிகச்சிறப்பான வசதி செய்து கொடுத்திருப்பார்கள். அழகான இருக்கைகள். கண்ணை உறுத்தாத வெளிச்சம். குண்டூசி விழுந்தால் கூடச் சப்தம் கேட்குமளவு நிசப்தம். எந்தப் புத்தகம் தேவை என்றாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். நிறைய அமெரிக்க இதழ்களை வாசிக்கலாம். அமெரிக்க எழுத்தாளர்கள் எவராவது வருகை தந்தால் அப்போது சிறப்பு நிகழ்ச்சி நடத்துவார்கள்.

நூலகத்தின் கீழ்த்தளத்தில் சிறந்த திரைப்படங்களைத் திரையிடுவார்கள். இந்தத் திரையிடலின் போது பிஸ்கட் டீ வழங்கப்படுவதுண்டு. ஆகவே பல நாட்கள் காலை பத்து மணிக்கு நூலகத்திற்குள் போனால் மாலை ஆறு மணி வரை உள்ளே தான் இருப்பேன். அதுவும் மழைக்காலமாக இருந்துவிட்டால் நூலகத்தில் ஆட்களின் வருகை மிகக்குறைவாக இருக்கும். ரம்மியமான சூழலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கலாம்.

அந்த நூலகத்தில் புத்தகங்களைச் சிறப்பாகப் பராமரிப்பார்கள். குறிப்பாகப் புத்தகங்களுக்குப் பிளாஸ்டிக் அட்டைகள் போட்டு வைத்திருப்பதை அங்கே தான் முதலில் கண்டேன். அழுக்கடைந்து போன. கிழிந்து போன ஒரு புத்தகத்தைக் காண முடியாது. அது போலவே நூலகம் முழுவதும் ஒரு நறுமணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும். மிகச்சுத்தமாக வைத்திருப்பார்கள்.

அந்த நூலகத்திற்கு நிறைய எழுத்தாளர்கள் வருவார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுவது சுவையான அனுபவம். எழுத்தாளர் அசோகமித்திரனை நிறையத் தடவைகள் அங்கே சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் சா.கந்தசாமி, பிரபஞ்சன். விட்டல்ராவ். ஞானக்கூத்தன், ந.முத்துசாமி போன்றவர்களை அங்கே சந்தித்திருக்கிறேன்.

கவிஞர் பிரமீள் அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குத் தவறாமல் வருகை தருபவர். ஆகவே சில நாட்கள் கோடம்பாக்கம் பெரியார் சாலையிலிருந்த அவரது அறைக்குப் போய் அவருடன் இணைந்து அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குச் செல்வேன். எந்த எழுத்தாளரைப் படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் என்று பிரமீள் வழிகாட்டியிருக்கிறார். அவரது தேர்வு தனித்துவமானது. John Updike, Philip Roth, Bernard Malamud போன்ற எழுத்தாளர்களை அவரது பரிந்துரையின் பெயரில் தான் படித்தேன்.

கவிஞர் பிரமீளைக் கண்டால் அசோகமித்ரன் விலகிப் போய்விடுவார். அவர்களுக்குள் கருத்துவேறுபாடு அதிகம். ஆகவே பிரமீளுடன் நான் அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் இருந்தால் அசோகமித்ரன் என்னோடு ஒரு வார்த்தை பேச மாட்டார்.

ஒரு நாள் அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்தமூர்த்தியை சந்தித்தேன். இன்னொரு முறை மராத்தி எழுத்தாளர் மகேஷ் எல்கஞ்ச்வர் வந்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி முக்கியமான திரைப்பட இயக்குநர்கள். நடிகர்கள் ஓவியர்கள் பலரும் இந்த நூலகத்திற்கு வருவார்கள். அவர்களுடன் எளிதாகப் பேசவும் பழகவும் முடிந்தது.

நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குள் போய்விட்டால் நல்ல காபி குடிக்கலாம். சில நாட்கள் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு மாலை வரை படித்துக் கொண்டும் இருப்பேன்.

ஜான் ஸ்டீன்பெக்  நாவல்களை அந்த நூலகத்தில் தான் படித்தேன். மிகச்சிறந்த எழுத்தாளர். ஒரு நாள் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய Travels with Charley: In Search of America புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். தனது நாய் சார்லியுடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து அந்த அனுபவத்தை ஸ்டீன்பெக் எழுதியிருந்தார். மிக நல்ல புத்தகம். அந்தப் பயணம் கிட்டத்தட்ட 10,000 மைல்களை உள்ளடக்கியது.

பொதுவாக அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருப்பவரை எவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கூட நூலகத்தின் வெளியே வரும் போது தான் கேட்பார்கள். எழுத்தாளர்களுடன் பேசுவதாக இருந்தால் கூட வெளியே வரும்வரை காத்திருந்து வெளிவாசலில் தான் பேச முடியும். இதற்காகவே அருகிலுள்ள டிரைவ் இன் ஹோட்டலுக்குச் சென்றுவிடுவோம்.

அன்று நான் Travels with Charley படித்துக் கொண்டிருப்பதை ஒருவர் உற்றுப் பார்த்தபடியே இருந்தார். நான் அதைக் கவனிக்கிறேன் என்ற போது மெல்லிய புன்னகை அவரது முகத்தில் வெளிப்பட்டது. அறுபது வயதிருக்கும். வெள்ளை ஜிப்பா குர்தா அணிந்திருந்தார். பனிரெண்டு மணி அளவில் நான் நூலகத்திலிருந்து வெளியே வந்தபோது அவர் பின்னாடியே வந்தார்.

தன் பெயர் பிரிதிமோய் பட்டாச்சார்யா என்றும் தான் ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர் என்றும் சொன்னார். இருவரும் டிரைவ் இன் சென்று காபி குடித்தோம்.

அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன் என்பதால் அவர் என்னுடன் பேச விரும்பினார் என்பதை அறிந்து கொண்டேன்.

அவர் ஸ்டீன்பெக்கின் தீவிர ரசிகர். அமெரிக்கச் சென்றபோது கலிபோர்னியாவின் சாலினாஸ் என்ற இடத்திலுள்ள ஸ்டீன்பெக் ம்யூசியத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார். ஸ்டீன்பெக்கை போலவே தன் நாயிற்குச் சார்லி என்று பெயர் வைத்திருக்கிறார். அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விடைபெறும் போது தன் விசிட்டிங் கார்டினை கொடுத்து அவசியம் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்றார். பட்டாச்சார்யாவின் வீடு அடையாறில் இருந்தது

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்குப் போன் செய்துவிட்டு வீட்டிற்குப் போயிருந்தேன். மனைவியை இழந்த அவர் தனியே வசித்துவந்தார். சொந்த வீடு. மிகப்பெரியது. வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். நிறையப் பூச்செடிகள். கதவைத் திறந்து உள்ளே வருவதற்குள் அந்த நாயைப் பார்த்துவிட்டேன். ஸ்டீன்பெக்கின் நாயைப் போலவே அடர்த்தியான முடி கொண்ட பூடில் நாய். அந்த நாய் வெளியாட்களைப் பார்த்தவுடன் குரைக்கவில்லை. மாறாகத் துள்ளிவிளையாடியது.

பட்டாச்சார்யா என்னை வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் அமரச் சொன்னார். பாதிப் படித்துக் கவிழ்த்தி வைக்கப்பட்ட வில்லாகேதரின் நாவல் கண்ணில் பட்டது.

தன் தனிமையைப் போக்கி கொள்ளப் புத்தகங்கள் மட்டுமே துணையாக இருப்பதாகச் சொன்னார். மனைவி இறந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டது. அவள் இருந்தவரை இருவரும் நூலகம் வருவோம். புத்தகம் எடுத்துப் படிப்போம். அவள் தான் மிக நல்ல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள் என்றார்

பட்டச்சார்யாவின் நாய் ஸ்டீன்பெக்கின் சார்லி போலவேயிருக்கிறது என்றேன். அப்படித் தேடியே வாங்கிய நாய். நானும் ஸ்டீன்பெக் போல இந்த நாயை அழைத்துக் கொண்டு ஒருமுறை பாண்டிச்சேரி வரை போய்வந்தேன். நான்கு நாட்கள் பயணம். வழியில் மகாபலிபுரத்தில் ஒரு இரவு தங்கிக் கொண்டேன். அப்புறம் இன்னொரு நாள் மரக்காணத்தில் ஒரு நண்பர் விடுதியில் தங்கினேன். இப்படியே கடற்கரை வழியாக நடந்தே புதுச்சேரி சென்று வந்தேன். நல்ல அனுபவம். ஸ்டீன்பெக்கை படித்துவிட்டு வீட்டில் சும்மா எப்படி உட்கார்ந்திருக்க முடியும் என்று சிரித்தபடியே சொன்னார்.

ஒரு புத்தகம் இப்படி ஒருவரைப் பயணம் செய்ய வைக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது.

பட்டாச்சார்யா என்னைத் தனது படுக்கை அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார். அறை முழுவதும் புத்தகங்கள். அவரது கட்டிலின் அடியில் மேஜையில் என எங்கும் புத்தகங்கள். தனக்கு இசை கேட்பதும் புத்தகம் படிப்பதும் மட்டுமே வாழ்க்கை.

.இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை என்பதால் பின்னிரவில் எழுந்து கொண்டு விடியும் வரை படித்துக் கொண்டிருப்பேன். தினமும் ஒரு நூலகத்திற்குப் போய் வருவேன் என்று தனது அட்டவணையைக் காட்டினார்

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம். அமெரிக்கன் சென்டர் நூலகம், மேக்ஸ்முல்லர் பவன் நூலகம். என வரிசையாக எழுதப்பட்டிருந்தது.

அவரது படுக்கையை ஒட்டிய அலமாரியைத் திறந்து காட்டினார். அதில் இரண்டு வரிசையாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் ஒன்றை தன் கையில் எடுத்துக் காட்டினார். அந்தப் புத்தகம் அவரது மனைவியால் பரிசளிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு திருமண நாளின் போதும் அவர் மனைவிக்குப் பிடித்தமான புத்தகத்தைப் பரிசு தருவார். அவர் மனைவியும் அது போல அவருக்கு விருப்பமான புத்தகம் ஒன்றைப் பரிசாகத் தருவார். மேல் அடுக்கு முழுவதும் அவருக்கு மனைவி தந்த புத்தகங்கள்.கீழ் அடுக்கு முழுவதும் அவர் மனைவிக்குப் பரிசாகத் தந்த புத்தகங்கள். இப்படி ஒரு தம்பதிகளா என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்

என் மனைவி இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் திருமண நாளின் போது அவளுக்காக ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வந்து இந்த அலமாரியில் வைத்துவிடுவேன். அந்தக் கிப்ட் ரேப்பர் கூடப் பிரிக்கப்படாது என்று விரலால் சுட்டிக்காட்டினார். உண்மை. கிப்ட் பேக் செய்யப்பட்ட புத்தகம் அப்படியே இருந்தது

அன்று மதியம் வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஸ்டீன்பெக்கின் தீவிர ரசிகர் என்பதால் நிறையச் சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். விடைபெறும் போது எனக்கு ஸ்டீன்பெக்கின் East of Eden நாவலைப் பரிசாகத் தந்தார்

அதன்பிறகு இரண்டு மூன்று ஆண்டுகள் அவரை அமெரிக்கன் சென்டர் நூலகத்திலும் அவரது வீட்டிலும் சந்தித்துப் பழகினேன். ஒரு முறை அவர் வீடு தேடிப் போன போது வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தபோது அவர் குளியல் அறையில் விழுந்து எலும்பு முறிவாகி மருத்துவமனையில் சிகிச்சை ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். பின்பு உறவினர்கள் வந்து அவரைக் கல்கத்தா அழைத்துப் போய்விட்டார்கள் என்றார்கள்.

ஸ்டீன்பெக்கின் Travels with Charleyயை எப்போது புரட்ட ஆரம்பித்தாலும் பட்டாச்சாரியா நினைவிற்கு வந்துவிடுகிறார். புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்களில்லை. அது நினைவின் அடையாளம்.

பெருந்தொற்றுக் காரணமாகத் தற்போது அமெரிக்கன் சென்டர் நூலகம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் அண்ணாசாலையினைக் கடந்து செல்லும் போது ஏக்கத்துடன் அந்த நூலகத்தை நிமிர்ந்து பார்க்கவே செய்கிறேன்

••

0Shares
0