அந்தப் பெண்கள் இருவரும் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்தார்கள். வாரம் இரண்டு முறை அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது நூலகத்திற்கு வருவார்கள்.
நாவல்கள் பகுதியில் தேடி ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொள்வார்கள். ஒரே நாளில் தான் இருவரும் திருப்பிக் கொடுப்பார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரும் எப்போதும் ஒரே எழுத்தாளரின் இரண்டு புத்தகங்களைத் தான் தேர்வு செய்வார்கள்.
ஒருவர் படித்து முடித்தவுடன் மற்றவர் படிக்கக் கொடுத்துவிடுவார்களோ என்னவோ. ஏன் வேறுவேறு புத்தகங்களை அவர்கள் தேர்வு செய்வதில்லை. நண்பர்கள் என்றாலும் இப்படியா இருப்பார்கள் என்று வியப்பாக இருக்கும்.
ஒரே எழுத்தாளரின் இரண்டு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றால் நூலகரிடம் விசாரிப்பார்கள். பலமுறை நூலகர் வேறு நூல்களைச் சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் எடுத்துப் போக மாட்டார்கள். புதிய நூல் கிடைக்கவில்லை என்றால் படித்த புத்தகத்தையே திரும்ப எடுத்துப் போவார்கள்.
அந்தப் பெண்கள் ஒருமுறை நூலகரிடம் ஒரு யோசனையை முன்வைத்தார்கள்
“ஒரு நாளைக்கு லைப்ரரிக்கு எவ்வளவு பேர் வர்றாங்க. புத்தகம் எடுத்துட்டுப் போய்ப் படிக்கிறாங்க. அவங்கவங்க படிச்ச புத்தகம் பற்றி நாலு வரி ஒரு நோட்டில எழுதி வச்சா எவ்வளவு உபயோகமா இருக்கும். நாங்கள் என்ன புத்தகம் தேடி படிக்கிறதுனு தெரியாமல் திண்டாடுறோம்.“
“யாரும்மா எழுதுவாங்க. இதெல்லாம் நடைமுறை படுத்த முடியாது“
“புத்தக அறிமுகம்னு ஒரு ரிஜிஸ்தர் வச்சிப் பாருங்க சார். நாங்க வேணும்னா ஒரு ரிஜிஸ்தர் நோட் கிப்டா வாங்கித் தர்றோம்“ என்றார்கள் அப் பெண்கள்
“கையெழுத்து போட சொல்லி வாசல்ல வச்சிருக்க ரிஜிஸ்தர்லயே பலரும் கையெழுத்து போடுறதில்லை. அங்கே கயிறு கட்டி தொங்கவிட்டிருக்கிற பென்சிலைத் திருடிட்டு போயிடுறாங்க. இதுல படிச்ச புத்தகத்தைப் பற்றி எப்படி எழுதுவார்கள்“ என்று நூலகர் சலித்துக் கொண்டார்
“நல்ல புத்தகம் எதுனு நாங்க எப்படித் தெரிஞ்சிகிடுறது. யாராவது சிபாரிசு பண்ணினா தானே எடுத்துப் படிக்க முடியும்“
“அதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும். பேப்பர்ல, மேகசின்ல வர்ற விமர்சனத்தைப் பாத்து நீங்க தான் தெரிஞ்சிகிடணும்“
“அதுல வர்ற புதுபுக் எதுவும் நம்ம லைப்ரரியிலே கிடையாதே. சுஜாதாவோட காகித சங்கிலிகள் கேட்டேன். அதுவே வர்றலைன்னு சொல்லிட்டீங்க“
“அரசாங்கம் வாங்கிக் குடுத்தா தானே நான் வைக்க முடியும்“ என்று சிரித்தார் நூலகர்
“நாங்களே ஒரு ரிஜிஸ்தர் வாங்கி அதுல நாங்க படிச்ச புக்கை பற்றி நாலு வரி எழுதிட்டு வர்றோம். அதுல மத்தவங்களும் எழுதி வைக்கட்டும். வாரம் பத்து பேர் கூடவா எழுதமாட்டார்கள்“ என்று ஆதங்கமாகக் கேட்டார்கள்
“உங்க விருப்பத்தை நான் ஏன் கெடுக்கணும். வச்சி பாத்துடுவோம்“ என்றார் நூலகர்
சொன்னது போலவே அடுத்த சில நாட்களில் அவர்கள் 240 பக்கம் கொண்ட கலிக்கோ பைண்ட் செய்யப்பட்ட புது ரிஜிஸ்தர் நோட்டு ஒன்றை வாங்கி வந்தார்கள். அதில் அவர்கள் எடுத்துப் போய்ப் படித்த புத்தகம் பற்றி ஒரு பாரா எழுதியிருந்தார்கள். எழுத்தாளரின் பெயர். பதிப்பகத்தின் பெயர். நூலகத்தில் அந்தப் புத்தகத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த வரிசை எண் எல்லாமும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்
அந்த நோட்டில் நான் படித்த சில புத்தகங்களைப் பற்றியும் எழுதினேன். என்னைப் போல நாலைந்து பேர் அதில் தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றி எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் விரும்பியது போலவே ஒரு வாரத்தில் நாற்பது புத்தகங்கள் பற்றிச் சிறிய குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
இரண்டு மாத காலத்தில் அந்த ரிஜிஸ்தர் நோட்டு நிரம்பும் அளவிற்குப் பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றிக் குறிப்புகளை எழுதியிருந்தார்கள். சிறந்த நூல்களுக்கான வழிகாட்டி போல விளங்கியது.
அந்தப் பெண்கள் தங்கள் யோசனை வெற்றிபெற்றதை நினைத்துச் சந்தோஷம் அடைந்தார்கள். ஒவ்வொரு முறை நூலகத்திற்கு வரும்போதும் அந்த ரிஜிஸ்தர் நோட்டினைப் புரட்டிப் பார்த்து நல்ல புத்தகம் பற்றித் தெரிந்து கொண்டார்கள். விருப்பமான புத்தகத்தை இரவல் பெற்றுப் போனார்கள்.
படித்த புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியமானது. வாசிப்பு மேம்படுவதற்கு அது தானே சிறந்த வழி. பொதுநூலகத்திற்கு வரும் வாசகர்கள் இதற்கென ஐந்து நிமிஷங்களைச் செலவழித்தால் போதும் அது யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயன்படவே செய்யும்.
அந்த ரிஜிஸ்தர் நோட்டின் மூலம் நூலகத்திலிருந்த அரிய புத்தகங்கள் பற்றிப் பலரும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு நாள் யாரோ ஒரு முட்டாள் அந்த நோட்டில் மிக ஆபாசமாகக் கீழ்தரமான வாசகங்களை எழுதிக் கிறுக்கலாகக் கையெழுத்துப் போட்டிருந்தான். அதைப் படித்த நூலகர் அந்தப் பக்கத்தைக் கிழித்துப் போட்டார்.
இந்த விஷயம் பற்றி அறிந்த அந்தப் பெண்கள் கொதித்துப் போனார்கள். யார் அந்த ஆள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நூலகரிடம் கோரிக்கை வைத்தார்கள்
“அது தேவையில்லாத பிரச்சனை உண்டாக்கும். இனிமே அப்படி யாரும் எழுதாமல் நான் பாத்துகிடுறேன்“ என்றார் நூலகர்
அடுத்த சில நாட்களில் புத்தகப்பரிந்துரை நோட்டில் ஆபாசமாக எழுதிய ஆளை நூலக ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அந்த ஆள் ஒரு பள்ளியின் விளையாட்டு ஆசிரியர். நாற்பது வயதிருக்கும். வார இதழ்களில் வெளியாகும் நடிகைகளின் படத்தைக் கிழித்து எடுத்துக் கொண்டு போகக் கூடியவன். தான் இரவல் எடுத்துப் போகும் புத்தகங்களில் கூட இப்படி ஆபாசமாக எழுதி வைப்பது அவனது வழக்கம்.
அந்த ஆளை அழைத்து நூலகர் விசாரணை நடத்திய போது அவன் நூலகரை மோசமாகத் திட்டினான். தான் எழுதவில்லை என்று மறுத்தான். அவனை எச்சரிக்கை செய்து நூலகர் அனுப்பி வைத்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் அந்த ரிஜிஸ்தர் நோட்டே காணவில்லை
அந்த ஆள் தான் திருடிக் கொண்டு போயிருக்கக்கூடும்.
அந்தப் பெண்கள் இப்படியான ஆள் எல்லாம் எதற்காக நூலகம் வருகிறான் என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் அத்தோடு ரிஜிஸ்தர் நோட்டு வைக்கும் பழக்கம் நின்று போனது.
எது நல்ல புத்தகம் என்று எப்படித் தெரிந்து கொள்வது என்ற அந்தப் பெண்களின் ஆதங்கம் உண்மையானது. எந்த நூலகத்திலும் என்ன படிக்கலாம் என்ற பரிந்துரை பட்டியல் கிடைப்பதில்லை. சிறந்த புத்தகங்களைப் பற்றிய அறிமுகங்களை நூலகமே சிறிய இலவச கையேடாக வெளியிடலாம். அல்லது நூலகமே அங்குப் படிக்க வரும் வாசகர்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி துறை தோறும் உள்ள சிறந்த நூல்களை அறிமுகப்படுத்திச் சுற்றறிக்கை வெளியிடலாம்.
பெரும்பான்மை பொதுநூலகங்களில் எந்தப் புத்தகம் எங்கேயிருக்கிறது என்று தேடுவது மிகக் கடினம். பெரும்பாலும் இரவல் எடுத்துச் சென்ற புத்தகத்தை அதே இடத்தில் திரும்ப வைக்க மாட்டார்கள். இவ்வளவு கணிணி வசதிகள் வந்த பிறகும் பொதுநூலகங்களில் கணினி உதவியுடன் நாம் விரும்பும் புத்தகம் இருக்கிறதா எனத் தேடும் வசதி கிடையாது.
அமெரிக்காவில் ஒரு நூலகத்தில் இல்லாத புத்தகம் இன்னொரு நூலகத்திலிருந்தால் அவர்களே இரவல் பெற்றுத் தருகிறார்கள். நம் ஊரில் பக்கத்து நூலகத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறதா எனப் பார்த்துச் சொல்லுங்கள் என்றால் கூட உதவி செய்ய மாட்டார்கள்.
அரிய நூல்களைப் படியெடுத்துக் கொள்வதற்கான வசதிகள் பெருநகர நூலகங்களில் காணப்படுகின்றன. ஆனால் சிற்றூர்களில், சிறுநகரங்களில் அந்த வசதி கிடையாது.
இணையத்தின் வருகை இன்று புத்தக அறிமுகத்தை ஓரளவு எளிமையாக்கியிருக்கிறது. வாசித்த புத்தகம் குறித்துப் பலரும் எழுதுகிறார்கள். ஆனால் இது பொதுநூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்
நம் தொலைக்காட்சியில் விதவிதமான டாக் ஷோக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் ஒன்று கூடப் புத்தக அறிமுகம் தொடர்பாகக் கிடையாது. அமெரிக்காவில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்துகிறார்கள்.
ஓப்ரா வின்ஃப்ரே 1996ல் இந்தப் புக் கிளப்பைத் தொடங்கினார். இதில் தேர்வு செய்து விவாதிக்கப்படும் நூல் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிறது. அத்தோடு ஒவ்வொரு மாதமும் இந்த நூலை நாடு முழுவதுமிருந்து பார்வையாளர்கள் படித்து விவாதிக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் 70 சிறந்த புத்தகங்களை இந்த ஷோ பரிந்துரைத்துள்ளது.
இந்த ஷோவில் இடம்பெற்ற புத்தகங்கள் “ஓப்ரா பதிப்புகள்” என்று சிறப்புப் பதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. ஓப்ரா புக் கிளப் ஷோவில் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு நேர்காணல் செய்யப்படுகிறார்கள். கௌரவிக்கப்படுகிறார்கள்.
புத்தகத்தை ஒரு தேசம் எவ்வளவு நேசிக்கிறது என்பதன் அடையாளம் தான் இது போன்ற நிகழ்ச்சிகள். இது போன்ற ஒரு கனவைத் தான் அந்தப் பெண்கள் நூலகத்தில் விதைத்தார்கள். அன்று இது கைவிடப்பட்டிருக்கலாம். இனியாவது இது போன்ற முயற்சிகள் தொடரலாம் தானே.
••••