நூலகத்திற்கு வருபவர்களில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் காண்டேகரின் யயாதி படித்தவர்கள். நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாவலைப் படித்திருப்பார்கள். சிலர் காண்டேகரின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறார்கள் அவர்கள் பேச்சில் அன்றாடம் யயாதி இடம்பெறுவது வழக்கம்.
மராத்திய எழுத்தாளரான காண்டேகரைப் பலரும் தமிழ் எழுத்தாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவு அவரைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ சரளமாகத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்
நூலகத்தில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக யயாதி இருந்தது.
நான் ஒரு முறை யயாதியை எடுத்து படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கும் போது நாராயணசாமி எனக்கு அறிமுகமானார்.
அவர் சிறிய அச்சகம் ஒன்றை நடத்திவந்தார். நரைத்த தலை. எழுபது வயதைக் கடந்த தோற்றம். காதில் உள்ள மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும். கதர்வேஷ்டி. கதர் சட்டை. வலது கையில் வாட்ச் கட்டியிருந்தார். அவரது அச்சகத்தில் புத்தகம் பைண்டிங் செய்து தருவார்கள். ஆகவே சிலமுறை அவரை அச்சகத்திலும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இப்படி யயாதியின் தீவிர வாசகராக இருப்பார் என்று அப்போது தெரியாது.
நான் யயாதியை ரிடர்ன் பண்ணிய உடனே ஆசையாக அதைத் தன் பெயரில் பதிவு செய்து வாங்கிக் கொண்டார்.
அத்தோடு என்னிடம் “முதல் தடவையாகப் படிக்கிறீர்களா“ எனக்கேட்டார்
“இரண்டாம் முறை“ என்றேன்.
“யயாதியை படிக்க ஆரம்பித்தால், விட முடியாது. நான் ஐம்பது தடவைக்கும் மேலே படித்திருப்பேன். ரொம்ப நல்ல நாவல்“ என்றார்
ஏன் அவருக்கு யயாதியை இவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டேன்
“இது வெறும் நாவல் இல்லை தம்பி. ஒரு பாடம். வயசான ஒவ்வொரு மனுசனும் யயாதியைப் போல இளமை திரும்பக் கிடைக்காதானு ஆசைப்பட்டுக் கிட்டு தானே இருக்கான்“.
“எனக்கு யயாதியை விடவும் புருவை தான் பிடிச்சிருக்கு. அவன் தன்னுடைய இளமையைத் தந்தைக்குக் கொடுத்துட்டு முதுமையை ஏற்றுக் கொள்கிறான். அவன் ஒருத்தன் தான் அவனோட அம்மாவை விட வயதானவன் “என்றேன்
“நல்லா சொல்றீங்க. நீங்க என்ன வேலை செய்றீங்க“ என்று கேட்டார்
“எழுத்தாளராக இருக்கிறேன்“ என்றேன்
“நம்ம ஊர்லே இருந்துட்டு எப்படி எழுத்தாளராக முடியும்“ என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
“எழுதுறதுக்குத் தேவை ஒரு இடம். எந்த ஊரா இருந்தால் என்ன“ என்றேன்
“அதுவும் சரிதான். காண்டேகர் மாதிரி நல்லா எழுதுங்க“ என்று ஆசி கொடுத்தார்
நாராயணசாமி யயாதியை கையில் வைத்துக் கொண்டு படியிறங்கி வரும் போது அவரது நண்பர் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு “நானும் யயாதி திரும்பப் படிக்கணும்னு நினைச்சிகிட்டே இருந்தேன். ரிடர்ன் பண்ணும் போது சொல்லு“ என்றார்
“நான் சொல்லலை“ என்று நாராயணசாமி என்னைப் பார்த்துச் சிரித்தார்.
அப்படித்தான் நாராயணசாமியோடு நட்பு ஆரம்பமானது. அதன்பிறகு அவரை நூலகத்தில் பார்க்கும் போதெல்லாம் யயாதியைப் பற்றிப் பேசுவார். அவரைப் போலவே யயாதியை ஆசையாகப் படிக்கும் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஒரு நாள் அவரை அச்சகத்திற்குச் சென்று பார்த்தேன். மரஸ்டூல் ஒன்றை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். மகாபாரதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
“இளமையில் நீங்கள் என்ன செய்துகிட்டு இருந்தீங்க“ என்று கேட்டேன்
“மனம்போன போக்கில வாழ்ந்துகிட்டு இருந்தேன். அப்பா சம்பாதிச்ச சொத்து நிறைய இருந்துச்சி. வீட்ல ஒரே பையன். ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்தாங்க. அதனாலே இருபத்தைந்து வயது வரைக்கும் ஆடாத ஆட்டமில்லை. ஆசைப்பட்டதை எல்லாம் அனுபவிச்சேன். ஆனால் எப்போ பணம் தேவையே அப்போ இல்லாமல் போயிருச்சி. கல்யாணத்துக்குப் பிறகு ரொம்பக் கஷ்டப்பட்டேன். வாழ்க்கையில முற்பகுதி ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறவன். அடுத்தப் பகுதியில ரொம்பக் கஷ்டப்படுவான். அதுக்கு நானே உதாரணம். திரும்பி பார்த்தா நான் நிறையத் தப்பு பண்ணியிருக்கேனு தோணுது. “
“அதான் யயாதி மாதிரி திரும்ப இளமை கிடைக்கணும்னு ஆசைப்படுறீங்களா “எனக்கேட்டேன்
“எனக்கு இளமை திரும்பக் கிடைச்சா செய்யாமல் விட்ட நல்லகாரியங்களைச் செய்யணும்னு ஆசைப்படுறேன். என் சொந்த சுகத்தை விட அது முக்கியம்“
“நல்லகாரியங்களை இப்போ செய்ய வேண்டியது தானே“ என்றேன்
“அதுவும் சரி தான். ஆனா இருபது வருஷம் கழிச்சி உதவி செய்து ஒரு பிரயோசனமும் கிடையாது. உதவி தேவையான நேரத்துல செய்யணும். ஆனா நான் செய்யத் தவறிட்டேன். “
“யாருக்கு“ என்று கேட்டேன்
“சொந்த அக்காவுக்கு அவ ஒரு இக்கட்டான நேரத்துல உதவி கேட்டு வந்தா. என்னாலே செய்ய முடிஞ்ச உதவி. ஆனா செய்யலை. உதவி செய்யாமல் விட்டதோடு தேவையில்லாமல் சண்டை போட்டுத் துரத்திவிட்டேன். அன்னைக்கு அவ்வளவு தான் புத்தி இருந்துச்சி. இப்படிப் பொஸ்தகம் படிக்கிற பழக்கம் இல்லை. அது இருந்திருந்தா நல்லபடியா பேசியிருப்பேன். நடந்திருப்பேன் “
“புத்தகம் தான் உங்களை மாத்துச்சுன்னு சொல்றீங்களா“
“புத்தகம் தான் தெளிவு கொடுத்துச்சி.. சும்மா வெறும் பேச்சுக்கு சொல்லலை. இதிகாசம் படிக்கிறது மனுசங்களைப் பற்றித் தெரிஞ்சிகிட தானே. இந்த யயாதியை படிச்ச பிறகு நிறையப் பேரை என்னாலே புரிஞ்சிகிட முடிந்தது. தேவயானி மாதிரி பொம்பளையை நல்லா புரிஞ்சிகிட முடிந்தது. ரெண்டு பொம்பளைகளுக்குள்ளே சண்டை வந்துட்டா. அது கட்டை வேகுற வரைக்கும் தீராது. “
ஒரு நாவலை வாசிப்பவர் அதை வெறும் கதையாக மட்டும் வாசித்துக் கடந்து போய்விடுவதில்லை. நாவலின் கதையைத் தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அதிலிருந்து நிறையத் தெளிவுகளைப் பெறுகிறார். சில கதாபாத்திரங்களைக் கொண்டு நிஜ மனிதர்களை எடை போடுகிறார். புரிந்து கொள்கிறார்.
யயாதி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதற்கு அதன் சுவாரஸ்யமான கதை மட்டும் காரணமில்லை. அதன் அடிநாதமாக வாழ்வில் என்றும் பிரச்சனையாக இருக்கும் காமத்தை, தந்தை மகள் உறவை, இரண்டு தோழிகளுக்குள் ஏற்படும் கசப்புணர்வை அது ஆராய்கிறது. மனதை வெல்ல வழியிருக்கிறதா என்பதை ஆராய்கிறது. ஆசைக்கு முடிவேயில்லை என்பதை உணர்த்துகிறது.
நாராயணசாமி யயாதியிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருந்திருக்கிறார். அது தான் அவரது பேச்சில் வெளிப்பட்டது.
யயாதி நாவலை வாசிக்கும் பலரும் தன்னை யயாதியாக உணருகிறார்கள். உலகின் இன்பங்களைத் தான் முழுமையாக அனுபவிக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். நிறைவேறாத ஆசைகளை நினைத்து ஏக்கம் கொள்கிறார்கள்.
நாராயணசாமியின் அச்சகத்தில் புத்தரின் ஒவியம் ஒன்று மாட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்
“யயாதியும் படிச்சிட்டு புத்தர் படத்தையும் மாட்டி வச்சிருக்கீங்க“ என்று கேலியாகக் கேட்டேன்
“புத்தர் ஒருத்தர் தான் மனசை அடக்கினவர். புத்தரை ஒரு போதும் வயதானவரா நினைக்க முடியலை. எண்பது வயது வரைக்கும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் அவரோட முகத்தில பாருங்க எப்பவும் சந்தோஷம். தலைமுடி நரைக்கலை. பல்லு போகலை. நரைச்ச தலையோட நீங்க எங்கேயாவது புத்தரை பார்த்து இருக்கீங்களா“ எனக்கேட்டார்
“எல்லா புத்தரோட உருவமும் கற்பனையில் வரையப்பட்டது தான். நான் பாட்னா ம்யூசியத்துல விலா எலும்பு தெரிய இருக்கிற புத்தரோட சிற்பம் பாத்துருக்கேன்“ என்றேன்
“கற்பனையில வரைந்தாலும் வயதான தோற்றம் அவருக்குப் பொருந்தி வருறதில்லை“ என்று சொன்னார். அது உண்மை.
நாங்கள் இருவரும் தேநீர் குடித்தோம்.
“யயாதியை சினிமாவா எடுத்தா சிவாஜி பொருத்தமாக இருப்பார்“ என்றார் நாராயணசாமி
அதைப்பற்றி அவர்களின் நண்பர்களின் குழு அடிக்கடி பேசிக் கொண்டிருக்குமாம். அது உண்மை. வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான நாவல்களைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படித் திரைப்படமாக வந்தால் யார் யார் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று பட்டியல் ஒன்றை மனதில் உருவாக்கி வைத்திருந்தார்கள்.
நாராயணசாமிக்குள்ளும் அப்படி ஒரு பட்டியல் இருந்தது.
அன்று பேசிக் கொண்டிருக்கும் போது நாராயணசாமி சொன்னார்
“வயசானவுடனே உடம்புல இருந்த பலம் போயிருது. உடம்பு நம்ம சொன்னபடி கேட்கலைன்னா அவ்வளவு தான். நான் பாக்கதான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கேன். ஆனால் வீட்ல ஒரு மரியாதை கிடையாது. வேலைக்காரி கூட என் பேச்சை கேட்க மாட்டா. ஏதோ நாலு காசு சம்பாதிச்சிட்டு இருக்கேன். அதனாலே எனக்கு வீட்ல சோறு கிடைக்குது. அதுவும் இல்லேன்னா வீட்ல போடுறதை சாப்பிட்டு முடங்கிக் கிடக்க வேண்டியது தான்“.
இவ்வளவு மனக்கஷ்டங்களை வைத்துக் கொண்டு எப்படி இவரால் புத்தகம் படிக்க முடிகிறது. மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்ள முடிகிறது
அவரே அதற்கும் பதில் சொன்னார்
“ஐந்து மணிக்கு கிளம்பி லைப்ரரி வந்தா ஒரு மணி நேரம் சந்தோஷமா இருப்பேன். என் பிரண்ட்ஸ் ஒண்ணு ரெண்டு பேர் வருவாங்க. பேப்பர் படிப்போம்.பொஸ்தகம் எடுப்போம். ஐயர் கடையில் போய் டிபன் சாப்பிட்டு சொந்தகதை பேசுவோம். இவ்வளவு தான் வாழ்க்கை“
இதிகாச யயாதிக்கும் நிஜ வாழ்க்கையில் உள்ள யயாதிக்கும் எவ்வளவு வேறுபாடு.
உண்மையில் அவர்கள் யயாதியையும் ஒரு நண்பனைப் போலவே சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அன்றாடம் யயாதி அவர்களுடன் தேநீர் குடிக்கிறார். தன் சொந்த கதையை அவர்களுக்குச் சொல்கிறார். அவர்கள் யயாதியின் இணைபிரியாத நண்பர்கள்.
இதிகாச கதாபாத்திரம் ஒன்று இவ்வளவு நெருக்கத்தை உருவாக்க முடியும் என்பதை நாராயணசாமியைப் பார்த்த பிறகே அறிந்து கொண்டேன்
••