நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு

1980களில் பொது நூலகங்களுக்கு GDR Review என்ற ஆங்கில இதழை ஜெர்மன் தூதரகம் அனுப்பி வந்தது. அழகான வண்ண காகிதத்தில் மிக நேர்த்தியான புகைப்படங்களுடன் அந்த இதழ் வெளிவந்தது. கிராமப்புற நூலகத்தில் யார் ஆங்கில இதழைப் படிக்கப் போகிறவர்கள். ஆகவே நூலகர் இதழின் உறையைக் கூடப் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பார். நான் ஒருவன் தான் அதைக் கேட்டு வாங்கிப் பிரித்துப் படிப்பவன்.

அந்த இதழின் சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை புது டயரி மற்றும் காலண்டர் ஒன்றை அனுப்பித் தருவார்கள். நூலகர் அப்படி ஒரு சிவப்பு வண்ண டயரியை வைத்திருப்பதை வியப்போடு பார்த்தேன்

அவருக்காகவே ஜெர்மன் அரசு அதை அனுப்பிவைத்ததாகப் பெருமையாகச் சொன்னார்.

நமது நூலகர் எவ்வளவு பெரிய ஆள் என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரது மேஜையில் புதிய காலண்டரும் இருந்தது.

“தமிழ்நாட்டிலே என் ஒருத்தனுக்குத் தான் இந்தப் பரிசை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவங்களுக்கு நாம யாருனு தெரியுது. ஆனா இந்தச் சர்க்காருக்குத் தான் தெரியலை“ என்று நூலகத்திற்கு வருகிறவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நூலகர்

உண்மை தெரியாமல் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று பலரும் வியந்து போனார்கள்.

அந்த நூலகர் அருகிலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஐம்பது வயதிருக்கும். குள்ளமானவர். எப்போதும் வெளிறிப் போன வேஷ்டி சட்டை தான் அணிந்திருப்பார். மழை பெய்தால் விவசாய வேலைகள் பார்க்கப் போய்விடுவார். பல நாட்கள் கிராம நூலகம் பூட்டப்பட்டே இருக்கும். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள். நூலகர் இன்று அவசர வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார் என்று கையால் எழுதிய அறிவிப்பு ஒன்றைப் பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்து வைத்திருந்தார். அவர் வரவில்லை என்றால் உடனே பெட்டிக்கடைக்காரர் அந்தத் தகவலை நூலகத்தின் தட்டியில் மாட்டிவிடுவார். அது நாட்கணக்கில் அங்கே தொங்கிக் கொண்டிருக்கும்.

கிராம நூலகம் என்பதால் குறைவான வாசகர்களே வருவார்கள். ஆனால் ஏதாவது அரசாங்க கடிதம் வந்திருந்தாலோ, அல்லது புகார் எழுத வேண்டும் என்றாலோ உடனே நூலகரைத் தேடி வருவார்கள். அவரும் படித்துச் சொல்வார். புகார் எழுதித் தருவார். இதற்குக் கைமாறாக அவருக்கு டீயும் வடையும் வாங்கித் தர வேண்டும்.
இது மட்டுமின்றிக் குடும்பப் பிரச்சனைகள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளுக்கு நூலகத்தில் தான் பஞ்சாயத்து நடக்கும். யார் நூலகத்திற்கு வந்தாலும் குடும்பப் பிரச்சனைகள் பற்றித் தான் முதலில் விசாரிப்பார்.

உள்ளூரில் விளையும் காய்கறிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்வார். அன்றாடம் மதிய உணவிற்கு யார் வீட்டிலிருந்தாவது அவருக்குத் தொடுகறிகள் மற்றும் ஊறுகாய் தர வேண்டும். இது மட்டுமின்றி ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு அவருக்குப் புத்தாடை வாங்கித் தர வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அது போலவே அவரும் கிராமத்தில் யார் வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் கலந்து கொண்டுவிடுவார். குறிப்பாக வெளியூரிலிருந்து பெண் பார்க்க வருகிறவர்கள் நேரடியாக நூலகத்திற்கு வந்துவிடுவார்கள். அவர் தான் பேசி விவரம் சொல்லி பெண் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவார்.

நூலகத்திற்கு வரும் குமுதம் விகடன் குங்குமம் போன்ற வார இதழ்களை யாருக்கும் இரவல் தரமாட்டார்கள். ஆனால் அந்த இதழ்களை உள்ளூர் ஆர்எம்பி டாக்டருக்கு அவரே கொண்டு போய்ப் படிக்கத் தந்துவருவார். இதனால் அவருக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதுண்டு.
கல்வி உதவிதொகை, பேங்க் லோன். நகை கடன் வாங்குவது என எல்லாவற்றிற்கும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள். சம்பந்தப்பட்டவரை அழைத்துக் கொண்டு வெளியூர் கிளம்பிவிடுவார். அவர் வரும்வரை நூலகம் கிடையாது.

நூலகம் ஒன்று தான் கிராமத்தின் பொதுவெளி. மற்ற இடங்களில் சாதியும் பொருளாதார ஏற்றதாழ்வும் பெரிய விஷயமாக இருந்தது. கிராம நூலகத்திலும் ஆரம்ப நாட்களில் மரநாற்காலிகளில் எந்தச் சாதியை சேர்ந்தவர் உட்கார வேண்டும் என்பதில் சண்டையிருந்தது. ஆனால் நூலகம் என்பது பொதுவான இடம் என்று பேசி அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்கள்.

தான் ஒரு மிகப்பெரிய ஆள். நிறையப் பேருக்கு ஆலோசனை சொல்கிறோம். ஆனால் இந்த அரசாங்கம் நம்மைப் புரிந்து கொண்டு பதவி உயர்வு கொடுத்து கௌரவிக்க மறுக்கிறது என்று அவருக்கு ஆதங்கமாக இருந்தது.

நியூஸ் பேப்பரில் வரக்கூடிய முக்கியச்செய்திகளைப் படித்து உடனே அது தொடர்பான தனது ஆலோசனைகளை முதலமைச்சருக்கு, அல்லது இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அவரது வழக்கம்.

பல நேரங்களில் உங்கள் ஆலோசனை கிடைத்தது. நன்றி என்று பதில் கடிதமும் வந்திருக்கிறது. அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். நூலகத்திற்குப் புதியவர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் தனது கடிதங்களைக் காட்டி சந்தோசப்படுவார்.

ஆகவே அவர் இப்படி ஜெர்மானிய அதிபருக்கு ஏதோ ஆலோசனைகள் சொல்லி அதன்காரணமாக அவருக்கு டயரி பரிசு கிடைத்திருக்கக் கூடும் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள்

ஒவ்வொரு பட்ஜெட்டின் முன்பும் எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி போட வேண்டும். எதற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று அவராகவே ஒரு ரிப்போர்ட் தயாரித்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பார்.

தேர்தல் வந்துவிட்டாலோ தொகுதி வாரியாக யார் யார் போட்டியிடுகிறார்கள். எவ்வளவு ஒட்டு வாங்குவார்கள். எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று கள ஆய்வு வேலைகளில் மூழ்கிவிடுவார்.

தேர்தல் முடிந்துவிட்டால் சீனாவோடு எல்லை பிரச்சனையை எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாகக் கடிதம் ஒன்றை தமிழில் எழுதி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைப்பார்.

இப்படி டவுன்பஸ் வரும் நேரம் துவங்கி ஐ.நா. சபை தீர்மானம் வரை அவருக்கெனச் சொல்வதற்கு ஆலோசனைகள் இருந்தன.

ஒருநாள் நூலகத்திலிருந்த GDR Review முகவரியை ஒரு பேப்பரில் எழுதி எடுத்துக் கொண்டு போனேன். மறுநாள் ஒரு தபால் அட்டையில் GDR Review தொடர்ந்து படிக்கிறேன். மிக நன்றாக உள்ளது. அழகான புகைப்படங்கள். ஜெர்மனியைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன்.
ஆச்சரியமான விஷயம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் வீட்டு முகவரிக்கு GDR Review வந்திருந்தது. கூடவே அதே சிவப்பு டயரி மற்றும் காலண்டர். அப்போது தான் அது அந்த இதழோடு சேர்ந்து அனுப்பி வைக்கபடும் பரிசு என்ற உண்மை தெரிய வந்தது. உடனே நூலகத்திற்கு அந்த டயரி மற்றும் காலண்டருடன் சென்றேன்

என் கையில் சிவப்பு டயரியைப் பார்த்த திகைப்பில் நூலகர் “இது எப்படி உனக்குக் கிடைச்சது“ என்று கேட்டார்

“எனக்கும் ஜெர்மனியிலிருந்து பரிசு அனுப்பி வைத்திருக்கிறார்கள்“ என்றேன்

“அதான் எப்படி“ என்று குழப்பமாகக் கேட்டார்

கடிதம் எழுதிய விஷயத்தைச் சொன்னேன்.

அவரால் நம்பமுடியவில்லை. ஆனால் உடனே சமாளித்துக் கொண்டு சொன்னார்

“நம்ம ஊர் பெயரைப் பார்த்தவுடன் என் பிரண்டுனு நினைச்சி அனுப்பி வைச்சிருப்பாங்க“ என்றார்

“GDR Review பற்றிப் பாராட்டி எழுதினேன்“

உடனே அவர் “இதை வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்“ என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு நூலகத்திற்கு வரும் ஸ்பான். யுனெஸ்கோ கூரியர் போன்ற இதழ்களைக் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்துவிட்டார். அதன் பிறகு என்னை விரோதி போல நடத்தவும் துவங்கினார்.

நூலகத்திற்கு நான் போனவுடன் அவர் உலக விவகாரங்கள் பற்றிய தனது பேச்சை நிறுத்திக் கொண்டு விடுவார். ஏதாவது புத்தகம் இரவல் கேட்டால் அது பைண்டிங் கிழிஞ்சிருக்கு. தைக்க வேண்டும் என்று பொய் காரணங்கள் சொல்வார்.

ஒருமுறை அவர் நூலகத்தைப் பூட்டிவிட்டு சொந்த வேலை பார்க்கப் போன நாளில் நூலகத்தின் உயர் அலுவலர் குழு பார்வையிட வந்துவிட்டார்கள். ஊர் மக்களிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டுவிட்டார்கள். அடுத்த நாளே அவருக்கு மெமோ ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.

இந்த மெமோவிற்குப் பதில் சொல்வதற்காக உயர் அலுவலரை நேரில் பார்க்கப் போவதற்கு முன்பு ஊர் மக்களிடம் நற்சான்று கடிதங்கள் வாங்க முடிவு செய்தார்.
ஒரு குயர் வெள்ளைப் பேப்பர் வாங்கிச் சிறிய துண்டுகளாக்கி பலரிடமும் அவரைப் பற்றிய பாராட்டுகளை அவரே சொல்லி எழுத வைத்து கையெழுத்து பெற்றுக் கொண்டு போனார். அப்படியும் அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் பத்து நாட்களில் அவரே மீண்டும் நூலகராகத் திரும்பி வந்து விட்டார்.

ஆனால் நான் GDR Reviewவிற்கு அடிக்கடி கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் புத்தகங்களைப் பரிசாக அனுப்பி வைத்தார்கள். சில நேரம் வாழ்த்து அட்டைகள் ஜெர்மனியின் அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள். எனப் பார்சல் வந்தபடியே இருந்தன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி அழகான டயரிகளை அனுப்பி வைத்தார்கள்.

சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்த எனக்கு நூலகத்தின் வழியே கிடைத்த இது போன்ற அறிமுகமும் பரிசுகளும் எனக்குள் புதிய தேடலைத் துவக்கியது.

ஊருக்கும் உலகிற்கும் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த நூலகர் ஒரு நாள் பொய்யான சான்றிதழ்கள் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார் என்று அரசாங்கம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதுவும் அவராகப் பதவி உயர்வு கேட்டுத் தொடர்ந்து அனுப்பிய விண்ணப்பங்களின் விளைவே.

சமீபத்தில் GDR Review இதழ் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். உடனே அந்த நூலகர் தான் நினைவிற்கு வந்தார். கூடவே அந்தச் சிவப்பு டயரியும் மனதில் தோன்றி மறைந்தது.
••

0Shares
0