நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.


அந்த இளைஞருக்கு முப்பது வயதிருக்கக் கூடும். பேஸ்கட் பால் பிளேயர் போன்ற உயரம். கழுத்தில் ஒரு கறுப்பு கயிறு. அடர் பச்சை வண்ண பேண்ட். இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட சட்டையை அணிந்திருந்தார்.

பொதுநூலகத்திற்குப் போய் வருவதில் உள்ள சௌகரியம். நிறையப் புதிய மனிதர்களைச் சந்திக்க முடிவது. அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொள்வது. அப்படித்தான் அந்த இளைஞரும் அறிமுகமானார்.

அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தார். பெரும்பாலும் நைட் ஷிப் என்பதால் பகலில் உறங்கிவிடுவார். வாரம் ஒரு நாள் நூலகம் வருவார். அவசரமாகப் புக் எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய்விடுவார். எப்போதாவது சில முறை என்னுடன் பேசியது உண்டு.

அன்று என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“ஒரு புத்தகம் படிச்சி முடிச்சா ரெண்டு நாள்ல மறந்து போயிருது சார். திரும்ப அதே புக்கை எடுத்துட்டு போயிடுறேன். படிக்க ஆரம்பிச்சா முன்னாடி படிச்சமாதிரியே இருக்கேனு தோணும். ஆனா படிக்காதது மாதிரியும் இருக்கும். படிச்சதை எப்படி ஞாபகம் வச்சிடுகிறது“

“எல்லோருக்கும் இருக்கிற பிரச்சனை தானே“ என்றேன்

“எனக்கு புக் தலைப்பு கூட மறந்து போயிடுது“

“எனக்கும் சில நேரம் அப்படி ஆகிவிடும்“

“அப்போ படிச்சதெல்லாம் எங்க போகும். மண்டைக்குள்ளே தங்காதா“ எனக் குழப்பமான குரலில் கேட்டார்

“படித்த புத்தகங்களில் இருந்தும் நம் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே மனது எடுத்துக் கொள்கிறது“ என்றேன்

“நிறைய பேருக்கு எக்கசக்க புக்ஸ் ஞாபகம் இருக்கே“

“அது உண்மை. ஆனால் வேற அன்றாட விஷயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கும். எனக்கே கூட என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தெரியாது. பாஸ்போர்ட் நம்பர் மறந்து போயிடும். “

“படிச்சதுல எது நம்ம மனசில தங்குதுனு தெரியலையே“

“உங்க அனுபவத்தில இருந்து நீங்களே தான் தெரிஞ்சிகிட முடியும். அப்படி எந்தப் புக்ல எது நினைவு இருக்குனு சொல்லுங்க“.

“ஒரு புக் படிச்சேன். அதுல ஒரு கதை. எழுதுனவர் பெயர் மறந்து போயிருச்சி. ஒரு கிராமத்துக்குப் பொண்ணு பாக்குறதுக்காக ஒரு தரகர் மாப்பிள்ளையைக் கூட்டிகிட்டு போறார். பெரிய பண்ணையர் வீட்டுல பொண்ணு பாக்க போறாங்க. சொன்ன நேரத்துக்கு முன்னாடியே அந்த ஊருக்குப் போயிடுறாங்க. அப்போ ராகுகாலமா இருக்கு, சும்மா இருக்கிற நேரத்துல வேற ஒரு பொண்ணு பாத்தா என்னனு தரகர் சொல்றார். அதுவும் சரிதானு, தகப்பன் இல்லாத ஏழைப்பட்ட பொண்ணைப் பார்க்கப் போறாங்க. அந்தப் பொண்ணு காட்டு வேலை செய்துகிட்டு இருக்கு. பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வந்து இருக்காங்கன்னு அவசர அவசரமா கூட்டிகிட்டு வர்றாங்க. கடுங்காப்பிப் போட்டு பொண்ணு கையில் கொடுத்துவிடுறாங்க. அது கை நடுங்கிக்கொண்டு மாப்பிள்ளை கிட்ட குடுக்குது. தகப்பன் இல்லாத பொண்ணு எங்களாலே முடிஞ்ச நகை நட்டு போடுறோம்னு சொல்றாங்க. தரகர் ஊருக்கு போயிட்டு சொல்றோம்னு கிளம்பிடுறார்.
பாவம் அந்தப் பொண்ணு டைம்பாஸ்க்குத் தன்னைப் பொண்ணு பாக்க வந்தாங்கன்னு தெரியாது.. அந்தப் பொண்ணு நிலையை நினைச்சி படிக்கும் போது கண்ணீர் வந்துருச்சி.
எழுத்தாளர் பெயர் மறந்து போயிருச்சி. புக் பேரு கூட ஞாபகம் இல்லை. ஆனா அந்தப் பொண்ணை மறக்கவே இல்லை. “

“அது தனுஷ்கோடி ராமசாமி எழுதிய தரகன்பாடு சிறுகதை. கதையில் வர்ற யாருக்கோ நடந்த கஷ்டங்கள் .நெருக்கடிகள். பரிதவிப்புகள். நிர்கதி இதை எல்லாம் படிக்கும் போது அது நம்ம மனதில் ஆழமா பதிந்து போயிடுது. உண்மையான சந்தோஷம். உண்மையான வேதனைகள் இதைத் தான் மனசு ஞாபகம் வச்சிகிட்டு இருக்கு போலே. எட்டு வயசில இந்த நாள்லே என்ன சட்டை போட்டு இருந்தேனு ஏன் எனக்கு ஞாபகம் இல்லே. ஆனா அந்த வருஷம் தீபாவளிக்கு என்ன கலர்ல டிரஸ் வாங்கினேனு எப்படி ஞாபகம் இருக்கு. மனுசனோட மனசு விசித்திரமானது. அது எதை எவ்வளவு நினைவு வச்சிகிட்டு இருக்கும்னு சொல்லவே முடியாது. இது புத்தகம் தொடர்பான விஷயம் மட்டுமில்லை“ என்றேன்

அவருக்கு என் பதில் திருப்தி அளிக்கவில்லை என்பது முகபாவத்திலே தெரிந்தது. பொதுநூலகத்தில் இது போன்ற வாசகரின் குரலைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.
புத்தகங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்பது படிக்கும் அனைவரது கேள்வி

சிலர் எழுத்தாளரின் பெயரையும் புத்தகம் பெயரையும் குழப்பிக் கொண்டு மாற்றி மாற்றிக் கேட்பார்கள். ஒரு சிலர் அது தன்னுடைய குழப்பம் என்று ஒத்துக் கொள்ளாமல் சாண்டில்யன் தான் நந்திவர்மன் காதலி எழுதினார் என்று சாதிப்பார்கள். அது ஜெகசிற்பியன் எழுதியது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இதுவரை எந்த மனிதராவது தான் படித்த எல்லாப் புத்தகங்களையும் நினைவில் வைத்துக் கொண்டிருப்பாரா. அது இயலக்கூடிய காரியமா. உண்மையில் ஆழ்ந்து படித்து மனதில் பதிந்து போன புத்தகங்கள் தான் ஆண்டுகள் பல கடந்தாலும் அப்படியே இருக்கின்றன. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட மறப்பதில்லை.

இது ஒரு விநோதம். பத்துவயதில் எங்கள் வீதியில் குடியிருந்த பலரது பெயர்களும் மறந்துபோய்விட்டன. ஒரே வகுப்பில் படித்த நண்பர்களில் ஐந்தாறு பெயர்களே ஞாபகத்தில் மிஞ்சியிருக்கின்றன. ஆனால் அதே பத்தாவது வயதில் படித்த காமிக்ஸ் புத்தகத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நினைவில் அப்படியே இருக்கிறார்கள். .
புத்தகம் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சித்திரமாகத் தான் பதிவாகிறது போலும். பெரும்பாலும் புத்தகம் நினைவாக உருமாறுவதற்குக் குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது. சில நாவல்களை மறுவாசிப்பு செய்யும் போது இந்தப் பக்கங்களை முன்னால் படிக்கவில்லையே என்று தான் தோன்றுகிறது. அதற்காகவே மறுமுறை படிப்பேன். ஒரு வாக்கியத்தை நாம் வாசிக்கும் போது எல்லாச் சொற்களும் கண்ணில் படுகின்றன. ஆனால் மனதில் சில சொற்களே சென்று தங்குகின்றன. பல வரிகளை நாம் எளிதாகக் கடந்து போய்விடுகிறோம்.

மூடப்பட்ட ரயில்வே கேட்டின்முன் நிற்கும் போது கடந்து செல்லும் ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா. ஒவ்வொரு பெட்டியாக உங்களைக் கடந்து போகும். ஜன்னல் வழியே சில முகங்கள் தெரியும். கடைசிப் பெட்டி மறையும் போது ஏக்கமாக இருக்கும். ரயிலை கவனித்துக் கொண்டிருந்த நாம் அருகில் யார் பைக்கில் நின்று கொண்டிருந்தார்கள் என்று கவனித்திருக்க மாட்டோம். அந்த ரயில் கடந்துபோவதைப் போல நாவலின் காட்சிகள் தன்னியல்பாக நம் முன்னே கடந்து போகின்றன. அதனால் சந்தோஷம் அடைகிறோம். நாவலைப் படித்து முடித்தவுடன் நாம் கொள்ளும் அனுபவம் இதில் எவை எனக்குத் தெரிந்த அனுபவங்கள், நிகழ்ச்சிகள், எவை தெரியாத,வியப்பான, கசப்பான அனுபவங்கள் என்பதே.

ஒரு நாவலிலிருந்து நாலைந்து விஷயங்களே மனதில் தங்குகின்றன. தீவிர வாசகர்களுக்கு ஒரு நாவலின் கட்டுமானம், மொழிநடை, கதாபாத்திரங்களின் தனித்துவம். நாவலின் வழியே வெளிப்படும் தரிசனங்கள் சிந்தனைகள் முக்கியமானவை. ஆனால் எளிய வாசகன் இவ்வளவு ஆழ்ந்து படிப்பதில்லை. மறதியே புத்தகத்தை மறுவாசிப்புச் செய்ய வைக்கிறது

மறதி உண்மையில் ஒரு வரம். நிறையக் கசப்பான விஷயங்கள் மறந்து போய்விட்ட காரணத்தால் பலரது உறவுகளைத் தொடருகிறோம். புத்தகங்கள் ஏற்படுத்தும் மறதி என்பதும் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படுத்தும் மறதி என்பதும் ஒன்றில்லை. புத்தகத்தின் நினைவு சிறுதுகளாகக் கூட மனதில் ஒட்டியிருக்கக் கூடும். அது எப்போது உங்கள் நினைவின் மேற்பரப்பிற்கு வரும் என்று தெரியாது

ஆழ்ந்து படிக்கப் படிக்க ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்கள் ஒளிரத்துவங்குவதை நாம் அறிகிறோம். ஒவ்வொரு தனிச்சொல்லும் மனதில் சுழலத் துவங்குகிறது. வெளிச்சத்தைப் போலவே சொற்களும் நமக்கு நிறைய விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. புரிய வைக்கின்றன.

கவிஞர் நகுலனோடு பேசிக் கொண்டிருந்த போது ஒரு நாள் John Donne என்ற கவிஞரின் கவிதை ஒன்றை மேற்கொள் காட்டி பேசிக் கொண்டிருந்தார். 15ம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஜான் டன் மிக முக்கியமான கவிஞர். மெய் தேடல் கொண்ட கவிதைகளை எழுதியதில் முன்னோடி. அவரது ‘The Ecstasy என்ற கவிதையை மனதிலிருந்து சொல்ல ஆரம்பித்தார்.
Where, like a pillow on a bed
A pregnant bank swell’d up to rest
The violet’s reclining head,
Sat we two, one another’s best;
Our hands were firmly cemented
With a fast balm, which thence did spring;
Our eye-beams twisted, and did thread
Our eyes upon one double string
என வரிசையாகச் சொல்லிக் கொண்டுவந்தார். பிறகு என்னிடம் அவரிடமிருந்த ஜான் டன் கவிதைத் தொகுதியை உள்அறையிலிருந்து எடுத்து வரச் சொல்லி அதில் எந்தப் பக்கத்தில் அந்தக் கவிதை உள்ளது. அதில் எந்தச் சொல்லுக்கு அடுத்து கமா உள்ளது என்பது வரை சரியாகச் சொன்னார். எவ்வளவு ஆழ்ந்து படித்திருப்பார் என்று தோன்றியது. புத்தகத்தின் பக்கங்கள் அப்படியே ஒருவர் மனதில் இருப்பதன் ஆச்சரியத்தைக் கண்டு வியந்து போனேன்.

பொதுநூலகத்திற்கு வந்து அப்படித் திருக்குறளை. கம்பராமாயணத்தை. சிலப்பதிகாரத்தை மனப்பாடம் செய்து போகிறவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் புத்தகத்தை மனதில் எழுதிக் கொள்கிறார்கள்.

கிண்டிலில் நாம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் எத்தனை பக்கம் படித்திருக்கிறோம். இன்னும் எவ்வளவு பக்கம் படிக்க வேண்டும். எந்த இடத்தில் படித்து நிறுத்தியிருக்கிறோம். என்ற விபரங்களை எல்லாம் அதுவே காட்டிவிடும். புரியாத வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் பார்க்க உதவி செய்யும். இப்படி எதிர்காலத்தில் அச்சு புத்தகங்களிலும் இது போன்ற தொழில்நுட்ப சாத்தியம் வந்துவிட்டால் புத்தகம் படிப்பது மிக எளிமையாகிவிடும்.

ஆனால் கிண்டில், அச்சுப்புத்தகம் என எதில் படித்தாலும் நம் மனது தானே ஞாபகம் வைத்துக் கொள்கிறது. அதற்கு இது போன்ற டெக்கனாலஜி எதையும் பொருத்திக் கொள்ள முடியாதே.
••

0Shares
0