நூலகரின் மேஜை முன்னால் நான்கு காகித வண்ணத்துபூச்சிகள் இருந்தன. அழகான அந்தக் காகித பொம்மைகளை யார் செய்தது எனக்கேட்டேன்
“நம்ம லைப்ரரியிலே புக் எடுக்கிற ஒரு வாத்தியார். அவரா கத்துகிட்டு செய்திருக்கிறார்“ என்றார்
அடுத்த முறை அந்த ஆசிரியர் நூலகத்திற்கு வரும் போது நூலகர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்
அவர் பெயர் கே.ஆர்.நாதன். கிராமப்புற பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அன்றாடம் டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு போய் வருவார். அந்தப் பள்ளிக்கென மைதானம் கூடக் கிடையாது. ஆகவே மாணவர்கள் கண்மாய்க் கரையில் தான் விளையாடுவார்கள். வேலைக்குச் சேரும் போது பெரும் கனவுகளுடன் சென்ற நாதனுக்குச் சில ஆண்டுகளிலே வேலையில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அது வகுப்பறையோடு நிற்காமல் சொந்த வாழ்விலும் உற்சாகமில்லாமல் ஆக்கியிருந்தது.
அவரது மனைவியும் பள்ளி ஆசிரியர். அவர் ஒரு பெண்கள் பள்ளியில் வேலை செய்து வந்தார். நாதனுக்கு இருந்த ஒரே ஈடுபாடு புத்தகம் படிப்பது. இதற்காகப் பொது நூலகம் சென்று வருவார். பெரும்பாலும் நாவல்கள். சரித்திரக்கதைகள். பொது அறிவு தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பார்.
தற்செயலாக ஒரு நாவல் புத்தக அடுக்கை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்த அகலமான புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்த்தார். அது ஓரிகாமி கலையைப் பற்றியது. ஓரிகாமி என்ற அந்தச் சொல் புதியதாக இருந்தது. அதற்காகவே அந்த நூலைப் படிப்பதற்காக எடுத்துக் கொண்டுபோனார்
அந்தப் புத்தகம் தன் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஓரிகாமி என்பது காகிதத்தை மடித்தும் வளைத்தும் அழகான உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலையாகும். ‘ஓரி’ என்பது காகிதத்தையும் ‘காமி’ என்பது தாளை மடித்தலையும் குறிக்கிறது விலங்குகள், பூக்கள், கொக்குகள், பல வகையான தொப்பிகள் மற்றும் விநோத உருவங்களை ஓரிகாமி மூலம் செய்கிறார்கள்.
ஜப்பானில் பதினேழாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இக்கலையானது இன்று உலகெங்கும் பரவியுள்ளது. ஓரிகாமி கொக்குகள் மிகப்புகழ்பெற்றவை. ஆயிரம் காகிதக் கொக்குகள் செய்து முடித்தால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உண்டு.
நாதனுக்கு ஓரிகாமி நூலைப் படிக்கப் படிக்கச் சிறுவயதில் காகிதத்தை மடித்துக் கப்பல், கத்திக்கப்பால், கேமிரா என்று செய்து விளையாடிய நினைவுகள் மனதில் வந்து போனது. இந்தப் புத்தகத்தில் உள்ளது போல அழகான பூக்களை, கொக்குகளை, வண்ணத்துப்பூச்சிகளைச் செய்து பார்க்கலாமே என்று முடிவு செய்து ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் செலவிட்டார். அழகான காகித மலர்களையும் கொக்குகளையும் கண்டு அவரது மனைவி வியந்து பாராட்டினார்.
அந்தக் காகிதப்பறவைகளைத் தங்கள் வீட்டின் ஷோகேசில் வைத்துக் கொண்டார்கள். அதன்பிறகு அவர் அந்த ஓரிகாமி புத்தகத்தில் இருந்தது போன்ற அத்தனை வடிவங்களையும் தொடர்ந்து செய்து பார்த்தார். பத்து நாட்களுக்குள் அவரால் அழகாகக் காகிதங்களை மடித்து உருவங்களைச் செய்ய முடிந்தது. பள்ளிவிட்டு வந்தவுடன் காகிதங்களை எடுத்துக் கொண்டு ஓரிகாமி செய்ய ஆரம்பித்துவிடுவார்.
ஓரிகாமியில் ஈடுபட ஆரம்பித்தவுடன் மனதில் புதிய உற்சாகம் உருவாவதையும் அன்றாட வேலையில் ஏற்பட்ட சிடுசிடுப்பு, சோர்வு மறைந்து போவதையும் உணர்ந்தார். தான் செய்த காகித பொம்மைகளைத் தன் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுக்குப் பரிசாக அளித்தார். அவர்கள் சந்தோஷமாக விளையாடுவதை வேடிக்கை பார்த்தார்.
ஓரிகாமி புத்தகத்தைக் குறிப்பிட்ட நாளில் நூலகத்தில் திரும்பிக் கொடுக்கவில்லை. தானே இன்னொரு பதினைந்து நாளுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வந்தார். இந்த முறை
அவர் ஓரிகாமியை பற்றித் தன் வகுப்பில் இருந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
பொதுவாகக் கணித வகுப்பு என்றாலே தூங்கி வழியும் மாணவர்கள் உற்சாகமாகக் காகித பொம்மைகள் செய்யத் துவங்கினார்கள். சிறப்பாகக் காகிதப் பொம்மைகள் செய்த மாணவர்களைப் பாராட்டியதோடு அந்தப் பொம்மைகளைத் தலைமை ஆசிரியரிடமும் காட்டி சந்தோஷப்பட்டார்
இதையே ஒரு வகுப்பாக மாற்றினால் என்னவென்று தலைமை ஆசிரியருக்குத் தோன்றவே வாரம் ஒரு நாள் மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை ஒரு மணி நேரம் எல்லா மாணவர்களும் ஓரிகாமி கற்றுக் கொள்ளும்படி ஏற்பாடு செய்தார் தலைமை ஆசிரியர்.
மாணவர்கள் உற்சாகமாக ஓரிகாமியில் ஈடுபட்டார்கள். அவர்கள் செய்த காகித மலர்களை, வண்ணத்துப்பூச்சிகளை, பறவைகளைக் கண்டு வியந்து போனார்கள். இத்தனை திறமையுள்ள பிள்ளைகளுக்கு இதுவரை இப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று நாதன் ஆதங்கப்பட்டார்
இந்தச் சிறுநூலைத் தவிர ஓரிகாமி பற்றி வேறு ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடி பொதுநூலகத்திற்குச் சென்றார். ஆனால் வேறு ஒரு புத்தகமும் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் நிறையப் புத்தகங்கள் உள்ளதாகக் கேள்விட்டபோதும் ஒன்று கூடப் பொதுநூலகத்தில் இல்லை. இதற்காகவே மதுரைக்குப் போய்ப் பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைய ஆரம்பித்தார்.
ஓரிகாமி என்ற பெயரே பழைய பேப்பர்கடைக்காரருக்கு விநோதமாக இருந்தது. அப்படி எந்தப் புத்தகமும் இல்லை என்று கையை விரித்துவிட்டார்.
ஒரு ஆங்கில மாத இதழில் நாலைந்து பக்கங்கள் ஓரிகாமி பற்றி வெளியிட்டிருந்தார்கள். அதற்காக அந்த இதழை விலைக்கு வாங்கிக் கொண்டார். அதிலுள்ளது போல விரலில் மாட்டிக் கொள்ளும் பொம்மைகளைச் செய்து பார்த்தார். அழகாக வந்தது. தன் விரலில் காகித பொம்மைகளை மாட்டிக் கொண்டு மாணவர்களின் முன்னால் பொம்மலாட்டமே செய்து காட்டினார். அன்று மாணவர்களும் அவரைப் போலவே விரலில் மாட்டும் பொம்மைகளைச் செய்யக் கற்றுக் கொண்டார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆசிரியர் சங்க மாநாட்டிற்குத் திருச்சி போயிருந்த போது தன்னைப் போலவே ஓரிகாமியில் ஆர்வம் உள்ள இன்னொரு ஆசிரியரை அடையாளம் கண்டு கொண்டார் நாதன். அவர் ஒரு அறிவியல் ஆசிரியர். சிதம்பரத்தில் வசிப்பவர். அவரது உதவியால் நாலைந்து ஓரிகாமி புத்தகங்களைப் பெற்று அதில் உள்ளது போல விதவிதமாகப் பொம்மைகளைச் செய்து மகிழ்ந்தார்.
ஹைதராபாத்தில் ஓரிகாமி பற்றிச் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடக்கப் போவதை நண்பர் மூலம் அறிந்து உடனே அதில் பதிவு செய்து கொண்டுவிட்டார்
ஒரு வார காலம் ஹைதராபாத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. இந்த வகுப்பில் பயிற்றுவிப்பதற்காக ஜப்பானிலிருந்தே ஓரிகாமி கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் காகிதங்களை மடித்து எந்த உருவத்தையும் செய்து காட்டினார்கள். அது போலவே ஆள் உயரத்துக்குக் கூடக் காகித பொம்மைகளைச் செய்து காட்டினார்கள்.
அந்த ஒரு வாரக் காலம் தன் வாழ்க்கையிலே மிகச் சந்தோஷமாக நாட்கள் என உணர்ந்த நாதன் ஓரிகாமியின் நுட்பங்களை நன்றாகக் கற்றுக் கொண்டார். சியோகாமி வண்ணக்காகிதங்கள் அங்கே தான் அவருக்கு அறிமுகமானது. அது எளிதாகக் கிழிக்கும்படி கிழி துளைகள் கொண்டது. தன் கிராமப்பள்ளி மாணவர்களுக்கு அத்தனை நுட்பங்களையும் கற்றுக் கொடுத்தார். அவர் செய்த ஓரிகாமி பொம்மைகளைப் புகைப்படம் எடுத்து ஜப்பான் நண்பர்களுக்கு அனுப்பியும் வைத்தார்.
அவரது ஆர்வத்தைக் கண்டு ஜப்பானில் வந்து இரண்டு மாத காலங்கள் ஓரிகாமி கற்றுக் கொள்ளும்படி உதவித் தொகையோடு அழைப்பு வந்தது. அது தான் அவர் கண்ட கனவு. ஜப்பானிற்குச் சென்று ஓரிகாமி கற்றுக் கொண்டு திரும்பிய பிறகு அவரது ஆளுமையே மாறிவிட்டது.
தனது ஆசிரியர் பணியை விடவும் ஓரிகாமி செய்வதிலே அதிக நாட்டம் கொண்டார். அவரது ஈடுபாடும் கலைநுட்பமும் அவருக்குப் பெங்களூரிலுள்ள பள்ளி ஒன்றில் புதிய வேலையை உருவாக்கி தந்தது. இரண்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிவிட்டு நெதர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் ஓரிகாமி கற்பிக்கும் வேலைக்கு அவரைத் தேர்வு செய்யவே தன் மனைவியோடு நெதர்லாந்து கிளம்பி சென்று விட்டார்
யோசித்துப் பார்த்தால் பொது நூலகத்தில் கிடைத்த ஒரிகாமி புத்தகம் நாதனின் மொத்த வாழ்க்கையும் மாற்றிவிட்டது. இதில் குறிப்பிட வேண்டியது நாதனின் விருப்பம் மற்றும் தீவிர ஈடுபாடு.
அந்தப் புத்தகத்தை நாதனுக்கு முன்பு பலரும் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் காகித பொம்மைகள் செய்து பார்த்துவிட்டுப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் நாதன் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதைத் தான் கற்றுக் கொண்டதோடு ஒரு இயக்கம் போல மாற்றிவிட்டார்.
அந்த ஈடுபாடு அவரை ஓரிகாமி கலையில் தீவிரமாக இயங்கச் செய்தது. வெறும் விளையாட்டுப் பொம்மைகள் தானே என்று நினைக்காமல் அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருந்தார். இன்று உயர்ந்த நிலைக்கு வாழ்க்கை முன்னேற அதுவே காரணமாகி விட்டது.
ஹிரோஷிமாவிற்குச் சென்றிருந்த போது விதவிதமான காகித கொக்குகளைக் கண்டிருக்கிறேன். அணுவீச்சில் பாதிக்கபட்ட சடாகோ சசாகி என்ற சிறுமி தான் உயிர்பிழைக்க வேண்டிய ஆயிரம் கொக்குகளைச் செய்தாள் என்கிறார்கள். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியைப் போல ஜப்பான் முழுவதுள்ள சிறார்கள் காகிதக்கொக்குகளைச் செய்து அங்கே சமர்ப்பிக்கிறார்கள்.
காகிதக் கொக்குகளால் கடந்து கடந்து போகமுடியாமல் இருக்கலாம். ஆனால் நூலகத்தில் பெற்ற புத்தகம் வழியாகக் கலையின் மீது தீவிர நாட்டம் கொண்ட நாதனால் கடல் கடந்து போக முடிந்திருக்கிறது. விருப்பமே வழியை உண்டுபண்ணுகிறது. தீவிர செயல்பாடுகளே வளர்ச்சியை உருவாக்குகிறது. அதற்கு இன்னொரு உதாரணமாகவே நாதனைக் காண்கிறேன்.
••