நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி.

நூலகத்திற்கு வரும் அனைவரும் புத்தகம் படிப்பதற்கென்று மட்டும் வருவதில்லை. சிலர் விநோத காரணங்களுக்காகவும் நூலகத்திற்கு வருகிறார்கள். தேடுகிறார்கள்.

தான் பிறந்த வருஷத்தில் வெளியான புத்தகங்களைத் தேடிப் படிப்பதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகம். நூலில் எந்த ஆண்டு வெளியானது என்று தான் முதலில் பார்ப்பார். இன்னொருவருக்கோ நாவல்களில், கதைகளில் வருகிறவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள். எந்த ஊரில் வசிக்கிறார்கள் என்பது முக்கியம்.

வேறு ஒருவருக்கு இதுவரை யாரும் எடுத்துப் போகாத புத்தகத்தை மட்டுமே தேடி எடுத்துப் படிப்பது வழக்கம். இதற்கு முன்பு ஒருவர் எடுத்துப் படித்திருந்தாலும் அதை அவர் படிக்கமாட்டார். புத்தகத்தின் முதல் வாசகராகத் தான் இருக்க வேண்டும் என்ற ஆசை தான் காரணம் போலும்.

இது போன்ற ஒரு விசித்திரமான வாசகர் தான் கிரகபதி. முப்பது வயதிருக்கும். மீசையில்லாத முகம். கையில் கறுப்பு கயிறுகட்டியிருப்பார். ஏதாவது புத்தகத்தில் தன்னுடைய பெயரில் கதாபாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவதில் ஆர்வம் கொண்டவர்.

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொள்வதைப் போலப் புத்தகங்களுக்குள் தன் பெயர் இருக்காதா என்று தேடுகிறார்.

கிரகபதி என்ற பெயரை யார் கதாநாயகனுக்கு வைத்திருக்கப் போகிறார்கள். ஏன் சில பெயர்களே எப்போதும் கதாநாயகனுக்கு வைக்கப்படுகிறது என்று அவருக்குள் கோபமிருந்தது. ஆனால் எப்படியும் யாராவது தன் பெயரை ஏதாவது ஒரு புத்தகத்தில் எழுதியிருப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.

ஆனால் அவர் படித்தவரை எதிலும் அவரது பெயர் காணப்படவில்லை. ஏன் தனக்கு இப்படி ஒரு பெயரை வீட்டில் வைத்தார்கள் என்று அவருக்குச் சற்றே வருத்தமாகவும் இருந்தது.

சில பெயர்களைச் சொன்னதுடன் குறிப்பிட்ட வயதும் சேர்ந்தே நினைவிற்கு வந்துவிடுகிறது. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று நினைவிற்கு வருகிறது. கீதா என்ற பெயர் சொல்லி ஒருவரை அழைப்பார்கள். ஒரு பாட்டி வந்து நிற்பார். கீதா என்பது இந்தப் பாட்டியா என்று திகைத்துப் போய்விடுவார்கள். ஏன் கீதா என்ற பெயர் பாட்டிக்குப் பொருந்தவில்லை. நிச்சயம் அப்படி யாராவது இருக்கக் கூடும் தானே. ஆனால் பொதுப்புத்தியில் சில பெயர்களுடன் அவர்களின் அடையாளமும் வயதும் சேர்ந்தே பதிந்துவிடுகிறது. கிரகபதி என்ற பெயரை வைத்து அவர் வயதை யாராலும் கண்டறிய முடியுமா என்ன.

சில பெயர்கள் கதைகளில் வழியே தான் உலகிற்கே அறிமுகமாகின்றன. அந்தப் பெயர்களை வாசகர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்ததோடு தன் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சூடிக் கொள்கிறார்கள். ஒருமுறை டெல்லியில் ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும் போது நான் போகவேண்டிய அலுவலக முகவரி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆட்டோ ஓட்டுநர் சொன்னார்

அக்பர் பாபர் எல்லாம் இறந்து போய் எவ்வளவோ காலமாகிவிட்டது. ஆனால் அவர்கள் பெயர்கள் உயிர்வாழுகின்றன. மனிதர்களின் பெயர்கள் விசித்திரமான குணம் கொண்டவை. சில பெயர்கள் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன. நிறையப் பெயர்கள் அந்த மனிதர்கள் இறக்கும் போது கூடவே இறந்து போய்விடுகின்றன

தன் பெயரை, ஊரை யாரோ ஒருவரின் புத்தகத்தில் பார்ப்பது விநோதமான சந்தோஷம். அச்சில் இடம்பெற்ற உடனே பெயர்கள் சாஸ்வதமாகிவிடுகின்றன. வரைபடத்தில். புத்தகங்களில் இடம்பெறாத ஆயிரக்கணக்கான ஊர்கள் இன்றும் இருக்கத்தானே செய்கின்றன.

ஏதோ ஒரு கதையில் கிரகபதி என்ற பெயர் வந்தால் அது எப்படித் தானாக இருக்கமுடியும் என்று அவர் ஒருபோதும் யோசிப்பதில்லை. கதையில் வரும் மனிதனை தன் நிழலைப் போலவே தான் நினைக்கிறார். அது தான் வாசிப்பின் விந்தை. கதையில் வரும் மனிதர்களும் ஊர்களும் நிஜமில்லை என்று தெரிந்த போதும் அவர்களுக்காக வருந்துகிறோம். கண்ணீர் விடுகிறோம். நிஜமில்லை என்றால் முழுவதும் கற்பனையானவர்களா என்ற கேள்வி எழும். அவர்கள் கற்பனையும் நிஜமும் கலந்து உருவானவர்கள். நம்மைப் பற்றி நமது நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் ஒரு கதாபாத்திரம் போலத் தானே மாறிவிடுகிறோம். அப்படித் தான் கதைகளிலும் நடக்கிறது.

கதாபாத்திரங்களை ஒருவாசகனால் நேசிக்க முடியும். ஆனால் கதாபாத்திரங்களை வழிநடத்த முடியாது. அவர்களைத் திருத்தவோ மாற்றவோ முடியாது. ஆனால் ஆழ்ந்து படிக்கிற ஒரு வாசகர் அதைச் செய்யவே விரும்புகிறார். எத்தனை முறை ஒரு கதாபாத்திரம் தவறு செய்யும். அதைத் திருத்தக்கூடாதா என்று கோபம் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அறிவுரை சொல்கிறார்.

எழுத்தில் உருவான கற்பனை மனிதர்களைப் பற்றி The Fictional 100 என்றொரு புத்தகம் வெளியாகியுள்ளது. அது நிஜமனிதர்களைப் போலக் கொண்டாடப்பட்ட புகழ்பெற்ற கதாபாத்திரங்களைப் பற்றி விவரிக்கிறது. யோசித்துப் பாருங்கள். மேக்பெத், ஹாம்லெட் போன்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் நாடகத்திற்கு வெளியிலும் குறியீடுகளாகப் பேசப்படுகின்றன. ரோமியோ, ஜுலியட், நாடக கதாபாத்திரங்கள் மட்டுமில்லையே.

கிரகபதி போன்றவர்களின் பிரச்சனை சுய அடையாளம் பற்றியது. வீட்டைத் தவிர வேறு எங்கும் அவர்களுக்கு ஒரு அடையாளமும் இல்லை. வீடும் கூடச் சம்பாதிக்கும் ஆள் என்பதால் மட்டுமே அவரை மதிக்கிறது.

ஒரு காலத்தில் படித்தவர்கள் தன் பெயருக்குப் பின்னால் பி.ஏ எம்.ஏ எனப் போட்டுக் கொண்டு வீட்டுவாசலில் பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். குறிப்பாக டாக்டர் வக்கீல் வீடுகளின் முன்னால் பெயர்ப்பலகைகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அதே வீட்டில் படித்த பெண் எவராவது இருந்தால் அவர் பெயரை பெயர்ப்பலகையில் எழுதி வெளியே வைக்க மாட்டார்கள்.

கல்யாணப் பத்திரிக்கையில் தன் பெயர் விடுபட்டுவிட்டது என்று கோவித்துக் கொண்டு எத்தனை பேர் கல்யாணத்திற்குப் போகாமல் நின்றிருக்கிறார்கள். தன் பெயரை அச்சில் காணுவது அங்கீகாரம் என்றே நினைக்கிறார்கள்.

இப்படி உலகம் தன்னை அங்கீகரிக்க வேண்டும். தன் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அனைவரும் மனதிற்குள் ஆசைப்படுகிறார்கள். அது நடைபெறாத போது கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்கிவிடுகிறார்கள். அல்லது சதா தானே தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

கிரகபதியைப் போலவே கணேசன் என்ற இன்னொரு வாசகரும் நினைவிற்கு வருகிறார். அவர் எந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனாலும் எழுத்தாளரின் பெயரை அடித்துவிட்டு தன் பெயரை எழுதிக் கொண்டுவிடுவார். இதனால் உலகப்புகழ் பெற்ற நாவல்கள் அத்தனையும் அவர் எழுதியதாக மாறிவிடும். எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விஷயம். ஆனால் அவருக்கு அது ரகசியமான சந்தோஷம் தரும் செயல். உலகம் தன்னைப் பரிகசிப்பதைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை.

கதையில் வரும் பெண்ணைக் காதலித்து அவளைப் போன்ற பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படியான பெண் கிடைக்காத போது அதே பெயரில் பெண் இருந்தால் போதும் என்று கூட நினைக்கிறார்கள்.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் இடம்பெற்ற காரணத்தாலே குமாரபுரம் ரயில் நிலையம் அழியாப் புகழ்பெற்றுவிட்டது. கதையை வாசித்து மகிழ்ந்த நாங்கள் அந்த ரயில் நிலையத்தைக் காணச் சென்றிருந்தோம். அங்கேயே அமர்ந்து அழகிரிசாமி கதையைப் படித்தோம்.

அந்த ரயில்வே ஸ்டேசனின் மாஸ்டராக எழுத்தாளர் உதயசங்கர் சில காலம் வேலை செய்தார். அவர் அழகிரிசாமியின் கதையிலே வசிப்பதாக ஒரு நாள் கோணங்கி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். அது உண்மை என்றே தோன்றியது.

இப்படிக் கதைகளில் இடம்பெற்ற இடங்கள், மனிதர்கள் அபூர்வமான அழகு பெற்றுவிடுகிறார்கள்.

பள்ளியில் என்னோடு படித்த ஒருவனின் பெயர் மந்திரி. அவன் குழந்தையாக இருந்தபோது மந்திரி ஒருவர் கிராமத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் பையனுக்குப் பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறார்கள் அவரும் எழில் குமரன் பெயர் வைத்திருக்கிறார். அதை வீட்டில் சொல்ல முடியாமல் மந்திரி என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள்.

பள்ளியின் வருகைப் பதிவேட்டில் கூட அவன் பெயர் மந்திரி என்றே பதிவாகியிருந்தது. வகுப்பில் ராஜா என்ற பெயரில் ஒரு பையன் இருந்தான். வகுப்பு ஆசிரியர் கேலியாக ராஜா மந்திரி எல்லாம் வந்தாச்சா என்று கேட்பார். வகுப்பே சிரிக்கும். மந்திரி அதைப் பொருட்படுத்தவே மாட்டான்.

புதிய ஆசிரியர் யாரவது பள்ளிக்கு வந்தால் என்ன மந்திரிடா என்று கேலியாகக் கேட்பார். பொங்கச்சோறு மந்திரி சார் என்று வகுப்புப் பையன்கள் சப்தமாகச் சொல்வார்கள். காரணம் மந்திரிக்கு சக்கரைப் பொங்கல் என்றால் மிகவும் பிடிக்கும். அந்தப் பதிலைக் கேட்டு ஆசிரியரும் சிரித்துக் கொள்வார். இன்று மந்திரி எங்கேயிருக்கிறான். என்ன செய்கிறான் என்று தெரியாது. ஆனால் மந்திரி என்ற சொல்லைக் காணும்போது அவன் நினைவும் வந்து போகவே செய்கிறது.

புத்தகம் என்பது வெறும் அச்சிடப்பட்ட காகிதங்களின் தொகுப்பில்லை. அது சிலரை இறக்கையில்லாமல் பறக்க வைக்கிறது. சிலருக்கு வரைபடம் போல வழிகாட்டுகிறது. சிலருக்குக் கலங்கரை விளக்கு போல நம்பிக்கை அளிக்கிறது. சொற்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. சொற்கள் மருந்தாகின்றன. சொற்கள் விதையாகின்றன. ஒரு சொல்லின் வயதை நாம் கண்டறிய முடியாது.

வாசிக்கும் ஒவ்வொருவரும் புத்தகத்தை உருமாற்றவே செய்கிறார்கள். அது ஒரு மேஜிக். அந்தச் சந்தோஷமே ஒருவரை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது.


0Shares
0