நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம்.


மனோகர் அந்த முறை ஒரு ஒவியரை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போலவே நூலகரிடம் சென்று ரெபரென்ஸ் பகுதியிலுள்ள மாவட்ட சுதந்திரப் போராட்ட மலரைக் காண வேண்டும் என்று கேட்டார்.

மனோகர் எப்போது நூலகத்திற்கு வந்தாலும் அந்த மலரைக் கேட்டு வாங்கிப் பார்ப்பது வழக்கம். சில நேரம் உறவினர்கள் சிலரை அழைத்து வந்தும் அந்த மலரைக் காட்டியிருக்கிறார். அந்த மலரில் அவரது தாத்தா கிருஷ்ணப்பாவின் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதுவும் ஊர்வலம் ஒன்றில் கொடியை ஏந்தியபடி முன்னால் நடந்து வரும் புகைப்படம்.

கிருஷ்ணப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போனவர். ஆனால் அவர் சுதந்திரப் போரில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று கூட அவர்கள் வீட்டில் கிடையாது. ஆகவே அந்த மலர் தான் ஒரே சாட்சியம். எப்படியாவது அந்த மலரின் பிரதி ஒன்றை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று மனோகர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது விலைக்குக் கிடைக்கவில்லை.

ஆகவே ஒவ்வொரு முறையும் தன் தாத்தா புகைப்படத்தைக் காட்டுவதற்காக உறவினர் எவரையாவது நூலகத்திற்கு அழைத்து வருவது அவரது வழக்கம். அன்றைக்கும் அப்படித் தான் அவரது ஓவியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

நூலகத்தில் இரவல் கொடுக்காத புத்தகங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாது. இன்றிருப்பது போல ஜெராக்ஸ் அல்லது ஸ்கேன் செய்து கொள்வதோ, செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்வதோ போன்ற வசதிகள் அப்போது கிடையாது. ஆகவே தன் தாத்தாவின் படத்தை வரைந்து எடுத்துக் கொள்வது என்று மனோகர் முடிவு செய்திருந்தார்

அந்த ஓவியர் மலரின் பக்கங்களைப் புரட்டியபடியே இருந்தார். மகாத்மா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த புகைப்படங்களில் இருந்து பல்வேறு சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் அதிலிருந்தன. பெயர்கள் மட்டுமே அறிந்திருந்த பலரை அந்த மலரின் தான் முதன்முறையாக பார்க்க முடிந்தது.

இளமையான அந்த முகங்களைக் காண அத்தனை சந்தோஷமாக இருந்தது. இவர்களை எல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். குருதிசிந்திப் போராடி சிறைக்குப் போன ஒருவருக்கும் சிலைகள் கிடையாது. நினைவகங்கள் கிடையாது. குடும்ப உறுப்பினர்களே கூட அவர்களை மறந்து போய்விட்டார்கள். நல்லவேளை இவற்றை எல்லாம் தொகுத்து மலராக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நினைவு மலர் இல்லாமல் போயிருந்தால் இவர்களின் தியாகம் உலகம் அறியாமலே போயிருக்கக் கூடும்

மனோகர் சொன்னார்

எங்க தாத்தா நல்லாஇங்கிலீஷ்ல பேசுவார். லெட்டர் எழுதுவார். காந்திக்கே லெட்டர் போட்டு இருக்கார். ஆனா அதை எல்லாம் இப்போ தேடிக் கண்டுபிடிக்க முடியாதுல்ல

உங்க வீட்ல வேற போட்டோ எதுவும் இல்லையா

அந்தக் காலத்தில போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்து சோதனை போடுவாங்கன்னு பயந்து போட்டோ, டயரி, துண்டுபிரசுரம் எல்லாத்தையும் எரிச்சி போட்டுட்டாங்க. அய்யாசாமினு ஒரு தியாகி வீட்ல இருந்த ஒரு குரூப் போட்டோவுல இருந்து தான் இப்போ வீட்ல மாட்டியிருக்கத் தாத்தா படத்தை எடுத்தோம். இப்படிக் கொடிபிடிச்சிகிட்டு போற போட்டோ அவங்க வீட்லயும் இல்லை

மதுரையில இப்படி ஒருத்தர் நேதாஜியோட படையில் இருந்துருக்கார். பழைய போட்டோ ஒன்றைப் பத்திரமா வைத்திருந்தார். நான் தான் அதை ஓவியமாக வரைந்து கொடுத்தேன்.

நூலகர் ஒவியர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து வரைவதை வியப்போடு பார்த்தபடியே சொன்னார்

வெளிச்சம் வரலைன்னா. வெளியே வச்சி வரைஞ்சிட்டு கொண்டுவாங்க

கிழே போனா மேஜையில வச்சி வரையலாம் என்றார் மனோகர்

ஒவியர் ஐநூறு பக்கங்களைக் கொண்ட அந்த மலரை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி போனார்

பொதுநூலகம் என்பது இப்படி ஆவணக்காப்பகம் போலவும் செயல்படுகிறது. கடிதங்கள், டயரிகள். புகைப்படங்கள் ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் பலருக்கும் கிடையாது. அதன் மதிப்பை அவர்கள் உணர்வதேயில்லை.

பிழைப்பிற்காகப் பர்மாவிற்கும் இலங்கைக்கும் கூலி வேலைகளுக்குப் போனவர்கள் தன் குடும்பத்தினருக்கு நிறையக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடிதங்கள் காலவெள்ளத்தில் மறைந்து போய்விட்டன. கப்பல் பயணம் சென்றவர்கள் அது பற்றிக் குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். அந்தக் குறிப்புகள் என்னவாகியது என்று தெரியவில்லை.

டாக்டர் சவரிராயன் 1935ல் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூலில் அவரது வீட்டிற்குக் காபி எப்படி அறிமுகமானது என்பதை பற்றி எழுதியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தின் குக்கிராமத்தில் வாழ்ந்த அவர்களுக்குக் கிறிஸ்துவப் பாதிரி மூலம் காபி அறிமுகமாகிறது. சவரி ராயனின் அம்மா காபி குடிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவரது தந்தை காபி கொடுப்பதைத் தவறான பழக்கமாகக் கருதினார். இதனால் ரகசியமாக அம்மாவும் சவரிராயனும் காலையில் காபி தயாரித்துக் குடிப்பார்கள். அப்பாவிற்குத் தெரியவந்தால் பெரிய சண்டையாகிவிடும் என்கிறார் சவரிராயன்.

இன்று காபி குடிக்காத வீடே கிடையாது. ஆனால் இந்தப் பழக்கம் எப்படி அறிமுகமானது என்பதை ஒருவரின் நேரடி அனுபவம் பதிவு செய்திருக்கிறது. இது போலவே சவரிராயன் எழுதிய எனது உலகச் சுற்றுப்பயணம் நூலில் அன்றைக்கு எப்படி விசா வழங்கினார்கள். லண்டனுக்குப் போய் வர ஆகும் செலவு. இலங்கையில் இருந்த கடவுசீட்டுமுறைகள் எனச் சுவாரஸ்யமாகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நிறையப் பழைய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

காலத்தில் மறைந்து போன மனிதர்களும் நினைவுகளும் புத்தகம் வழியாக அழியாத் தோற்றம் கொண்டுவிடுகிறார்கள்.

மனோகரும் ஓவியரும் மாலை வரை நூலகத்தில் அமர்ந்து வரைந்தார்கள். அப்படியே புகைப்படத்தில் உள்ளதைப் போல அச்சு அசலாக ஓவியம் வரையப்பட்டிருந்தது. நூலகர் வியந்து பாராட்டினார்

எங்க அப்பா ஒரு ஆர்டிஸ்ட். ஆனா அவருக்கு ஒரு போட்டோ கூடக் கிடையாது. எத்தனையோ படங்கள் வரைந்த அவர் தன்னை வரைந்துகிடவே இல்லை. போட்டோ எடுக்கவும் இல்லை. அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் போட்டோ கிடையாது. எங்க நினைவுல தான் அவங்க இருக்காங்கஎன்றார் ஓவியர்

மனோகர் நூலகரிடம் மலரைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்

ரொம்ப நன்றி சார். இந்தப் பொஸ்தகம் இல்லேன்னா.. தாத்தா போட்டோ கிடைத்திருக்காது. நல்ல வரைஞ்சிருக்கார். அப்படியே எங்க தாத்தாவை நேர்ல பாக்குற மாதிரி இருக்கு.

இப்படி எத்தனையோ பேர் இந்திய சுதந்திர போராட்டத்திற்குப் பங்களித்துள்ளார்கள். அவர்களில் பலருக்கும் புகைப்படம் கூட மிஞ்சவில்லை.

இந்திய சுதந்திரப் போராட்டம் முழுமையான ஆவணப்படுத்தப்படவில்லை. கிடைத்த தகவல்கள். புகைப்படங்கள். டயரிகள். பதிவுகளை வைத்துக் கொண்டே சிறப்பு மலர்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

பொது நூலகத்தை விட்டால் வேறு எங்கே இது போன்ற தகவல்கள் ஆவணங்களைக் காண முடியும். நூற்றாண்டில் ஒரு ஊர் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாற்றங்களை உருவாக்கியவர்கள் யார். எப்படி கல்வி நிலையங்கள் உருவாகின, மக்களின் பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று ஊரின் வரலாறு எழுதப்படவேயில்லை. லண்டன் நகரம் பற்றியும் பாரீஸ் நகரம் பற்றியும் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மதுரையை பற்றி எத்தனை புத்தகம் வெளியாகியிருக்கிறது.


சிப்பியின் வயிற்றில் முத்து என்ற- போதிசத்வ மைத்ரேய எழுதிய வங்காள நாவலை வாசித்தேன். அது தூத்துக்குடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். அதில் விருதுநகரை அடுத்த கொக்கலாஞ்சேரியில் ரயில் நிற்பது கூட விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அளவு தமிழில் கூட யாரும் எழுதவில்லை. உள்ளூர் வரலாறு நினைவுகள் எங்கோ எழுதிவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியந்து போனேன். மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது.

வரலாறு இன்று திரிக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது. பொய்யான நிகழ்வுகளை வரலாற்றின் பெயரில் உலவவிடுகிறார்கள். இதனை மறுப்பதற்கும் உண்மையை அடையாளம் காட்டவும் நிஜமான ஆவணங்களைக் கொண்ட புத்தகங்களே துணைநிற்கின்றன.

••

0Shares
0