நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும்.


ஒரு திரைக்கதையை எழுதுவதற்காகத் தான் ரவிச்சந்திரன் பொதுநூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்தான். அவனைப் போன்ற உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் எழுதுவதற்கான இடம். பூங்காவில் அமர்ந்து எழுத முடியாது. எந்த நேரமும் ஆள் நடமாட்டம் சப்தம் இருக்கும். தனியே அமர்ந்து எழுதுவதற்கு இவ்வளவு பெரிய நகரில் இடமே கிடையாது.

நூலகத்தில் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கேள்வி கேட்கமாட்டார்கள். சில நேரம் அவனைப் போன்ற உதவி இயக்குநர்கள் யாராவது வந்து சேர்ந்துவிட்டால் ஒன்றாகத் தேநீர் குடிக்கலாம். சேர்ந்து சாப்பிடப் போகலாம். சினிமா உதவி இயக்குநர்களுக்குப் பொதுநூலகங்கள் தான் ஒரே புகலிடம்.

சினிமாவின் மற்ற துறைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுதுவதற்கு எந்தப் பயிற்சியும் கிடைப்பதில்லை. இன்றிருப்பது போல அன்று திரைப்படப்பள்ளிகள் தனியார் நிறுவனங்களும் கிடையாது.

திரைப்படம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றித் திரைக்கதையை கற்றுக் கொள்வதே ஒரே வழி. அதுவும் இயக்குநர் திரைக்கதையின் ரகசியங்களைக் கற்றுத் தர மாட்டார். நாமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். ஆகவே ரவிச்சந்திரன் இவ்வளவு ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகத்தில் திரைக்கதை எழுத வழி கிடைக்காதா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தான்.

திரைத்துறையில் ஆண்டுக்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் திரைக்கலையைப் பயில விரும்புகிறவர்களுக்கு எனத் தனி நூலகம் கிடையாது. வழிகாட்டும் நூல்கள் கிடையாது. திரைப்படத்துறையின் சார்பிலே அது போன்ற பெரிய நூலகமும் திரையிடலும், இலவச திரைக்கல்வியும் பயிற்றுவிக்கலாம் தானே.

1990களின் துவக்கத்தில் ரவிச்சந்திரன் சினிமாவில் சேருவதற்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்தான். ஒரு புது இயக்குநரிடம் சேருவதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான்கு நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான். அதற்கு மாதம் நூறு தர வேண்டும். சாப்பாட்டுச் செலவு, பயணம், டீ சிகரெட் என இன்னும் முந்நூறு தேவைப்படும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடையாது. கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஒட்டினான்.

அவனைப் படம் பண்ணச் சொல்லி ஒரு தயாரிப்பாளர் முன்வந்திருந்தார். அவர் திருப்பூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டு ஏற்றுமதி செய்கிறவர். அவர் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ரவிச்சந்திரன் அறையில் தான் தங்கிக் கொள்வார். ரவிச்சந்திரன் சாப்பிடும் மெஸ்ஸில் தான் சாப்பிடுவார். டவுன்பஸ்ஸில் தான் போய்வருவார்.
இப்படி இருப்பவர் எப்படிப் படம் எடுப்பார் என்று ரவிச்சந்திரனிடம் கேட்டேன்

அவருக்கு எண்பது லட்சம் பணம் வரவேண்டியது இருக்கு. அது வந்தவுடனே படம் ஆரம்பிச்சிர வேண்டியது தான்

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு வருஷத்தை அந்தத் தயாரிப்பாளர் கடத்திக் கொண்டு போனார். அவர் தன் சொந்தவேலைகளை முடிக்க ரவிச்சந்திரனை பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை. இது ரவிச்சந்திரனுக்கும் தெரிந்திருக்ககூடும். ஆனாலும் எப்படியாவது எண்பது லட்சம் கைக்கு வந்து படத்தை ஆரம்பித்துவிடுவார் என்றொரு ஆசை மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது.

ரவிச்சந்திரன் இவருக்காக முதலில் ஒரு காதல் கதைக்குத் திரைக்கதை வடிவம் எழுத ஆரம்பித்தான். நூலகத்திலிருந்து சிறுகதைத் தொகுப்புகளாக எடுத்து வந்து படிப்பான். அதில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளைத் தனது நோட்டில் குறித்துக் கொள்வான். மாலை நேரம் அவனது நண்பன் சேகரைச் சந்தித்து அன்று படித்த கதையினை எப்படி மாற்றம் செய்து திரைக்கு ஏற்ப காட்சியாக்குவது என்று விவாதிப்பான். இப்படித் தினமும் ஒன்றிரண்டு காட்சிகளை அவன் சேகரித்துக் கொண்டிருந்தான்


ஒரு நாள் என்னிடம் குறுகிய வழி நாவலைப் படித்துக் கண்ணீர்விட்டதாகவும் அதைத் திரைப்படமாக்க நினைத்திருப்பதாகச் சொல்லி அதற்கு யாரிடம் உரிமை பெற வேண்டும் என்று கேட்டான்.

அது ஆந்த்ரே ழீடு எழுதிய பிரெஞ்சு நாவல் க.நா.சுப்ரமண்யம் மொழியாக்கம் செய்திருக்கிறார். க.நா.சு டெல்லியில் வசிக்கிறார் என்றேன்.

அப்படியானால் அவரைத் தேடிப்போய்ப் பார்த்து உரிமை வாங்க இயலாது. ஒரு Thanks card போட்டுவிடுகிறேன் என்று சொல்லி ஆசையாக அதற்குத் திரைக்கதை எழுதினான்.
அன்றாடம் நூலகத்தில் வைத்து காட்சிகளை எழுதுவான். ஒரு நாள் எழுதிய காட்சி ஒன்றைப் படித்துக் காட்டினான். அதில் குறுந்தொகை பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது .காதல் சுவையைக் கூட்டுவதற்காக அப் பாடலை சேர்ந்து இருப்பதாகவும் அதைத் தனியே இசையமைத்து சேர்க்கவுள்ளதாகவும் சொன்னான்

குறுகிய வழிக்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் வெறும் காதல்கதை போதாது என்று சொன்னதால் அதில் ஒரு கொலை மற்றும் துப்பறியும் விஷயங்களைச் சேர்க்கப் போவதாகச் சொன்னான். இதற்காக நூலகத்திலிருந்த பெரிமேசன் துப்பறியும் புத்தகங்களைத் தீவிரமாகப் படித்தான்.

சில நாட்களில் ஒரு கொலை ரெடியானது. கூடவே அதைக் கண்டுபிடிக்கப் போகும் துப்பறியும் நிபுணரும் ரெடியானார். இப்போது கதையில் இரண்டு ஹீரோ. துப்பறியும் நிபுணராகப் புதுமுகத்தைப் போட்டுவிடலாம் என்று சொன்னான் ரவிச்சந்திரன். குறுகிய வழியில் ஒரு கொலை என்று தலைப்பும் வைத்துக் கொண்டான்.

தனது திரைக்கதையோடு அவன் திருப்பூர் புறப்பட்டுப் போனான். ஒரு வார காலத்தின் பின்பு திரும்பி வந்து துப்பறியும் கதையை மட்டும் வைத்துக் கொண்டு குறுகியவழியின் காதல் கதையை நீக்கிவிடப் போவதாகவும் அதற்குப் பதிலாகக் கிராமத்திலுள்ள சாதிப் பிரச்சனையை முன்வைத்து புதிய திரைக்கதையை எழுத இருப்பதாகச் சொன்னான்.

இதற்காகக் கி.ரா. பூமணி, சூரியதீபன். மேலாண்மை பொன்னுசாமி எனத் தேடித்தேடிப் படித்தான். கிராமத்தில் நடைபெறும் துப்பறியும் கதையாகத் திரைக்கதை உருமாறியது. இந்த வடிவம் மிகவும் திருப்திகரமாக வந்துள்ளதாகச் சொல்லியபடியே தனது நண்பர்கள் பலருக்கும் அதை வாசிக்கத் தந்தான்

திருப்பூர் தயாரிப்பாளர் தாமதமாகவே வேறு இரண்டு தயாரிப்பாளர்களிடம் சென்று தனது கதையைச் சொல்லியும் வந்தான். அவர்களுக்குக் கதை பிடிக்கவில்லை. இரண்டு மாத காலத்தில் அவனுக்கே தனது திரைக்கதையைப் பிடிக்காமல் போனது. அதை அப்படியே போட்டுவிட்டு இந்த முறை புதுமைப்பித்தனின் துன்பக்கேணியினைப் பீரியட் படமாக எடுக்கலாம் என்று அதற்குத் திரைக்கதை எழுத ஆரம்பித்தான்.

தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்று வந்த குடும்பங்களைப் பற்றிக் கள ஆய்வு செய்யப்போவதாகச் சொல்லி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று வந்தான்.
எப்படியாவது ஒருமுறை இலங்கைக்குப் போய் வந்துவிட்டால் திரைக்கதை முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். ஆனால் இந்தக் கதையை அவனது நண்பர்களுக்கே பிடிக்கவில்லை. இது கமர்சியலாக வரவில்லை. ஆகவே எந்த ஹீரோவும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவனிடம் சொன்னார்கள். அவனுக்கும் அது நிஜம் என்று புரிந்தது. ஆனாலும் அந்தத் திரைக்கதையோடு திரைப்பட நிறுவனங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். ஒன்றும் நடக்கவேயில்லை. நிராகரிப்பு மட்டுமே மிச்சம்.

இந்தக் கதை மலையாளத்திற்குப் பொருத்தமானது என்று யாரோ சொல்லிவிடவே கொச்சிக்குச் சென்று ஒரு மாதகாலம் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுத் திரும்பிவந்தான். அந்த நாட்களில் நிறைய மலையாளம் படம் பார்த்தான். ஆகவே இனிமேல் புதியபாணியில் திரைக்கதை எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

தொடர்ந்த ஏமாற்றங்கள். கசப்பான அனுபவங்கள் அவனை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன. நூலகத்திற்கு வந்தால் நியூஸ் பேப்பர் தவிர வேறு எதையும் படிக்க மாட்டான். அடிக்கடி சிகரெட் பிடிக்க வெளியே எழுந்து போய்விடுவான். பல நாட்கள் மதியம் சாப்பிட மாட்டான். ஒரு நாள் பட்டினத்தார் பாடல்களை நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அதன்பிறகு அவனைப் பொதுநூலகத்தில் காணவில்லை.

அவனது நண்பனிடம்என்ன ரவியை ஆளக் காணவேயில்லை என்று ஒரு நாள் கேட்டேன்

அவனுக்குப் போன வாரம் கல்யாணம் ஆகிருச்சி , ஊர்லயே செட்டில் ஆகிட்டான் என்றான் அந்த நண்பன்

அப்போ சினிமா

அதெல்லாம் அவ்வளவு தான். மாமனார் லாரிகம்பெனி வச்சிருக்கார். அதுலயே வேலை செய்யப்போறானாம்.

அதன்பிறகு ரவிச்சந்திரனைப் போலவே வேறு உதவி இயக்குநர்கள் நூலகத்தில் அமர்ந்து திரைக்கதைக்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு நாள் ரவிச்சந்திரனை திரும்பவும் பொது நூலகத்தில் கண்டேன். ஆள் உருமாறியிருந்தான். கோரையான தாடி. தூக்கமில்லாத கண்கள். சட்டையில் சிகரெட் பாக்கெட். தீப்பெட்டி.

என்ன ரவி.. எப்படியிருக்கே. கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கு என்று கேட்டேன்

செட் ஆகலைண்ணா. வொய்போட சண்டை போட்டு வந்துட்டேன். என்னை மாதிரி கலைஞனுக்கு லாரிகம்பெனி வேலை எப்படி ஒத்துவரும். என் பொண்டாட்டி சினிமாக்காரன்னாலே கேவலமாக நினைக்குறா. மாமனார் பெரிய இம்சை. அதான் கிளம்பி வந்துட்டேன். ஊர்ல இருக்கும் போது நாட்டியக்காரினு ஒரு உருது நாவல் படிச்சேன். செமையான கதை. அதுக்குத் திரைக்கதை எழுதிகிட்டு இருக்கேன். இந்தக் கதையைப் படமாக்கினால் நிச்சயம் சில்வர் ஜுப்ளி தான்.

அதன்பிறகு ரவிச்சந்திரன் எப்போதும் போலக் காலை முதல் மாலை வரை நூலகத்தில் அமர்ந்து நாட்டியக்காரிக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் என்னிடம்Umrao Jaan படம் பாத்து இருக்கீங்களா என்று கேட்டான்.

ரேகா நடிச்ச படம் தானே. பாத்து இருக்கேன் என்றேன்

அந்த படத்தோட கதை தான் நான் படிச்ச உருது நாவல். அது தெரியாமல் அதுக்கு உட்கார்ந்து ஸ்கிரீன் பிளே எழுதிகிட்டு இருக்கேன். நேத்து தான் நம்ம சேகர் சொன்னான். அந்தப் படம் ஹிட்டாண்ணா

ஆமா. பாட்டு ரொம்ப நல்லா இருக்கும் என்றேன்

இப்போ என்ன செய்றது. எழுதுனது எல்லாம் வேஸ்டா

எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. ரவிச்சந்திரன் ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே சொன்னான்

நம்ம நேரம் சரியில்லை. பேசாமல் குறுகிய வழி ஸ்கிரிப்டை திரும்ப எடுக்க வேண்டியது தான். அந்தக் கொலை கிலை எல்லாம் தூக்கிட்டு வெறும் லவ் ஸ்டோரியா சொன்னா ஒடும்

நானும் தலையாட்டிக் கொண்டேன். ரவிச்சந்திரன் சில நாட்களில் ஊருக்கு திரும்பிப் போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு அவனைப் பார்க்கவேயில்லை.

ரவிச்சந்திரன் அமர்ந்து எழுதும் நாற்காலியில் வேறு ஒரு இளைஞன் புதிய கனவோடு எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சென்னைக்கு வந்து தன் கனவுகளைத் தொலைத்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிப் போனவர்களில் ரவியும் ஒருவனாகிப் போனான். ஆனால் அன்று துவங்கி இன்றுவரை சினிமா உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் ஒரே ஆறுதலான இடமாகயிருக்கிறது.

ரவி இப்போது லாரிக்கம்பெனியில் வேலை செய்கிறானா அல்லது வேறு ஏதாவது தொழில் செய்கிறானா எனத் தெரியாது. ஒருவேளை சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் அமர்ந்து இன்றும் ஏதாவது புதிய திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.
**

0Shares
0