நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.
நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர் ஒரு கதாபாத்திரமாக நாவலில். சினிமாவில் வந்திருக்கிறார். நூலகரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் எதையும் வாசிக்கவில்லை. ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் நூலகரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க் பொது நூலகம் நிறையப் படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. ஹாரிபோட்டரில் வரும் நூலகம் போல விசித்திரமான நூலகங்களை மையமாகக் கொண்டு படங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சினிமாவில் காட்டப்படும் நூலகங்கள் போல நிஜ நூலகம் இருப்பதில்லை.

நான் வேலை செய்த ஒரு சினிமா படப்பிடிப்பின் போது கதாநாயகி வீட்டு அலமாரியில் நிறையப் புத்தகங்களை ஆர்ட் டிபார்ட்மெண்ட் அடுக்கியிருந்தார்கள். என்ன புத்தகம் என்று பார்ப்பதற்காக அதைக் கையில் எடுத்தேன். அவை உண்மையான புத்தகங்களில்லை. புத்தகம் போல அட்டையில் செய்யப்பட்டவை. புத்தகத்தின் ரேப்பர்களை மட்டும் அதில் ஒட்டியிருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் ஏன் உண்மையான புத்தகங்களைக் காட்சியில் வைக்கலாமே என்று கேட்டதற்கு இது போல அட்டையில் செய்து வைத்துவிட்டால் எந்தப் படத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள்.
சினிமாவில் நூலகம் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். அல்லது துப்பறியும் நிபுணர் ரகசியம் ஒன்றைத் தேடி வரும் இடம். சில நேரங்களில் பேராசிரியராக வரும் கதாபாத்திரம் நூலகத்தில் மிகப் பெரிய சைஸ் புத்தகம் ஒன்றைப் புரட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். கல்லூரி கதை என்றால் நூலகத்திற்குக் காதல் கடிதம் கொடுக்கக் கதாநாயகன் வருவான். நூலகத்தின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தும் ஒரு காட்சியைக் கூடத் திரையில் கண்டதாக நினைவில்லை.
சினிமா படப்பிடிப்பின் போது கையில் ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தால் உங்களை அறிவாளி என்று நினைப்பார்கள். பல நேரங்களில் உங்களைத் தீண்டத்தாகத ஒருவரைப் போலவே நடத்துவார்கள். அதிலும் ஆங்கிலப் புத்தகங்களைத் தான் படித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்ப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் மதிப்புக் குறைவு.
சினிமா நடிகர்கள் புத்தகம் படிக்கிறார்கள் என்பதை இன்றும் வியப்பாகப் பார்க்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. நான் அறிந்தவரை ஆழ்ந்து வாசிக்கக்கூடிய திரைக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சேமிப்பில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை நானே நேரில் கண்டிருக்கிறேன்.

நூலகம் சார்ந்த நினைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக மனதில் பதிந்திருக்கிறது. ஒருமுறை புத்தகக் கண்காட்சிக்கு வந்த பெண் தனது சிறுவயதில் அப்பா நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைப் படித்துக் காட்டுவார். அல்லது அந்தக் கதையைச் சொல்லுவார். அப்பா சொல்லிக்கேட்ட கதைகளைத் திரும்ப வாசிப்பதற்காக அந்தப் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்கள் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்த புத்தகத்தைப் புரட்டி வாசித்தால் அதில் அப்பாவின் குரல் கேட்கிறது. இன்று அப்பா எங்களை விட்டு மறைந்து போய்விட்டார். ஆனால் அவர் வாசித்த புத்தகத்தைப் புரட்டும் போது அவரது குரல் கேட்கிறது. கண்ணீருடன் தான் படிக்கிறேன் என்றார்.
தந்தை நூலகத்திற்குச் சென்று எடுத்து வந்த புத்தகங்கள் மகளை எவ்வளவு பாதித்திருக்கிறது பாருங்கள். இப்படி நூறு நூறு அனுபவங்கள் நூலகம் சார்ந்து இருக்கின்றன.
சிறார் புத்தகம் ஒன்றில் கம்பளிப்பூச்சி ஒன்று நூலகராக இருக்கும். அந்த நூலகத்திற்கு விலங்குகள் சென்று புத்தகங்கள் எடுத்துவரும். ஒரு எலி மனிதர்களிடம் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டு போகும். யார் அதை எழுதினார்கள் என்று அந்தக் கதையில் இடம்பெறவில்லை. ஆனால் பத்துவயதில் படித்த போதும் இன்றும் மறக்கமுடியவில்லை கண்ணாடி அணிந்த கம்பளிபூச்சியின் முகம் மனதில் ஒளிர்ந்தபடியே இருக்கிறது
பள்ளி வயதில் நூலகத்தில் ஒரு பையனைப் பார்த்தேன். அவன் பெயர் பாஸ்கர். பதிமூன்று வயதிருக்கும். பாஸ்கர் வண்ணப்படமுள்ள புத்தகமாகத் தான் வாசிக்க எடுப்பான். அந்தப் புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வான். உண்மையில் ஒரு பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி என்ன பார்க்கிறான் என்று புரியாது. ஒருமுறை அவனிடம் கேட்டபோது ஓவியத்திலுள்ள மாயக்கம்பளம் எங்கே கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னான்.
பாஸ்கர் தான் ஒரு நாள் என்னிடம் கால இயந்திரம் பற்றிய சிறார் கதை ஒன்றிலிருந்த படத்தைக் காட்டி ஏன் வட்டமாக இயந்திரம் இருக்கிறது என்று கேட்டான். எனக்குப் புரியவில்லை. ஏன் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்று நானும் அவனிடம் கேட்டேன். காலம் வட்டமானது. அதனால் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்றான். அவன் சொன்ன பதில் அப்போது புரியவில்லை.
ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் ஒருவன் அதில் என்ன கண்டறிகிறான் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதே புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். எனக்கு அந்தச் சந்தேகம் வரவில்லை. கேள்வி எழவில்லை.

விசித்திரமாக யோசிக்கிறான் என்பதாலே பாஸ்கரை எனக்குப் பிடித்துப் போனது. ஒரு நாள் அவன் நான் ஒரு விளையாட்டை உருவாக்கியிருக்கிறேன். இங்கே விளையாடுவோமா என்று கேட்டான். என்ன விளையாட்டு என்று கேட்டேன்.
நூலகத்தில் உள்ள ஒரு புத்தகத்தில் தான் பலூன் படம் ஒன்றை வரைந்து வைத்துள்ளதாகவும் அது எந்தப் புத்தகம் என்று கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றான். கண்டுபிடித்துவிட்டால் என்ன தருவாய் என்று கேட்டேன். அவன் தான் பாக்கெட்டிலிருந்து சிறிய விசில் ஒன்றை எடுத்து இதைத் தந்துவிடுகிறேன் என்றான்.
வேகமாக நூலக அடுக்கினுள் ஒடி எந்தப் புத்தகத்தினுள் அவன் பலூன் வரைந்திருக்கிறான் என்று வேகவேகமாகப் புரட்டிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நூலகர் ஏன் புத்தகங்களைத் தள்ளிவிடுகிறேன் என்று கோவித்துக் கொண்டார். ஒரு மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நூலக நேரம் முடிந்து போன காரணத்தால் நாளை தேடுவோம் என்று பிரிந்து சென்றோம்
மறுநாள் நூலகம் திறந்தவுடனே உள்ளே நுழைந்து விளையாட்டினைத் தொடர்ந்தேன். அன்று மதியம் வரை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிவில் அந்தப் பையன் தானே எடுத்து வருவதாகச் சொல்லி ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அதில் ஒரு பக்கம் பென்சிலில் பலூன் வரையப்பட்டிருந்தது.
“இது பெரியவர்கள் படிக்கும் புத்தகம்“ என்றேன்
“நான் இதுல இருக்கிற போட்டோக்களைப் பார்ப்பேன்“ என்றான் பாஸ்கர்.
அன்று முதல் நூலகத்தில் இது போலப் புதிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தோம்.
நூலின் தலைப்பின் நடுவே ஒரு வார்த்தையைப் புதிதாகச் சேர்த்துவிடுவேன். அதாவது இரும்புக்கோட்டை ரகசியம் என்று தலைப்பு இருந்தால் இரும்புக் கோட்டை இட்லி ரகசியம் என மாற்றிவிடுவேன். அவன் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவன் கண்ணில் படாதபடி புத்தகத்தை ஏதாவது இடுக்கில் ஒளித்து வைத்துவிடுவேன். ஆனால் அவன் எப்படியோ கண்டுபிடித்து எடுத்து வந்துவிடுவான்
பாஸ்கர் சில புத்தகங்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கோடு போட்டுவிடுவான். அந்த வார்த்தைகளைக் கண்டறிந்து அதை ஒன்று சேர்த்து என்ன வாக்கியம் எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதை என்னால் ஒரு போதும் முழுமையாகச் செய்ய முடியவே முடியாது. அவன் தான் ஜெயிப்பான். நூலகம் இப்படி விளையாட்டுக் களமாக மாறியதை ஒரு நாள் நூலகர் கண்டுபிடித்துவிட்டார். அதன் பிறகு எங்களை நூலக அடுக்கிற்குள் நுழைய அனுமதிக்கவேயில்லை.
நாளிதழ்களில் பாஸ்கர் இது போலவே ஒரு விளையாட்டினை உருவாக்கினான். குறிப்பிட்ட சொல் எந்தப் பேப்பரில் உள்ள எந்தச் செய்தியில் வெளியாகியிருக்கிறது என்று கண்டறிய வேண்டும். நாளிதழை முழுவதுமாகப் புரட்டிப் படித்தால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆழ்ந்த வாசிப்பை அவன் விளையாட்டாக மாற்றியது வியப்பாக இருந்தது.
நிறையப் புதிய சொற்களை அதன்வழியே கற்றுக் கொண்டேன். நூலகத்தில் இப்படி அறிவு சார்ந்த விளையாட்டுகளை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று இன்று தோன்றுகிறது. வெறும் வாசிப்பை விடவும் வாசிப்பு சார்ந்த விளையாட்டுகள். நாடகங்கள். கூடி வாசித்தலுக்கான களமாக நூலகத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கெனச் சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால் சிறார்கள் அதிகப் பயன் அடைவார்கள்
பாஸ்கர் நூலகத்தை விந்தைகளின் உலகமாக அடையாளம் காட்டினான். ஒரு நாள் அவன் ஒரு புத்தகத்திலிருந்த வண்ணப்படம் ஒன்றை காட்டினான். அதில் கனவுகளைப் பதிவு செய்யும் இயந்திரம் ஒன்று இருப்பதாகவும் அதைத் தலையில் மாட்டிக் கொண்டுவிட்டால் நம் கனவுகளைப் பதிவு செய்துவிடும் என்றும் சொன்னான்
கேட்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை விநோதமான கனவுகள் காலை எழுந்தவுடன் மறந்து போய்விடுகின்றன. அந்த இயந்திரம் எங்கேயிருக்கிறது என்று கேட்டேன். தானே அதைப் போன்ற ஒன்றைச் செய்ய இருப்பதாகச் சொன்னான். எப்படி எனப் புதிராகக் கேட்டேன். அதைப்பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.
விசித்திரங்களை நோக்கிய அவனது தேடலும் முயற்சியும் பிரமிப்பூட்டியது. ஒருநாள் நூலகத்திலிருந்த புத்தகம் ஒன்றிலிருந்து மேப் ஒன்றைக் கிழித்துத் தன் பையில் வைத்திருந்தான் என அவனைப் பிடித்துவிட்டார்கள்.
இனி பாஸ்கரை நூலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்துவிட்டார் நூலகர். அதன்பிறகு பாஸ்கரைப் பார்க்கவேயில்லை. ஆனால் இறுகி உறைந்து போயிருந்த புத்தகங்களைக் கலைத்துப் போட்டு சுவாரஸ்யமான விளையாட்டினை உருவாக்கிய அவனது செயலை மறக்க முடியவில்லை.
புத்தகத்தின் அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாதோ அது போலத் தான் நூலகத்திற்கு வரும் மனிதர்களும். அவர்களின் தோற்றதை வைத்து அவர்கள் என்ன படிப்பார்கள். எதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கண்டறியமுடியாது.
ஒருவர் புத்தகம் படிக்கும் போது அதன் பக்கங்களின் வழியே என்ன உணருகிறார். என்ன பார்க்கிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது. வாசிப்பு எளிமையானது போலத் தோன்றினாலும் அது ரகசியமான செயல்பாடே.
••